இரயில் பாதை வரலாறு ஆகிறது


இரண்டு அரசர்கள் போர் செய்ய, ஓர் அரசன் வெற்றி பெறுகிறான். இவையே ஒரு காலத்தில் வரலாறுகளாக எழுதப்பட்டன. ஒரு மொழியின் தொன்மை, வளர்ச்சி, கலை, கலாச்சாரம், பண்பாடு இவை மொழியியல் வராலாறுகளாகப் போற்றப்படுகின்றன. இது போலப் பழம் பெரும் கலைகளுக்கும் வரலாறுகள் உண்டு. கால மாறுதல்களுக்கு ஏற்ப, வரலாறுகளும் புதிது புதிதாக வளர்ந்து கொண்டுதான் போகும்.


சுதந்திரப் போராட்ட காலத்தில் தேசத் தலைவர்கள், தேசபக்தர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டனர். சிறைச்சாலைகளுக்குப் புகழ்பெற்ற வரலாறு இதனால் வந்துவிட்டது. வரலாற்றுச் சின்னங்ளும் குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டதல்ல. மனிதகுல வளர்ச்சிக்குத் தேவையானவை அனைத்திற்கும் வரலாற்றுப் புகழ் உண்டு. அந்த வகையில் திருவனந்த புரம் - கன்னியாகுமரி - திருநெல்வேலி ரயில் பாதை ஒரு வரலாற் றைப் படைத்துள்ளது.
‘காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை’ என்பது கோஷமாக இருந்ததே தவிர, இவ்விரண்டையும் இணைக்க மேலும் 105 மைல் ரயில் பாதை தேவை என்பதற்கு எத்தனை நீண்ட காலப் போராட் டம் . . . இந்தப் பாதை இல்லாமல், ‘தென்னிந்திய ரயில்வே’ என்ற பெயர் எப்படிப் பொருந்தும் என்று முதலில் கேள்வி எழுப்பியவரே டி.வி.ஆர்.,தான்.அகில இந்தியப் பயணிகள் தினம் தினம் கூடிக் கலையும், தேசிய முக்கியத்துவம் பெற்ற யாத்திரைத் தலத்தில், ஓர் ரயில் பாதைக்காக நீலத்திரை கடல் ஓரத்தில் எத்தனைக் காலம் தவம் இருந்தாள் குமரித்தாய்.

‘இந்த இரயில் பாதை அமைப்பு முயற்சியிலும், சாதனையிலும், வெற்றியிலும் வேறு யாரும் பங்கு போட முடியாது. அனைத்துமே டி.வி.ஆரையே சாரும்’ என்று, மனம் திறந்து பாரட்டினார்கள், பாராளுமன்ற முதல் உறுப்பினர்களான, சிவன் பிள்ளையும், ரசாக்கும். ‘டி.வி.ஆர்., மட்டும் முயற்சி எடுக்கவில்லையானால் கன்னியாகுமரி மாவட்டம் ரயில் பாதையையே கண்டிருக்கப் போவதில்லை’ என்றார் பிரபலத் தொழிற்சங்கத் தலைவர், டி.எஸ்.ராமசாமி. இப்பாதை அமைப்புக் குழுவின் செயலாளராகப் பணியாற்றிய சிவதாணுவோ, ‘எவ்வளவு பெரும் செலவு . . . விடாமுயற்சி . . . சென்னைக்கும், டில்லிக்கும் எத்தனை முறை படையெடுப்பு . . . பத்திரிகையில் விடாமல் எழுதியது, கொஞ்சமா . . . நாங்கள் எல்லாம் சோர்ந்துவிட்டோம். டி.வி.ஆர்., ஒருவரே சோர்வடையாமல் கடைசி வரை போராடி வெற்றியைக் கண்ட சாதனையாளர்’ என்று குறிப்பிட்டுள்ளார். தமது வாழ்நாளிலேயே இந்தப் பாதை அமைக்கப்பட்டதையும், அதுவும் அகல இரயில் பாதையாக உருவானதையும் காணும் பாக்கியம் பெற்றவர் டி.வி.ஆர்.,


இரயில் பாதை அமைப்பில் டி.வி.ஆர்.,

இரயில் பாதை அமைப்பதற்காக, டி.வி.ஆரைத் தலைவராகக் கொண்ட ஓர் அமைப்பு செயல்பட்டது. அந்த அமைப்பின் செயலாளர், தோவாளைத் தியாகி சிவதாணு. தமது நீண்ட கால அனுபவங்களை அவரே கூறுகிறார் . . .


இரயில்வே போர்டு மெம்பராக 1950ம் ஆண்டு இருந்த ஒருவர், இங்கு (நாகர்கோவில்) வந்தார்; பெயர் ஞாபகத்திற்கு வரவில்லை. அவருக்குக் கிருஷ்ண பவன் ஓட்டலில் வரவேற்புக் கொடுத்தார் டி.வி.ஆர்., அப்போது அவரிடம் திருநெல்வேலி - கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இரயில் பாதை பற்றி விவாதித்தார். அதற்கு அவர், ‘இதற்காக ஒரு கமிட்டி அமைத்து முறைப்படி எழுதுங்கள். நான் அறிந்தமட்டிலும் அவசியமான பாதைதான் இது. நடைமுறைப்படுத்து கிறோம்’ என்று உறுதி கூறினார். நான் அறிந்தவரை, இரயில் பாதை அமைப்பது சம்பந்தமாக நீண்டகாலமாக டி.வி.ஆர்., மனத்தில் திட்டம் இருந்தாலும், இதுதான் முதல் முயற்சி என்று எண்ணுகிறேன்.


திருநெல்வேலியில், 1951ல் திருநெல்வேலி - கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இரயில் பாதைக்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அதன் தலைவர் டி.வி.இராம சுப்பையர்; செயலாளர் நான். திருநெல்வேலி, மேலப்பாளையம், பாளையங்கோட்டை நகரசபைச் சேர்மன்கள்; வைஸ் - சேர்மன் கள்; நாகர்கோவில், குளச்சல், தக்கலை, குழித்துறை பஞ்சாயத்து யூனியன சேர்மன்கள்; வைஸ் - சேர்மன்கள், அன்று எம்.எல்.ஏ. வாக இருந்த கே.டி.கோசல்ராம், பி.டி.தாணுப்பிள்ளை எம்.பி., திரு நெல்வேலி பிரபல வக்கீல் அரு ணாசலம் பிள்ளை, சங்கர் ரெட்டி யார் எம்.எல்.ஏ., என, 25 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப் பட்டது. இது மிகப் பெரிய காரியம்.

தியாகி சிவதாணு

இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் நாஞ்சில் நாட்டுக்காரர்கள் அதிகம் பேரைக் காண முடியாது. ஏனெனில் நாஞ்சில் நாடு பிரிட்டிஷ் ஆளுமைக்குள் இல்லை. தனிப்பட்ட சமஸ்தானம். அப்படி இருந்தாலும் நாடு முழுவதும் கொந்தளித்து எழுந்து உணர்வில் ஒரு சிலர் சுதந்திரப் போரிலும் குதித்துப் பல முறை சிறை சென்றுள்ளனர்.

அப்படிக் குறிப்பிட்டுக் கூறக் கூடியவர்களில் தியாகி சிவதாணு ஒருவர். அதுமட்டுமல்லாது திருவனந்தபுரம் நெல்லை இரயில்வே லைன் விஸ்தரிப்புப் பணியில் கால் நூற்றாண்டுகளுக்கு மேல் டி.வி.ஆர். தலைமையில் இருங்கிய குழுவின் செயலாளர் என்ற பெருமை படைத்தவர்.


ஏராளமாகப் பணம் செலவா கும் என்று குழுவினர் கருத்துத் தெரிவித்தனர். அதற்கான நிதி திரட்ட யோசனை கூறப்பட்டது; இரசீதுப் புத்தகமும் அச்சடிக்கப் பட்டது. ‘இரயில்வே அமைப்புக் கமிட்டி. திருநெல்வேலி - கன்னி யாகுமரி - திருவனந்தபுரம், நன் கொடை இரசீது’ என்ற தலைப்பில் இரசீது புத்தகம் அச்சடிக்கத் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் சங்கர் ரெட்டியார் எம்.எல்.ஏ., 1000 ரூபாய் நன்கொடை தருவதாவும், தனக்கு முதல் இரசீது போடும்படியும், அது மட்டுமல்லாமல் தங்கள் பகுதியில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் வசூலித்துத் தருவதாகவும் கூறினார்.


