திரும்பிப் பார்க்கிறோம்


தமிழ்நாட்டில் நீராதாரங்கள் செம்மையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் டி.வி.ஆர்., மிகவும் அக்கறை கொண்டிருந்தார். பெரிய நதிகளில் அணைகள் கட்டி நீரைத் தேக்குவது மிக முக்கிய மானது. அத்துடன் நமது பிரச்னைகள் தீர்ந்து விடுவதில்லை. அண்டை மாநிலங்களைத் தண்ணீருக்கு நம்பியே இருக்க வேண்டிய நிலையில் நாம் இருப்பதால், நமக்குள்ள நீர் நிர்வாகம் மிக விழிப்புடன் செயல்பட வேண்டும். அத்தோடு நதிகளே இல்லாத பகுதிகள் விவசாயத்திற்கு முழுமையாக நம்பி இருக்கும் பாசனக் கண்மாய்கள், குளங்கள் இவற்றின் பராமரிப்பு மிக மிக அவசியமானது. பெரிய நதிகளில் அணைகள் கட்டி விட்டால் நமது பணிகள் முடிந்ததாக ஆகாது. காட்டாறுகளில் மழைக் காலத்தில் ஏராளமான வெள்ளம் சென்று வீணாகக் கடலில் வீழ்கிறது. அவற்றைத் தடுத்து விவசாயத் திற்குப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் பல காலம் கடுமையாக வலியுறுத்தி வந்தார்.
 

அண்டை மாநிலங்கள் இவ்விஷயத்தில் மிகவும் கவனமாகச் செயல்பட, தமிழ்நாட்டினர் மட்டும் இதுபற்றி ஒரு தீவிரமான கண்ணோட்டம் இல்லாமல் இருக்கிறார்களேறீ என்று அவர் வேதனைப் படுவார். ‘நதிகள் களவு போகின்றன!’ என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட ஒரு செய்தி தொடர், நம்மை இன்றைக்கும் மிகவும் வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த நதிகள் இன்றைக்குக் களவு போய்விட்டன என்ற உண்மை கூட நம்மில் பலருக்குத் தெரியாது. ஜூன் 15, ’61ல், இதே தலைப்பில், ‘தினமலர்’ எழுதியுள்ளவற்றைப் பார்க்கலாம் . . .


புனலூர் ஆறு, கேரளத்தில் முக்கியமான நதிகளில் ஒன்று. இந்த நதியில் தமிழ்நாட்டிற்கு எந்தவிதமான பாத்தியதையும் கிடையாது என்று கேரள அரசு கூறியது. அது உண்மையில்லை என்று மிகவும் முக்கியமான ஒரு வரைபடத்தைக் கண்டுபிடித்துத் ‘தினமலர்’ வெளியிட்டது. அந்தப் படம், இந்திய அரசாங்க சர்வே இலாகா, 1914 - 15 ஆண்டில் வெளியிட்டதாகும். இதை வெளியிட்டவர் கல்நெல்செர் எஸ்.ஜி.புற்றாடு. அவர் ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியா வில் சர்வேயர் ஜெனரலாக இருந்தவர். இந்தப் புனலுவர் ஆற்றின் கிளை நதிகள் 1) செந்துவரணி ஆறு 2) தீர்த்தக்கரை ஆறு 3) குளத்துப் புழை ஆறு.


இதில் குளத்துப்புழை ஆற்றைத் தவிர, மீதமுள்ள இரண்டு ஆறுகளும் தமிழ்நாட்டிலிருந்தே உற்பத்தியாகின்றன. தீர்த்தகரை ஆறு தென்காசித் தாலுகாவில், பெரியனுருட்டி மலையில் இருந்து உற்பத்தியாகிறது. இதில், சுவர்ணகிரி எஸ்டேட்டில் உற்பத்தியாகும் சொர்ணகிரி ஆறு வந்து கலக்கிறது. இதற்கு அடுத்து செந்தூரணி ஆறு. இது தென்காசித் தாலுகாவில் பரதேசி மொட்டை மலை அருகில் உற்பத்தியாகிறது. இதில் நாரட் டாறு, அருவி ஆறு, உமியாறு ஆகிய மூன்று உபநதிகள் வந்து சேர் கின்றன. அடுத்துள்ள குளத்துப்புழை ஆறு, கேரளத்தில் உற்பத்தியாகிறது. ஆனால், இதன் கிளை நதிகளான பொங்குமலை ஆறு, வெள்ளரி ஆறு, சீனிக்கரை ஆறு, சங்கிலிப்பாளையம் ஆறு ஆகிய நான்கும் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உற்பத்தியாகின்றன.


- இவற்றில் இருந்து ஓர் உண்மை தெளிவாகிறது. தமிழ்நாட்டி லிருந்து உற்பத்தியாகும் முக்கிய நதிகளின் தண்ணீர் எல்லாம் சேர்ந்ததுதான் புனலூர் ஆறு. இதில் நமக்கு நிச்சயம் முக்கால் பங்கு உண்டு. இப்போது நமக்கு இதில் பங்கே கிடையாது என்று கேரளா கூறுவது மிகவும் அநீதியாகும். இவற்றில் அணைகள் கட்டி நாம் பயன்படுத்தினால், தென்காசித் தாலுகா, சங்கரன்கோவில் தாலுகா, திருநெல்வேலித் தாலுகாவின் ஒரு பகுதிக்கும் இவை பயன்படும். சுமார் ஐம்பது ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். ஒரு பெரிய துப்பறியும் நிறுவனம் செயல்படுவது போல் ஆதாரங் களுடன் ஆணித்தரமாக மத்திய, மாநில அரசாங்கத்தின் கவனம் இதில் அவசரமாகத் திருப்பப்படுவதுடன், இந்த நதிகளைப் பயன்படுத்த, 30 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டுமென்றும், ‘தினமலர்’ கேட்டது. இது, 1961ம் ஆண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கட்டுரை எழுதியவர் இன்றைய, ‘தினமலர்’ ஆசிரியர் இரா.கிருஷ்ண மூர்த்தி. இந்த விபரம் வெளியானதும் அன்றையத் தமிழக அரசு சுறுசுறுப்பு காட்ட முன் வந்தது. மாநிலப் பிரதம இன்ஜினியர் ஏகாம்பரம், புனலார் ஆற்றுப் பகுதியைப் பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டார். அவரும் மலைப் பகுதிகளில் சுற்றி, ஆவணங் களைப் பரிசீலித்து, ‘தினமலர்’ உண்மையைத்தான் வெளியிட்டது என்று அறிக்கை சமர்ப்பித்தார்.


