நெல்லையில் தினமலர்


நாஞ்சில் நாட்டுத் தமிழ் மக்கள் தாய்த் தமிழகத்துடன் இணைய வேண்டுமென்ற உன்னதமான லட்சியத்திற்காக மலையாள பூமியில் தொடங்கப்பட்ட, ‘தினமலர்’ தமிழர்கள் போராட்டம் வெற்றி கண்டவுடன் உடனடியாக நெல்லைக்கு வந்தது. இது ஏன் என்பது ஆய்வுக்குரியது.

பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியம் இதுபற்றிக் கூறுகையில்:

சர்வதேச சட்ட நிபுணர் எனப் பாராட்டப்படும் கள்ளிக்கோட்டைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் டாக்டர் நுப.அ.நுபர் முகம்மது இது பற்றி கூறுகையில் . . .


கன்னியாகுமரி மாவட்டத்தையும், இங்கு வாழும் தமிழர்களையும் தாய்த் தமிழ்நாட்டிற்கும், தாய்த் தமிழ் மக்களுக்கும் அறிமுகம் செய்து வைத்ததே, ‘தினமலர்’தான். தாய்த் தமிழ்நாட்டின் கவனத்தை யும், தாய்த் தமிழ் மக்களின் கவனத்தையும், புதிதாக இணைக்கப் பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின்பால் திருப்புவதற்குத் ‘தினமலர்’ தமிழ்நாட்டில் இருப்பதே நல்லது என்று, தனக்கே உரிய முறையில் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார் டி.வி.ஆர்., இது ஒரு சிறந்த அரசியல் முடிவு.


பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியம் இதுபற்றிக் கூறுகையில்...  போராட்டம் முடிந்துவிட்டது. ராஜ்ஜியப் பிரிவினையும் உறுதியாகி விட்டது. இப்பொழுது டி.வி.ஆர்., தமது பத்திரிகையைத் திருவனந்த புரத்திலிருந்து மாற்ற எண்ணம் கொண்டார். ஓர் இலட்சியத்தின் அடிப்படையில் அன்றைக்குப் பத்திரிகை திருவனந்தபுரத்திலிருந்து தான் வெளிவர வேண்டுமென்று அவர் எடுத்த முடிவு மிகச் சரி யானது. இதை மலையாள எதிர்ப்பு என்று கூற முடியாது. ஆனால், தமிழர்களின் நலன், உரிமைகள் காக்கப்பட வேண்டுமென்பதே இலட்சியம். அதில் வெற்றிகண்ட பின்னர் திருவனந்தபுரத்தில் நீடிப்பது அவசியமில்லை. தாய்த் தமிழகத்துடன் கன்னியாகுமரி எப்பொழுது இணைகிறதோ, அப்போதே தமது பத்திரிகையும் தமிழகத்திற்குப் போவதே சரியென்று முடிவு செய்தார்.


திருநெல்வேலியில் அன்று பத்திரிகைகள் கிடையாது. திருவனந்த புரமாவது ஒரு மாநிலத்தின் தலைநகர்; திருநெல்வேலிக்கு அப்படிப் பட்ட அந்தஸ்து எதுவும் கிடையாது. செய்திகள் தாராளமாகக் கிடைக்க அன்றைக்கு திருநெல்வேலியில் எந்த வசதியும் இல்லை. ஆனாலும், திருநெல்வேலியிலிருந்து ஒரு பத்திரிகையைத் திறம்பட நடத்தி, நாஞ்சில் தமிழர்களை, தாய் தமிழகத்துடன் இணைத்து விட வேண்டும் என்று முடிவெடுத்து, அதில் அவர் கண்ட வெற்றியையும் பார்க்கும்போது, எவ்வளவு துல்லியமாகக் கணக்கிட்டு, அதைச் சாதனையாக்கி விடுகிறார் இந்த மனிதர், என்பதை எண்ணி என்னால் இன்றும் வியக்காமல் இருக்க முடியவில்லை!


டி.எஸ்.ராமசாமி


பொது மக்கள் பிரச்னையென்றால் அதன் பக்கமிருந்து போராடும் தீரமான பத்திரிகையாளர் டி.வி.ஆர்., அவர் நல்ல இலட்சியவாதி. ஒரு பெரிய சாதனையைச் செய்துவிட்டு, திருவனந்தபுரத்திலேயே தொடர்ந்தால், கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு அதிக நன்மை செய்ய முடியாது என்பதாலேயே திருநெல்வேலிக்குப் போனார். அதுவும்கூட தீர்க்கதரிசனமான நல்ல அரசியல் முடிவுதான்.


எஸ்.என்.சோமையாஜுலு


தமிழகச் சுதந்திர போராட்ட வீரர்கள் சங்க முதுபெரும் தலைவரும், தமிழகக் காங்கிரஸ் வேறு ஒரு முடிவில் இருந்தாலும், ‘கன்னியாகுமரி மாவட்ட தமிழர்கள் இயக்கம் மிகவும் நியாயமானது’ என்று, உணர்ச்சிப் பூர்வமாக உணர்ந்து, அந்த இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவரும், பத்திரிகையாளருமான எஸ்.என். சேமையாஜுலு கூறுகிறார்:


திருநெல்வேலியில் முதன் முதலில், ‘நெல்லை செய்தி’ என்ற பத்திரிகையைத் தொடங்கி மூழ்கியவன் நான். என்னைக் காட்டியே, ‘டி.வி.ஆரும் இப்படித்தான் ஆகப் போகிறார்’ எனப் பலரும் பகிரங்க மாக விமர்சித்தது உண்டு. அவர் ஒரு சிறந்த நிர்வாகி; ஒரு ஸ்தாபனத் தைப் பலமாகக் கட்டி வளர்க்க அவருக்கு நன்கு தெரியும். சென்னையில் செய்திகள் கிடைப்பது போல நெல்லையில் கிடைக்காது. காலதாமதமாகும். பி.டி.ஐ., கூடத் தமது செய்திகளை இரயில் மூலமே அனுப்புவர்; அது மறுநாள் நெல்லைக்கு வரும். நெல்லை யிலிருந்து பத்திரிகை நடத்துவது அந்த காலத்தில் மிக்க கஷ்டம். செய்திகளில் நெல்லை பிந்திவிடும். நான் பட்டபாடும், பத்திரிகை நடத்த முடியாமல் ஆனதும் அப் படித்தான். ஆனால், டி.வி.ஆர்., அதில் வெற்றி பெற்றுவிட்டார்.

எஸ்.என்.சோமையாஜுலு

சிதம்பரனார் மாவட்டம் ஆத்தூரில் பிறந்த எஸ்.என்.சோமையாஜுலு பழம்பெரும் சுதந்திரப் பேராட்ட வீரரும், பத்திரிக்கையாளருமாவார். இளம் வயதில் இருந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்து இவர், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பல்வேறு சிறைகளில் 13 ஆண்டு காலம் சிறை வாழ்க்கை அனுபவித்தவர்.

சென்னையில் உள்ள நீலன் சிலை அகற்றும் போராட்டத்திற்கு தலைமை வகித்து வெற்றி கண்டது, இவரது பெரும் சாதனையாகும். 1952 - 1957 வரை நெல்லைச் சட்டசபை உறுப்பினர். தமிழக சுதந்திரப் பேராட்ட வீரர்கள் சங்கத்தின் தலைவராகத் தனது இறுதிக்காலம் வரை இருந்தவர். இவர் நெல்லையில் முதன் முதலாக "நெல்லைச் செய்தி' என்ற பத்திரிக்கையை நடத்தியவர். ஜன.9, '90ல் காலமானார்.


