தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

கன்னியாகுமரி மாவட்டத்து மக்கள் தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றுதல், மற்ற மாவட்டக்காரர்களைக் காட்டிலும் சற்றுக் கூடுதலாகும். இதற்குச் சில அடிப்படைக் காரணங்கள் உள்ளன. குமரி மாவட்டம் நீண்ட நெடுங்காலம், மலையாள ஆட்சியில் இருந்தது. இங்கு மலையாள மொழியின் நெருக்குதலில் ஒவ்வொரு நாளும் சிக்கித் தவித்தவர்கள் இவர்கள். பள்ளிகளில் மலையாள மொழிக்கே முதலிடம். தமிழ்மொழி இங்கு தாழ்த்தப்பட்ட வரிசையில் ஒதுக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற காரணங்களே, இங்குள்ள தமிழர்களுக்குத் தமிழ் மொழி யின் மீது கூடுதல் பற்று ஏற்படக் காரணமாக இருந்தது.

தமிழ் புறக்கணிக்கப்படும் வேதனையைக் கவிமணி அழகாகக் கூறியிருக்கிறார். நாஞ்சில் நாட்டில் பிறந்த பெரும் கவிஞர் கவிமணிக்கு ஆரம்பப் பள்ளிகளில் கூடத் தமிழ்மொழி இல்லாமல் இருப்பது மிகவும் வேதனையை உண்டாக்கியது. நாஞ்சில் நாட்டுத் தமிழர்கள் தாய்த் தமிழகத்துடன் இணைய, அம்மக்களைத் தயாரித்த பெருமை கவிமணிக்கே உண்டு. அவரது வேதனையை 1917ம் ஆண்டே திருவனந்த புரத்தில் இருந்து வெளியிடப்பட்ட, ‘தமிழன்’ பத்திரிகையில் வெளிவந்த, ‘மருமக்கள் வழி மான்மியத்தில்’ கிண்டலாகக் குறிப்பிடுகிறார்.ஒருவர் மரணமடைந்து விடுகிறார். அங்கு வந்தவர்கள் மரணமடைந்தவர் மகனை நோக்கி :

தம்பி! உன் தந்தை தலைமாட்டிலிருந்து திருவாசகத்தில் சிற்சில பதிகம்படிறீ எனச் சொல்லி, பண்ணை வீட்டிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்துக் கொடுத்தனர். பயலும் அதைத் திறந்து பார்த்தான். ‘ஆரே தமிழை அறிபவர்?’ என்றான். ‘பள்ளியில் தமிழும் படித்தேனோ?’ என்றான். ‘பரீட்சையில் தமிழுமொரு பாடமோ?’ என்றான். ‘என்னால் படிக்க இயலாது’ என சுவரில் சாய்ந்து சும்மா இருந்தான்!- என்று தமிழ் அன்று ஒதுக்கப்பட்டதை வேதனையுடன் கூறினார்.

டி.வி.ஆர்., பற்றி, கேரளப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஏசுதாசன் கூறுகையில் . . . அன்றைக்குக் கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பிரிவில், ‘விரிவுரையாளர்’ பதவிதான் இருந்தது. றிதமிழ்த்துறைக்கு விரிவுரை யாளர் பதவி மட்டும் இருப்பது போதாது, பேராசிரியர் பதவியும் தர வேண்டும்றீ என்று, டி.வி.ஆர்., எடுத்த முயற்சியே அப் பல்கலைக் கழகத்தின் முதல் பேராசிரியர் என்ற தகுதியை எனக்குத் தேடித் தந்தது. கேரளாவில் இருந்த தமிழ் ஆசிரியர்களின் நிலை அன்றைக்கு மிகவும் பரிதாபமானது. அவர்களுக்கு மதிப்புக் கிடைக்கத் தனது பத்திரிகை மூலம் தொடர்ந்து போராடி வெற்றி கண்டவர் டி.வி.ஆர்., அவர் தமிழ் மொழியைப் பழைய காலப் போக்கில் இருந்து, புதிய பார்வையில் பார்த்தவர்.


திவானாக இருந்த போது தமிழர்கள் பிரச்னைகளுக்கு சர்.சி.பி., உதவியது உண்டு. சுதந்திரத்திற்குப் பின் சர்.சி.பி., பதவியில் இல்லாத போது, ஒரு பெரிய இடைவெளி. அதை நிரப்புவது சாமான்யமன்று. அந்தப் பணியை ஏற்று நடத்தி வெற்றியும் கண்டவர் டி.வி.ஆர்., திருவிதாங்கூர் தமிழர்கள் பற்றி ஓர் ஆய்வு நடத்தப்படுமானால், அதில் டி.வி.ஆரின் தனிப்பெரும் சக்திகளும், வெற்றிகளும் தெரிய வரும் என்றார்.  தமிழ் மொழியும், வரலாறும் மேல் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் செய்வதைப் போல விஞ்ஞானப் பூர்வமாக ஆராயப்பட வேண்டும். பத்தாம் பசலித்தனமாக அரைத்த மாவையே அரைத்துக் கொண்டி ருக்கக் கூடாது. நவீனங்கள் அதிகம் வர வேண்டும். உலகம் நமது மொழியை ஏற்றுக்கொண்டு பாராட்டும் வகையில் நமது பார்வையும் பணியும் இருக்க வேண்டும் என்பது டி.வி.ஆர்., கொள்கை.


இதன் காரணமாகவே தனது பத்திரிகையைப் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையைக் கொண்டு துவக்கி வைத்தார் என்றால், தமிழ் மொழி மீதும், உண்மையான தமிழ் அறிஞர்கள் மீதும் டி.வி.ஆருக்கு எத்தனை பெரிய மதிப்பு இருந்தது என்று சொல்லவும் வேண்டுமோ?
 


குமரி மாவட்டத்தில் ஆறாவது தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு

தமிழ் எழுத்தாளர்களின் ஆறாவது மாநில மாநாடு மே 31, ஜூன் 1, 1958ல் குமரி மாவட்டத்தில் நடைபெற்றது. அதுவரை தலைநகர் சென்னையில் மட்டுமே நடைபெற்ற இம்மாநாடு, முதல் முறையாக ஒரு மாவட்டத்தில் நடைபெற்றது என்பதால் இதற்குப் பல சிறப்புக்கள் உண்டு. இம்மாநாட்டை நடத்துவதில் பெரும் பொறுப்புகளை ஏற்றவர் டி.வி.ஆர்.,இவ்வளவு பெரிய மாநாட்டை குமரி மாவட்டத்தில் நடத்த ஏற்றுக்கொண்டது ஏன் என்ற கேள்வி எழுவது இயற்கையே. குமரி மாவட்டம் என்ற தமிழர்கள் வாழும் பகுதி, தங்களைச் சார்ந்ததுதான் என்ற உணர்வே இல்லாமல் இருந்தனர் தாய்த்தமிழ் மக்கள். தாய்த் தமிழகத்துடன் இணைய வேண்டும் என்று இப்பகுதியில் பெரும் போராட்டம் நடைபெற்றபோது கூட, இப்பிரச்னையில் தமிழகப் பத்திரிகைகள் தங்களது உணர்வுகளைச் சரியான முறையில் வெளிப் படுத்தவில்லை.


தலைநகரில் உள்ள பிரபலமான பத்திரிகைகள் இந்து, எக்ஸ்பிரஸ், தினமணி, கல்கி, விகடன் இவற்றின் பிரதிநிதிகளை, போராட்ட காலத்தில் குமரி மாவட்டத்திற்கு அழைத்து மாவட்டம் முழுவதும் அவர்களைச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளச் செய்து, நிலைமைகளை அவர்களும் உணரச் செய்தவர் டி.வி.ஆர்., பத்திரிகைகள் நினைத்தால் உண்மையான மாற்றம் கொண்டுவர முடியும் என்பது அவரது அசைக்க முடியாத கொள்கை. தாய்த் தமிழகத்துடன் இணைந்துவிட்ட குமரி மாவட்டம் பற்றி இனியாவது தமிழ் எழுத்தாளர்கள் முழுக்கவனம் செலுத்த முன்வர வேண்டும்; அவர்கள் எழுத்து வன்மையால் மட்டுமே புதிய குமரி மாவட்டம் பல துறைகளில் முன்னேற்றம் காண முடியும் என்று முழுக்க முழுக்க நம்பினார். இந்த எண்ணத்தின் எதிரொலிதான், தமிழ் எழுத்தாளர் மாநில மாநாட்டைக் குமரி மாவட்டத்தில் நடத்த ஏற்றுக்கொண்டார் என்பது நிச்சயமாகிறது.