சபரிகிரி அணை

கேரளாவில் 25 கோடி ரூபாய் செலவில் சபரிகிரி அணை கட்ட முடிவு செய்தனர். இது திருநெல்வேலி மாவட்ட விவசாயத்தை வெகுமாகப் பாதிக்கும் என்பதை முன் கூட்டியே ஆராய்ந்து, ‘நெல்லை மாவட்டத்திற்கு சாவுமணி’ என்ற தலைப்பில், ஜூலை 28, ’61ல், ‘தினமலர்’ எழுதியது. இந்த அணை கக்கி ஆற்றில் கட்டப்பட இருக்கிறது. இது பம்பை ஆற்றின் பிரதான கிளை. பம்பை ஆறு கேரளாவில் தான் உள்ளது. ஆனாலும், இந்த கக்கி ஆறு கேரளா, தமிழ்நாட்டின் பொதுவான நதி என்பதற்குச் சான்றுகள் பல உள்ளன. இப்போது தமிழ்நாட்டிற்கு இதில் பங்கே இல்லை என்கிறது கேரளம். இதில் நமக்கு உள்ள பாத்தியதை தண்ணீர் மட்டுமாவது கொடுத்தால், வறட்சிக்கு பெயர் பெற்ற சங்கரன்கோவில், கோவில்பட்டி, தென்காசித் தாலுகாக்கள் பாசன வசதி பெறும்.


நமக்குள்ள பாத்தியதையைக் கூறுகிறோம். கக்கி ஆறு சங்கரன் கோவில் தாலுகாவில் உள்ள வாசுதேவநல்லுபர் அரசு ரிசர்வ் பாரஸ்ட்டில் உள்ள கள்ளிமலை, தேவர்மலை ஆகிய மலைகளில் உற்பத்தியாகிறது. இதற்கு ஆதாரம் இந்திய சர்வே தலைமை அதிகாரி பிரிகேடியர் தாண்டி வெளியிட்ட வரைபடமே ஆகும். (படத்தையும், ‘தினமலர்’ வெளியிட்டது.)  தமிழகத்திற்குச் சொந்தமான நதியை மலையைக் குடைந்து கால்வாய் வழியாக கக்கி ஆற்றில் சேர்த்து அணைகட்ட 25 கோடி ரூபாய் செலவிடத் தீர்மானித்து விட்டது கேரளா. இதனால் பெரும் பாதிப்பு நெல்லை மாவட்டத்திற்கே என்று எழுதியவர் இரா. கிருஷ்ண மூர்த்தி.


இதைப் பார்த்தவுடன் அன்றைய எம்.எல்.ஏ., சுப்பையா முதலியார் ஆதாரங்களைத் தேடினார். உடனே அவர் கேரள பிரதம இன்ஜினியர் பத்மநாபன், தமிழ்நாட்டுப் பிரதம இன்ஜினியர் ஏகாம்பரம் இருவருடன் இப்பகுதிகளைச் சுற்றிப் பார்த்தார். முதலில் இந்தக் குழு, ‘தினமலர்’ அலுவலகம் வந்து வெளியிட்ட வரைபடம், ஆதாரங்களை வாங்கிச் சென்றது. இதுவே அவர்களுக்கு முதல் ஆதாரமாக இருந்தது என்பதைக் குறிப்பிடுவதில் தவறில்லையல்லவா?
‘தினமலர்’ இத்தோடு நில்லாமல் பிரச்சனையைத் திருநெல்வேலி அபிவிருத்திக் கவுன்சிலுக்குக் கொண்டு வர வைத்தது. அதன் அடிப்படையில் பூர்வாங்க அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து நமக்கு உரிமை உள்ள அச்சங்கோவிலாறு, கல்லாறு இவற்றை நாம் பயன்படுத்த 20 கோடி ரூபாயில் ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டது. (இத்திட்டம் பற்றி விரிவான தகவல்களைத் ‘தினமலர்’ 1967ம் ஆண்டு வெளியிட்டது.) இத்தனைக்குப் பிறகும் இந்த நதிகள் களவு போய்விட்டனவே என்று அடிக்கடி கூறி வேதனைப்படுவார் டி.வி.ஆர்.,
 

 

உங்கள் குளங்கள்

சென்ற 15 தினங்களாகப் பருவ மழை பெய்து கொண்டே இருக்கிறது. எனினும் பல ஏரிகள், குளங்கள் நிரம்பவே இல்லை. ஆனால், நதிகள் மூலமாகத் தண்ணீர் கடலுக்குள் போய்       விடுகிறது. ஏரிகளின் கால்வாய்கள் தூர்ந்து போனதும், குளங்கள் சரியாகப் பராமரிக்கப்படாததும் இவை நிரம்பாததற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இது விஷயமாக உங்கள் ஊர் குளங்களின் நிலைமை பற்றி விவரித்து எழுதினால் அவற்றை "தினமலர்' பிரசுரித்து அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வாய்ப்பாக இருக்கும்.


22.10.62                                             ஆசிரியர்

- இவ்வாறு ஒரு வேண்டுகோளை ‘தினமலர்’ அக்., 22, ’62 இத ழில் வெளியிட்டதுடன் நில்லாது, தமது நிருபர்களை அழைத்து இதுபற்றி டி.வி.ஆர்., விவரித்தார்:


இந்தக் குளங்கள், ஏரிகள், வாய்க்கால்கள் இவற்றுடன் பின்னப் பட்டே நம்முடைய வாழ்க்கை இருக்கிறது. இந்தியாவில் வெள்ளத் தடுப்பு இலாகா என்று ஒன்று இருக்கிறது. பல கோடிப் பணம் செலவு செய்கிறது. எந்த வெள்ளத்தை இந்த இலாகா எப்போது தடுத்தது . . . அதற்கான திட்டமும் கூடத் தரவில்லை. உண்மையில் இந்த இலாகா, வெள்ளம் வந்த பின்னர் நிவாரணப் பணிகளை மேற்கொள்கிறது. இதற்கு பெயர் வெள்ளத் தடுப்பா . . . தாமிரபரணியில் வெள்ளம் எவ்வளவோ போய் கடலில் வீணாகிறது. பெரிய ஏரிகள் உருவாக்கி, வெள்ளக் காலத்தில் அந்த நீரைத் தேக்கினால் நிலத்தடி நீராவது கூடுமல்லவா? காட்டாறுகளில் வெள்ளம் கொஞ்சமா போகிறது? இதைக் கட்டுப்படுத்தாவிட்டால் வருங்கால சந்ததியினர் குடிநீருக்கே சங்கடப்படப் போகின்றனர்.