அவர், மாவட்டச் செய்தி களுக்கு முக்கிய இடம் கொடுத் தார். கன்னியாகுமரி, திருநெல் வேலி மாவட்டங்களின் இன்றைய வளர்ச்சிக்குத் ‘தினமலர்’ காரணம் என்று, சுதந்திரப் போராட்ட வீரன், பத்திரிகையாளன் என்ற முறையில் என்னால் நிச்சயமாகக் கூறமுடியும். கவர்ச்சிச் செய்திகள், பரபரப்பு செய்திகள், உலக, அகில இந்தியச் செய்திகள் இவையே பத்திரிகை இலக்கணம் என்று இருந்த காலத்தில், வட்டாரச் செய்திகள், வட்டார மக்களுடைய குரல், தேவைகள், கோரிக்கைகள், வளர்ச்சி இவையே செய்திகள்; இவற்றுக்கும் கவர்ச்சியுண்டு என்று மக்களுக்கு ஒரு கல்வியைத் தந்து, ருசியை உருவாக்கித் ‘தின மலர்’ இதழை வளர்த்தவர் டி.வி. ஆர்., ‘வட்டார மக்களுக்கான பத்திரிகைகள்’ என்று ஓர் ஆய்வு எடுக்கப்படுமானால் அதில், ‘தினமலர்’ முதல் இடத்தைப் பெறும் என்று என்னால் கூற முடியும்.


அவர் பத்திரிகை நடத்திய முறை, அதற்காக அவர் கொண்டிருந்த, ‘பார்முலா’ தனியானது. அதில் அவர் பெரும் வெற்றியடைந்து, பத்திரிக்கை உலகில் புதிய முறையையே தோற்றுவித்தவராகிறார் என்று என்னால் கூற முடியும்.

பத்திரிகை திருவனந்தபுரத்திலிருந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. அச்சு இயந்திரம், கம்போசிங் பொருட்கள் மற்றும் தினசரி பத்திரிகை அச்சிடுவதற்கான ஏராளமான தளவாடங்கள் திருவனந்தபுரத்தில் இருக்கின்றன. நெல்லைக்கு கொண்டுவந்து, இணைத்து, வெள்ளோட் டம் பார்த்து பத்திரிகையை அச்சிட வேண்டுமானால், அன்றைக்குள்ள போக்குவரத்து வசதி, தொழில் நுட்பத்திறன் இவற்றில் குறைந்தது இரண்டு வாரமாவது ஆகும். ஆனால், றிநெல்லையில் இருந்து பத்திரிகை வெளிவரும்றீ என்று திருவனந்தபுரம் பத்திரிகையில் அவர் வெளியிட்ட விளம்பரம் நமக்குப் பெரும் ஆச்சரியத்தைத் தருகிறது. விளம்பரம் இதுதான்:

அறிவிப்பு

ஏப்.14, '57 திங்கட்கிழமையிலிருந்து "தினமலர்' திருநெல்வேலியிலிருந்து வெளியாகிறது. அதற்கான காரியாலய மாற்ற அலுவல்கள் நிமித்தம் நாளைக்கும், மறுநாளைக்கும் "தினமலர்' வெளிவராது. வருகிற திங்கட்கிழமையிலிருந்து மீண்டும் வழக்கம் போல் "தினமலர்' திருநெல்வேலியிலிருந்து தினமும் காலையில் வெளியாகும்.

மேனேஜர்
"தினமலர்'

12.4.1957


பத்திரிகை இரண்டு நாள் மட்டுமே வெளிவராது என்கிறது இந்த விளம்பரம். அதிலும் ஒருநாள் ஏப்.,14, ’57 அன்று தமிழ் புத்தாண்டு. ஆகையால் எல்லாப் பத்திரிகைகளுக்கும் பொது விடுமுறை. வாசகர்களுக்கு ஒருநாள் தான், ‘தினமலர்’ கிடைக்காமல் இருந்திருக்க வேண்டும். இரவோடு இரவாக ராஜகோபுரத்தைப் பூதங்கள் கட்டிய தாகப் புராண நம்பிக்கை உள்ளவர்கள் கூறுவர். இது என்ன அப்படிப்பட்ட அசாதாரணமான சாதனை . . . இது எப்படி சாத்திய மாயிற்று . . . என்ற இரகசியங்களை டி.வி.ஆரே விளக்கி உள்ளார். . .


நாஞ்சில் நாடு, தாய்த் தமிழகத்துடன் இணைந்த பிறகு திருவனந்த புரத்தில் இருந்து பத்திரிகை நடத்தியதின் நோக்கம் முடிந்து போய் விட்டது. ‘நாஞ்சில் நாட்டில் தமிழர்களும் இருக்கிறார்களா?’ என்று, தமிழக அரசியல்வாதிகள், அன்று கிண்டலடித்துக் கொண்டிருந்தனர். தாய்த் தமிழக மக்களுக்கு, தம்முடைய தமிழ்ச் சகோதரர்கள், திரு - கொச்சியில், ஏதோ ஒரு மொழியின் பிடியில் சிக்கித் தவிப்பது கூடத் தெரியாமலிருந்தது. இப்படியான சூழலில், நாஞ்சில்நாடு, தாய் தமிழ்நாட்டுடன் இணைந்துவிட்டது. ஆரல்வாய்மொழியைத் தாண்டி விட்டாலே, வேறு தேசத்திற்குள் நுழைந்துவிட்ட எண்ணம், நாஞ்சில் நாட்டு மக்களிடம் நிலவி வந்த நேரம் அது.


எனவே, நாஞ்சில் நாட்டு மக்களுக்கு, தாய்த் தமிழர்களுடன் நல் உறவு ஏற்படுத்தவும், புதிதாக இணைந்த மாவட்டத்தைப் பற்றி, தமிழ்நாட்டின் கவனத்தையும்,தமிழ் மக்களின் கவனத்தையும் ஈர்க்கவும், தமிழ்நாட்டிலிருந்து பத்திரிகை வெளிவருவதே சரி என்ற முடிவுக்கு வந்தேன். கன்னியாகுமரி மாவட்டத்தின் அருகே உள்ள திருநெல்வேலியில் இருந்து செயல்பட்டால், எடுத்த பணியைச் செம்மையாகச் செய்ய இயலும் என்ற முடிவுக்கு வந்தேன். - இதுதான் டி.வி.ஆரின் தனிக்குணமாக நமக்குத் தோன்றுகிறது. திருவனந்தபுரத்திலிருந்து தமிழ் பத்திரிகை நடத்துவது என்று தான் எடுத்த முடிவு பற்றி, ‘திருவனந்தபுரத்திலிருந்து ஒரு தமிழ்ப் பத்திரிகை நல்ல முறையில் நடக்குமா என்று பலர் என்னிடம் கேட்டதுண்டு. அதுவே என்னைத் திருவனந்தபுரத்தில் பத்திரிகை நடத்தத் தூண்டியது’ என்று டி.வி.ஆர்., கூறியுள்ளதை முன்னரே கூறியுள்ளோம். பலர் ஒரு காரியம், ஒரு இடத்தில் செய்ய முடியாது என்று கூறினால், அதை அந்த இடத்திலேயே செய்து வெற்றி காண்பது என்பதை, அவர் தமது வாழ்நாள் சாதனைகளாக்கி உள்ளார். இதை ஆழமாகப் பரிசீலிக்கும்போது, அவரது அபாரமான தன்னம்பிக்கை, செயல் நேர்த்தி, திட்டமிட்டுச் செய்தல், எதையும் எங்கும் செய்யலாம் என்ற நடைமுறை நமக்கு விளங்குகிறது.