எழுத்தாளர் மாநாட்டில், ‘தினமலர்’ நிர்வாக ஆசிரியர் டி.வி.ஆர்., நிகழ்த்திய வரவேற்புரையை அப்படியே தருகிறோம் . . .


டி.வி.ஆர்., வரவேற்புரை


இது தமிழ் எழுத்தாளர் ஆறாவது மாநாடு என்பதை நீங்கள் அறிவீர்கள். இதன் வரவேற்புக்குழுத் தலைமை பெருமையை எனக்கு அளித்த இந்த மாவட்ட எழுத்தாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இன்று மாநாடு கூடும் இந்த ஜில்லாவைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் . . . தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது, அதங்கோட்டு ஆசான் தலைமையில் என்று வரலாறு கூறும். அந்த ஆசான் வாழ்ந்த ஊரான ஆதங்கோடு இங்கிருந்து பத்து மைல் துபரத்தில் தான் இருக்கிறது.


எத்தனையோ தமிழ் அறிஞர்கள் இங்கு தோன்றியிருக்கின்றனர். ஸ்ரீமான்கள் கே.என்.சிவராஜபிள்ளை, செய்கு தம்பி பாவலர், தசாவ தானம் ஆறுமுகம் பிள்ளை முதலானவர்களை நீங்கள் அறிவீர்கள். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையைப் பற்றி அறியாத தமிழர்களே இல்லை எனலாம். கலை உலகில் புகழ் பரப்பிய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், புகழ் பரப்பிக்கொண்டிருக்கும் டி.கே.எஸ்.சகோதரர்களும் இந்த ஜில்லா மக்களே. நீலத்திரைக் கடல் ஓரத்தில் நித்தம் தவம் செய்யும் குமரி எங்களை எப்பொழுதுமே காத்துக் கொண்டிருக்கிறாள். நாங்கள் அண்மைக் காலம் வரை மலையாள நாட்டுடன் இணைந்தி ருந்தோம். பெரிய போராட்டம் நடத்தி இப்போதுதான் தமிழகத்தோடு இணைய முடிந்தது. மலையாளச் சூழ்நிலையில் இருந்தும் கூட, இந்தப் பகுதி, தாய் மொழிக்கு எவ்வளவு தொண்டு செய்திருக்கிறது என்பதை நீங்கள் சற்று ஊன்றிக் கவனிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.


நம்முடைய விசேஷ அழைப்பின் பேரில் இங்கு வந்திருக்கும் எழுத்தாளர் பெருமக்களையும், ஏனைய பெரியோர்களையும் நான் இந்த மாவட்ட மக்களின் சார்பில் வரவேற்கிறேன். நீங்கள் இங்கு வந்து எங்களைக் கவுரவப்படுத்தியதற்கு நாங்கள் பெருமை கொள்கிறோம்.


பெரியோர்களே . . .


எழுத்தாளர்கள் யார் என்று பார்ப்போமாயின், கம்பர், காளிதாசன், முதல் இன்று ஒரு சிறிய பத்திரிகைக்கு கதை எழுதுபவராக உள்ள எல்லாருமே ஒரே வர்க்கம்தான். தமிழ் எழுத்தாளர்கள் பாரதத்தின் இதர மொழி எழுத்தாளர்களுக்குச் சற்றும் சளைத்தவர்கள் அல்ல; ஒருபடி மேலாகக் கூடச் சொல்லாம்.  புதிய படைப்பிலோ, மொழிபெயர்ப்பிலோ, தழுவலிலோ தமிழ் மொழி வேகமாக முன்னேறி வருகிறது. ஆட்சி மொழியாகி, கல்லூரி மொழியாகவும் ஆகிவிட்டால், அது தன் முழுப் பொலிவுடன் விளங்கத் தொடங்கும். அப்போது இன்றிலும் பன்மடங்கு எழுத்தாளர் கள் நாட்டில் தோன்றுவர். அவர்களுக்குக் கவுரவத்தோடு நல்ல ஊதியமும் கிடைக்கும்.


தமிழ்நாட்டில் கல்வியறிவு இன்று மேற்கு நாடுகளைப் போலவோ, அண்டையிலுள்ள கேரளத்தைப் போலவோ கூடப் பரவவில்லை. அப்படியிருந்தும், தமிழ் தின, மாத, வாரப் பத்திரிகைகள் எல்லாம் இந்தியாவிலேயே கூடுதல் சந்தாதாரர்களைப் பெற்றிருக்கின்றன. நூற்றுக்கு நூறு என்ற கல்விநிலை எய்திவிட்டால் எழுத்தாளர்களுக்கு ஒய்வு எடுக்க முடியாத நிலை வந்துவிடும். அவர்களுக்கு ஒளிவீசும் எதிர்காலம் அப்பொழுது உண்டு. தமிழ்மொழிக்குப் பாரம்பரியமும், மாபெரும் வரலாறும் உண்டு. அவற்றை நன்றாக உணர்ந்துதான் புதிய வழிகளை நமக்கு பாரதியார் காட்டினார். ‘நறை செவிப் பெய்தன்ன’ என்ற கம்பனின் சொற் றொடரை, ‘தேன் வந்து பாயுது காதினிலே’ என்று புதிய சிருஷ்டி போல் தந்த வியப்பைப் பாருங்கள். நாமும் நம் முன்னோர் தந்த கருவூலத்தைக் காப்பாற்ற வேண்டும். நம்மில் பலர் உலகத்திலுள்ள எல்லா மொழிகளையும் கற்று அதன் சாரத்தை எல்லாம் நம் தாய்மொழியில் கொணரச் செய்ய வேண்டும்.


விஞ்ஞானத் துறையில் ஆங்கிலத்தை விட ரஷ்ய மொழி முன்னேறி விட்டது என்று, ‘ஹாலடேன்’ எழுதியிருக்கிறார். ரஷ்ய மொழியை நம்மில் அநேகர் கற்று, விஞ்ஞான அறிவைத் தமிழில் வளர்க்க வேண்டும். விஞ்ஞானத்தைத் தமிழில் மொழிபெயர்க்கும் பொழுது பல சிரமங்கள் ஏற்படலாம், அவற்றைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆரம்பத்தில் ஒருவித மணிப்பிரவாள நடையோடு எழுதினாலும் குற்றமில்லை. காலப் போக்கில் அது மாறி, நல்ல உருவில் அமைந்து விடும். ஆரம்ப காலத்தில், வடமொழிச் சொற்களை மிகுதியாகக் கொண்டு ஒரு மணிப்பிரவாள நடையாகத்தான் தமிழில் வசனமும் இருந்தது. இப்பொழுது அந்த நடை முற்றிலும் மாறித் தனக்கென ஒர் உயர்ந்த பாணியில் மிளிருகிறதல்லவா . . .


வடமொழியில் எத்தனையோ தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன என்று அறிஞர்கள் சொல்கின்றனர். பேனாவின் சக்தி, வாளின் சக்தியை மிஞ்சியது என்று ஒரு பெரியார் சொன்னார். வாளைப் போல் அழிவுப் பாதையில் நம் பேனாவை செலுத்தாமல், ஆக்க வேலைக்குப் பயன்படுத்துவோம் என்று விரதம் கொள்ளுவோமாக. தமிழை உலகப் பெருமொழிகளில் ஒன்றென ஆக்குவது நமது கடமை; அதைச் செய்தே தீருவோம். லிபி சீர்திருத்த விஷயத்திலும் நாம் முன்னேற்றக் கொள்கைகளைக் கடைப்பிடித்தல் நலம். எழுத் தாளர்கள் என்றுமே வறுமை நிலையில் இருப்பவர்கள் என்ற அவலச் சொல்லை மாற்றி, அவர்களை மேம்பாடுறச் செய்யும் வழிகளை வகுத்தல் வேண்டும்.