கிராமங்களில் குளங்கள் உள்ளன. அவை பராமரிப்பே இல்லாமல் மேடுதட்டிப் போயுள்ளன. குள ஆக்கிரமிப்புகளுக்குக் கணக்கே இல்லை. நீர் பிடிப்புக் கணக்கெல்லாம் குளம் வெட்டிய காலக் கணக்கு. இன்றைக்கு இந்த மேட்டுக்குளத்தில் தண்ணீர் தங்குவதே இல்லை. இதற்கு மீண்டும் ஒரு சர்வே எடுக்க வேண்டும். குளங்கள் ஆழப்படுத்துவது கிடையவே கிடையாது. கரையை உயர்த்துவதுதான் நடக்கிறது. இது பலனற்றது. ஆக்கிமிப்புகளை அகற்ற ரெவன்யூ இலாகா, நீர்ப்பாசன இலாகா, போலீஸ் மூவரும் இணைந்து செயல் பட்டால்தான் முடியும். இந்த மூன்று பேரையும ஒன்றுபடுத்தி வேலை செய்ய வைப்பது யார்? நிலத்தடி நீர் வெகுமாகக் குறைந்துகொண்டே போகிறது. மலைகளில் காடுகள் அழிப்பதால் பருவமழை ஒழுங்காகப் பெய்வதில்லை. ஆகவே, நமது ஜீவாதாரமான குளங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் ஒரு வரலாறு தேவை என்று நிருபர்களிடம் கூறினார்.


‘தினமலர்’ இதழில் பின்னர், ‘நமது குளங்கள்’ கட்டுரைத் தொடராக வெளிவந்தது. அன்றைய பொதுபணித்துறை அமைச்சர் இராமையா இவற்றை ஒழுங்காகப் படித்து அநேகமாக எல்லாக் குளங்களையும் நேரில் வந்து பார்த்தார். இன்ஜினியர்களின் திட்டங்களையும் வாங் கினார். எல்லாம் மாநிலச் செயலகத்திலும், பொதுப் பணித்துறை இலாகாவிடமும் நீண்ட துயில் கொண்டுதான் இருக்கின்றன.குடிநீர்ப் பிரச்னை

விவசாயத்திற்கான குளப் பிரச்னைக்காக மட்டுமல்ல . . . கிராம, நகரக் குடிநீர்ப் பிரச்னைகளில் டி.வி.ஆர்., பெரும் அக்கறை காட்டினார். பல வருடங்கள் எழுதி, குடிநீர்க்கு அவதிக்குட்பட்ட நகர்களான கோவில்பட்டி, திண்டுக்கல் இங்கெல்லாம் நிரந்தரமான குடிநீர்த் திட்டம் உருவாகத் ‘தினமலர்’ காரணமாக இருந்தது. குடிநீர்ப் பிரச்னை, ‘தினமலர்’ இதழின் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில், ‘தினமலர்’ இதழ்களில் நெடுக, பெரிது பெரிதான செய்திகள், கட்டுரைகளாக இதனைப் பார்க்க முடிகிறது.

கடற் செல்வங்களைக் காப்பாற்றுவோம்

மிக நீண்ட கடற்கரையைக் கொண்டது (பிரிவினையாகாத பழைய) திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களாகும். முக்கடலும் முழங்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த டி.வி.ஆருக்கு இந்தக் கடற்செல்வத்தை ஒழுங்காகப் பயன்படுத்தினால், இந்த மாவட்டங்களில் பெரிய பொருளாதார வளர்ச்சி கிட்டுமே என்ற சிந்தனை எப்போதுமே இருந்தது. பெரிய துறைமுகமாகத் துபத்துக்குடி உருவாக, பல காலம் முயன்று வெற்றி பெற்ற பெருமை அவருக்கும், ‘தினமலர்’ பத்திரிகைக்கும் உண்டு. வரலாற்று ரீதியில் துபத்துக்குடித் துறைமுகம் மிகவும் புகழ்பெற்றிருந்தது என்பது அவரது எண்ணத்திற்கு உரமூட்டியதில் வியப்பில்லை. பெரிய துறைமுகங்கள் மட்டுமல்ல, சில துறைமுகங்கள், குறிப்பாக, மீன்பிடித் துறைமுகங்கள், பல உருவாக வேண்டும் என்று அவர் எப்போதும் வற்புறுத்தி வந்துள்ளார். மேலும் கடல் சீற்றத்தால் அடிக்கடி அலைக்கழிக்கப்பட்டு நிகழும் பெரும் சேதங்களைக் கன்னியாகுமரி மாவட்டத்தில் தடுத்தே ஆக வேண்டும் எனப் பலமுறை அவர் எழுதியதுண்டு.


கடல், கடல் விவசாயம், சிறிய துறைமுகங்கள் உருவாக்கப்படுதல், மீன்பிடித் தொழிலை நவீனமயமாக்கி அன்னியச் செலவாணியைப் பெற்று, மாவட்டப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் ஆகிய துறைகள் பற்றி அவருக்கு விரிவான சிந்தனை இருந்தது. அதைத் தொடர்ந்து வலியுறுத்தவும் அவர் தயங்கியதில்லை. அதுபோலக் கடற்கரை வாழ் மீனவர்கள் வாழ்க்கை மிக மோசமாக உள்ளது. அவர்கள் போதுமான அளவு கவனிக்கப்பட்டுக் கல்வி, சுகாதாரம், தொழில் உத்திரவாதம், பாதுகாப்பு, நல்ல குடியிருப்பு வசதி இவை செய்து தரப்படாததால் என்றைக்கும் எடுப்பார் கைப்பிள்ளையாக வாழ்ந்து, அவர்களால் நாட்டுக்கு வரவேண்டிய செல்வம் வராமலே போகிறது. அவர்கள் வறுமையில் வாழ்ந்து, நாட்டையும் உயர்த்த வழியில்லாமல் இருக்கிறார்களே என அவர் வேதனைப்பட்டார்.