டி.வி.ஆர்., மேலும் சொல்கிறார். . .


இதன் பிறகு திருநெல்வேலிக்கு நான் வந்து பல இடங்களையும் சுற்றிப் பார்த்து, தச்சநல்லுபரில் பழைய சீனி ஆலையின் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்தேன். அதன் உரிமையாளர் தேவகோட்டையில் இருந்தார்; அவர் அந்த இடத்தை வாடகைக்கு தரச் சம்மதித்தார். இனி, திருவனந்தபுரத்தில் உள்ள அச்சு இயந்திரங்கள் திருநெல்வேலி வர வேண்டும். எவ்வளவு விரைவாகச் செயல்பட்டாலும், பத்து நாட்களாகும். பத்து நாட்கள் பேப்பர் இல்லாவிட்டால் அதன் வாசகர்களுக்குச் செய்திகளை உரிய நேரத்தில் தர இயலாதவனாகி விடுவேன். இதைக் கருதி, சென்னை சென்று, ஒரு அச்சு இயந்திரத்தை வாங்கி, அதைத் தச்சநல்லுபரில் நிறுவி, மற்ற ஏற்பாடுகளும் செய்தேன். முறைப்படி திறப்புவிழா நடத்தக்கூடச் சந்தர்ப்பம் இல்லை; மற்ற பத்திரிகைகளில் விளம்பரம் செய்ததோடு சரி.


ஒரு விடுமுறை நாள் வந்தது. இரண்டு லாரிகளில் திருவனந்தபுரத் தில் இருந்து அச்சு இயந்திரங்கள் தவிர எல்லாவற்றையும் கொண்டு வந்து சேர்த்தோம். அடுத்த நாள் பத்திரிகை முறையாக வெளிவந்தது. ஏப்., 14, ’57 தமிழ்ப் புத்தாண்டு; விடுமுறை தினம். 13ம் தேதி ஒரு நாள்தான் பத்திரிகை வரவில்லை. 14ம் தேதி அன்று மற்ற பத்திரிகை களும் கிடையாது. இந்தச் செயல் எனக்கே ஆச்சரியத்தை அளித்தது என்பதுடன் ஒரு புதிய தெம்பையும் உண்டாக்கிது. இது கன்னியாகுமரி மாவட்டத்து மக்களுக்குப் பெருத்த ஆச்சரியத்தை உண்டாக்கியது. ‘நேற்றுவரை திருவனந்தபுரம் என்று, தலைப்பின் கீழ் போட்டு, தேதியும் போட்டிருந்த பேப்பரில், இன்று திருநெல்வேலி என்று அச்சிட்டு வெளியாகிறதே . . .’ என்பதுதான் அவர்கள் ஆச்சர்யத்திற்குக் காரணம்.

திருநெல்வேலி மக்கள் முதலில் இதைச் சந்தேகத்தோடு தான் வரவேற்றார்கள். ‘நமது ஊரில் இருந்து ஒரு தினசரிப் பத்திரிகை நடத்த முடியுமா? சென்னையில் இருந்துதானே நடத்த முடியும்!’ என்பதே அந்தச் சந்தேகத்திற்குக் காரணம்.


கவிமணி வேடிக்கையாக என்னைக் கிண்டல் செய்வார் . . . ‘ எல்லா ஆறும் மலையிலிருந்து புறப்பட்டு கடலுக்குப் போகும். ஆனால், உமது ஆறு, கடலில் இருந்து புறப்பட்டு மலைக்குப் போகிறது’ என்பார். இதை நான் அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்வதுண்டு.
 

தச்சநல்லுபர், ‘தினமலர்’ அலுவலகம் பற்றி, ‘தினமலர்’ இதழில் நீண்டகாலம் பணியாற்றி ஓய்வுபெற்ற, ‘போர்மென்’ பொன்னையா கூறுகிறார் . . .

தினமலர் அலுவலகம் 1957ம் ஆண்டு இருந்த இடம் தச்சநல்லுபர் சீனி ஆபீஸ். அங்கே எல்லா வகைப் பாம்புகளும், நட்டுவாக்கலி, காட்டுப் பூனைகளும் உண்டு. கிட்டத்தட்ட ஒரு வனாந் தரத்தில் இருப்பது போன்ற உணர்ளவு இருக்கும். பகலிலும், இரவிலும் பாம்புகள் எங்கள் அறைக் குள் தாராளமாக வரும். டி.விஆர்., அறையிலும் சதா வாசம் செய்யும். அந்த ஜந்துக்கள் அங்கு யாரையும் தீண்டியதில்லை.

பத்திரிகை நடத்து வதற்குப் பணபலம் இருந்தால் போதும் என்பார் கள், ஆனாலும் பாம்புகளும், விஷ ஜந்துக்களும் சுற்றி வரக்கூடிய நிலையில் மலரை வெளியிட்ட பெருமை சாமிக்குத்தான் (டி.வி.ஆர்.,) உண்டு. ‘சாமிக்குச் சர்ப்ப பாசம் உண்டு போலிருக்கிறது’ என்று நாங்கள் பேசிக் கொள்வோம்.


‘தினமலர்’ இதழில் நீண்டகாலம் கம்பாசிடராகப் பணியாற்றிய சாகுல் ஹமீது கூறுகிறார் . . .


இளைஞனாக இருந்த நான், தச்சநல்லுபருக்குத் ‘தினமலர்’ வந்தபோது, அதில் சேர்ந்தேன். அந்த காலத்தில், றிதினமலர்றீ நவீன அச்சு இயந்திரம் இல்லாத நிலையில், சாதாரண சிலிண்டர் மிஷினி லேயே அச்சாகியது. சிலிண்டர் மிஷினைப் பொறுத்த மட்டில், ஒரே நேரத்தில் இரண்டு பக்கங்களே அச்சடிக்க முடியும். தினசரி நாலு பக்கங்கள் மற்றும் இரண்டு பக்கங்கள் வேறு ஒரு சிலிண்டர் மிஷினில் அச்சடித்து வந்தது. மிகச் சிரமமான நிலையில் இரண்டு சிலிண்டரைக் கொண்டு நாலு பக்கங்களை அச்சடித்து வெளிக் கொண்டு வந்தோம். ‘தினமலர்’ திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டது முதல், கன்னியாகுமரி மாவட்டச் செய்திகளுடன், தமிழ் மாநிலச் செய்திகளுக்கும், இந்தியா, உலகச் செய்திகளுக்கும் கணிசமான அளவில் இடம் கொடுக்க வேண்டுமென்று சாமி (டி.வி.ஆர்.,) முயற்சி எடுத்தார்கள்.