நமது தலைமை அரசாங்கம் இப்பொழுது எழுத்தாளர்களைக் கொஞ்சம் கவனிப்பதாகத் தெரிகிறது. நம்முடைய சுதந்திரத்திற்குப் பங்கம் வராமல் பார்க்க வேண்டியது அவர்கள் பொறுப்பு. நாமும் நம்மை அறியாமல் அரசாங்கம் என்ற பொறியில் விழுந்து விடக் கூடாது. மாநாட்டின் தலைவராக வீற்றிருக்கும் ஸ்ரீ சாமிநாத சர்மா, ஒரு சிறந்த எழுத்தாளர். தமிழகத்தில் அரசியல் அறிவினை முதிரச் செய்த தொண்டர்களுள் ஒருவர். சிறந்த பத்திரிகை ஆசிரியராக விளங்கியவர். பண்பட்ட உள்ளமும், ஒழுக்கமும் நிரம்பியவர். அவர்கள் இந்த மாநாட்டைச் சிறப்புற நடத்தித் தருவார் என்பது திண்ணம். நம் வேண்டுகோளுக்கிணங்கி, இதைத் திறந்து வைக்க வந்திருக்கும் பெரியவர் மத்திய கலாச்சார மந்திரி ஹபூமாயூன் கபீர், பாரத நாட்டிற்குப் பெருமை அளிக்கும் தலை சிறந்த கல்வி அறிவாளர்களுள் ஒருவர். சொல் திறனும், எழுத்துத் திறனும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவர். ஆளும் திறனும் உண்டு என்பதனை உலகுக்கு எடுத்துக் காட்டுபவர். அவர்கள் இப்பணியை ஏற்றது நமது பாக்கியமே. (‘தினமலர்’ செய்தி, ஜூன் 1, 1958)

"தமிழ்நாடு' பெயர் சூட்டுக!

தமிழ் எழுத்தாளர் மாநாடு தொடக்க நாளில் "தினமலர்'ப் பத்திரிக்கையில் டி.வி.ஆர்., எழுதிய தலையங்கம்.

நமது இராஜ்ஜியத்தின் பெயரைத் ‘தமிழ்நாடு’ என மாற்றும்படி தமிழ் எழுத்தாளர்கள் கோரியிருக்கின்றனர். இந்தப் பெயர் மாற்றக் கோரிக்கை திடீரென உதித்துள்ள புதிரல்ல. இராஜ்யப் பிரிவினை விவகாரம் தோன்றிய நாள் தொட்டுக் கோரப்படும் கோரிக்கை. இந்தக் கோரிக்கையை எக்காரணம் கொண்டோ அதிகாரத்தில் இருப்பவர்கள் அலட்சியப்படுத்தி வருகின்றனர். இந்த அலட்சியம் அகம்பாவத்தின் சின்னம் என்று கூட எதிர்க்கட்சிகள் கூறித் தீர்த்து விட்டன.


‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டும்படி கோரி உயிர்த்தியாகம் வரையிலும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பதவியில் இருப்பவர்கள் அசையவில்லை. சென்னையில் மிகப் பெரும்பான்மைக் கட்சியாகக் காங்கிரஸ் விளங்கி வருவதால், அக்கட்சிக்குச் சர்வாதிகாரமாக நடக்கும் வசதி ஏற்பட்டுள்ளது. அந்த மெஜாரிட்டி பலத்தை மனத்தில் கொண்டு, அடம் பிடிப்பது எந்த விதத்திலும் உகந்த நடவடிக்கையாக முடியாது. ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் கோருவது தமிழனின் அடிப்படை உரிமை. அந்த விஷயத்தின் மீது இவ்வளவு சிக்கல்களை ஏற்படுத்துவது எதற்கு என்று தெரியவில்லை. காங்கிரஸ்காரர்களில் மெஜாரிட்டியின ரும், ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டுவதை விரும்புகின்றனர். கட்சிக் கட்டுப்பாட்டின் காரணமாக அவர்களுக்கு இதர கட்சி யினரைப் போல பகிரங்கமாகக் கூற முடியவில்லை.


சென்னையிலுள்ள காங்கிரஸ்காரர்கள், தங்கள் கமிட்டியைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்று அழைத்து வரும்போது, தாங்கள் வசிக்கும் இராஜ்ஜியத்தை மட்டும், ‘தமிழ் நாடு’ என்று அழைக்கத் தயங்குவானேன்?
சென்னை இராஜ்ஜிய மக்கள் அனைவருமே மொழியின் பேரால் இந்த இராஜ்யம் அழைக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர், தி.மு.க., - தி.க., - தமிழரசுக் கழகம், பி.சோ., - கம்யூ., ஆகிய எல்லாக் கட்சிகளுமே, ‘தமிழ்நாடு’ என்ற பெயரை எதிர்பார்க்கிறது. அங்ஙனம் எல்லாரும் ஒருமுகமாக விரும்பும் அப்பெயரை உடனே சூட்ட வேண்டியது அரசாங்கத் தலைமையாரின் கடமையாகும்.


அரசியலோடு சம்பந்தப்படுத்திக் கொள்ளாத எழுத்தாளர் சங்கத்தினரும், ‘தமிழ்நாடு’ என்று பெயரிட வேண்டும் என்று விரும்புவதையாவது மதித்து, அவர்களின் கோரிக்கையை அங் கீகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
அரசாங்க அலுவல் மொழி தமிழாக மாறிவரும் இக்கட்டத்தில், இராஜ்ஜியத்தின் பெயரை மட்டும், ‘தமிழ்நாடு’ என்று மாற்றாமல் இருப்பதில் என்ன நியாயம் இருக்கிறது... மலையாளம், கன்னடம், ஆந்திரம் ஆகிய பகுதிகள் சென்னையோடு இருந்த போது வழங்கப்பட்ட பெயரே இப்போதும் தொடரட்டும் என்று கூறுவது விதண்டாவாதம். ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்று பாரதியார் பாடினார். அந்தப் பாரதியின் சொல், நடைமுறை சாத்தியமாக வேண்டியது முக்கியம்.


‘தமிழ்நாடு’ என்று பெயர் ஏற்படும் பொழுதுதான் தமிழுக்கும், தமிழர்களுக்கும் இயற்கையான பெருமிதம் ஏற்பட முடியும். எந்தப் பெயர் இருந்தால் என்ன என்றெல்லாம் கூறுவது வெறும் வேதாந்தமே. தமிழர்களுக்கென்று தமிழின் பெயர் விளங்கும் இராஜ்ஜியம் தேவை. தமிழர்களின் கலை, பண்பு, கலாச்சாரம் ஆகிய அனைத்தும் முன் னேறத் ‘தமிழ்நாடு’ என்று தனிப்பெயர் தேவை. இந்தத் தேவையை உணர வேண்டும். உணர்ந்தால் பெயரை மாற்றிக் கொள்வதில் கஷ்டம் இல்லை. ‘தமிழ்நாடு’ என்ற பெயரை இதரக் கட்சியினர் விரும்புவதை அரசியல் நோக்கோடு அரசாங்கம் கருதினாலும், எழுத்தாளர்கள் விஷயத்தில் அதேக் கண்ணோட்டம் ஏற்பட வேண்டியதில்லை. ‘தமிழ்நாடு’ என்ற பெயர் மாற்றத்திற்காக அவர்கள் இதுவரையிலும் எழுதியும், பேசியும் வருவது தெரிந்ததே. எனினும், அதற்குப் பரிகாரமும் கிடைக்கவில்லையானால் அவர்கள் மனவேதனை அடைவது இயற்கையே. அரசாங்கம் இனியும் வீண் சடங்குகளுக்கு வழி வகுக்கா மல் விரைவில், ‘தமிழ்நாடு’ என்ற பெயர் மாற்றத்திற்கு முன் வரு வார்களாக?


டிசம்பர் 1, 1968 முதல் தான், ‘தமிழ்நாடு’ என்ற பெயர் அண்ணாத் துரை முதலமைச்சராக இருந்தபோது சூட்டப்பட்டது. 'கல்கி' இதழ் கட்டுரை
(லால்குடி கிருஷ்ணமூர்த்தி)

தமிழ் எழுத்தாளர் மாநாடு பற்றி ஜூன் 6, 1958 கல்கி இதழில் லால்குடி கிருஷ்ணமூர்த்தி எழுதிய கட்டுரையின் சுருக்கம்...
 

எழுத்தாளர் பெருமக்களே . . . வருக . . . வருக . . . மாநில மாநாட்டுத் தலைவர் அவர்களே வருக! புத்துலகச் சிற்பிகளே வருக . . . வருக! ஆறாவது தமிழ் எழுத்தாளர் மாநாட்டை அணி செய்ய வந்துள்ள அழியாப் புகழ் வாய்ந்த அறிஞர்களே வருக . . . வருக . . . வருக!


உங்கள் அனைவரையும் எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகராகிய நாகர்கோவில் மக்கள் சார்பில் மனமார மகிழ்வுடன் வரவேற்கிறோம். எழுத்தாளர்களாகிய உங்களுக்கு ஒரு சேர நல் வரவேற்பு வழங்கும் வாய்ப்பைத் தமிழகத்தில் பெற்றுள்ள முதல் நகர்மன்றம் நாகர்கோவில் நகர்மன்றமே என்று எண்ணும்போது எங்கள் இதயம் இன்பக் கடலாகிறது.