‘தினமலர்’ திருவனந்தபுரத்தில் தொடங்கிய உடனே இந்த எண்ணத் தைப் பிரதிபலித்திருப்பதை நாம் காண முடிகிறது. 1952ம் ஆண்டு ஏப்ரலிலேயே கன்னியாகுமரி மாவட்டத்தில் லீபுரம், சின்ன முட்டம் ஆகியவை சிறிய துறைமுகங்களாக உருவாக்கப்பட வேண்டும் என்பதைத் தனது தலையங்கங்கள் மூலம் எடுத்துக் காட்டி உள்ளார். அதை அடுத்து, ‘கடல் செல்வம்’ பற்றித் தொடர்ந்து அவரது கருத்துக்களைத் ‘தினமலர்’ நெடுக நம்மால் காண முடிகிறது. திருநெல்வேலி மாவட்டத்திற்கு வந்த பின் இந்தக் குரலைப் பலமாகத் ‘தினமலர்’ எழுப்பத் தொடங்கியது.துறைமுகங்கள் பற்றி தொடர்ந்து அரசின் கவனத்திற்கு, ‘தினமலர்’ கொண்டு வந்ததன் காரணமாக, 1965ல் சட்டமன்றத்தில் அதன் எதிரொலிகள் கேட்கத் தொடங்கின. இதன் பலனாக நான்காவது திட்ட காலத்தில் ராஜ்ய செயற்குழு, துறைமுக அபிவிருத்திக்காகப் பணம் ஒதுக்க முன் வந்தது. இதன் அடிப்படையில் துபத்துக்குடிக்கு, 31 லட்சம், குளச்சலுக்கு, ஒரு லட்சத்து 50 ஆயிரமும், வேப்ப லோடைக்கு, 27 லட்சத்து 50 ஆயிரம், புன்னக்காயலுக்கு, ஒரு லட்சத்து 30 ஆயிரமும், குலசேகரன்பட்டினத்திற்கு, 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என்று நிதி ஒதுக்கியது.1965 வரை துபத்துக்குடித் துறைமுக அபிவிருத்திக்காக 2 கோடியே 35 லட்ச ரூபாய் செலவிடப் பட்டிருந்தது.தூத்துக்குடி ஆழ்கடல் துறைமுகம்

திருநெல்வேலிக்கு வந்த பின், ‘தினமலர்’ எடுத்துக்கொண்ட இரண்டு பெரிய பிரச்னைகளில் ஒன்று, துபத்துக்குடி ஆழ்கடல் துறைமுகம்; மற்றொன்று சேதுசமுத்திரத் திட்டம். துபத்துக்குடித் துறைமுகம் அப்படி ஒன்றும் லேசில் வந்துவிடவில்லை. அதற்கு மிக விரிவான வரலாறே உண்டு. சுருக்கமாகக் கூறிவிடுகிறோம் . . . 1957 நவம்பரில் சட்ட மன்றத்தில் அன்றைய மராமத்து மந்திரி கக்கனிடம், திருநெல்வேலி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சட்டநாதன் இதுபற்றிக் கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர், ‘துபத்துக்குடி துறைமுகத் திட்டத்திற்கு முன் பாத்தியதை அளிக்கப்படும்’ என்று உறுதி கூறினார். தனது பதிலில் சேதுசமுத்திரத் திட்டம் முடிவான பின்னரே துபத்துக்குடி கவனிக்கப்படும் என்றும் கூறினார். சேதுசமுத்திரத் திட்டம் அப்போது முன்னணியில் இருந்தது என்பதைக் கவனிக்க வேண்டும்.

முதன் மந்திரி காமராஜரும், உள்நாட்டு விவகார மந்திரி பக்த வத்சலமும், 1961 ஜனவரியில் டில்லி சென்று தேசிய அபிவிருத்திக் கவுன்சிலில் இத்திட்டத்தை வலியுறுத்தினர். அதே ஆண்டு ஏப்ரலில், மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில், துபத்துக்குடி சேர்க்கப்பட்டுவிட்டதாக லோக்சபாவில் அறிவிக்கப் பட்டது. கப்பல்துறை மந்திரி ராஜ்பகதுபர், 1963ல் துபத்துக்குடி வந்தபோது, துறைமுக வேலை ஐந்து ஆண்டுகளில் முடியும் என்றார். அவர் இதுபற்றி விளக்குகையில், ‘இதற்காக 14 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது; 1967க்குள் வேலைகள் அனைத்தும் முடியும்’ என்றும் உறுதி கூறினார்.


துறைமுக வேலைகளை 1964ல், 15 பேர் கொண்ட எம்.பி.,க்கள் குழு பார்வையிட்டது. 1964 ஆகஸ்டுக்குள் இதற்கான இரயில் பாதை வேலைகள் அனைத்தும் முடிந்தன. துபத்துக்குடித் துறைமுகத் திட்ட வேலையைப் பிரதமர் லால் பகதுவர் சாஸ்திரி, 15 கோடி ரூபாய் செலவில் நவ., 6, ’64ல் தொடங்கி வைத்தார்.
 


துறைமுக வேலை 1967ல் திடீரென்று நிறுத்தப்பட்டதாக தகவல் வந்தது. ‘தினமலர்’ இப்போது மிகச் சுறுசுறுப்பாகத் தனது வேலைகளை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் வந்தது. பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், வர்த்தக சபைகள், தொழில் அதிபர்கள், பொதுநல அரசியல் சார்பு ஸ்தாபனங்கள் போன்றவற்றைத் தினசரி அணுகி, இதன் அவசியத்தை வற்புறுத்தி ஏராளமான செய்திகளை வெளியிட்டுப் பிரச்னையைச் சூடு பிடிக்கச் செய்தது.
தமிழக அரசுக்குத் துபத்துக்குடி பெரும் பிரச்னையாக வரவே, பிரதமர் இந்திராவைக் கண்டு விவாதித்தனர். ‘எக்காரணம் கொண்டும் திட்டம் கைவிடப்பட மாட்டாது’ என்று இந்திரா அறிவித்தார். இத்திட்டத்திற்காக 24 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அன்றைய மத்திய நீர்பாசனத்துறை அமைச்சர் டாக்டர் கே.எல்.ராவ் பார்லி மென்டில், 1967ல் அறிவித்தார். (இந்தத் திட்டத்தை நிறைவேற்ற டாக்டர் ராவ் முழு முயற்சியை எடுத்துக்கொண்டார். அவர் இதற்காகப் பட்ட பாடுகள் ஏராளம். இவற்றை எல்லாம் விரிவாக, ‘தினமலர்’ இதழ்களில் பார்க்க முடிகிறது.)