அதன்படி 99 ரசீதுகள் கொண்ட ஐந்து புத்தகங்களை, நாகர்கோவில் டாஸ் பிரசில் அச்சு அடித்தோம். முதல் இரசீதை டி.வி.ஆரே தன் கைப்பட எழுதினார்; சங்கர் ரெட்டியாருக்குத்தான் முதல் இரசீது. ஆனால், ரூபாய் என்ற இடத்தை ரெட்டியார்தான் பூர்த்தி செய்வது நியாயம் என்று குறிப்பிட்டு, எழுதாமல் விட்டு வைத்தார். அதன் பின், அதற்கு வேலையில்லாமலே போய்விட்டது. என்ன தோன்றியதோ அவருக்கு . . . அவர் கூறினார் . . .


‘இதற்காக யாரிடமும் போய் வசூல் பண்ண வேண்டாம். இரயில் பேரைச் சொல்லி வசூலிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்று யாராவது வம்பு பேசலாம். தவிரவும் இரயில் அடுத்த வருடமே வரப் போவதில்லை. அதற்கு எவ்வளவோ வேலைகள் உள்ளன. பார்லிமென்ட் அனுமதிக்க வேண்டும். பின்னர் சர்வே; இதற்குப்பின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். இப்படி இருக்கும் போது, இரசீது போட்டு வசூலித்தால் நாளையே, இரயில் ஏன் வரவில்லை என, காசு கொடுக்காதவன் கூடக் கேட்பான். நான் இதற்குத் தலைவராக இருப்பதால், இரயில் வரும் வரை என்ன செலவானாலும் நான் பணம் தருகிறேன்; நீயே செலவு செய். யாரிடமும் சொல்லவும் வேண்டாம்; கேட்கவும் வேண்டாம். இரசீதுப் புத்தகங்களைப் பத்திரமாக வைத்துக் கொள்’ என்று கூறிவிட்டார்.  அவர் கூறியதை வேதவாக்காகக் கொண்டு இரசீதுப் புத்தகங்களை இன்றைக்கும் பத்திரமாக வைத்திருக்கிறேன். அவர் கைப்பட எழுதிய முதல் இரசீதும் என்னிடம்தான் உள்ளது என்று கூறி அவர் மளமள வென்று கண்ணீர் விட்டார்!
 

ஒ.வி.அழகேசன்

செங்கல்பட்டு அருகில் உள்ள ஏழாலூரில் செப்.,6, 1911ல் பிறந்தவர். 1930ல் கல்லூரி மாணவராக இருந்த போதே காந்தி அடிகள் தனி அனுமதியுடன் தண்டி யாத்திரையில் கலந்து கொண்டவர். 1952 பார்லிமெண்ட் முதல் தேர்தலில் வெற்றி பெற்று நேருஜி அமைச்சரவையில் இரயில்வேத் துறை இணை அமைச்சர்.

ராமேஸ்வரம் கடல் பாலத்திற்கு ரூ.1 கோடி ஒதுக்கியவர். 1962ல் மீண்டும் பார்லிமெண்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நேருஜி நூல்கள் பலவற்றை தமிழாக்கம் செய்துள்ளார். வினோபாஜியின் பூமிதானத்திற்குத் தனது சொத்தில் 6ல் ஒரு பங்கைக் கொடுத்தவர். பெரம்பூர் இரயில் தொழிற்சாலையை உருவாக்கியவர். திருவனந்தபுரம் நெல்லை இரயில் பாதை அமைப்பிற்குப் பெரும் காரணமாக இருந்தவர்.


சிவதாணு தொடர்கிறார் . . . ஓ.வி.அழகேசன் இரயில்வே உதவி மந்திரியாக இருந்த நேரம். அப்போது கன்னியாகுமரிக்கு வந்து தங்கினார். ‘இராமசுப்பையரையும் அழைத்து வாருங்கள்; பேசலாம்’ என இரயில்வே குழுவினரிடம் சொன்னார். அன்று இராமசுப்பை யரது மகனுக்குச் செங்கோட்டை யிலோ, தென்காசியிலோ கல் யாணம். எப்படி அழைத்து வரு வது என யோசித்தேன். உடனே தகவலை எடுத்துக்கொண்டு, கல் யாண வீட்டிற்கு ஓடினேன். விஷ யத்தை இராமசுப்பையரிடம் கூறினேன்.


அதற்கு அவர், ‘ரொம்ப சந்தோ ஷம். நாளை மாலைதானே அவ ரைப் பார்க்க வேண்டும் . . . கல் யாணம் அது பாட்டுக்கு நடந்து கொண்டிருக்கும். நீ நமது குழு வைச் சேர்ந்தவர்களை கன்னியா குமரிக்கு அழைத்து வா’ என்று சர்வ சாதாரணமாகக் கூறிவிட் டார். கன்னியாகுமரியில், ஓ.வி.அழ கேசன், கக்கன், கே.டி.கோசல்ராம், பி.டி.தாணுப்பிள்ளை இவர்களு டன் டி.வி.ஆர், ஆலோசனை நடத் தினார். எப்படி இந்தக் கோரிக்கை எழுப்பப்பட வேண்டுமென்று அழகேசன் விளக்கினார். உடனே, அதே முறையில் இராமசுப்யைர் தானே ஒரு, ‘டிராப்டு’ எழுதி, என்னிடம் டைப் செய்யச் சொன் னார். முதன் முதலாக, முறைப்படி அன்று மனு தாக்கல் செய்யப் பட்டது.


இப்பொழுது இராமசுப்பைய ருக்கு மிகவும் உற்சாகம் வந்துவிட் டது; சங்கத்தைப் பலப்படுத்தினார். காமராஜர் முயற்சியின் பய னாக, டி.டி.கிருஷ்ணமாச்சாரி கன்னியாகுமரியில் ஒருநாள் தங்கி. டி.வி.ஆருடன், நீண்ட நேரம் திட் டம் பற்றி பேசினார். அப்போது, இரயில் பாதை, எப்படிஎந்த வழி யெல்லாம் வர வேண்டும் என் பதையும், இதன் மூலம் அகில இந்திய ஒருமைப்பாடு, குமரி மாவட்டம் காணப்போகும் தொழில் வளர்ச்சிகள், வர்த்தகப் பெருக்கம் எவ்வாறு முக்கியத்துவம் பெறும் என்பதையும் மிகத் தெளி வாக விளக்கினார் டி.வி.ஆர்., இதன் அடிப்படையில் ஒரு மனு தரும்படி டி.வி.ஆரைக் கேட்டுக் கொண்டார் டி.டி.கே., அப்போது இராஜகோபாலாச் சாரியார் முதல்வர். சென்னை சென்று அவரிடம் எல்லா விபரங் களையும் இராமசுப்பையர் விளக் கிக் கூறி, மனுவையும் அளித்தார். இராஜாஜி மிகவும் மகிழ்ச்சி அடைந்து, இந்தத் திட்டத்தை மத்திய அரசுக்குச் சிபாரிசு செய்தார்.


இந்தத் திட்டத்தினால் பயன் என்ன, அவசியம் என்ன, என்ன வருமானம் வரும், எவ்வளவு மைல் நில ஆர்ஜிதம் தேவைப்படும் என்பன போன்ற விபரங்களை மத்திய அரசு கேட்டு எழுதியது.

டி.டி.கிருஷ்ணமாச்சாரி

திருவளனார் தட்டை கிருஷ்ணமாச்சாரி நடுத்தரக் குடும்பத்தில் நவ., 21, 1899ம் ஆண்டு பிறந்தார். டி.டி.கே.1921ல் வியாபாரத்தில் நுழைந்தார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். இராஜாஜியின் தொடர்பால் காங்கிரசில் சேர்ந்த அவர் பிறகு இராஜாஜியை எதிர்த்து காமராஜருடன் சேர்ந்து கொண்டார்.

முதல் பொது தேர்தல் முடிவிற்குப் பின்னர் வர்த்தகத் தொழில் மந்திரியானார். 1957க்குப் பின்னர் நிதி மந்திரியாக நியமிக்கப்பட்டார். முத்திரா ஊழல் எழுந்ததையொட்டி '58ல் பதவியை ராஜினாமா செய்தார். 1963ல் மீண்டும் நிதி மந்திரியானார். 1965ல் பதவியை ராஜினாமா செய்தார். 1969ல் டில்லி காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் உடல் நிலை காரணமாக எந்தப் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. ஜோசியம் பார்ப்பதில் நிபுணரான இவர், தனது மரணத்தை முன்கூட்டியே கணக்கிட்டுக் கூறியிருந்தார். அதன்படியே அவர் மார்ச் 7, '74ல் தனது 74வது வயதில் காலமானார். இவர் இசை உட்பட பல துறைகளில் பெரும் நிபுணர்.