நாகர்கோவில் நகர மன்றத்தார் அளித்த இந்த வரவேற்புரையைக் கேட்டவுடன் எங்களுக்குத் தலைகால் புரியவில்லை. எழுத்தாளர் களுக்கா இத்தகைய வரவேற்பு? இத்தனைப் புகழ்ச்சி மொழிகள்!


ஆட்சிப் பீடத்தில் உள்ள அமைச்சர்களையும், பெரிய பெரிய அரசியல் தலைவர்களையும் மட்டுமே வரவேற்றுப் பெருமை சூடிக் கொள்ளும் நகர்மன்றம், அமைச்சர்களையும், காவியக் கலைஞர்களை யும் உருவாக்கும் எழுத்தாளர்களுக்கு ஒரு வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுத்துத் தன்னுடைய நிலையை உயர்த்திக்கொண்டிருக் கிறது என்று வியந்து கொண்டிருக்கும் பொழுது...


‘என்ன அண்ணாச்சி இங்கேயே நிக்கிறீங்களே, ஊர்வலம் கிளம்பி விட்டதேறீ என்று, பக்கத்தில் நின்றுகொண்டிருந்த அன்பர் ஒருவர் என் தோளில் கைவைத்துக் குலுக்கினார்; ஊர்வலத்தை நோக்கி விரைந்தேன். பாண்டும், மேளமும் முழங்க அலங்கரிக்கப்பட்ட யானை முன் செல்ல, மாநாட்டுப் பிரதிநிதிகளும் நகர்ப் பொது மக்களும் சூழ்ந்திருந்த காரில், மாநாட்டுத் தலைவர் ஸ்ரீ வே.சாமிநாத சர்மாவும் அமைச்சர் ஸ்ரீ ஹபூமாயூன் கபீர் அவர்களும், திருவாளர்கள் எஸ்.குண்டப்பா, எஸ்.சங்கரராஜ் நாயுடு, ப.ஜீவானந்தம், மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் டி.வி.இராமசுப்பையர் முதலியோரும் பவனி வந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.


அங்கங்கே பலர் தலைவர்களுக்கு மாலை சூட்டி மகிழ்ந்தனர். இதுவரையில் இது போன்ற ஒரு மாபெரும் ஊர்வலத்தை நாகர் கோவில் கண்டதேயில்லை என்று பேசிக்கொண்டனர். ‘வழக்கம்போல் சென்னையிலேயே இந்த ஆறாவது தமிழ் எழுத்தாளர் மாநாடும் நடந்திருந்தால் இத்தகையதொரு காட்சியைக் கண்டி ருக்க முடியுமா?றீ என்று யாரோ கூறியதும் என் காதில் விழுந்தது. ஊர்வலம், மாநாடு நடைபெற இருக்கும் சேது லட்சுமிபாய் உயர்தரப் பாடசாலைக் கட்டடத்தை அடைந்தது. அந்தக் கட்டடத்தைப் பார்த்து, இது உயர்நிலைப் பள்ளியா, மாபெரும் கல்லுபரியா என்று வியக்கதவர்களே கிடையாது. வீதி மட்டத்தில் இருந்து 50 அடி உயரத்திற்குப் படிப்படியாக உயர்ந்து கம்பீரமாகக் காட்சியளித்தது அந்தப் பள்ளி.  அதற்குள் ஒலிப் பெருக்கியில் பித்துக்குளி முருகதாசின் பிரார்த் தனை கீதம் கணீரென்று ஒலித்து, அனைவரையும் மெய்மறக்கச் செய்தது.  அதைத் தொடர்ந்து, மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் திரு.டி.வி.இராமசுப்பையர் தமது அழகிய வரவேற்புரையை நிகழ்த் தினார்.

தமது கருத்துச் செறிவு நிறைந்த தொடக்க உரையில் மத்திய அமைச்சர் ஹுமாயூன் கபீர் அவர்கள் குறிப்பிட்டதாவது:

இந்திய மொழிகளில், எதற்கும் இல்லாத தனிச்சிறப்பு தமிழுக்கே உண்டு. இலக்கிய வளம் நிறைந்தது தமிழ். இனிமை மிக்கது தமிழ் மொழி. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைப் பேரிலக்கிய வளம் நிறைந்த மொழி தமிழே. அது மட்டும் அல்ல, சங்கிலிக் கோவை போல் தடைபடாத, விடுபடாத நீண்ட மரபு, தமிழைப் போல் வேறெந்த மொழிக்குமே கிடையாது. ஆண்டுகள் பல்லாயிரம் ஆன பின்பும் இளமைப் பொலிவு குன்றாக் கன்னி மொழி இது.
அரசியல் ஆதரவு காரணமாக எந்த மொழியும் வளர்வதில்லை, வாழையடி வாழையாகப் பல எழுத்தாளர்கள் தோன்றி மொழிகளை வளம் குன்றாமல் செய்து வந்தனர் என்றுதான் சரித்திரம் கூறுகிறது.


தாகூரின் அறிவுத் திறத்தால் வங்காள மொழி சிறந்த மொழியாகி விட்டது. எனவே, அம்மொழி மாகாண மொழியாவதில் எவ்விதச் சிக்கலும் இல்லை. பல ஐரோப்பிய நாடுகளில் வங்காள மொழி கற்பிக்கப்படுகிறது என்றால், அதற்கு அரசியல் மறைகளோ, பொருளா தாரத் தத்துவங்களோ காரணம் அல்ல. வற்றாத ஊற்றுப் போன்ற அரும்பெரும் கருத்துக்கள் அடங்கிய நூல்களைத் தாகூர் அம்மொழி யில் எழுதி அதை வளப்படுத்தி இருப்பதே காரணம். தமிழ் எழுத்தாளர்களும் இதைக் கடைப்பிடித்து, கலை அழகும், கருத்தழகும் செறிந்த நூல்களை உருவாக்குவார்களானால் அவர்கள் பெரிய சாதனைகளைச் செய்தவர்கள் ஆவர்.


தொன்மை நிறைந்த மொழிகள் எனக் கருதப்படும் சீன, சமஸ்கிருத மொழிகள் கடந்த காலத்தில் எத்தனையோ மாறுதல்களுக்கு ஆளாகி விட்டன. ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மொழி சிறிதும் மாறவில்லை.எழுத்தறிவில்லாதவர்கள் கூடத் தமிழ்க் காவியங்களைப் பிறர் படிக்கக் கேட்டுப் புரிந்துகொள்ளக்கூடியப் பெருமை தமிழ் மொழிக்கு உண்டு. இந்தக் காரணத்தால்தான் உலகின் எந்த மொழியையும் விடத் தமிழ்மொழி சிறந்ததெனக் கருதப்படுகிறது என்று, தமிழ் மொழி பற்றி தமது கருத்துக்களைக் கூறினார். தொடர்ந்து எழுத்தாளர் கள் அரசியலில் ஈடுபடாமல் தங்கள் உணர்ச்சிகளையும், சிந்தனைகளை யும் மொழி வழியாய் வெளியிட வேண்டும் என்று கூறித் தமது தொடக்க உரையை முடித்தார், விஞ்ஞான ஆராய்ச்சி, கலாச்சார இலாகா அமைச்சர், பேராசிரியர் ஹபூமாயூன் கபீர்.பிறகு பலத்த கரகோஷங்களுக்கு இடையே தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவரும், ஆறாவது மாநாட்டுத் தலைவரும் ஆன அறிஞர் வெ.சாமிநாதசர்மா தமது தலைமை உரையை அரங்கேற்றினார்.


தமிழ் எழுத்தாளர் சங்கம் தோன்றிய காலத்தில் இருந்து அதற்கு முறையே தலைமை தாங்கித் திறம்பட நடத்தி வந்த அறிஞர்கள் ஐவருக்கும் முதலில் தமது அஞ்சலியைத் தெரிவித்துப் பேசலுற்றார் . . . தமிழில் சிறுகதை இலக்கியம் வளர்ந்திருப்பது போல் நாவல், நாடக இலக்கியங்கள் வளரவில்லை. கட்டுரைகளும், கடித இலக்கியங் களும், அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம் முதலிய துறைகளில் நல்ல நுபல்களும் எழுதப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சமூகம், மனோதத்துவம், தாவரம், பிராணி வர்க்கங்கள், உடற்கூறு ஆகிய சாஸ்திரங்களைப் பற்றித் தமிழில் சரியான நுபல்கள் வரவில்லை என்பதை வருத்தத்தோடு சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது.