‘பொருளாதாரத்தில் லாபமில்லாத திட்டம் இது’ என, 1968ல் நிபுணர்கள் குழு தள்ளுபடி செய்த திட்டத்திற்கு, எத்தனை விதமான யுக்திகளைக் கையாண்டு, தாம் உயிர் ஊட்டிய விவரங்களை, டாக்டர் ராவ் கூறினார். திட்டம் முடிந்தாலும், உண்மையில் லாபகரமாகச் செயல்பட, இப்பகுதியில் ஏராளமான தொழில்கள் தொடங்கப்பட வேண்டும் என ராவ் வேண்டுகோளும் விடுத்தார். துபத்துக்குடியைச் சுற்றி என்னென்ன தொழில்கள் தொடங்க வாய்ப்புண்டு என ஆராய்ந்து, ‘தினமலர்’ தொடர்ந்து எழுதி வந்தது.


நேரு, லால்பகதுபர் சாஸ்திரி, இந்திரா ஆகிய மூன்று பிரதமர்களின் ஆதரவில் திட்டம் பூர்த்தியானது. மத்திய அமைச்சர்களான டி.டி.கே., டாக்டர் சுப்பராயன், டாக்டர் ராவ் இவர்களது விடாமுயற்சியும், தமிழக அரசின் சார்பில் முதல்வர் காமராஜர், பக்தவத்சலம், வெங்கட்ராமன், இவர்களுடன் துபத்துக்குடி மக்களது விடா முயற்சியும், ஒரு பெரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தை நிறைவேற்றத் துணை இருந்தன. இதற்காக, 20 ஆண்டுகள், தினமலர் வெளியிட்ட செய்திகள், தலையங்கங்கள், கட்டுரைகள் ஏராளமானவை.


சேது சமுத்திரத் திட்டம்

ஒரு தலைமுறைக்கு முன் பேசப்பட்டுக் கவனிக்கப்பட்டு, இடையில் ஏதோ ஒரு காரணத்தால் சில காலம் ஒத்தி வைக்கப்பட்டு, இன்றைக் குப் புதிய ஒரு திட்டம் போல் பேசப்படும் பெருமை படைத்தது தான் இந்த சேது சமுத்திரத் திட்டம். சேது சமுத்திரத் திட்டம் பற்றி ஆராயுமாறு, சர்.ஏ.இராமசாமி முதலியாரைத் தலைவராகக் கொண்ட ஒரு குழுவை இந்திய அரசாங்கம் நியமித்து, அக்குழு பாக் ஜலசந்தியை ஆழப்படுத்தலாம் என்று சிபாரிசு செய்தது. வங்காள விரிகுடாவை, மன்னார் வளைகுடா வுடன் இணைக்க இராமநாதபுரத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் துபரத்தில் இருக்கும் உச்சிப்புளி வழியாக ஒரு கால்வாய் தோண்ட வேண்டும். இதற்கு 10 கோடி ரூபாய் செலவாகும் என்று சர்.ஏ.இராமசாமி முதலியார் தலைமையிலான ஆய்வுக்குழு அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது.


முதன் முதலில் சர்.ஏ.இராமசாமி முதலியார் இதற்கான திட்டத்தை 10 கோடி ரூபாயில் தயாரித்து வெளியிட்டார்.
பின், கடல் துறையில் மிக அனுபவம் வாய்ந்த பிரிட்டிஷ் இன்ஜினியர்கள் உதவியை அரசு நாடியது. அவர்கள் ஆய்வு நடத்தி 30 கோடி ரூபாய்க்கு ஒரு திட்டம் தயாரித்து தந்தனர். அவர்கள் கடலுக்கடியில் பெரும் பாறைகள் இருக்கும் என்றே, 30 கோடி ரூபாய்க்குத் திட்டமிட்டனர். அவர்கள் சில விஷயங்களை மிகவும் உற்சாகமாக வலியுறுத்தி உள்ளனர். இதற்கு முன்பே திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்குமானால், கோடிக்கணக்கில் இலாபம் கிடைத்திருக்கும். இதுவரை 4,700 கப்பல்கள் இதன் வழியே போயிருக்கும். இதன் மூலம் 50 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும் என்றும் கூறி இருந்தனர்.


மேலும், 21 கோடி ரூபாய் செலவு செய்து, இதற்குள், 50 கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்று இருக்கலாமே என்று, ‘தினமலர்’ எழுதியது. இதற்கான வரைபடங்கள், பனாமாக் கால்வாய் அமைப்பு, அதன் அமைப்பு முறையில் உள்ள பாதகங்கள், அதை இன்றைக்கு நவீனமாக எப்படி மாற்றி அமைக்கலாம் என்றெல்லாம் தொடர்ந்து எழுதியது. அன்றையப் பிரதமர் லால் பகதுபர் சாஸ்திரி, 1971ல் திட்டம் பயன்படுத்தத் தகுதியாகிவிடும் என பார்லிமெண்டில் அறிவித்தார். இத்திட்டத்தில் மிக ஆர்வம் காட்டியவர் அன்றைய நிதி அமைச்சர் டி.டி.கே., என்பதை இங்குக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. டி.டி.கே.,யைப் பொருத்தவரை, துபத்துக்குடியை விட, சேது சமுத்திரத் திட்டமே முக்கியமானது, அவசரமானது, முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியது என்பதை இரயில்வே முயற்சியில் ஈடுபட்டிருந்த டி.வி.ஆரிடம் கூறி உள்ளார்.