இந்தக் கடிதம் வரும்போதே மற்றொரு தகவலும் வந்தது. சென்னை யில் வந்து தங்குகிற நாளை டி.டி.கே., குறிப்பிட்டு, அந்த நாளில் தன்னை வந்து சந்திக்கும்படி டி.வி.ஆருக்கு தகவல் அனுப்பி இருந்தார். செயலாளர் என்ற முறையில் என்னையும் கூட்டிக்கொண்டு சென்றார் டி.வி.ஆர்.,


இதுபற்றிக் காமராஜர் வீட்டில் கலந்து பேச, சி. சுப்ரமணியம் ஏற்பாடு செய்தார். இது அதிகாரப் பூர்வமில்லாத, கிட்டத்தட்ட ஓர் இரகசியக் கூட்டம்தான். காமராஜர் வீட்டில், டி.வி.ஆர்., ஓ.வி.அழகேசன், டி.டி.கே., ஆகியோர் இருந்தனர்.
அனைவரும் வெகு நேரம் இது பற்றிக் கலந்து பேசினோம். இதன் பின் டி.வி.ஆர்., குழுவின் வேண்டுகோளைப் பார்லிமென்ட் ஏற்றது. இரயில் வந்துவிடும் போல் இருக்கும் . . . திடீரென்று துபங்கி விடும். ஆனால், இடைவிடாது இருபது ஆண்டுகள் இதற்காக டி.வி.ஆர்., பாடுபட்டார்.


இதற்கான பணம் முழுவதும் டி.வி.ஆர்., தர, என் மூலம்தான் செலவிடப்பட்டது. நானே செயலாளராக இருந்தவன். இந்த இருபது ஆண்டுகளில் பல ஆயிரம் செலவானது. இதற்கான கணக்குகள், கடிதப் போக்குவரத்துக்கள் என்னிடம் இருக்கின்றன. குமரி மாவட்டத்திற்கு இரயில் வருவதற்காக இருபது ஆண்டுகள் தமது சொந்தப் பணத்தில் பல ஆயிரம் இராமசுப்யைர் செலவு செய்துள்ளார் என்பது ஒரு சாதாரண விஷயம் அல்ல. இத்தனைக்கும் இம்முயற்சிக்காக அவர் யாருக்கும் லஞ்சமாக எதுவும் கொடுத்த தில்லை. பார்லிமெண்ட் மெம்பர்களை இரு சபைகளிலும் தொடர்ந்து இதுபற்றி பேசச் செய்தார்.


இதில் ஏன் அவருக்கு இத்தனை அக்கறை என்று நான் ஒரு முறை அவரிடம் கேட்டபோது, ‘இரயில் இங்கு வந்தால்தான் தொழில்வளம் பெருகும்; பொருளாதாரம் கூடும். படித்த இளைஞர் களுக்கு இங்கேயே வேலை வாய்ப்புக் கிடைக்கும்’ என்று விளக்கினார். இதை மிக உற்சாகமாக அவர் கூறும் வகையிலே கூறுகிறேன் . . . ‘விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கும் இந்த மாவட்டம் பஞ்சாப், அரியானா போல தொழிலிலும் முன்னேறப் போகிறது பார்’ என்பார். அவர் மனக்கண்முன் குமரி மாவட்டத்தில் ஏகப்பட்ட தொழிற்சாலைகள், அவற்றின் உற்பத்திப் பொருள்கள் குவிந்து வருவதைப் பற்றி எப்போதும் ஒரு கனவு உண்டு. அவர் கடைசி வரை முயன்று இரயிலைக் கொண்டு வந்துவிட்டார். இதை இங்கு கிராமங்களில் கேட்டால் கூட எல்லாரும் சொல்வார்கள்.

சிவன் பிள்ளை

முன்னாள் எம்.பி., சிவன் பிள்ளை கூறுகிறார்:

டி.வி.ஆரின் தனி முயற்சி என்று கூற வேண்டுமானால், இந்த இரயில் பாதை அமைப்பு என்றுதான் என்னால் கூற முடியும். இதற்காக அவர் நகரில் உள்ள வர்த்தகர்களைக் கூட்டித் தீர்மானம் போடச் செய்வார். டில்லியில் இருந்து தலைவர்களை வரவழைத்து அவர்களுக்கு வரவேற்பு அளிப்பார். அதில் இரயில் பாதை பற்றி கோரிக்கை எழுப்புவார். இதுவெல்லாம் நடந்த வண்ணம் இருக்கும்.


என் டில்லி முகவரிக்கு எழுதுவார். நானும் பார்லிமென்டில் டி.வி.ஆரையும், அவரது பத்திரிக்கையின் கருத்துக்களையும் மேற்கோள் காட்டிப் பேசுவேன். இரயில் முயற்சியில் பூர்வாங்க சர்வே நடை பெற்றது. அதை வெற்றிகரமாக நடத்த பல தடவை டில்லி வந்து அதிகாரிகளைப் பார்த்திருக்கிறார். நில ஆர்ஜிதப் பிரச்னையில், கிராமங்களில் பேசி, டி.வி.ஆர்., ஒப்புதல் வாங்கித் தந்துள்ளார்.


டி.எஸ்.இராமசாமி

கேரள அரசுக்குட்பட்டிருந்த தமிழ்ப் பகுதிகள் தமிழகத்துடன் சேரவேண்டும் என்ற போராட்டமும், இரயில் பாதை இணைப்புக்கான போராட்டத்தையும் ஒரே சமயத்தில் டி.வி.ஆர். நடத்தினார். அப்போது அவர் திருநெல்வேலிக்கும், குமரிக்கும் இரயில் பாதை கேட்கவில்லை . . . திருநெல்வேலி - குமரி - திருவனந்தபுரம் இவற்றை இணைக்க ஒரு இரயில் பாதை கேட்டார். ‘தேசீய நீரோட்டம்’ என்ற சொல் இப்போது அதிகம் கேட்கப்படுகிறது. இராமசுப்பையர் இரயிலுக்காக நடத்திய போராட்டம் தேசிய ஒற்றுமைக்கான போராட்டமல்லவா . . . அது வெறும் பாசஞ்சர், குட்ஸ் ஓடும் பிரச்னையா . . . இதுபற்றி ஒரு ஆய்வே தேவை என்பேன்.

ஏ.ஏ.ரசாக்

புகழ்பெற்ற அரசியல்வாதியும், வழக்கறிஞருமான ஏ.ஏ.ரசாக் நாகர்கோவில் இடலாக்குடியில் ஏப்.,26, 19ல் பிறந்தார், தீவிரமான அரசியலில் ஈடுபட்ட இவர், தென் திருவிதாங்கூர் பகுதி, தமிழ்நாட்டுடன் இணையும் போராட்டத்தில் ஈடுபட்டார். திருவிதாங்கூர் காங்கிரஸ் சார்பில் 1947- 52ல் கேரளச் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1952ல் ராஜ்யசபா உறுப்பினர். தமிழர் போராட்டதில் தேவிகுளத்தில் நேசணி எம்.பி.யுடன் 1954ல் கைதானவர், பார்லிமெண்டில் திருவிதாங்கூர் - நெல்லை இரயில்ப் பாதைக்காக அடிக்கடி குரல் எழுப்பியனர். ஜன., 12, 91ல் காலமானார்.