சுயமாகத் தொழில் விரும்புவோர், இப்பொழுது ஆங்கிலத்தின் உதவியைத்தான் நாட வேண்டி இருக்கிறது. தொழில் நுட்பங்களைக் கூறும் புத்தகங்கள் தமிழில் வேண்டாமா? எழுத்தாளர்களே இதைப் பற்றிச் சற்றுச் சிந்தியுங்கள். இந்தத்துறை நோக்கி நமது எழுதுகோலை செலுத்த வேண்டும். சீக்கிரமாகவும், வேகமாகவும் செலுத்த வேண்டும் என்று, தலைவர் தமது நீண்ட தலைமை உரையில் குறிப்பிட்டார்.  அதன் பிறகு நாஞ்சில் நாடு பெற்ற தவச் செல்வர் தசாவதானி ஜனாப் செய்குதம்பிப் பாவலரின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்துத் தமக்கே உரிய தமிழ் உரையை நிகழ்த்தினார் தோழர் ப.ஜீவானந்தம் அவர்கள் . . . றிசெய்குதம்பிப் பாவலரின் நினைவாட்சித் திறன் இணையற்றது; இமயம் போன்றது. அவர் படிக்காத தமிழ் நூல்களும், அவர் மனத்தில் பதியாத தமிழ்ப்பாக்களும் கிடையாது. ஒரே சமயத்தில் நுபறு பேர் நுபறுவிதமாகக் கேட்கும் கேள்விகளை மனத்தில் அடுக்கி, அவர்களுக்குத் தகுந்த பதிலை அடுத்தடுத்துத் தரும் அவரது ஆற்றலைக் கண்டு வையமே வியக்கும். . .றீ


நீலத்திரை கடல் ஓரத்தில் நின்று
நித்தம் தவம் செய்யும் குமரி
கன்னியாகுமரி மாவட்டத்தையும், தமிழகத்தையும்
காத்து எல்லாம் பெருகச் செய்வாளாக.
வாழ்க தமிழ்!
நன்றி : ‘கல்கி’


தமிழ் அறிஞர்களென்றால்...


உலகின் வயதில் மூத்த மொழி என்ற பெருமையைத் தமிழ் பெற்றுள்ளது. இதுபோல் பல உலக மூத்த மொழிகள் இன்றைக்கு நலிந்து, சிதைந்து, ஆய்வாளர்கள் மட்டுமே அணுகும் வகையில் ஒதுங்கிவிட்டன. அது மக்கள் மொழியாக வளராமல் போனது ஏன்? வயது அதிகம் என்பது ஒன்று மட்டுமே ஒரு மொழிக்குப் பெருமையாகி விடாது.காலம் காலமாகப் பல்வேறு அறிஞர்கள் தங்களுடைய உழைப்பால் மொழியை வளப்படுத்தி ஏற்றமுறச் செய்து வந்தது தான் இந்தப் புகழுக்கெல்லாம் காரணம். தொல்காப்பியர் தொட்டுப் பாரதி வரை இந்தப் பரம்பரை தொடர்கிறது; இது வரலாறு.

 
ஆனாலும், தமிழ்நாட்டின் பெரிய துரதிருஷ்டம் . . . தமிழ் மொழிக்கு ஏற்றம் தரப் பாடுபடும் அறிஞர்கள் போதிய அளவு மதிக்கப்பட்ட தில்லை. அவர்களது ஆய்வுகளுக்கு ஒட்டு மொத்தமான அங்கீகாரம் கூடக் கிடைக்கவில்லை. வாழ் நாளெல்லாம் இந்த அறிஞர்கள் வறுமையில் வாடினர். தங்களது ஆய்வுகளுக்குப் பொருளுதவி கேட்டு இவர்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. இவர்களது பெரும் தியாகங்களால் மட்டுமே தமிழ் மொழி இன்றைக்கும் சீர் இளமைத் திறன் கொண்டு உலக அரங்கில் விளங்குகிறது என்பதைப் புரிந்துகொள்பவர்களின் எண்ணிக்கை மிக மிகக்குறைவு.இந்தப் பெருங்குறை டி.வி.ஆர்., இதயத்தில் மிகவும் ஆழமாக வேரூன்றி இருந்தது. தன்னந்தனியாகத் தமிழ் மொழியின் ஏற்றத்திற் காகப் பாடுபட்டு வரும் அறிஞர்களைப் போற்றுகிறவர்களும், பாராட்டுகிறவர்களும், உதவுகிறவர்களும் இல்லாமல் போனால் மொழி வளர்ச்சி என்பதெல்லாம் ஏட்டோடு நின்றுவிட வேண்டியது தான்.


இந்த வகையில் தனது இறுதிக் காலம் வரை பல்வேறு துறையைச் சார்ந்த தமிழ் அறிஞர்களைத் தேடிப் பிடித்து அவர்களிடம் பரிவும், பாசமும் கொண்டு அன்பு செலுத்தி, டி.வி.ஆர்., செய்த உத விகள் ஏராளம். மொழி வளர்ச்சி பழைய தலைமுறையோடு நின்று விடக்கூடாது, இளம் தலைமுறை யினரும் இதில் ஆர்வமுடன் கலந்துகொள்ள முன்வர வேண்டும் என்று அவருக்குத் தணியாத ஆவல் இருந்தது.

பேராசிரியர் பா.வளன் அரசு

பாளையங்கோட்டைத் தூய யோவான் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் பா.வளன் அரசு பாளையங்கோட்டையில் 1940ல் பிறந்தார். பாளையங்கோட்டைத் தூய சவேரியார் கல்லூரியில் பயின்ற இவர், காரைக்குடி அழகப்பாவில் எம்.ஏ., பட்டமும், மைசூர்ப் பல்கலைக்கழகத்தில் பி.எட்., பட்டமும், மதுரைப் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி., பட்டமும் பெற்றார்.

சிறந்த எழுத்தாளர். கட்டுரைக் களஞ்சியம், நாடும் ஏடும், வீரமாமுனிவர் ஒரு விளக்கம், பாரதியின் புதுமை நலம், துறை தோறும் திரு.வி.க., தேம்பாவணித் திறன் போன்ற பல்வேறு நூல்களையும் இருபதிற்கு மேற்பட்ட சிறப்பு மலர்களையும் வெளிக்கொண்டு வந்தார். இலக்கியத் துறையில் பல்வேறு விருதுகள் பெற்ற இவர் சிறந்த பேச்சாளர்.


திருநெல்வேலி வந்த பின்னரும் இந்தப் பணி மிகச் சீராகவே தொடர்ந்து நடைபெற்றது. இது பற்றிப் பேராசிரியர் வளன் அரசு கூறுவதைக் கேட்கலாம்:


எனக்கு டி.வி.ஆரிடம், ’58ல் இருந்து தொடர்பு உண்டு. அன் றைக்கு நெல்லையில் தமிழ்ப்பற்று மிகவும் அதிகமாகக் கொண்ட இளைஞர்கள் பலர் ஒன்றாகக் சேர்ந்து தமிழ்த் தொண்டில் ஈடுபட்டிருந்தோம். தச்சநல்லுவரில் ‘தினமலர்’ அலுவலகம் வந்த பின் நாங்கள் டி.வி.ஆருடன் தொடர்பு கொண்டோம். அப்போது இளைஞர்களான எங்களை அவர் வழிப் படுத்திய முறையை, ஆர்வத்தை, இன்றைக்கும் கூட எண்ணி எண்ணி வியக்கிறேன். அப்போது நாங்கள் ஆண்டுக்கு எப்படியும் மூன்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வோம். அந்த நிகழ்ச்சிகளில் டி.வி.ஆர்., கண்டிப்பாக கலந்துகொள்வார்; எல்லா உதவிகளையும் செய்வார். ‘தினமலர்’ எங்கள் நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும். எந்த அலுவல் இருந்தாலும் எங்களைக் கண்டுவிட்டால் அவற்றை ஒதுக்கிவிட்டு, எங்களுடன் நீண்ட நேரம் விவாதிப்பார். அவரிடமுள்ள ஆழ்ந்த தமிழ்ப்பற்றை நாங்கள் கண்டு வியப்பில் ஆழ்வோம். அவரது தமிழ்ப் பற்று மேலெழுந்தவாரியாக இருக்காது.