தமிழக மராமத்து மந்திரி இராமையா, 1963ம் ஆண்டு, இந்தத் திட்டப் பகுதியைப் பார்வையிட்டுப் பின்னர், ‘தினமலர்’ நிருபரிடம், ‘மண்டபத்திற்கு மேற்கே 8.5 மைல் துபரத்தில், பிரப்பன் வரிசைக்கும், புதுமடத்திற்கும் இடையே இக்கால்வாய் வெட்டப்படும்’ என்று கூறினார். மொத்தச் செலவு 19 கோடி ரூபாய் ஆகும் என மேலும் அவர் கூறினார்.
துபத்துக்குடிக்கு 1964ல் வந்தபோது, கப்பல் போக்குவரத்துத் தலைவர் ரகுநாதரெட்டி எம்.பி., சேது சமுத்திரத் திட்டம் உருவானால் துபத்துக்குடி சர்வதேசத் துறைமுகமாக மாறிவிடும் என்றார். சேது சமுத்திரத் திட்டம் என்பதுதான் என்ன . . . ‘தினமலர்’ தனது ஆய்வில் கூறி இருந்த சில முக்கியத்துவங்கள் . . .  துபத்துக்குடி துறைமுகத்திற்கு சிபாரிசு செய்த சா.பிரஸ்டோ என்ற ஆங்கில இன்ஜினியரே இதற்கும் சிபாரிசு செய்தவர்.


தற்சமயம் பம்பாய், கொச்சித் துறைமுகங்களில் இருந்து, சென்னை, விசாகப்பட்டினம், கல்கத்தா செல்லும் கப்பல்கள், இலங்கையை சுற்றிச் செல்ல வேண்டியது உள்ளது. இதற்கு இராமேஸ்வரம் தீவும், ஆடம் பிரிட்ஜ் என்று கூறப்படும் கல்திட்டுகளும் காரண மாகும். மு துபத்துக்குடியில் இருந்து இலங்கையைச் சுற்றி, சென்னை செல்ல தற்போது 750 மைல்களாகிறது. சேது திட்டம் வந்தால் 316 மைல்கள்தான் ஆகும். முதன் மந்திரி பக்தவத்சலம் 1964ம் ஆண்டு இதற்காகும் செலவுத் தொகையைத் தாம் உடனே அனுமதிப்பதாக, நிதி அமைச்சர் டி.டி.கே.,யிடம் உறுதி கூறினார். வேறு புதிய தகவல்களும் 1965ல் கிடைத்தன. இக்கால்வாயில் தோண்டி எடுக்கப்படும் மண்ணும், கல்லும் இராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி கடற்கரையில் கடல் அரிப்பைத் தடுக்கப் பாதுகாப்புக்காகப் போட உத்தேசிக்கப்பட்டிருப்ப தாகவும் அறிவிக்கப்பட்டது.


அதே ஆண்டு பிப்ரவரியில், இலங்கைப் பொருளாதார நிபுணர்கள், சேது சமுத்திரத் திட்டம் வந்தால் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ந்து விடும் என்று அலறினர். இத்தனைத் தகவல்களும் 1966 டிசம்பர் வரை நம்மால் சேகரிக்க முடிந்தது. சாத்தியமான, பொருளாதார வளம் பெருக்க வாய்ப்பான, பாதுகாப்பிற்கு அவசியமான, 1971ல் முடிய வேண்டிய திட்டம், இன்றைக்கும் செயல்படாமல் இருப்பது ஆச்சரியம் இல்லையா?

தொழில் மயமாக வேண்டும்

சுதந்திரம் பெற்ற நாடு தொழில் துறையில் விரைவாக முன்னேற வேண்டும். நாட்டில் கிடைக்கும் இயற்கைச் செல்வங்களைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றைக் கொண்டு பல தொழிற்சாலைகள் உருவாக்கப் பட வேண்டும். கல்வியைப் பொறுத்தவரை தொழிற்கல்விக்கே முக்கியத்துவம் தர அரசு முன்வர வேண்டும். பெருகி வரும் மக்கள் தொகைக்கு இது ஒன்றே வேலை வாய்ப்பு வழங்கவும், நாட்டின் பொருளாதாரம் உயரவும் வழியாகும் என்று டி.வி.ஆர்., உறுதியுடன் கூறி வந்துள்ளார்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் 1963க்கு முன்பே கூட்டுறவு நூற் பாலை ஒன்றுக்கான முயற்சியைத் ‘தினமலர்’ மேற்கொண்டது. இந்த முயற்சியின் காரணமாகக் குமரி மாவட்ட எல்லையில் ஒரு நுவற்பாலை உருவானது.மணவாளக்குறிச்சியில் கிடைக்கும் உலோக மண் (இல்மனைட்) பற்றித் தொடர்ந்து எழுதியதுடன், இம்மணல் திருச்செந்துவர் வரை பரவி இருப்பதையும் குறிப்பிட்டு இதை விஸ்தரிக்கத் ‘தினமலர்’ கேட்டுக்கொண்டது.பெரிய தொழில்கள் மட்டுமல்லாது, சிறு தொழில்கள் குடிசைத் தொழில்களுக்குப் பக்க பலமாக இருந்தது, ‘தினமலர்’தான் என்பதை குடிசைத் தொழில் அதிபர்கள் இன்றும் கூறுவதைக் கேட்க முடியும். குறிப்பாக தீப்பெட்டித் தொழிலின் திடீர் திடீர் நெருக்கடிகளைத் தவிர்க்க அவ்வப்போது, ‘தினமலர்’ வரிந்து கட்டி போராடி வந்துள்ளதை, ‘தினமலர்’ இதழ்களில் நெடுக காணலாம்.
 