அதை நடைமுறைக்குக் கொண்டுவருவதானால், தினசரி ஆறு பக்கங்கள் வெளியிட வேண்டிய நிலை ஏற்படும். இதற்கிடையில் இயங்கிக்கொண்டிருந்த இரண்டு சிலிண்டர் மிஷின்களில் ஏதாவது ஒன்றில் கோளாறு ஏற்பட்டால், பத்திரிகை வெளிவருவதில் மிகுந்த காலதாமதம் ஏற்படும். மேலும், அதிக அளவில் செய்திகளை அச்சுக் கோர்ப்பதற்கு எழுத்துக்கள் தேவைப்படும். இதை மனத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட ஊழியர்களை அழைத்து விவாதித்து, முடிவில் மூன்றாவது சிலிண்டர் மிஷின் வாங்க வேண்டும், அதோடு டைப்ஸ் பற்றாக்குறையை நிவர்த்திக்க அதிக அளவில் டைப்ஸ் வாங்க வேண்டும். அப்படியே டைப்ஸ் வாங்கினாலும் கைவசம் உள்ள பழைய எழுத்துக்களோடு புதிய எழுத்துக்களை இணைத்து அச்சாக்கினால் அச்சில் அதிக வித்தியாசம் தெரியும். ஆகவே, பழைய எழுத்துக்களைத் கழித்துவிட்டு, எல்லாமே புது எழுத்துக்களாக இருப்பதுதான் சரி என்று அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.
புதிதாக மூன்றாவது சிலிண்டர் மிஷின் வரவழைக்கப் பட்டது. கேரளத்தைச் சேர்ந்த, தொழில் நுட்பத்தில் மிகவும் அனுபவம் உள்ள மெக்கானிக் அக்னிமுத்து ஆசாரி திருநெல்வேலி வந்து, இரவு பகல் பாராது ஒரு வாரத்திற்குள் மூன்றாவது மிஷினை ஓட வைத்தார். அச்சு எழுத்துக்கள் பற்றாக்குறையைப் போக்க, கம்போசிங் செக்ஷனைச் சேர்ந்த சிவதாணுவைச் சென்னைக்கு அனுப்பி, ‘டைப்பு’களை வாங்கி வர ஏற்பாடுகள் செய்தார்.  பின் வாரம் இரண்டு நாள், ஆறுபக்கங்கள் கொண்டு பத்திரிகை வந்து, வட்டாரச் செய்திகளை உடனுக்குடன் வெளிவரச் செய்தார். வாசகர்கள், நிருபர்களுக்கு இதனால் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது.  திருநெல்வேலிக்கு, ‘தினமலர்’ வந்ததும், பத்திரிகையின் லட்சியங்கள் பற்றி முதல் நாள் தலையங்கத்தில் விரிவாகக் கூறி இருப்பதால் அதை அப்படியே இங்கே தருகிறோம் . . .

பணி செய்வதே எங்கள் கடன்

தினமலர் இன்று முதல் திருநெல்வேலியிலிருந்து பிரசுரமாகிறது. மக்களுக்கு என்னென்ன தேவை என்பதைக் கண்டுபிடித்துத் தெரிவிப் பதே, ‘தினமலர்’ இதழின் சேவை. ‘தினமலர்’ ஆரம்பமாகி ஐந்தரை வருடங்களுக்கு மேலாகிறது. இந்தக் குறுகிய வருடங்களில், ‘தினமலர்’ பல லட்சம் மக்களின் அபிமானத்தையும், பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் ஆதரவையும் பெற்றிருக்கிறது. சேவை செய்வதுதான் நமது பத்திரிகையின் ஜீவநாடி, திருவிதாங்கூர் - கொச்சி வாழ் தமிழர்களுக்காகத் ‘தினமலர்’ செய்து வரும் சேவை சரித்திர முக்கியத் துவம் வாய்ந்தது. தமிழர்களுக்காக ஆகஸ்ட் மாதம், 1954ம் வருடம், திரு - கொச்சியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, எவ்வளவோ நெருக்கடியான சூழ்நிலைகளை நிமிடத்திற்கு நிமிடம், ‘தினமலர்’ சந்தித்துள்ளது. எதற்கும், ‘தினமலர்’ அஞ்சாமல், அப்போதைய அரசாங்கத்தின் மிஞ்சலுக்குப் பணிந்து கெஞ்சாமல், நெஞ்சைக்காட்டி முழங்கி வந்தது; முடிவில் வெற்றியும் பெற்றது.


இடமாற்றத்தால், ‘தினமலர்’ இதழின் சிறப்பான பாகங்கள் இன்னும் பெருகுமே அல்லாது ஒரு தரத்திலும் குறையாது என்பதை நமது வாசகர்களுக்கு உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். உள்ளூர்ச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, ‘தினமலர்’ கையாளும் தனி அம்சம். ரைன் நதியை விடவும், காவேரி நதிக்குத்தான் முதலிடம் கொடுக்கப்படும். தேம்ஸ் நதியை விடவும், தாமிரபரணிதான், ‘தினமலர்’ இதழுக்கு முக்கியம். சொந்த நாட்டை எலிக்கும், நட்டுவாக் காலிக்கும் விட்டுக் கொடுத்துவிட்டு, அடுத்த வீட்டின் மேன்மை யைப் பேசித் திரிவது மோசமான பழக்கம், இந்தப் பழக்கம் எப்படியோ தமிழர்கள் மத்தியில் வந்து விட்டது. அந்தப் பழக்கத்தைக் கைவிடுவதற் கான துறைகளில், ‘தினமலர்’ ஊக்கம் காட்டும். சொந்த வீட்டை முதலில் கவனித்துவிட்டு, அடுத்த வீட்டைக் கவனிப்பதுதான் இன்றைய சூழ்நிலைக்குப் பொருத்தமான மார்க்கம். ஏனெனில், தமிழர்களாகிய நாம் பல துறைகளிலும் மற்றவர்களைவிடப் பின்னணியில் நிற்கிறோம். இந்தியச் செய்திகளுக்கும், குறிப்பாகத் தமிழ்நாட்டுச் செய்திகளுக்கும், விசேஷமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, இராமநாதபுரம் மாவட்டச் செய்திகளுக்கும்,‘தினமலர்’ எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து வரும்.


கேரள ராஜ்ய செய்திகளுக்கு முக்கியத்துவம் உண்டு. அந்த இராஜ்யத்தில் தமிழர்கள் நிரம்பப் பேர் இருக்கின்றனர். இது ஒன்று; அங்கு நடக்கும் கம்யூ., ஆட்சியின் நிறைகளையும், குறைகளையும் தினம் தினம் அறிவதில் பொதுவாகவே எல்லாரும் ஆவல் உள்ளவர் களாக இருக்கின்றனர் என்பது மற்றொன்று. எனவே, கேரளச் செய்திகளும் விரிவாகப் பிரசுரிக்கப்படும். நமது நோக்கத்தை வாசகர்கள் புரிந்து வரவேற்பார்கள் என்ற நம்புகிறோம். இன்றுபோல என்றும் வாசகர்கள் தங்கள் பரிபூரண ஆதரவைத் தந்து எங்கள் பணியை ஊக்குவிக்கக் கோருகிறோம். எங்கள் கடன் பணி செய்வதுதான் என்பதைச் சுருக்கமாகச் சொல்லி முடித்துக் கொள்கிறோம். (ஏப்.,15, ’57 ‘தினமலர்’ தலையங்கம்)

திருநெல்வேலி "தினமலர்' எப்படி இருந்தது? அதையும் டி.வி.ஆரே கூறுகிறார்:

திருநெல்வேலி வந்ததும், செய்திகளுக்காக டில்லி, சென்னை முதலான இடங்களில் நிருபர்கள் நியமித்தேன். முக்கியமான செய்திகள் அனைத்தும், ‘பிரஸ் டெலிகிராம்’ மூலம் வந்துவிடும். (அன்றைக்கு டெலிபிரின்டர் வசதி திருநெல்வேலிக்குக் கிடையாது. பின்னர், அந்த வசதியைத் திருநெல்வேலிக்குக் கொண்டுவந்ததே, ‘தினமலர்’தான்.) திருநெல்வேலி மாவட்ட மக்களுக்குத் தங்கள் மாவட்டச் செய்திகள் நாள்தோறும் கொட்டை எழுத்துக்களில் வருவதைப் பார்த்து வியந்தனர். செய்திகள் வரவர, அதிகாரிகள், படிப்படியாக அதற்கு நிவர்த்தி செய்வதைப் பார்த்து, வாசர்களுக்குத் ஓர் ஊக்கமும், ‘தினமலர்’ மீது பற்றும் ஏற்பட்டது.