தமிழில் நல்ல பயிற்சி பெற்ற இளைஞர் பலருக்குத் தனது அலுவலகத்தில் வேலை கொடுத்தார். அவரது ஆதரவில் பலர் தமிழகம் பெருமைப்படத்தக்க வகையில் இன்று முன்னணியில் உள்ளனர். நாங்கள், ‘தனித்தமிழ் இலக்கியக் கழகம்’ என்று ஒர் அமைப்பு வைத்திருந்தோம். டி.வி.ஆர்., முதன் முதல் இந்த கூட்டத்திற்கு வந்து, ‘தனித்தமிழ்க் கழகமா? மற்ற உலக மொழிகளில் இருந்து நீங்கள் தனியாக இருக்க ஆசைப்படுகிறீர்களா?றீ என்று கேட்டார். நாங்கள் சொன்னோம், ‘அப்படியல்ல; அரசியல் சார்பு இல்லாமல் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகத் தனித்துப் பாடுபடும் கழகம் இது’ என்று.


உடனே, ‘அரசியல் தொடர்பு ஒரு மொழிக்கு மிகவும் அவசியம். மக்களாட்சியில் அது இல்லாமல் மொழி முன்னேற முடியாது. எந்த ஒரு வகையில் எடுத்தாலும் நாம் ‘தனி’ என்ற உணர்வு கூடாது; தனிமைப்பட்டு விடுவோம். அதற்காக மொழிக்கு ஒரு சிறிதும் சம்பந்தமில்லாத அரசியல்வாதிகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டு மென்பதல்ல என் கருத்து’ என்று நல்லாசிரியர் போன்று டி.வி.ஆர்., எங்களுக்கு எடுத்துக் கூறினார். நமது வட்டாரத் தமிழ் அறிஞர்கள் பற்றி, நாம் பெருமைப்பட வேண்டும். அவர்களை நமது படைக்கு முன்னணித் தளபதிகளாக்க வேண்டும்றீ என்று கூறுவார். இந்த வகையில் அவருக்குப் பாரதி, வ.உ.சி., இருவரிடமும் மிக அதிகமான பற்று இருந்தது. வ.உ.சி.,யின் தமிழ்ப் பணிகள் வெளிவரவேண்டுமென்று அன்றைக்கே அவருக்குப் பெருவிருப்பம் இருந்தது. ஒட்டப்பிடாரத்தில் ஆண்டுதோறும் வ.உ.சி., விழா எடுக்க அவரது துபண்டுகோல் மிக முக்கியமாயிருந்தது. அந்த விழாக்களுக்குத் ‘தினமலர்’ தனி முக்கியத்துவம் தரும்.


தமிழ் இலக்கியத் தொடர்பாக ஒரு தமிழ்ப் பத்திரிகை அன்று இந்த அளவு முக்கியத்துவம் கொடுத்த பெருமை மட்டுமல்ல. மற்றத் தமிழ்ப் பத்திரிகைகளும் இதற்கு உதவ முன்வர, றிதினமலர்றீ இதழும் ஒரு காரணமாகும்.ீரமாமுனிவரது முன்னுபறாவது ஆண்டு விழா 1977ல் வந்தது. அதைச் சிறப்பாகக் கொண்டாட எங்களைத் துபண்டியவர் டி.வி.ஆர்., விழாவில் கலந்துகொண்டு ஓர் அறிவுரையே நிகழ்த்தினார்.


அது -
வீரமாமுனிவர் ஓர் இத்தாலிக்காரர். போக்குவரத்து வசதி இல்லாத காலம் அது. கடல் கடந்து இங்கு வந்து, தமிழ் மொழியைக் கற்று, அவர் எவ்வளவு ஆராய்ந்து எழுதி நமது தமிழ்மொழியை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் பார்த்தீர்களா . . . மொழி வளர்ச்சி என்பதில் மதம், இனம், எதுவும் தலையிடக் கூடாது. வீரமாமுனிவரை நீங்களும் பின்பற்றிப் பாடுபட முன்வர வேண்டும். மொழி உணர்வு தேவை; வெறி கூடாது. நாடு கடந்து தமிழ் மொழியின் புகழ் மேலோங்க நீங்கள் ஒவ்வொருவரும் வீரமாமுனிவராக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். டி.வி.ஆருக்கு வள்ளலாரிடம் ஈடுபாடு உண்டு. திருநெல்வேலி நகரில் நடைபெறும் வள்ளலார் விழாக்களுக்குத் தவறாது வருவார். நாங்கள் அறிந்தவரை அன்னதானம் போன்றவற்றை அவர் விரும்புவ தில்லை. ஆனால், வள்ளலார் விழாவில் அன்னதானம் இருப்பது அவசியம் என்று அவர் கூறியதோடு, அதற்குப் பொருளுதவியும் செய்துவிட்டு, ‘நான் உதவினேன் என்பது வெளியில் தெரிய வேண்டாம்’ என்பார்.


கூடியவரை எளிய தமிழில் பேசுவது நல்லது என்பது அவரது கொள்கை. ஒரு காலத்தில் சமஸ்கிருதத் தமிழ், பின் இன்று ஆங்கிலத் தமிழாக உள்ளது. சுத்தமாகத் தமிழ் என்பது இந்த விஞ்ஞான உலகில் கடினம். தமிழின் தனித்தன்மை கெட்டு விடக்கூடாது. அதற்காக மக்களுக்குப் புரியாதக் கொடுந்தமிழ் தேவை இல்லைறீ என்பார். அறிவியல் தமிழ் என்பது இயலுமா, இயலாதா என்ற விவாதம் இன்றும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அறிவியல் துறையில் உலகம் வெகு வேகமாக முன்னேறிவிட்டது. தாய்மொழி மூலம் அறிவியல் வராதபோது, தமிழருக்கு இயல்பாக உள்ள அறிவியல் சிந்தனைகள், கண்டுபிடிப்புகள் வரும் என்று கனவுகூடக் காண வேண்டியதில்லை.


பெ.நா.அப்புசாமி


தனது வாழ்க்கையை அறிவியல் தமிழுக்காக ஒதுக்கியவர், முது பெரும் ஆராய்ச்சியாளர் பெ.நா. அப்புசாமி. தமிழ் மூலம் அறிவி யலைத் தெரிந்துகொள்ள வேண்டு மென்பதற்காக இந்த அறிஞர் எழு திக் குவித்தவை ஏராளம். வாழ்க் கையை அந்தத்துறைக்கே ஒதுக்கி னார் என்று கூறிவிடலாம்.

பெ.நா.அப்புசாமி

"தமிழ் மொழியில் அறிவியல் என்றவுடன் நினைவுக்கு வருபவர் பெ.நா.அப்புசாமி. தமிழ் வளர்த்த பரம்பரையில் நெல்லை மாவட்டத்தில் பெருங்குளத்தில் டிச.,31, 1841ல் பிறந்த அப்புசாமி, அடிப்படையில் சிறந்த வழக்கறிஞர். தனது இறுதி மூச்சு அடங்கும் அன்று கூட இவர் பத்திரிக்கைக்கு எழுதி அனுப்பிவிட்டே மறைந்தார்.

கலைமகள் பத்திரிக்கையில் ஆரம்ப காலத்தில் தமிழில் விஞ்ஞானம் பற்றி எழுதத் தொடங்கி 70 ஆண்டுகள் எழுதிக் குவித்தவை ஏராளம். இவருக்கு வட மொழி, ஆங்கிலப் புலமை உண்டு. இவை அனைத்தையும் தமிழ் மொழி வளர்ச்சிக்குச் செலவிட்டார். கம்ப ராமாயணத்தில் ஆராய்ச்சியும் ஈடுபாடும் அதிகம் கொண்டவர். சிறந்த மொழி பெயர்ப்பாளர். தமிழில் அறிவியலை எழுத இயலும் என நிரூபித்தவர். மே 16, 1986ல் காலமான  இவர் தமிழ் மொழிக்குச் செய்த பணி மிகவும் சிறப்பானது.