நெல்லையைக் குலுக்கிய கலவரம்

திருநெல்வேலி நகரை குலுக்கிய ஒரு பெரும் கலவரம் டிச., 21, ’72 முதல் தொடர்ந்து சில நாட்கள் நடைபெற்றுள்ளது. நெல்லை நகரைப் பொறுத்தவரை சுதந்திரத்திற்குப் பின், இது போல ஒரு சம்பவம் நடைபெற்றதில்லை.வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சுப்பிரமணிய சிவாவும் மார்ச் 12, 1908ல் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 13ம் தேதி நெல்லையில் ஒரு பெரும் கலவரம் நடைபெற்றது. கூடுமானவரை 1908லும், 1972லும் நடைபெற்றவை ஒரே மாதிரியான கலவரங்களே. இரண்டுமே தமிழகத்தைக் கொந்தளிக்க வைத்தவை. முதல் கலவரத்தில் தேசிய உணர்வு காணப்படுகிறது. இரண்டாவது கலவரத்தில் காரணம் எதுவுமே இல்லை. போலீஸ் அதிகாரியின் ஆணவம் தான் காரணமாக இருந்தது. முதல் கலவரத்தைத் துணிந்து பதிவுசெய்து முழு விபரங்களையும் பாரதி தனது, ‘இந்தியா’ பத்திரிகை யில் வெளியிட்டார். இரண்டாவது கலவரத்தில் செய்திகளை முழுமையாக வெளியிட்டுப் பெரும் பாராட்டுக்கும், இன்னலுக்கும் ஆட்பட்டது, ‘தினமலர்’ மட்டுமே.
 


அந்தக் கலவரம் பற்றிய "தினமலர்' செய்திக் குறிப்பின் சுருக்கம்:

நவம்பர் 20ம் தேதி அன்று சவேரியார் கல்லுபரியின் இரசாயனப் பேராசிரியர் சீனிவாசன் என்பவரைப் போலீசார் வீடு புகுந்து தாக்கி, அவரது இரண்டு சகோதரர்களையும் அடித்து உதைத்து, மூவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்குத் தெரு வழியாக இழுத்துச் சென்றனர். இந்தச் சம்பவமே மறுநாள் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 21ம் தேதி, ‘தினமலர்’ இதழில் முதல் பக்கம் முழுவதும் இந்தச் செய்திகள் பரபரப்பாகப் படங்களுடன் வெளியாகி உள்ளது. பேனர் தலைப்பே அதுதான்.


கல்லுபரி ஆசிரியரை அடித்து இழுத்துச் சென்றார்கள்
போலீஸ் ஸ்டேஷன் முன் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
போலீசார் இருவர் சஸ்பெண்ட்


நடந்தது என்ன? பாளை இன்ஸ்பெக்டர் ராஜசேகரனது இரண்டு மகள்களின் உடைகள் பற்றிப் பேராசிரியர் கேலி பேசியதாக வீட்டில் கூற, குழந்தைகளின் தாயார் அதை உண்மையாகக் கருதி, வீட்டுக் காவல் போலீசாரை ஏவ, அவர் பேராசிரியரை உதைத்து இழுத்துப் போயிருக்கிறார். அடித்த அடியில் பேராசிரியர் பல் உடைபட்டது. பேராசிரியரது சகோதரர்கள், ‘ஏன்’ என்று கேட்க, அவர்களுக்கும் சரியான அடி, உதை. சம்பவம் நடந்த பின், இதைக் கேள்விப்பட்ட இன்ஸ்பெக்டரும் நிதானம் தவறி, ஸ்டேஷனில் பேராசிரியரை மேலும் அடித்துத் தீர்த்துள்ளார். பேராசியருக்காக வாதாடிய வழக்கறிஞர் பாளை சண்முகம் இந்தத் தகவல்களைத் தற்போது கூறினார்; செய்தியிலும் அதுவே காணப்படுகிறது.


மறுநாள் நகரின் எல்லாக் கல்லுபரிகளும், பள்ளிகளும் அடைக்கப் பட்டன. ஒரே பதற்றம். மாணவர்கள் கறுப்புச் சின்னமணிந்து ஊர்வலமாகப் போலீஸ் ஸ்டேஷனுக்கு நியாயம் கேட்கச் சென்றனர். எஸ்.பி., குருவையா ஸ்தலத்திற்கு வந்து சமாதானம் பேசினார்; பயன் இல்லை. மாணவர்கள் மீது போலீசார் கல் வீசினார்கள். கலவரம் தொடர்ந்தது. இதன் காரணமாக இரண்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.  அடுத்த நாள், கோரிக்கை மனுவுடன் கலெக்டர் அலுவலகம் நோக்கி மாணவர்கள் பெரும் ஊர்வலமாகச் சென்றனர். மனுவைக் கொடுக்க விடாமல் மாணவர்களைப் போலீசார் விரட்டியதில் லுபர்து நாதன் என்ற கல்லுபரி மாணவர் தப்பித்துத் தாமிரபரணி ஆற்றுப் பாலத்திலிருந்து விழுந்து நீச்சல் தெரிந்திருந்தும், சுழலில் சிக்கியதால் மாண்டார்.


போராட்ட வேகம் அதிகமானது.


காலை 10 மணி முதல் நகரில் முழுக் கடை அடைப்பு, போலீஸ் தடியடி, கண்ணீர்ப் புகை வீச்சு, பக்ஷாட்டில் 14 வயது மாணவன் சொக்கலிங்கம் காயம். போலீசார் எங்கு எப்போது யாரைத் தாக்குவார்களோ எனப் பயந்து சாலைகள் அனைத்தும் பெரும் கற்கள், டின்களை வைத்துத் தடை உண்டாக்கினர். மக்களைக் கண்டு போலீசார் பயந்தனர். அவர்கள் வீடு செல்ல முடியாத நிலை. மக்களுக்கோ போலீசைக் கண்டு பயம். இந்த விவரங்களைப் படங் களுடன் பெரிய அளவில் பேனர் செய்தியாகத் ‘தினமலர்’ வெளியிட்டது.


லுபர்து நாதன் சேலத்தைச் சேர்ந்தவர். அவரது உடல் சேலம் சென்றது. சேலத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  மக்கள் அஞ்சலி செலுத்தினர். கண்டனக் கூட்டம் நடைபெற்றது. நாகர்கோவிலில் பதற்ற நிலை. திருச்சி, மதுரை மட்டுமல்லாது தமிழகமெங்கும் கொந்தளிப்பு. துப்பாக்கி சூட்டில் தலைமை போலீசார் ஏ.ஆர்.சங்கர பாண்டியன் காயமடைந்தார். துப்பாக்கியால் கலவரக்காரர்களைச் சுட்டதாகப் போலீசார் கூறினர். உண்மையில் தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டி, அனுமதி பெறாமலே துப்பாக்கிகள் உள்ள கிடங்கில் போலீசார் துப்பாக்கிகளை அவசர அவசரமாக எடுத்தனர். அதில் ஒரு துப்பாக்கி வெடித்து போலீசாருக்குக் காயம் ஏற்பட்டதாகப் பின்னர் துப்பறிபவர்கள் கண்டுபிடித்தனர். தி.மு.க., வில் இருந்து அப்போதுதான் வெளியேறிய எம்.ஜி.ஆர்., இதைப் பலமாக கண்டித்து அறிக்கை விட்டார். இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரமும் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டார். முதல் அமைச்சர் கருணாநிதி வீட்டிற்கு 10 ஆயிரம் மாணவர்கள் ஊர்வலமாகச் செல்ல சென்னையில் அறிவிக்கப்பட்டது.