முதல் இரண்டு வருஷம் இங்கும் பழைய கதைதான்; அதாவது நஷ்டம்தான். ஆனால், இந்த இரண்டு ஆண்டுகளில், திருநெல்வேலி மாவட்ட மக்களின் பெரும் அபிமானத்தை, ‘தினமலர்’ பெற்றது.  செய்திகள் அதிகம் கிட்டாத நகர், பெருமையாக எண்ணப்படாத நகர் என்று, பலரும் ஒதுக்கித் தள்ளிய திருநெல்வேலிக்கு இப்போது தனி அந்தஸ்து வந்துவிட்டது. இதன் எதிரொலியாக ஏப்., ’59ல், ‘மாலை முரசு’ பத்திரிகை முதன்முதலாகத் திருநெல்வேலியில் தொடங்கப்பட்டது. ‘ஒரு பத்திரிகை இதுவரை வெளிவராத ஊரில் இருந்து இரண்டு பத்திரிகையா . . . இந்தப் போட்டியில், ‘தினமலர்’ என்னவாகும்?’ என்று பலரும் பேசிக்கொண்டனர்.


‘மாலைமுரசு’ தொடக்க விழாவில் டி.வி.ஆரும் கலந்து கொண்டார். பேசவும் செய்தார். அவரது அன்றைய பேச்சு, அவர்பத்திரிகைகள் மீது கொண்டிருந்த அவரது தணியாத பற்றுதல் பற்றி விளக்கவே செய்கிறது.


டி.வி.ஆர்., பேச்சு


திருநெல்வேலியில் இருந்து ஒரு பத்திரிகை நடத்த முடியுமா என்று முதலில் என்னைப் பலர் பயமுறுத்தினர். கடந்த இரண்டு ஆண்டுகளில், ‘தினமலர்’ அந்த எண்ணத்தை மாற்றி இருக்கிறது. என்பதற்கு நான் ஒரு காரணமாக இருந்துள்ளேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. இன்றைக்கு திருநெல்வேலியிலிருந்து ஒரு மாலைப்பதிப்பு வெளிவருவதைக் கண்டு எனக்கு உண்மையிலேயே மிகவும் சந்தோஷம். முன்பு திருநெல்வேலிருந்து, ‘தினமலர்’ என்ற ஒரு பத்திரிகை சென்றது என்றால், அது இந்தப் பெரிய சாலையில் நான் ஒற்றை மாட்டு வண்டியில் போனது போலத்தான். இன்றைக்கு இது இரட்டை மாட்டு வண்டியில் பயணம் தொடர்கிறது. இதைப் பலர், ‘போட்டி தானே?’ என்று என்னிடம் கேட்டார்கள். உண்மையில் போட்டியாக நான் நினைக்கவில்லை.


இந்தச் சமயத்தில் தமிழ்நாட்டையும், கேரளத்தையும் பற்றி ஒரு சிறு விமர்சனம் கூறலாம் என்று நினைக்கிறேன். கேரளத்தில், ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலிருந்தும், அநேகமாக ஒன்றோ இரண்டோ நாளிதழ்கள் வருகின்றன. திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு இப்படியான முக்கியமான நகரங்களிலிருந்து பத்திரிகைகள் வருகின்றன. மொத்தத்தில் இரண்டு கோடி ஜனத் தொகையுள்ள கேரளத்தில் நாளிதழ்கள் மட்டும் ஒன்பது லட்சம் பிரதிகள் விற்கின்றன. நாலரைக் கோடி மக்கள் இருக்கும் தமிழ்நாட்டில் தமிழ் நாளிதழ்கள் ஆறு லட்சம் பிரதிகளே விறபனையாகின்றன. இது இப்போது உள்ள கணக்கு; இது, மிகக் குறைவான வாசகர்களைக் காட்டுகிறது.


இதை பத்திரிகையாளர்களாகிய நாம் கூட்ட வேண்டும்; போட்டி ஒரு வகையில் நல்லதுதான். ஒவ்வொரு பத்திரிகையும் போட்டியின் காரணமாக விரைவாக, புதுப்புது வகையில், நல்ல செய்திகளைக் கொடுக்க முந்த வேண்டிய அவசரம் வரும். இதனால் பத்திரிகைகளை ஒப்பிட்டுப் பார்க்க வாசகர்கள் முன் வருவர்; வாசகர்கள் பெருகுவர். ஆகவே, ‘மாலைமுரசு’ பத்திரிகையை நான் போட்டியாகக் கருதவே இல்லை. இன்னும் சொல்லப் போனால், எனக்கு ஓர் ஆசை கூட உண்டு. திருநெல்வேலியில் இருந்து இன்னொரு காலைப் பத்திரிகையும் வரவேண்டும் என்பதுதான் அந்த ஆசை என்று கூறினார். (‘மாலை முரசு’ தொடக்க விழாவிற்கு டி.வி.ஆருடன் சென்ற, ‘தினமலர்’ நிருபர் ராதாகிருஷ்ணன் தந்த தகவல்.)


பத்திரிகைகளும், வாசகர்களும் கேரளத்தைப் போலப் பெருக வேண்டும் என்ற நல்லெண்ணம் டி.வி.ஆருக்கு இருந்துள்ளது என் பதையே மேலே கண்ட அவரது ஆசை நமக்கு விளக்குகிறது. திருநெல்வேலியில், ‘தினமலர்’ மேலும் பல புதுமைகளைப் புகுத்தி யது. தமது பத்திரிகையின் பார்முலா என்ன . . . அவை மக்களிடம் எப்படி வரவேற்பைப் பெற்றது என்பதை டி.வி.ஆரே கூறுகிறார் . . .


திருநெல்வேலியில், ‘தினமலர்’ வந்த பிறகு மக்கள் தங்கள் சட்ட மன்ற உறுப்பினர்களின் சட்டமன்றப் பேச்சுக்களை முழு அளவில் படிக்க முடிந்தது. அதேபோல நாடாளுமன்ற உறுப்பினர்கள் டில்லியில் பேசிய பேச்சுக்களையும் முழு விவரத்துடன் அப்படியே, ‘தினமலர்’ பிரசுரித்தது. இவற்றைப் படித்து மக்கள் தங்கள் உறுப்பினர்களின் திறமையை எடை போடத் தொடங்கினர்.  தவிர, மாவட்ட வளர்ச்சி மன்றக் கூட்டத்திலும் ஒவ்வொருவரும் என்ன பேசுகிறார்கள், அதற்கு அந்தந்த இலாகா அதிகாரிகள் என்னென்ன பதில் கூறுகிறார்கள் என்பதை எல்லாம் அப்படியே முழுமையாகப் பிரசுரம் செய்தோம். இதனால், மக்களுக்குத் தங்கள் கிராமங்களில் உள்ள குறைகள், தேவைகள், இவைகளெல்லாம் எப்படிப் பேசப்படுகின்றன, அதற்கு எப்படிப் பரிகாரம் கிடைக்கும் என்பன போன்ற விஷயங்கள் தெளிவாகத் தெரியத் தொடங்கின.