உண் மையில் இந்த முதுபெரும் எழுத் தாளர் ஒரு கட்டுரையை எழுதி, ‘இந்து’ பத்திரிக்கைக்குத் தபாலில் சேர்க்க தானே கொண்டு சென்று அங்கேயே தனது உயிரை விட்ட வர். உண்மையில் இவரது இறுதி மூச்சும் தமிழ், தமிழ், தமிழ்தான்! ‘இந்த மாமேதையிடம் டி.வி. ஆருக்கு உள்ள தொடர்புகள், கால் நுபற்றாண்டைத் தாண்டியதாகும்றீ என்றார், பேரறிஞரது மகள் அம் மணி சுப்பிரமணியம். டி.வி.ஆர்., பற்றித் தனது நினைவில் உள்ள வற்றை அவர் கூறினார் . . .
சென்னையை விட்டு என் தந் தையார் 1972ல் இங்கு (திருநெல் வேலிக்கு) வந்து விட்டார். கிட்டத் தட்ட கால் நுபற்றாண்டுகள் டி.வி. ஆர்., - பெ.நா.அ., தொடர்புகள் மிக நெருக்கமானதாகவே இருந்தது.


தமிழ் மூலம் அறிவியல், மக்களிடம் செல்ல பத்திரிகைகள் பொறுப்பேற்க வேண்டுமென்பது என் தந்தையின் ஆசை. இதுபற்றி இருவரும் பலகாலம் நீண்ட விவாதம் நடத்தி உள்ளனர். ‘நாம் கண்டுபிடிக்காத ஒன்றுக்குப் பழம்பெரும் தமிழ் நுபல்களில் அதற்குத் தக்க சொல் உண்டா என்று தேடுவது தேவையில்லை. அதைத் தமிழில் அந்த மொழிச் சொல்லாகவே வைத்துக்கொண்டு முன்னேற வேண்டும்’ என்று இருவரும் கூறுவர். விஞ்ஞானப்பூர்வமாகத் தமிழ்மொழி தன்னை மாற்றிக்கொள்ள, முதலில் தமிழ் எழுத்துச்சீர்திருத்தம் ஏற்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று இருவரும் முடிவு எடுத்தனர். இதை டி.வி.ஆர்., முதன் முதலில் தனது பத்திரிகை மூலம் நடைமுறைப்படுத்தினார்.


நான் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை. எனது கல்விப் பணியில் டி.வி.ஆருக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. எங்கள் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக்க டி.வி.ஆர்., பெரும் முயற்சி மேற்கொண்டார். பெண்கள் கல்வியில் வெகுவாக முன்னேற வேண்டும் என்பதில் என் தந்தையார் போல டி.வி.ஆரும் தீவிரம் காட்டியதுண்டு. இருவரும் புரட்சிகரமான, முற்போக்கான கருத்துக்களைக் கொண்டிருந்தனர். இருவரும் பழமையில் உள்ள நல்ல அம்சங்கள் சிலவற்றை தவிர, பழமையை அப்படியே ஏற்றுக் கொண்டதில்லை. தமிழ் மொழி உலக அரங்கில் எல்லாத் துறைகளிலும் உலக மொழி களுக்கு ஈடாக மிக விரைவில் முன்னேற வேண்டுமென்பதே இவர்களது விவாதமாக எப்போதும் இருந்து வந்தது.


வயதில் என் தந்தையார் டி.வி.ஆரை விடப் பெரியவர் என்பதால், டி.வி.ஆர்., என் தந்தையாரிடம் கலந்து பேச அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார். மணிக்கணக்கில் இருவரும் ஏதோ புதிய உலகில் இருந்து பேசிக்கொண்டிருப்பர். அவை பொழுதுபோக்குப் பேச்சுக்கள் அல்ல. ஏனெனில் இருவருக்கும் தங்கள் பணிக்குப் பொழுது காணாதே என்ற கவலைதான் இருந்து வந்தது. ஏராளமான நூல்களை இருவரும் கொடுத்து வாங்கிக்கொள்வர். அறிவியல், தமிழ், நவீனகால அறிவியல், தமிழில் சிறுவர்களுக் கானஅறிவியல் என்ற அடிப்படையில் இவர்கள் ஏராளமான ஆசைகளை, திட்டங்களை வைத்திருந்தனர்.


புதுமையை ஏற்கும் ஆர்வம் டி.வி.ஆரிடம் இருப்பது, என் தந்தைக்கு மிகவும் பிடிக்கும். வெகுவாக அதை அவர் பாராட்டுவார். வாரம் ஒரு முறை, ‘தினமலர்’ இதழுடன் ‘சயன்ஸ்’சப்ளிமெண்ட் கொண்டு வர என் தந்தை டி.வி.ஆரிடம் யோசனை கூறியதுண்டு. அதற்கு, ‘தமிழில் சயன்ஸ் பற்றி நீங்கள் ஒருவரே சிந்தித்து எழுது கிறீர்கள். உங்கள் முயற்சியினால் பல இளைஞர்கள் இந்தத் துறைக்கு வருவர் என எதிர்பார்க்கிறேன். அப்படி வரும் போது நிச்சயம் ‘சயன்ஸ் சப்ளிமெண்ட்’ கொண்டுவர நான் தயாராக இருக்கிறேன். தமிழில் சயன்ஸ் பற்றி எழுத எழுத்தாளர்கள் இல்லாமல் என்ன செய்வது? எனத் தனது வேதனையை டி.வி.ஆர்., கூறி உள்ளார். என் தந்தையாருக்கு மதுரைப் பல்கலைக் கழகம், ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற பட்டம் வழங்கியது. அதற்கானப் பாராட்டு விழா திருநெல்வேலியில் டி.வி.ஆர்., தலைமையில் நடைபெற்றது. (ஆகஸ்ட் 17, 1977)

இருவரும் தமிழ் மொழியை உலக அரங்கில் புகழ்மிக்க மொழியாக அரியணையில் ஏற்ற பெரும் பாடுபட்டார்கள் என்றார் அம்மணி சுப்ரமணியம்.


மனிதரை எடை போடுவதில்...


பத்திரிகைத் தொழில் டி.வி.ஆருக்குப் பாரம்பரியமல்ல. பத்திரிகைத் தொழிலில், எழுத்துலகில் தனித்தன்மை பெற்றிருந்த மித்திரன் ஜி.சுப்பிரமணிஐயர், வ.ரா., கல்கி, டி.எஸ்.சொக்கலிங்கம் போன்ற மிகச் சிறந்த படைப் பிலக்கியவாதியும் அல்ல டி.வி.ஆர்., அவருக்கு பத்திரிகைத் தொழில் பாரம்பரியமில்லா விட்டாலும் கூட, தானே ஒரு வழிமுறையை வகுத்து, அதை அங்குலம் அங்குலமாக வளர்த்துத் ‘தினமலர்றீப் பத்திரிகைக்கு ஒரு தனிப் பாரம்பரியத்தையே தமிழ் நாட்டில் அவர் உருவாக்கி இருக்கிறார்.


எழுத்தாளர்களை, எழுத்தாளராக ஒருவர் உருவாவதற்கு முன்பே அல்லது எழுதக் தொடங்கும் ஆரம்பக் காலத்திலேயே எடை போட்டுக் கண்டுபிடிக்கும் தனி ஆற்றல் டி.வி.ஆருக்கு இருந்தது. சுதேசமித்திரன் ஜி.சுப்பிரமணிய ஐயருக்கு இந்தப் பார்வை இருந்திருக்கிறது. குட்டி சமஸ்தானத்தின் புலவன், பின்னர் தமிழாசிரியன், பாரதியைக் கண்ட உடன், இவன் ஒரு புகழ்பெற்ற பத்திரிகையாளனாக வருவான் என மதிப்பிட அவரால் முடிந்துள்ளது. சரியான கொள்கையையும், அதைச் சரியான நேரத்தில் கொண்டு செலுத்தவும் டி.வி.ஆரால் முடியும். பல எழுத்தாளர்களைத் தனது உறுதியான கொள்கைகளுக்குத் தக்கபடி ஊக்கப்படுத்தி எழுதச் செய்வது அவரது தனித்தன்மை.  தனது குடும்பத்துக்கு மிகவும் வேண்டிய ஓர் இளைஞனை, உடல்நலம் சரியில்லாத நிலையில் படுத்த படுக்கையில் பார்த்தார் டி.வி.ஆர்., அவனால் எழுந்து நடமாட முடியாது. தமிழில் அவனுக்கு அ, ஆ கூடத் தெரியாது. இவன் பிற்காலத்தில் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளனாக உருவானான். அவர், சுந்தர ராமசாமி.


அவர் கூறுகிறார் . . .


என் தாயார் பெயர் தங்கம்மாள். அவர் பிறந்து வளர்ந்தது தழுவிய மகாதேவர் கோவில் கிராமந்தான். எனது தாயாருக்கு உறவினர் இராமசுப்பையர். ஏழு வயதில் இருந்து பத்து வயது வரை என் தாயாரும், இராமசுப்பையரும் ஒன்றாக விளையாடிய குழந்தைகள்.