ஏ.ரசாக், முன்னாள் எம்பி.,

இராமசுப்பையரின் பெரும் சேவை என்று நான் கூறுவ தானால், அதை இரயில்வே இணைப்பிற்கு அவர் எடுத்துக் கொண்ட முயற்சி என்பேன். 1952 முதல் பார்லிமென்டின் இராஜ்ய சபா உறுப்பினர் நான். அன்றைக் குக் கோபால்சாமி ஐயங்கார், இரயில்வே அமைச்சர். இரயில்வே பட்ஜெட்டில் திருவனந்தபுரம் -நாகர்கோவில்; நாகர்கோவில் - திருநெல்வேலி இணைப்பைச் சேர்க்க வேண்டுமென்று எங்களி டம் இராமசுப்பையர் எடுத்துக் கூறினார். நான் இராஜ்ய சபாவி லும், நேசமணி லோக்சபாவிலும் இதற்கு பலமாக வற்புறுத்திப் பேசி னோம். இதற்கான பெரும் முயற்சி யில் தன்னந்தனியாக நின்று, எங்களை நெருக்கி வந்தவர் இராமசுப்பையர். இது பற்றி தொடர்ச்சியாகத் தமது பத்திரிக்கையிலும் எழுதி வந்தார். ‘சதர்ன் ரயில்வே என்றுதானே பெயர்; இந்தப் பெயர், குமரி வரைக்கும், குமரியில் இருந்து திருவனந்தபுரம் வரைக்கும் இரயில் பாதை இணைப்பு ஏற்படாத வரை எப்படி, ‘சதர்ன் ரயில்வே’யாக இருக்க முடியும்?’ என்பது அவரது வாதம்.


அன்றைக்குக் கேரளத்தில், பி.டி.சாக்கோ, எர்ணாகுளம், கோட்டயம், கொல்லம் இணைப்பை வற்புறுத்தினார். அன்றைக்கு அந்தந்த மாநில காங்கிரஸ் கமிட்டிகள், ஒரு பிரச் னையைப் பார்லிமெண்டிற்குக் கொண்டு சென்றால் தான் ஏதாவது நடக்கும். கேரளாவோ, திருவனந்தபுரம், கன்னியாகுமரி பற்றிக் கவலைப்பட வில்லை. அவர்களுக்கு எர்ணாகுளம், கோட்டயம், கொல்லம் முக்கியமாக இருந்நது.  ஓர் அதிசயம் என்னவென்றால், தமிழ்நாடும் இதுபற்றி கவலைப்பட வில்லை என்பதுதான்! (அதற்குப் பல காரணங்கள் உண்டு) ஏலக்காய் அதிகம் விளையும் போடிக்கு ஓர் இரயில் விடப்பட்டது. அது கட்டுபடியாகாமல் பின் நின்றது. எப்படியும் அந்த இரயிலை மீண்டும் விட்டு, அந்த ஏலத் தோட்டக்காரர்களைத் திருப்தி செய்யத் தமிழ் நாட்டுக் காங்கிரஸ் விரும்பியது. அது அவசியம்தான். அதற்காகக் குமரி மாவட்டப் பிரச்னையைப் பற்றி கவலைப்படாமல் இருக்க வேண்டுமா?


எப்படியோ எங்கள் குரலுக்குச் செவிசாய்த்து டிராபிக் சர்வேக்கு உத்தரவிட்டனர். இதைத் தந்தி மூலம் டில்லியிருந்து டி.வி.ஆருக்கு தெரிவித்தோம். தந்தி கிடைத்ததும் டி.வி.ஆர்., துடித்துப் போனார். உடனே, இந்த டிராபிக் சர்வே கூடாது என்பதை எடுத்துக் கூற, டில்லி வந்தார். இந்த டிராபிக் சர்வே பற்றி இராமசுப்பையர் விளக்கமாக எங்களுக்கு எடுத்துச் சொன்னார். ‘உப்பு, தேங்காய் இவை, பல போக்குவரத்துச் சாதனங்கள் மூலம் வெளியே செல்கிறது. பொதுமக்கள் பயணமென்றால் திருநெல்வேலிக்கானாலும், திருவனந்தபுரத்திற்கானா லும் ஏராளமான பஸ்கள் செல்வதால் அதில்தான் செல்கின்றனர். இந்த இரண்டின் மூலமும் ரெவின்யூ இப்போது இரயில்வேக்கு வரப்போவதில்லை என்றுதான் அந்த டிராபிக் சர்வே ரிப்போர்ட் கூறும். அப்படிப்பட்ட நிலையில் நமது திட்டம் அடியோடு தள்ளப் பட்டு விடும்’ என்றார்.


இது ஒரு நல்ல பாயிண்ட். ‘இராமசுப்பையர் இவ்வாறு கருத்துத் தெரிவிக்கிறார்றீ என்றே, நாங்கள் இதுபற்றிப் பார்லிமென்டில் பேசினோம். எப்படியும் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்தப் பாதையைச் சேர்த்துக் கொள்வதாகக் கோபால்சாமி ஐயங்கார் உறுதி கூறினார். நாங்கள் எதிர்பார்த்தபடி இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் இது சேர்க்கப்படவில்லை. அதற்கான காரணங்களை நான் இப்போது வெளியிட விரும்பவில்லை.  இராமசுப்பையரோ விடாமல் வற்புறுத்தவே, இரயில்வே அமைச்ச ராக இருந்த லால்பகதுவர் சாஸ்திரியிடம் இது பற்றி நாங்கள் மீண்டும் பேசினோம். சாஸ்திரி நல்ல மனிதர். எங்களிடம், ‘உங்களுக்கு வாய்ப்புக் குறைவாக இருக்கிறது. திரு - கொச்சி அரசு இதை விரும்பவில்லை. சென்னையிலிருந்தும் இதுபற்றிக் கோரிக்கை வரவில்லை . . . என்ன செய்வது நான்?’என்றார். இதைக்கேட்டு டி.வி.ஆர்., பெரும் ஏமாற்றத்துக்குள்ளானார். ஆனாலும், விடாமல் முன்பை விடக் கடுமையாக உழைத்தார். ‘திருவனந்தபுரம் - நாகர்கோவில்; நாகர்கோவில் - திருநெல்வேலி என்று இரண்டையும் நாம் வற்புறுத்துவதே இதைத்தள்ளிப் போடச் செய்கிறது’ என்பது எங்கள் எண்ணம். இதை இராமசுப்பையர் ஏற்கவோ, எதையாவது ஒன்றை விட்டுக் கொடுக்கவோ தயாராக இல்லை. ‘குமரி மாவட்டம் தொழில்மயமாக மாற இதை விட்டால் வேறு வழியே கிடையாது’ என்று பிடிவாதமாக கூறிவிட்டார்.


கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இரயில் இல்லாதது பெரும் குறையாகும். முக்கியமாக திருநெல்வேலி - நாகர்கோவில். அதிலிருந்து குமரி முனைக்குத் தொடர்பு இன்றியமையாதது. பெரிய தொழில் களுக்கு எவ்வளவுதான் லாரி, பஸ் வசதி இருந்தாலும், இரயில் இல்லாமல் முடியாது. குமரி மாவட்டம் தொழில் முன்னேற்றம் இல்லாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். சென்னை, மற்றும் வட மாநிலத்திலிருந்து குமரி முனைக்குத் தீர்த்த யாத்திரை வருபவர்கள் படும்பாட்டைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். அன்றைக்கு அவர்கள் திருநெல்வேலிக்கு வருவர். மூட்டை முடிச்சு களுடன் பஸ் ஏறி, நாகர்கோவில் வந்து, அங்கிருந்து அதே மூட்டை முடிச்சுகளுடன் வேறொரு பஸ்சில் ஏறி குமரிமுனை செல்வர். அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான் இதன் சிரமம் விளங்கும்.
 


பெரும் மகிழ்ச்சியில் "தினமலர்'
(ஆக., 6,72 "தினமலர்' தலையங்கம்)

இன்று குமரிமுனையில் இரயில்வே ஸ்டேஷனுக்கு நமது பாரதப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த வைபவம் 10 ஆண்டுகளுக்கு முன்பே நடந்திருக்க வேண்டும். சொல்லப் போனால் 70 வருடங்களுக்கு முன் கூட நடந்திருக்கலாம். அந்தக் காலத்தில் திருநெல்வேலிக்கும், கன்னியாகுமரிக்கும் இரயில் போட உத்தேசித்தார்களாம். அதில் யாரோ ஒருவர் தலையிட்டு யோசனையை மாற்றி, செங்கோட்டை, கொல்லம், திருவனந்தபுரத்திற்கு அதைத் திருப்பி விட்டார்களாம். பல ஆண்டுகளுக்கு முன்பே, ‘தினமலர்’ ஆசிரியர், திருநெல்வேலி - குமரி இரயில்வே மந்திரிகள், துணை மந்திரிகள் இவர்களுக்கெல்லாம் மனு கொடுத்து, அவர்கள் நாகர்கோவிலுக்கு வரும்பொழுது வரவேற்பு கள் கொடுத்து இதைப்பற்றி வற்புறுத்திச் சொல்லப்பட்டது. அவர்களெல்லாம் அக்கறையோடு கேட்டு ஆவன செய்வதாகச் சொன்னார்கள்.