ஆஸ்பத்திரியில் டாக்டர் இல்லை; டாக்டர் இருந்தால் மருந்து இல்லை; அவசியமான இடங்களில் ஆஸ்பத்திரியே இல்லை. பள்ளிகள் உள்ளன; அவற்றில் போதிய ஆசிரியர்கள் இல்லை. பல பெரிய ஊர்களில் பள்ளிக்கூடங்களே இல்லை. ரேஷன் கார்டு கொடுக்கப்படவில்லை; கார்டுக்குச் சீனி கொடுக்காமல் அப்படியே விழுங்கிவிடுகிறார்கள். தெருவிளக்கு எரியவில்லை. ஊர்களுக்குப் பஸ்கள் வேண்டும்; பஸ்கள் குறித்த நேரத்திற்கு வருவதில்லை. குளங்கள், அவற்றின் பாழான நிலைகள்; ஆக்கிரமிப்புகள், இடுகாடு களின் அவல நிலை, குடிதண்ணீருக்குப் படும்பாடு, இதுமாதிரி யான செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.


மாநில மத்திய பட்ஜெட்கள், பிரதமர் மற்றும் முதல்வரின் அன்றாடப் பேச்சுக்கள், அன்னிய நாட்டுச் செய்திகளைச் சுருக்கமாக மக்களுக்கு விளங்கும்படி பிரசுரிப்பது, இப்படியாக, ‘தினமலர்’ வெளிவர, கிராம மக்கள் படிப்படியாக, ‘தினமலர்’ மீது நம்பிக்கை வைத்தனர்.  செய்திகள் உண்மையாக இருந்தால்தான் வெளியிடுவார்கள் என்றும், விற்பனை நோக்கத்தோடு வெளியிடமாட்டார்களென்றும் அனுபவத்தில் மக்கள் கண்டுகொண்டனர். இதனால், விற்பனையில், ‘தினமலர்’ முன்னேறியது.


கேரளச் செய்திகள், ‘தினமலர்’ மூலம் சுவையாகப் படிக்கப்பட்டன, என்று டி.வி.ஆர்., கூறி உள்ளதைப் பற்றி நீண்டகாலம் தினமலர் கம்பாசிடராகப் பணியாற்றிய சாகுல் ஹமீது கூறுகிறார் . . .


ஒரு செய்திக் கட்டுரை அது உண்டாக்கிய பரபரப்புப் பற்றி எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. தன்னைக் கைது செய்யக் கேரளப் போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்று தகவல் தெரிந்ததும், அந்தத் தலைவர் தலைமறைவாகிவிட்டார். ஒருநாள் பவுர்ணமி நிலவின் ஒளியில் ரயில்வே இருப்புப்பாதை ஒன்றின் வழியாக இரு போலீசார் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் எதிரே அதே பாதையில் வந்த நபரை நிறுத்திப் போலீசார் ஒருவர், ‘உன் பெயரென்ன? நீ எங்கே செல்கிறாய்?’ என்று கேட்க, அவர், ‘பக்கத்து ஊருக்குச் சென்றுவிட்டுத் திரும்புகிறேன் . . . அதோ தெரிகிறதே அந்தக் கிராமம் தான் எனது சொந்த ஊர். என்னுடைய பெயர் சங்கரன்’ என்று கூறினார். உங்களிடம் தீப்பெட்டி இருக்கிறதா . . . பீடி பொருத்த வேண்டும்’ என்று போலீசார் கேட்க, ‘என்னிடம் தீப்பெட்டி இல்லை; நான் புகை பிடிப்பதும் கிடையாது. நான் நம்பூதிரி குடும்பத்தைச் சேர்ந்தவன்’ என்று கூறியதும், போலீசார் அவரைப் போகச் சொல்லிவிட்டு, தங்களுடைய நடையைத் தொடர்ந்தனர்.


அதில் வந்த மற்றொரு போலீசாருக்கு ஏதோ சந்தேகம் வந்து, தன் பாக்கெட்டில் இருக்கும் படத்தை எடுத்து உன்னிப்பாகப் பார்த்தார். ‘நம்மிடம் பதில் கூறியவன், தன் பெயர் சங்கரன், நம்பூதிரி குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றானே . . . அப்படியானால் இவன் சங்கரன் நம்பூதிரி. இவன்தான் ஈ.எம்.எஸ்.நம்பூதிரி பாட் . . . விட்டு விட்டோமே’ என, அவரைத் தேடி ஓடினர்; அதற்குள் அவர் எங்கோ ஓடி மறைந்துவிட்டார்.  இந்தச் செய்திக் கட்டுரை, ‘தினமலர்’ இதழில் வந்தபோது, செய்திகளை மட்டுமல்ல, கட்டுரைகளையும் புதுமையாகச் சுவையாக, ‘தினமலர்’ வெளியிடுகிறதே என்ற பேச்சு எங்கும் அடிபடத் தொடங்கியது.


இந்தக் கட்டுரை பரபரப்பாகப் பேசப்பட்டது. இதுபற்றி டி.வி.ஆரிடம் சொல்லிக் கொண்டிருந்த போது, அவர் கூறினார்: இந்தக் கட்டுரைக் குள் பல விசேஷங்கள் இருக்கின்றன. கடைசி வரை சஸ்பென்ஸ் இருக்கிறது. வழியில் வந்த போலீசாருக்கு ஈ.எம்.எஸ்., சைத் தெரியாது. ஆனால், ஈ.எம்.எஸ்.,சுக்குப் போலீசார் முன் நிற்கிறோம்; கைது நிச்சயம் என்று தெரியும், அப்போது கூட தனது பெயர், பக்கத்தில் உள்ள ஊரைக் காட்டி அதுதான் தனது சொந்த ஊர், தான் ஒரு நம்பூதிரி என்பதைக் கொஞ்சம் கூட மறைக்காமல் உண்மையைக் கூறத் தெம்பிருந்திருக்கிறது. தனக்குப் புகை பிடிக்கும் பழக்கமில்லை என்றும் கூறுகிறார். இந்த நேர்மைதான் அவரைக் காப்பாற்றி உள்ளது. அதுதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று சாமி (டி.வி.ஆர்.,) விமர்சித்ததை என்னால் மறக்க முடியவில்லை.


பக்கத்து மாநிலத்தில் கம்யூனிஸ்ட் மந்திரி சபை ஈ.எம்.எஸ்., தலைமையில் நடந்த போது, இடைத்தேர்தல் ஒன்று வந்தது. மூணாற்றுச் சட்டமன்றத் தொகுதியில் கணபதி (காங்கிரஸ்) என்பவரும், ரோசம்மா புன்னாஸ் (கம்யூனிஸ்ட்) என்பவரும் போட்டியிட்டனர். அரசியல் அரங்கில் இது மிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட தேர்தலாகும். அதுசமயம், மூணாற்று இடைத் தேர்தல் சம்பந்தமாக சாமி (டி.வி.ஆர்) மிகவும் கவனம் செலுத்தினார். செய்திகள் நடுநிலை தவறாது காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தலைவர்கள் பேசும் பேச்சுக்களை நல்ல தலைப்புகளுடன் வெளியிட்டார். இதன்மூலம் தேர்தல் செய்திகளா, ‘தினமலர்’தான் என்றாகியது. சமீபகாலம் வரை எந்தத் தேர்தல் வந்தாலும், ‘தினமலர்’ தனி முத்திரையுடன் எல்லாக் கட்சியினரும் விரும்பும் நிலைக்கு அன்று அவர்கள் கையாண்ட கொள்கைகளே காரணம்.