சுந்தரராமசாமி

தமிழகத்தின் தலை சிறந்த எழுத்தாளரான சுந்தரராமசாமி மே 30, 1931ல் பிறந்தவர். தனது சுயமுயற்சியில் தமிழ் மொழியை 18 வயதுக்கு மேல் கற்றுத் தமிழ் மொழிக்குப் பெரும் சேவை செய்தவர். தனக்கெனத் தனியான இலக்கியப் பார்வை கொண்டவர், "ஒரு புளிய மரத்தின் கதை, "ஜே.ஜே.சில குறிப்புக்கள்,' என்ற புகழ்பெற்ற நாவல்களைப் படைத்தவர்.

இவரது சிறுகதைகள் ஐந்து தொகுதிகள் வெளியாகி உள்ளன. மலையாளம், இந்தி, கன்னடம், ருஷ்ய, செக் மொழிகளில் இவரது கதைகள் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. '59ல் இருந்து கவிதைகள் பலவும் எழுதி வருகிறார். பாரிஸ், மலேசியா, சிங்கப்பூர் இங்கெல்லாம் இவர் அழைக்கப்பட்டு இவரது இலக்கியச் சேவைக்காகப் பாராட்டப் பெற்றவர். இவரது "நடுநிசி நாய்கள்' என்ற கவிதைத் தொகுப்பிற்கு 1987ம் ஆண்டின் "ஆசான்!' விருது கிடைத்துள்ளது.


எனக்குச் சின்ன வயதாக இருக்கும்போது மிகவும் உயர்வாகவும், மதிக்கத்தக்கவராகவும் டி.வி.ஆர்., பற்றி எங்கள் அம்மா பேசுவாள். அவள், ‘இராமசுப்பு’ என்றுதான் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அப்போ தெல்லாம் நான் அவரைப் பார்த்ததில்லை. ஆனாலும் கூட எனக்கும், என் சகோதரிக்கும், அம்மா சொல்வதைக் கேட்டுக் கேட்டு அவரிடம் தனி மதிப்பு அதிகரித்துக் கொண்டே வந்தது.


நாங்கள் 1939 வரை கோட்டயத் தில் இருந்தோம். பின்னர் நாகர் கோவிலுக்கு வந்ததும் டி.வி.ஆரு டன் சந்திப்பு ஏற்பட்டது. வாரத் திற்கு இரண்டு தடவை அல்லது மூன்று தடவை எங்கள் வீட்டுக்கு வருவார். அம்மா ஓர் ஆஸ்துமா நோயாளி. பக்கத்தில் உட்கார்ந்து அவளுக்கு ஆறுதலும், தேறுதலும் சொல்வார். என் 10 வயதில் 1941ல் உடம்பு சரியில்லாமல் படுத்து விட்டேன். இளம்பிள்ளை வாதத்தில் சிக்கிக் கொண்டேன். அப்போது அவர் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வரு வார். என் அப்பா, அம்மா எல்லா ருக்கும் ஆறுதல் கூறுவார். மாலை யில் அநேகமாக நாலரை மணி முதல் ஐந்து மணிக்குள் வருவார். அந்நேரம் எனக்கு நன்கு தெரியும். அவர் வரமாட்டாரா என்று எதிர் பார்க்கும் பழக்கமும் எனக்கு வந்துவிட்டது.


சதா படுக்கையில் இருக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டதால், பொழுது போவது ரொம்பக் கஷ்டமாக இருந்தது. அப்போது ஒரு நாள் அவர் என்னிடம், ‘நான் நாகர்கோவில் கிளப்பின் செயலாளர். உனக்கு வேண்டிய புத்தகங்கள் அங்கிருந்து கிடைக்கச் செய்கிறேன். புத்தகங்கள் படிப்பதால் பொழுது போகும், அறிவு வளரும்’ என்று யோசனை கூறினார்.  புத்தகங்கள் படிக்கும் வழக்கமே அப்போதுதான் எனக்கு ஏற்பட்டது. பள்ளியில் நான் தமிழ் படிக்கவில்லை. இங்கிலீஷ், சமஸ்கிருதம், மலையாளம் தான் படித்தேன், தமிழ் படிப்பது எப்படி? எனது 18வது வயதில், அதாவது, 1947ல் சிலேட்டு வாங்கி தமிழ் எழுத்துக்களை எழுதிப் படிக்கத் தொடங்கினேன். இந்த என் முயற்சியைக் கண்டு ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்டு, என்னைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டினார் டி.வி.ஆர்.,


தமிழ் நன்றாகப் படிக்கத் தெரிந்த பின் நான் படித்த இரண்டாவது புத்தகம் புதுமைப் பித்தனின் ‘காஞ்சனை...’ உண்மையைச் சொல்லப் போனால்அந்தப் புத்தகம்தான் என்னை எழுத்தாளனாகவே ஆக்கியது.  என் 20வது வயதில், 1951ல், ‘புதுமைப் பித்தன் நினைவுமலர்’ ஒன்று வெளியிட்டேன். அதுதான் நான் வெளியிட்ட முதல் புத்தகம். அதை நான் வெளிக் கொண்டுவரப் பல உதவிகளை டி.வி.ஆர்., செய்தது இன்று எனக்குப் பசுமையாக நினைவிருக்கிறது என்றார். திறமை உள்ளவர்களை ஊக்குவிக்கும் குணம் தமிழகத்தின் புகழ்பெற்ற சில பத்திரிகை ஆசிரிய மேதைகளிடம் இருந்துள்ளது. அந்த குணம் டி.வி.ஆரிடமும் இருந்ததே அவர் வெற்றியின் ரகசியம்.

பி.ஸ்ரீ.ஆச்சார்யி

"பி.ஸ்ரீ.,' என்று தமிழ் எழுத்தாளர்களால் புகழ்ப்படும் பி.ஸ்ரீ.ஆச்சார்யா, நெல்லை மாவட்டம், தென் திருப்பேரையில், ஏப்., 11, 1886ல் பிறந்தார். நெல்லை இந்துக் கல்லூரியில் படித்து இவர், காவல்துறையில் சில காலம் பணியாற்றி உள்ளார்.  அதனை உதறி விட்டு பின்னர் முழுக்க முழுக்கத் தமிழ்ப் பணியில் ஈடுபட்டார்.

தமிழ்ப் பத்திரிகை உலகின் அதுவும் இலக்கியப் பிரியர்களுக்கு பி.ஸ்ரீ., என்ற பெயர் நன்கு தெரிந்திருந்த காலம் ஒன்றுண்டு. தமிழ் நுபல்கள் எழுதுவதையே முழுக்க முழுக்கத் தொழிலாகக் கொண்ட இவரது, கம்ப சித்திரம், சித்திர இராமாயணம் ஆகிய தொடர்கள் பல வருஷங்கள் விகடனில் தொடராக வெளிவந்தது.


ஆழ்வார்களது தெய்வீகக் கதைகளின் விமர்சனமும் புகழ்பெற்றது. இதுபோலவே, சிவ நேசச் செல்வர், இராமானுஜர், கம்பனில் ஆழ்வார்களின் சாயல் ஆகிய நூல்கள் பி.ஸ்ரீ.,யின் தனி முத்திரையுடன் திகழ்கின்றன. சாகித்திய அகடமி, பரிசளித்து இவரைக் கவுரவித்தது. சென்னையில் வாழ்ந்த இவர், கடைசிக் காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான விட்லாபுரத்தில் வசித்தார். அப்போது அவர், ‘தினமலர்’ இதழில் எழுதி வந்தார். 96வயது வரை பத்திரிகைகளில் எழுதிய முதுபெரும் எழுத்தாளாரான இவர், அக்டோபர் 28, 1981ல் காலமானார்.


டி.வி.ஆரின் பெருமதிப்பைப் பெற்ற பி.ஸ்ரீ.,யின் 93வது ஆண்டு விழா பாளையங்கோட்டையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது இவருக்கு, ‘கம்பராமாயணக் கலங்கரை விளக்கம்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இஸ்மாயில், டி.வி,ஆர்., மற்றும் இலக்கியவாதிகள் விழாவில் கலந்து கொண்டு, பி.ஸ்ரீ.,யின் தமிழ்த் தொண்டுகளைப் பாராட்டிப் பேசினர். இந்த பாராட்டு விழா நடத்த டி.வி.ஆர்., பெரும் காரணமாக இருந்தார்Advertisement
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X