லால்பகதுவர் சாஸ்திரி அவர்கள் இரயில்வே மந்திரியாக இருந்த பொழுது குமரிக்கு வந்திருந்த நேரத்தில் பாதையின் அவசியம் பற்றிக் கூறியவற்றை மிகுந்த அனுதாபத்துடன் கேட்டார். கன்னியா குமரி இந்தியாவிலுள்ள புனித ஸ்தலங்களில் ஒன்றானதாலும்,காசி முதல் குமரி வரை நேரடி இரயில் போக்குவரத்து வேண்டுமென்ற கொள்கையை ஒப்புக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்களித் தார். பிறகு அந்த பாதையை சர்வே செய்வதற்கு ஒர் அதிகாரியை நியமித்து, லாபகரமாக ஓடும் என்ற ஓர் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட் டது. இப்படி இருக்கும் பொழுது, குமரிக்கு இரயில் வருவதற்குப் பதிலாகச் சேலம் - பெங்களூர்; விருதுநகர் - மானாமதுரை லைனும் தொடங்கப்பட்டது. குமரிக்கு இரயில் புறக்கணிக்கப்பட்டது. சேலம் - பெங்களுர் லைன் பெரும் நஷ்டத்தில் ஓடுவதாகச் சமீபத்தில் பார்லிமெண்டில் ஒப்புக்கொள்ளப்பட்டது.


அரசியல் காரணங்களுக்காகவும், செல்வாக்குள்ள தலைவர்களின் விருப்பு வெறுப்புகளுக்காகவும் இரயில்வே லைன்கள் போடப்படுகிறதே அன்றி, இலாபகரமாக ஓடக்கூடிய இடங்களுக்கும், மக்களின் தேவைக்கு அவசியமான இடங்களுக்கும் இரயில்கள் போடப்படுவதில்லை. ‘தினமலர்’ பத்திரிக்கையின் மூலம் குமரி - திருநெல்வேலி இரயிலை நாம் அடிக்கடி வற்புறுத்தி வந்தோம். துவத்துக்குடி துறைமுகம் வந்தபின், திருநெல்வேலி- திருவனந்தபுரம் இரயிலின் ஓர் இன்றியமை யாத தன்மை ஏற்பட்டு விட்டது.


தவிர இந்தியாவின் தென்கோடிப் பாதுகாப்புக் காரணங்களுக்காவும் குமரிக்கு இரயில் அவசியமாகிவிட்டது. முன்பு இரயில் போடாது காலம் கழித்துப்போடுவதனால் மறைமுகமாக ஒரு நன்மையே ஏற்பட்டிருக்கிறது. அதுதான் மீட்டர்கேஜிலிருந்து, பிராட்கேஜ் ஆகப் போடுகிறார்கள். இதுவரை போடாமல் இருந்ததும் ஒரு நன்மைக்குத் தான் என்று தோன்றுகிறது. திருநெல்வேலி - நாகர்கோவில் - கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இரயிலானது, எதிர்காலத்தில் ரொம்ப முக்கியத்துவம் அடையப் போகிறது. ஆசையோடு நெடு நாள் எதிர்பார்த்த ஒரு விழா இன்று நடக்கிறது. நமது பாரதப் பிரதமர் அவர்களால் தொடங்கப்படுகிறது. குமரி மாவட்ட மக்களுக்கு இதைவிட மகிழ்ச்சி கொடுக்கக்கூடிய ஒரு விழா இருக்க முடியாது. அவர்களுடைய மகிழ்ச்சியில் நாமும் பங்கு கொள்ள ஆசைப்படுகிறோம்.


இரயில் ஆசை நிறைவேறும் ஓசை
(செப்.6, "தினமலர்' கட்டுரை)

திருநெல்வேலியையும், திருவனந்தபுரத்தையும் கன்னியாகுமரி வழியாக இணைத்து ஓர் இரயில்வே பாதை அமைக்க வேண்டும் என்ற தற்போதைய திட்டம், முதன் முதலாகச் சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பே தென்னிந்திய இரயில்வே கம்பெனியால் விவாதிக்கப்பட்டது. திருநெல்வேலியையும், திருவனந்தபுரத்தையும் நாகர்கோவில் வழியாக இணைக்க வேண்டும் என்பது, இரயில்வேயால் சிபாரிசு செய்யப்பட்ட போதிலும், திருவிதாங்கூர் மாநில தர்பார், கொல்லம் - செங் கோட்டை வழியாக இணைக்க வேண்டும் என்று மாற்று ஏற்பாட்டைத் தேர்ந் தெடுத்தது. நாகர்கோவில் வழியாக இரயில்வே பாதை அமைக்க வேண்டும் என்ற திட்டம், 1954ல் புதிய தொரு உத்வேகத்தைப் பெற்றது. அப்போதைய திருவிதாங்கூர் - கொச்சி அரசாங்கம் இரண் டாவது ஐந்தாவது ஆண்டுத் திட்ட காலத்திலேயே இந்தப் பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இரயில்வே அமைச்சகத்துக்குச் சிபாரிசு செய்தது. அப்போதைய சென்னை மாநில அரசாங்கமும் இந்தத் திட்டத்திற்கு ஆரதவு தெரிவித்தது.


மீட்டர்கேஜ் இரயில் பாதை இணைப்புக்கான ஒழுங்கான போக்கு வரத்து சர்வே நடத்துவதற்கு, 1955ல் ரூபாய் அனுமதிக்கப்பட்டது. ஆனால், 6 கோடி ரூபாய் முதலீட்டில் நடத்தப்படும் இந்தப்பணி முடிக்கப்பட்ட ஆறாவது ஆண்டில் 6.9 சதவிகிதம் இலாபத்தையும், 11வது ஆண்டில் 8.2 சதவிகித இலாபத்தையும் தரும் என்பதை அந்த சர்வே தெரிவித்தது. ஆகையினால் இரண்டாவது, மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டங்களில் இந்த இணைப்புப் பணி சேர்க்க முடியாமல் போய்விட்டது. மறுபடியும், 1963 - 1964லிலும் பொறியியல் போக்குவரத்து சர்வேக்கள் நடத்தப்பட்ட போதிலும், பாதை போட்டு முடிந்த ஆறாவது ஆண்டில் 3 சதவிகிதமும், 11ஆவது ஆண்டில் 3.5 சதவிகிதமும் இலாபத்துடன் கூடிய வருமானம்தான் மீட்டர்கேஜ் இரயில் பாதையினால் கிடைக்கும் என்பதை அந்தச் சர்வே தெளிவுபடுத்தியது.ஆகையினால், கொச்சி, தூத்துக்குடி துறைமுகத் திட்டங்களின் வளர்ச்சியினால் இந்த இரயில் போக்குவரத்து பாதைக்குக் கிடைக்கும் பலன்களைப் பற்றிய தெளிவான கருத்து ஏற்படும் வரை இரயில் பாதை பற்றிய மறு பரிசீலனையை ஒத்தி வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. ஆகவே, முந்தைய சர்வே அறிக்கைகளுடன் பிராட் கேஜ் பாதைக்கான புதிய சர்வே அறிக்கையும் தேவைப்பட்டது. இந்த சர்வே அறிக்கைகளும் மீட்டர்கேஜ், அகல இரயில் பாதைகள் ஆகிய இரண்டினாலுமே சாதாராரண அளவு இலாபம் கூடக் கிடைக்காது என்பதைத் தெரியப்படுத்தின.


மீட்டர்கேஜ் இரயில் பாதை அமைக்க சுமார் 13 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால், அதனால் மிகவும் சாதகமான சூழ்நிலைகளில்கூட 6.5 சதவிகிதம் இலாபம் வரும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆக, இந்தத் திட்டம் இன்னும் இலாபமில்லாமலேயே இருக்கிறது. ஆனால், முக்கிய சுற்றுலா மையமான கன்னியாகுரியை இது இணைக்கிறது என்ற காரணத்தினால், இந்த இரயில் பாதை இணைப்புத் திட்டத்திற்கு விசேஷ சலுகைகள் கொடுத்துத் திட்டக் குழுவிற்கும் நிதி அமைச்சகத்திற்கும் சிபாரிசு செய்யப்பட்டது அவையும் பச்சைக் கொடியைக் காட்டிவிட்டன. 1972 ஏப்ரலில் பிராட்கேஜ் பாதை அமைப்பதற்காக அனுமதி அளிக்கப்பட்டது.