-சாகுல் ஹமீது போல் பலரும் தங்கள் அனுபவங்களைக் கூறி உள்ளனர். அவை மிகச் சுவையான தகவல்கள். இப்படியாகத் தனக்கென தரமான வாசகர்களை நாளுக்கு நாள் பெருக்கிக்கொண்டதன் காரணமாகத் தச்சநல்லூரில் இருந்த அச்சு இயந்திரங்களால் வாசகர்களின் எண்ணிக்கைப் பெருக்கத்திற்குத் தக்க இதழ்களை அச்சடிக்க முடியாமல் போனது. அந்தச் சூழ்நிலையை டி.வி.ஆர்., சமாளித்த விதம் பற்றி அவரே கூறியுள்ளார் . . .


தச்சநல்லுபரில் இருந்த அச்சு இயந்திரத்தால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. உடனே, பத்திரிகையை அதிகவேகமாக அச்சிடும், ‘பிளாட்பெட் ரோட்டரி’ அச்சு இயந்திரம் ஒன்றை, நார்வே நாட்டில் இருந்து தருவித்தோம். இந்த அச்சு இயந்திரத்தை நிறுவுவது பற்றி யோசிக்கும் வேளையில், மற்றொரு நெருக்கடி வந்தது. தச்சநல்லுபரில் நாங்கள் வாடகைக்கு இருந்த சீனி ஆலை வேறு சிலரால் விலைக்கு வாங்கப்பட்டது. எங்களைக் காலி செய்யக் கோரினர். உடனே, இப்போது வண்ணாரப்பேட்டையில் உள்ள இடத்தைப் பார்த்தோம்.  இது, காலஞ்சென்ற கண்டித்தேவரின் இடம். அப்போது இது ஒரு காடு போலத்தான் இருந்தது. ஆள் நடமாட்டம் குறைவு. நாகர்கோவிலில் இருந்த கண்டித்தேவர் மகனான சுப்பிரமணியத்திடம் இடத்தைக் கேட்டேன். அவர் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். 56 சென்ட்; விலை பேசி முடித்தேன்.‘தினமலர்’ வண்ணார்ப்பேட்டையில் இருந்து, பிப்.,12, ’62 முதல் வெளிவரத் தொடங்கியது. மணிக்கு ஆயிரம் பிரதிகள், இரண்டு பக்கம் மட்டுமே அச்சடிக்கக்கூடிய இயந்திரத்தில் இருந்து, மணிக்கு ஐந்தாயிரம் பிரதிகள், எட்டு பக்கங்கள் வரை ஒரே நேரத்தில் அச்சடிக்கும் நிலைக்கு வந்தோம். வாசகர்களின் தேவையையை முழு அளவு பூர்த்தி செய்யும் நிலைக்கு வந்தோம்.


பத்தாண்டுப் பாலன்

(செப்., 6, '61ல் வெளியான தலையங்கத்தின் சுருக்கம்)

தினமலர்’ பத்திரிகைக்கு நேற்றோடு பத்தாண்டு நிறைந்து, இன்று பதினோராவது ஆண்டு பிறக்கிறது. கடந்த பத்து வருடங்களையும் சற்று திரும்பிப் பார்ப்பது அவசியமுமாகும். ‘தினமலர்’ செப்., 6, ’51ல் திருவனந்தபுரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. எல்லாருடைய ஐயப்பாடுகளையும் கடந்து, ‘தினமலர்’ என்ற பாலன், நீந்தி, தவழ்ந்து, சிறு நடைபோட்டு, இன்று நிமிர்ந்து நடக்க ஆரம்பித்து விட்டான்.  திருநெல்வேலி மக்களும் இன்று, ‘தினமலர்’ இதழின் தொண்டு தேவை என்று புரிந்து கொண்டனர். ‘தினமலர்’ தென் மாவட்டங்களில் குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது. மக்களும், ‘தினமலர்’ இதழை பொன்னே போல் போற்றி வளர்க்கின்றனர். மக்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நாம் என்றும் முழு நன்றியுடைய வர்களாகவும், அவர்களுக்குச் செய்யும் உண்மையான தொண்டில்தான், ‘தினமலர்’ இதழின் வாழ்வு பின்னியிருக்கிறது என்பதையும் பணிவோடு சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறோம்.

புத்தாண்டுப் பரிசு
(ஜன., 1, '66 தலையங்கம்)

மணிக்கு மூன்று ஆயிரம் முதல், நான்கு ஆயிரம் வரையுள்ள சொற்கள் கொண்ட செய்திகளைக் குவிக்கும், ‘டெலி பிரின்டர்’ என்ற நவீன இயந்திரம் நமது அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இனி, ‘தினமலர்’ தனது வாசகர்களுக்குப் பத்தி பத்தியாகப் புத்தும் புதுச் செய்திகளைத் தினந்தோறும் தந்து கொண்டிருக்கும். இதுவே, ‘தினமலர்’ அளிக்கும் புத்தாண்டுப் பரிசு.


மதுரைக்குத் தெற்கே நமது, ‘தினமலர்’ அலுவலகத்தில், ‘டெலி பிரின்டர்’ இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை இணைப்பதற்காக நாம் மத்திய அரசாங்கத்தோடு வாதாடியதும், போராடியதும் நீண்ட நெடுங்கதை.வாசகர்களின் திருப்தியைப் பூர்த்தி செய்து, அவர்களின் அன்பை யும், அபிமானத்தையும் பெறுவது ஒன்றே, ‘தினமலர்’ குறிக்கோள். இதனாலேயே, இந்த டெலிபிரின்டர் இயந்திரத்திற்கான பல்லாயிரக் கணக்கான மூலதனச் செலவைப் பொருட்படுத்தவில்லை. ‘தினமலர்’ இதழின் துணிச்சலையும், சேவைகளையும் மக்கள் மதித்து, முழு ஆதரவு தந்து வருவதே, ‘தினமலர்’ வெற்றிக்குக் காரணம்.

இரண்டாவது துணிச்சல்

கார் போகாத பட்டிதொட்டிகளையும் ஒற்றையடிப் பாதையோரக் குக்கிராமங்களையும் தேடிப் பிடித்து, தேவைகளைக் கேட்டு அரசாங் கத்தை அறியச்செய்து அபிவிருத்தி செய்யத் துபண்டும் பணியில், ‘தினமலர்’ பெரும் சாதனைகளைச் செய்துள்ளது. ஆபாசச் செய்திகளையோ, அசம்பாவித நிகழ்ச்சிகளையோ, ‘தினமலர்’ ஊக்கப்படுத்துவது இல்லை. வாசகர்களும், வியாபாரிகளும், விளம்பரதாரர்களும், ‘தினமலர்’ மீது பற்றும், பாசமும் கொள்வதன் ரகசியம் இதுதான். ஆசிரியருக்குக் கடிதப் பகுதி மூலம் மக்களின் தேவைகள் அனைத்தும் பொதுக் கவனத்திற்கு வந்து விடுகின்றன. நெடுநாள் தீர்க்கப்படாம லிருந்த குறைகள் கூட, ‘தினமலர்’ கடினமாக வாதாடி வந்த காரணத்தால் சுலபமாகத் தீர்த்து விடுகிறது. இந்த உண்மையான அனுபவங்களைப் பெருமையுடன் நிரூபிக்க நிறைய அத்தாட்சிகள் உள்ளன. இந்த டெலிபிரின்டர் சாதனத்தைப் பொதுமக்கள் தாராளமாக வந்து பார்க்க வசதி செய்யப்பட்டிருக்கிறது. 1 தேதி முதல், 7ம் தேதி வரை, தினமும் மாலை 6 மணிக்கும் 7 மணிக்கும் இடையில், எப்போது வேண்டுமானாலும் வந்து பார்த்து செல்லலாம். வாசகர்களின் ஆசியும், ஆதரவுமே, ‘தினமலர்’ இதழின் முக்கிய மூலதனம். வாசகர்களுக்காக எந்தச் சிரமங்களையும் தாங்கத் தயார். ‘தினமலர்’ மூலமந்திரமும் இதுதான். வாசகர்கள் தொடர்ந்து தங்கள் ஆசிகளையும், ஆதரவையும் வழங்க, ‘தினமலர்’ பணிவுடன் கோருகிறது.(ஜன.,1, ’66ல் ‘தினமலர்’ வெளியிட்ட பெட்டிச் செய்தி)


டி.வி.ஆர்., மேலும் கூறுகிறார் . . .