அமைக்கப்படவிருக்கும் இந்த இரயில் பாதைக் திட்டத்தினால் தமிழ்நாட்டில் நெல்லை, குமரி மாவட்டங்களும், கேரளாவில் நெய்யாற்றங்கரை, திருவனந்தபுரம் மாவட்டங்களும் பயன்பெறுகின்றன. இந்தப் புதிய இரயில் பாதையின் சிறப்பு அம்சங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.  திருவனந்தபுரம் - நாகர்கோவில் 66.03கி.மீ., நாகர்கோவில் - திருநெல்வேலி 75.93 கி.மீ., நாகர்கோவில் - கன்னியாகுமரி 22.06 கி.மீ., மொத்தம் 164.02 கி.மீ.,  இதில் 30.50 கி.மீ., கேரள மாநிலத்திலும், மிச்சம் தமிழ்நாட்டிலும் அமைந்திருக்கும். மதிப்பிடப்பட்ட செலவு 14.53 கோடி ரூபாய் மொத்த நிலையங்கள் 24. கிராசிங் நிலையங்கள் ஏழு; எடுக்கப்பட்ட மொத்த நிலம் சுமார் 567 ஹெக்டேர். பெரிய பாலங்கள் 16, சிறிய பாலங்கள் 405; மேம்பாலங்கள் 29, கீழ் பாலங்கள் 12


காசி - கன்னியாகுமரி இரயில்
(செப்., 6, '72 "தினமலர்' தலையங்கச் சுருக்கம்)

கன்னியாகுமரிக்கு இப்போது இரயில்பாதை உறுதியாகிவிட்டது. பிரதமர் இந்திராகாந்தி இதற்கான அடிக்கல் நாட்டுகிறார்கள். கன்னியாகுமரி இரயில் திட்டத்திற்கு அஸ்திவாரமாக ஒரு வரலாறே உண்டு. பல பிரமுகர்கள் இதற்காகப் பல காலம் ஓடிக்கொண்டே இருந்தார்கள். இரயில் வேண்டுமென்பதற்காக ஓரு ஸ்தாபனத்தை உருவாக்கிப் பாடுபட்டார்கள். மாநாடுகளிலும் சரி, சமூகக் கூட்டங் களிலும் சரி, வர்த்தகக் கூட்டங்களிலும் சரி, பொதுக் கூட்டங்களிலும் சரி இங்கெல்லாம், இரயில் வேண்டும், என்ற தீர்மானத்தை எப்படி யாவது இவர்கள் நுழைத்து நிறைவேற்றச் செய்து வந்தார்கள்.


காகிதத்திலேயே இருந்த திட்டம் இப்போது நடைமுறைக்கே வந்துவிட்டது. நம்முடைய பொறுமைக்கும் பலன் இல்லாமல் போக வில்லை. முதலில் கூறியபடியில்லாமல் இப்போது பிராட்கேஜ் பாதையாகவே இது வந்துள்ளது. நாகர்கோவில் முதல்தர ஜங்ஷனாக அமையப் போகிறது.  இரயில் பாதையை , ‘அப்படிப் போடுங்கள் . . . இப்படிப் போடுங்கள்’ என்று தீர்மானம் போடுவதற்கு இது நேரமல்ல. ‘என் வயல், தோப்பு போகிறதே’ என்று கூறிக் கொண்டிருப்பது அழகல்ல. இரயில்வே வேலைகள் ஜரூராக நடக்கட்டும். இன்று அடிக்கல் நாட்டப்படும் இப்பாதையின் மூலம் காசியும், கன்னியாகுமரியும் இணைகிறது. கல்கத்தாவும், கன்னியாகுமரியும் இணைகிறது. நெல்லை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம் மாவட்டங்களின் தொழில்வளம், வாணிபம் ஒன்றுக் குப் பத்தாக விரிவாகப் போகிறது. இதனால் பொருளாதாரம் வளர்ந்து ஏழ்மை நிலை மாறும். இந்த இரயில் பாதை அமைப்பு, ‘தினமலர்’ இதழின் விசேஷ சாதனை. இதற்குச் சரித்திரம் சாட்சியாகும். தண்டவாளத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும், ‘தினமலர்’ இதழின் சேவை ஒலிக்கவே செய்யும்.


பிரதமர் இந்திரா

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இரயில் மூலம் ஒரு தொடர்பு ஏற்படுகிறது. தேசிய ஒருமைப்பாட்டின் சின்னமாக இந்த இரயில் பாதை விளங்கும் என்று, திருநெல்வேலி - நாகர் கோவில் - கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இரயில் பாதை அமைக்கும் வேலையை இன்று பிரதமர் இந்திராகாந்தி தொடக்கி வைத்துப் பேசினார். இந்த விழாவிற்குத் தமிழக முதன்மந்திரி கருணாநிதி தலைமை வகித்தார். காங்கிரஸ் தலைவர் காமராஜர் கலந்துகொண்டார். இரயில்வே உதவி மந்திரி குரோஷி இந்த இரயில் பாதையின் முக்கியத்துவத்தை விளக்கினார். கேரள முதல் மந்திரி அச்சுதமேனன் பேசுகையில், ‘இதன் மூலம் இரண்டு மாநிலங்களும் இணைகின்றன’ என்றார். (செப்.,7, ’72, ‘தினமலர்’ செய்தி)

இந்திராவின் மகிழ்ச்சியும் வேதனையும்

மறைந்த பிரதமர் இந்திரா காந்திக்குக் கன்னியாகுரிக்கு இரயில் வரவேண்டுமென்பதில் தனிப்பட்ட ஆவல் அதிகமாக இருந்தது. கன்னியாகுமரியின் இயற்கை அழகு அவரை வெகுவாகக் கவர்ந்திருந் தது. தவிர, ‘காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை’ என்ற கோஷம் உயிரூட்டப்பட வேண்டுமானால், குமரிக்கு இரயில் அவசியம் வேண்டுமென்று உணர்ந்திருந்தார். கன்னியாகுமரியில் எங்கே இரயில் நிலையம் அமைப்பது என நேரில் சென்று ஆராய்ந்து இடம் தேர்ந்தெடுக்க, இரயில்வே அமைச்சராக இருந்த ஹனுமந்தையாவை அனுப்பி வைத்தார்.


அதிகாரிகள் மற்றும் நண்பர்களைக் கலந்தாலோசித்து, குமரி அம்மன் ஆலயத்தின் அருகில் இரயில் நிலையம் அமைக்கலாம் என இடம் தேர்வு செய்து பிரதமரிடம் ஹனுமந்தையா அறிவித்தார். அந்த இடம் இந்திராவின் மனத்திற்குத் திருப்தி தரவில்லை. ஆலயம் வரை இரயில் வருமானால், ஆலயமும், அதன் எதிரிலே அமைந்த முக்கடலின் அழகும் கெட்டு, இரயில்வே நிலையப் பரபரப்பும், தோற்றமுமே மிஞ்சும் என்பது அவரது கருத்து.
பின்னர் கன்னியாகுமரிக்கு விஜயம் செய்த பிரதமர் இந்திராகாந்தி, ஒருநாள் அதிகாலையில் தனது பாதுகாவலர்களைக் கூடத் தனக்குப் பாதுகாப்பாக வர வேண்டாமென கூறி விட்டு, கடற்கரையில் நீண்ட தூரம் நடந்து சென்றார்.
குமரி அம்மன் ஆலயத்தை விட்டு சிறிது தொலைவில் உற்ற இடத்தை அப்போது தானே தேர்ந்தெடுத்து நிலையம் அங்கு அமைக்கப்படுவதுதான் சரி என்ற முடிவுக்கும் வந்தார். இன்றைக்கு நிலையம் அந்த இடத்தில்தான் உருவாகியுள்ளது. அதுமட்டுமல்ல, அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டபோது ஒன்றை ஒளிக்காமல் மனவேதனையுடன் குறிப்பிடவும் அவர் தயங்கவில்லை.