‘தினமலர்’ வண்ணார்ப்பேட்டைக்கு வந்த புதிதில் அகில இந்தியப் பொதுத் தேர்தல் வந்தது. புதிய அச்சு இயந்திரம் வாசகர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்தது. இப்படி இரண்டு மூன்று வருடங்களில், ‘தினமலர்’ படிப்படியாக வளரத் தொடங்கியது. இந்தச் சூழ்நிலையில் மேலும் ஒரு பதிப்பு இருந்தால் நல்லது என எண்ணினோம். தமிழகத்தின் மத்திய பாகமான திருச்சியில் ஒரு பதிப்பு தொடங்குவது என்ற முடிவுக்கு வந்தோம். திருச்சியில் ஆறு மாதம் சுற்றிப் பார்த்தும் திருநெல்வேலி போல மெயின் ரோட்டில் இடம் கிடைக்காத போதிலும், ரோட்டில் இருந்து 200 அடி தள்ளி ஓர் இடம் வாங்கப்பட்டது. இதற்காகவே ஒரு வருடத்திற்கு முன்பாகவே ஓர் அச்சு இயந்திரம் வாங்கப்பட்டு, திருநெல்வேலியில் வைத்திருந்தோம். டிச., 15, ’66ல், ‘தினமலர்’ திருச்சியில் இருந்து வெளிவந்தது. அன்றைய தமிழக மந்திரி மஜீத் விழாவிற்குத் தலைமை தாங்கினார். மத்தியில் மந்திரியாக இருந்த, டி.ஆர்.பட்டாபிராமன் அச்சு இயந்திரத்தை இயக்கி, பத்திரிகையையும் ஆரம்பித்து வைத்தார். திருச்சி நகரசபைத் தலைவர் வி.கே.ரங்கநாதன், கி.ஆ.பெ.விசுவநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


சென்னையில் ஒரு பதிப்பு இல்லாத குறையைப் போக்க சென்னை வாலாஜா ரோட்டில் ஒரு தனிக் கிளை அலுவலகம் தொடங்கினோம். அங்கிருந்து திருநெல்வேலி வரை டெலிபிரின்டர் தொடர்பு செய்யப் பட்டது. பின் 1967 பொதுத்தேர்தல். அதில் காங்கிரஸ் பெரும் தோல்வி அடைந்தது. அண்ணாதுரை தலைமையிலான தி.மு.க., பதவி ஏற்றது. பதவி ஏற்றதும், என்ன காரணம் கொண்டோ, அரசு விளம்பரங்கள், ‘தினமலர்’ இதழுக்குக் கிடைக்காமல் தடை செய்யப்பட்டது. இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது.


இந்த நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நேசமணியின் மறைவால் ஓர் இடைத் தேர்தல் வந்தது. காங்கிரஸ் தலைவர் காமராஜர் அதில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து டாக்டர் மத்தியாஸ் போட்டியிட்டார். கன்னியாகுமரி மாவட்டத்து மக்கள் காமராஜரை வெற்றி பெறச் செய்யவே நினைத்தனர். ஆனால், மத்தியாஸ் உள்ளூர்காரர்; எனக்கு நீண்ட கால நண்பர். ஆனாலும், மாவட்ட மக்கள் கருத்தை அறிந்து, காமராஜரை ஆதரித்தே, மிக விரிவான செய்தி, படங்களுடன் நாள்தோறும் வெளியிட்டோம். அவருக்காகத் தமிழகம் முழுவதும் இருந்து வந்த அவரது ஆதரவாளர் கள்; ‘தினமலர்’ இதழை வெகுவாக நேரில் வந்து பாராட்டினர்.


தேர்தல் நேரத்தில் அந்த ஒரு மாதத்தில் அதிகப் பிரதிகள் அச்சாக வேண்டியது வந்தது. இப்போதும் முந்தைய பிரச்னை. அச்சு இயந்திரத்தால் ஈடு கொடுக்க இயலாமல் போனது. உடனே இன்னும் வேகமான அச்சு இயந்திரத்தை அமெரிக்காவில் இருந்து வாங்கினோம். வண்ணார்ப்பேட்டையில் இதற்காகப் புதுக்கட்டடம் கட்டப்பட்டது. இதன் மூலம் 1971 தேர்தலுக்குத் தயாராகிவிட்டோம். அப்போது இந்திரா காங்கிரஸ் - தி.மு.க., உறவு ஏற்பட்டது. இந்தச் சமயத்தில், தேர்தல் செய்திகளை, ‘தினமலர்’ நடுநிலையிலேயே தந்தது; பத்திரிகை விற்பனை அதிகரித்தது.
திருச்சிப் பதிப்பிலும் விற்பனை அதிகமானது. அதிகப் பிரதிகள் அச்சடிக்கப் புதிய இயந்திரம் வாங்க நேர்ந்தது. ரஷ்யாவில் இருந்து அதிநவீன அச்சு இயந்திரம் வாங்கத் தீர்மானித்தோம். அந்த நவீனமான அச்சு இயந்திரத்தை, ‘இந்து’ உரிமையாளருள் ஒருவரான கஸ்துபரி, தனது இன்ஜினியருடன் திருச்சி வந்து பார்த்து, எங்களைப் பாராட்டினார்.

இந்தச் சமயத்தில் தி.மு.க., இரண்டாக உடைந்தது. எம்.ஜி.ஆர்., விலகினார். தமிழக அரசியலில் சூடு பிடிக்கத் தொடங்கியது. நியாயம் கேட்டதற்காக எம்.ஜி.ஆரை வெளியேற்றியது அரசியலில் ஒரு திருப்பு முனையாகும். எம்.ஜி.ஆரது அந்த நல்ல நோக்கம் நமக்கு மிகவும் பிடித்தது. அவரை ஆதரித்துச் செய்திகள் பிரசுரித்தோம். அன்றைக்குத் தமிழகப் பத்திரிகைகள், எம்.ஜி.ஆரின் வளர்ச்சியைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், ‘நடிகர் கட்சி’ என்றே எழுதி வந்தன.


இந்தச் சூழ்நிலையில் திண்டுக்கல் இடைத்தேர்தல் வந்தது. பிரதான மான நான்கு பெரிய கட்சிகள் மானப்பிரச்னையாக எடுத்து, இதில் முழுமூச்சாக இயங்கின. தேர்தலில், ‘தினமலர்’ வகித்த பாத்திரம் மிக முக்கியமானது. ‘தினமலர் நடுநிலை தவறாத நாளிதழ்’ என மக்கள் ஏற்றுக்கொள்ள, இந்தத் தேர்தல் காரணமாக இருந்தது என்பது உண்மை. இதற்குள் எனது குமாரர்கள், பத்திரிகையை தாங்களே நடத்தும் அனுபவமும், பயிற்சியும் முழுவதும் பெற்றுவிட்டார்கள்; மேற் பார்வையோடு, கொஞ்சம் ஓய்வெடுக்கவும் என்னால் முடிந்தது.Advertisement
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X