கன்னியாகுமரி வளர்ச்சியடைந்திருக்கிறது. ஆனால், இயற்கையின் அழகு சரியாகப் பாதுகாக்கப்படவில்லை. 1932ம் வருடம் நான் முதன்முதலாக இந்த ஊருக்கு வந்தபோது, எனக்கு அதிமான மகிழ்ச்சி ஏற்பட்டது. இன்றைக்கு அமைதியான சூழ்நிலை எல்லா இடங்களிலும் குறைந்து வருகிறது. இயற்கை அழகு கெட்டு விடாமல் வியாபாரத்தைப் பெருக்கலாம். பண்டைய காலத்தில் ஆன்மிகத்திற்கு முக்கியத்தவம் இருந்தது. இப்போது அது பொருளாதார சக்திக்குக் கட்டுப்பட்டு விட்டது. பண்பாடு குறைகிறது. பண்பாடு குறையாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும், என்று கூறினார். (செப்.,7, ’72, ‘தினமலர்’ செய்தி)


வெள்ளி விழா

‘தினமலர்’ வெள்ளி விழா செப்.,’75ல் வந்தது. ஒரு பத்திரிகையில் வெள்ளி விழா என்றால் எத்தனை ஆடம்பரமாக, கோலாகலாமாக நடைபெறும்! ஆனால், பெரும் சிரமங்களைத் தாங்கி வெகுவாக வாசகர்களைப் பெற்று வளர்ந்து வந்த, ‘தினமலர்’ வெள்ளி விழா மிக அடக்கமாக, ஆடம்பரமே இல்லாமல் நடைபெற்றது என்பது ஒரு ஆச்சரியமான செய்தியாகும். திருநெல்வேலியில் நிறுவனர் டி.வி.ஆர்., ஒவ்வொரு இலாக்காவிற்கும் சென்று, ஊழியர்களை மனமார வாழ்த்தினார். ஒவ்வொரு இலாக்காவினரின் விருப்பப்படி அவர்களுடன் படமும் எடுத்துக் கொண்டார்.


அலைமோதும் தென்குமரியில் இரயில் ஓசை
(ஏப்,.16, '79 "தினமலர்' செய்திச் சுருக்கம்)

கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இரயில் பாதையைச் சிறப்பான விழா ஒன்றில் பிரதமர் தேசாய் நேற்று காலை திறந்து வைத்தார். முதல் இரயில் 4 மணி நேரத்தில் 85 கி.மீ., துபரத்தைக் கடந்து திருவனந்தபுரம் போய்ச் சேர்ந்தது. இந்துமகா சமுத்திரத்தையும், இமயமலையையும் இணைக்க உதவும் 86 கி.மீ., நீள கன்னியாகுமரி - திருவனந்தபுரம் அகல இரயில் பாதையைப் பிரதமர் மொரார்ஜி தேசாய் நேற்று காலை திறந்து வைத்தார். இதன் மூலம் இதுவரை இரயில் ஓடா மாவட்டமாக இருந்த கன்னியாகுமரி, இரயில் ஓடும் மாவட்டம் ஆகிறது. கன்னியாகுமரியிலிருந்து, திருவனந்தபுரம் வழியே காஷ்மீர் வரை அகல இரயில் பாதை உள்ளது. இதன் மொத்த நீளம் 3,600 கி.மீ.,


மொத்தம் 15 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் போடப்பட் டுள்ள குமரி - திருவனந்தபுரம் இரயில் பாதை, திருவனந்தபுரம் - திருநெல்வேலி அகல இரயில் பாதையின் முதல் படியாகும். அடுத்த படியாக நாகர்கோவில் இரயில் நிலையத்திலிருந்து, திருநெல்வேலிக்கு அகல இரயில் பாதை போடப்படும். அதன் நீளம் 73 கி.மீ., ஆகும். இரயில் பாதையைப் போக்குவரத்திற்கு திறந்து வைத்துப் பேசிய பிரதமர், நாட்டு மக்களைப் பல இரயில் தடங்கள் மூலம் ஒன்றாக இணைப்பதற்காக இந்திய இரயில்வேயைப் பெரிதும் பாராட்டினார். கன்னியாகுமரியிலிருந்து இரயில் புறப்பட்டது. அன்றைய இரயில்வே அமைச்சர் மதுதண்டவதே பச்சைக்கொடி காட்டினார்.
 

இந்தப் புதிய இரயில் பாதையின் மூலம் தென்னக மக்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேற்றி வைக்கப்பட்டுள்ளது. இந்த இரயில் பாதை நாட்டு மக்களிடையே ஒற்றுமையை மேலும் அதிகப்படுத்தும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். இரயில் பாதை போடும் பணியைக் குறிப்பிடப்பட்ட காலக்கெடுவிற்கு முன்பாகவே முடிந்து விட்ட சாதனைக்காக இரயில்வே அமைச்சர் மதுதண்டவதேயையும், இரயில்வே இலாகாவையும் பிரதமர் பாராட்டினார். இதற்கு ஒத்துழைப் புக் கொடுத்த தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். இரயில்வே அமைச்சர் மது தண்டவதேயும், சக்தி அமைச்சர் பி.இராமச்சந்திரனும் உரையாற்றினர்.


முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., கேரள முதலமைச்சர் வாசுதேவன் நாயர் ஆகியோரும் பேசினர். நிகழ்ச்சிக்கு பிரபுதாஸ் பட்வாரி தலைமை வகித்தார். கன்னியாகுமரியிலிருந்து கேரள முதல்வர் வாசுதேவன் நாயர், இரயில்வே போர்டு சேர்மன் கே.எஸ்.ராஜன், இரயில்வே கட்டுமானப்பணி ஜெனரல் மானேஜர் செரீப் ஆகி யோரையும், மற்றும் பல பிரமுகர்களையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட இரயில், 4 மணி நேரம் பயணம் செய்து திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேஷனை அடைந்தது. இரயில் செல்லும் வழியில் ஸ்டேஷன்கள் அனைத்தும் அலங்காரம் செய்யப்பட்டுக் காட்சியளித்தன. இரண்டு டீசல் இன்ஜின்கள், ஒன்பது பெட்டிகளுடன் கூடியதாக இந்த இரயில் இருந்தது. வழி நெடுகிலும் மக்கள் உற்சாகமாகக் கூட்டம் கூட்டமாக கூடி நின்று, இரயில் கடந்து செல்கையில் ஆரவாரம் செய்தனர். இரயில், நாதஸ்வரம், பேன்ட் வாத்தியம், வெடிமுழக்கம், ஜெண்டை வாத்தியம் ஆகியவற்றோடு ஏராளமான மக்களால் வரவேற்கப்பட்டது.


ஒரு செய்தி ! வயது 20!!


தினசரிப் பத்திரிகையின் செய்திக்கு வயது என்ன? ஒவ்வொரு நாள் காலையிலும் அன்றைக்கு வாசகர்களைப் பரபரப்பூட்ட அல்லது மகிழ்ச்சியூட்ட கவர்ச்சிகரமான தலைப்பில் ஒரு செய்தி வெளியாகும்; அது அன்றைக்கே மடிந்துவிடும். செய்திகள் அரசாங்கமோ, அமைச்சர் களோ, அதிகாரிகளோ அறிவித்ததாக இருக்கும். இந்த அறிவிப்புகளை விட்டுவிட்டால் சில சிறு செய்திகள் அருமையான பெட்டிச் செய்திகளாகச் சுவையுடன் வெளியிடப்படும். ஆனால், ஒரு செய்தி 20 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வெளி வருமானால் வாசகர்கள் அதைச் சுவையில்லாத செய்தி என்று முகம் சுளிப்பார்கள் என்று தினசரிப் பத்திரிகைகள் கருதுகின்றன.


தன் பத்திரிகை மூலம் ஒரு பகுதியின் தேவைகளைப் பூர்த்தி செய்தே ஆக வேண்டும் என்ற உணர்வுடன், இருபது ஆண்டுகள் தொடர் செய்திகளை, ‘தினமலர்’ வெளியிட்டு லட்சிய வெற்றியைச் சாதித்துவிட்டே அந்தச் செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. திருவனந்தபுரம் - நெல்லை இரயில் பாதை, இப்பகுதியின் வளர்ச்சிக்கு மிக அவசியமானது. இதைச் சில செய்திகளாகப் பிரசுரித்துவிட்டு கடமை முடிந்ததாக இருந்துவிட, ‘தினமலர்’ தயாராக இல்லை. பிரதமர்கள் நேரு, லால்பகதுவர் சாஸ்திரி, இந்திரா காந்தி,மொரார்ஜி தேசாய் ஆகியவர்களின் பதவிக் காலங்கள் முழுவதும் இந்தப் பிரச்னை தொடர்ந்தது. இந்திய இரயில்களுக்கு வந்த விபத்துகளைக் காட்டிலும், இந்தப் பாதைக்கான திட்டத்தை உருவாக்குவதில் வந்த விபத்துக்கள்தான் மிக அதிகம். எல்லா விபத்துக்களையும் கடந்து, காஷ்மீர் கன்னியாகுமரி இரயில் பாதை உருவாகியது என்றால், அதற்காகத் தனது பத்திரிகை மூலம் பெரும் போராட்டத்தைத் ‘தினமலர்’ இருபது ஆண்டுகள் விடாமல் நடத்தி வெற்றியும் கண்டுள்ளது.


தினசரிச் செய்திகளை மட்டும் வெளியிடுவது ஒரு பத்திரிகையின் கடமையாக இருக்க முடியாது. ஒரு வட்டார வளர்ச்சிக்குத் தேவை யென்றால், இருபது ஆண்டுகள் தொடர்ந்து செய்திகள் வெளியிடத் தான் வேண்டும். அது சுவையில்லாத செய்தி அல்லவென்பதை நிரூபித்து, இதுவே இப்பகுதி மக்களுக்குக் கவர்ச்சிகரமான செய்தி எனவும் ஏற்றுக்கொள்ள வைத்த பெருமையைத் ‘தினமலர்’ நிரூபித்து விட்டது. ‘தினமலர்’ 25 ஆண்டுக் கால சேவைகளில் இந்த இரயில் பாதை அமைப்பு முக்கிய இடத்தைப் பெறுகிறது. நமது நாட்டில் மக்களுடைய அதி முக்கியத் தேவைகளைப் பூர்த்தி செய்து முடிக்க அரசுக்குக் கால் நூற்றாண்டுகள் தேவைப்படும் வரை இம்மாதிரியான செய்திகளின் வயதும் கால் நுபற்றாண்டுகள் ஆவதில் ஆச்சரியப் படுவதற்கு எதுவும் இல்லையல்லவா?

இன்று மகிழ்ச்சியான தினம்


(ஏப்., 15, '79ல் "தினமலர்' நிறுவனர் டி.வி.இராமசுப்பையர் "தினமலர்' இதழில் எழுதிய கட்டுரைச் சுருக்கம்.)

திதிருவனந்தபுரம் - கன்னியாகுமரி அகல இரயில் பாதையை இன்று பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் தொடங்கி வைப்பதில் மாவட்ட மக்கள் கொண்டுள்ள பேரானந்தத்தில் நானும் சேர்ந்து கொள்கிறேன். கடந்த இருபது ஆண்டுகளாக நாம் இதற்கு எடுத்த முயற்சிகள் என் நினைவுக்கு வருகிறது. இந்தியாவின் தென்கோடிப் புனித ஸ்தலம் கன்னியாகுமரி. இத்தோடு கடற்கரை முக்கியத்துவமும் சேர்ந்திருப்பதால், பாதுகாப்புத் துறைக்காவும் இங்கு இரயில் பாதை அவசியம். அத்தோடு மிகவும் பின்தங்கிய இம்மாவட்டம் தொழில் வளம் காண இரயில் அவசியமானதாகும். இந்தக் கண்ணோட்டத்தில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே கன்னியாகுமரி, திருவனந்தபுரம் இரயில் பாதை அமைப்புக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக நான் இருந்தேன். இரயிலுக்காக அந்தக்குழு எடுத்த பிரயத்தனங்கள் ஏராளம்.


‘தினமலர்’ இதழும் இதற்காகத் தொடர்ந்து எழுதி வந்தது. திட்டம் இதோ வந்துவிடும் என்று நினைப்போம்; திடீரென்று திசை திரும்பிவிடும். கொஞ்சமும் சோர்வில்லாமல் கடந்த இருபத் தைந்து வருடம் கன்னியாகுமரி மக்களுடன் இந்தப் பிரச்னைக்காகப் பாடுபட்டவன் என்ற முறையிலும், இந்த இரயில் பாதையின் காரணமாக எதிர்காலம் கன்னியாகுமரிக்கு எத்தனை சிறப்பாக அமையும் என்பதைத் தெரிந்துகொண்டவன் என்ற முறையிலும், இந்தப் பாதை தொடக்கப்படுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். இத்தனை வருடம் பட்ட பாட்டிற்கு நல்ல பலன் கிடைத்துள்ள இந்த நல்ல நாளில், இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் எல்லா நலன்களும் கிட்ட, கன்னியாகுமரி அன்னையை வேண்டி எனது இதயம் கனிந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஓ.வி.அழகேசன்

திருவனந்தபுரம் - கன்னியாகுமரி - திருநெல்வேலி இரயில் பாதை அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் டி.வி.ஆர்., என முன்னாள் இரயில்வே உதவி அமைச்சர் ஓ.வி.அழகேசன் கூறினார். மேலும் இதுபற்றி அவர் விளக்குகையில் . . .


இந்தப் பெரிய இயக்கம் ஆரம்பமாகிப் பல வருடங்களாகிவிட்டன. இப்பொழுது நினைவுக்கு வருபவை மிகக் கொஞ்சம்தான். நினைவில் உள்ள சில தகவல்கள் கூறுகிறேன் . . . இத்திட்டத்திற்கு மிக முக்கிய காரணமாக இருந்த டி.வி.ஆர்., அவர்கள் நினைவைப் போற்றி நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம் என, ஓ.வி.அழகேசன் ஜூன் 18, ’88ல் செங்கல்பட்டில் அளித்த பேட்டியில் கூறினார். நான் இரயில்வே துறையின் துணை அமைச்சராக இருந்தபோது, கன்னியாகுமரிக்குச் சென்று இருந்தேன். அப்போது, ‘தினமலர்’ நிறுவனர் டி.வி.இராமசுப்பையரும் மற்றும் சில உள்ளூர்ப் பிரமுகர் களும் என்னைச் சந்தித்தனர். திருவனந்தபுரம் - கன்னியாகுமரி - திருநெல்வேலி ரயில்பாதை இணைப்புக்கு உரிய திட்டத்தை அமல் செய்யக் கோரும் குழுவுக்கு டி.வி.இராமசுப்பையரே தலைவராக இருந்தார்.


அப்போது இரயில்வே அமைச்சராக இருந்த லால்பகதுபர் சாஸ்திரி, கன்னியாகுமரிக்குச் சென்று இருந்தபோது, அவரைச் சந்தித்து இந்தத் திட்டம் பற்றி வற்புறுத்தினார். ஒரு சமயம் டி.வி.ஆர்., எனக்கு நாகர்கோவிலில் ஒரு பாராட்டு விழா நடத்தினார். அதிலும் இதே கருத்து வலியுறுத்தப்பட்டது. பின், டில்லி திரும்பிய நான், பத்திரிகையாளர்களைச் சந்தித்தேன். இந்த இரயில் பாதைத் திட்டத்தை அமல் செய்ய தீவிரம் கவனம் எடுத்துக்கொள்வேன் என்று அப்போது கூறினேன்.


நான் துணை அமைச்சராக, 1952 - 1957ம் ஆண்டுகளில் இருந்தேன். 1954ம் ஆண்டு என்று நினைக்கிறேன் . . . நான் திருநெல்வேலியில் இருந்தேன். அப்போதும் டி.வி.ஆர்., மற்றும் கே.டி.கோசல்ராம் ஆகியோர் இதுபற்றி வற்புறுத்தினர். இந்தத் திட்டம் குறித்து ஆலோசனை நடத்த சென்னையில் டி.டி.கே., ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். காமராஜர் வீட்டில் நடந்த இந்தக் கூட்டத்தில் டி.வி.ஆரும் கலந்து கொண்டார்; நானும் இருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன் இந்தக் திட்டம் நிறைவேறியுள்ளது. இந்தப் பெரிய திட்டம் நிறைவேறுவதற்குக் காரணமாக இருந்தவர்களை நாம் நினைவு கூர்வது, நாம் அவர்களுக்குச் செய்ய வேண்டிய நன்றிக் கடனாகும். இந்தத் திட்டத்துக்கு மிக முக்கிய காரணமாக இருந்த டி.வி.ஆர்., அவர்களை என்றும் நம் நினைவில் வைத்துப் போற்றி நன்றி செலுத்துவோமாக.Advertisement
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X