முதல்வர் வழக்கம் போல பேராசிரியர், மற்றும் போலீசார் இருவர் மீதும் குற்றம் இருப்பது போல் ஒரு அறிக்கை விட, பிரச்னை மேலும் வலுத்தது. பாளையில் பெரும் பதற்றம். இரண்டு மூன்று நாட்கள் கடை அடைப்பு. மக்கள் வெளியே நடமாட முடியவில்லை. போலீசார் வெளியில் தலைகாட்ட அஞ்சினர். இதில், ‘தினமலர்’ நடுநிலையுடன் போலீசார், மாணவர்கள், சர்வ கட்சியினர் செய்திகளை முழுமையாகத் தனித்தனி தலைப்புடன் பிரசுரிக்கவே செய்திருந்தது. இறந்த போலீசார் படம், அவரது வாழ்க்கை வரலாறு, அவரது மனைவிக்கு ஐ.ஜி., அருள் கொடுத்த 4,000 ரூபாய் உதவித் தொகை ஆகியவற்றைப் படத்துடன் வெளியிட்டே இருந்தது. (குண்டு பாய்ந்த ஏட்டு மரணம் அடைந்துவிட்டார்).

பாளை சண்முகம்

பிரபல கிரிமினல் வழக்கறிஞர் சண்முகம் பாளையங் கோட்டையில் பிப்., 17, '22ல் பிறந்தார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டவர். 1949ல் இந்திக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அப்போது பாதுகாப்புச் சட்டப்படி கைதானவர். தி.மு.க., ஆட்சியில் நான்கு தடவை கைது செய்யப்பட்டார்.

1975ல் மிசாவில் கைது செய்யப்பட்டார்.1983ல் முதல் மக்கள் உரிமைக் கழகத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். இராஜாஜி முதல்வராக இருந்த போது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, கருணாநிதி முதல்வராக இருந்த போது பாளைக் கலவரம், லூர்து நாதன் சாவு ஆகிய பிரபலமான வழக்குகளிலும் மற்றும் தமிழகத்தில் நடைபெற்ற அனைத்து நீதி விசாரணைகளிலும் மக்களுக்காக வாதாடி உள்ளார்.

இந்த இயக்கத்தில் வக்கீலாக மட்டுமல்லாமல், சர்வகட்சிக் குழுவின் அமைப்பாளராகவும் செயல்பட்ட பாளை சண்முகம் செய்தியில் காணப்படாத விவரங்களைக் கூறினார் . . .


எந்தக் குற்றமும் செய்யாத பேராசிரியரை நடுத்தெருவில் அடித்து இழுத்துச் சென்றனர். போலீசார், சிறு பிள்ளைகள் சொன்னதை உண்மை என்று எடுத்தது முதல் தவறு. பின்னர் இதை ஆயுதப் போலீசார் தங்களின் கவுரவப் பிரச்சனையாகக் கருதி களத்தில் இறங்கினர். ‘தினமலர்’ மட்டுமே முழு விவரங்களையும் மிக்க நடுநிலையில் பிரசுரித்தது. இதைத் தமிழகம் முழுவதும் பெரும் பிரச்னையாக்கியது, ‘தினமலர்’தான் என்ற வகையில் போலீசாருக்கு பயங்கரக் கோபம்.


சட்டம் ஒழுங்கு முழுவதும் பாதிக்கப்பட்டது. நானும் (பாளை சண்முகம்), அன்றைய எம்.எல்.ஏ., கே.டி.கோசல்ராமும் மாலையில் லைட்னிங் கால் போட்டு, ஐ.ஜி.அருளிடம் உடனே அந்த இன்ஸ்பெக் டரை சஸ்பெண்ட் செய்யச் சொல்லி கேட்டோம். விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக அவர் போனில் கூறினார். நடவடிக்கை வரும் வரை மறுநாள் காலை 4 மணி முதல், போலீஸ் ஸ்டேஷன் முன் நாங்கள் உண்ணாவிரதமிருப்பதாகக் கூறினோம். நிலைமை மேலும் மோசமாகும் என்றுணர்ந்த அருள், உடனே விசாரணை நடத்தி இன்ஸ்பெக்டரை இரவு 3 மணிக்கே சஸ்பெண்ட் செய்து, எஸ்.பி., வழியாக எனக்கு தகவல் கூறினார். நாங்கள், ‘தினமலர்’ இதழில் சஸ்பெண்ட் செய்தி வந்தால் மட்டுமே நம்புவோம் என்றோம். அதிகாலை, ‘தினமலர்’ செய்தி வெளியிட்டது; உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டது.


இதனால் ஆத்திரமடைந்த ஆயுதப் போலீசார் என் வீட்டில் முற்றுகையிட்டு முன் கதவை அடித்து நொறுக்கினார். வீட்டிற்குள் வராமல், அவர்கள் வேகமாகத் ‘தினமலர்’ அலுவலகத்தைத் தாக்க, மார்ச் செய்தனர். நான் லைட்னிங் கால் மூலம் அருளைத் தொடர்பு கொண்டேன். ‘போலீசார் . . . அதுவும் ஆயுதப் போலீசார், பத்திரிகை ஆபீசை நோக்கி படை எடுப்பதை இங்கிருந்து எப்படி நான் நிறுத்துவேன் . . . நேரம் இல்லையே?’ என்றார்.


‘தினமலர்’ இதழுக்கு எச்சரிக்கைத் தர போன் செய்தேன். இராம சுப்பையரே போனை எடுத்தார். விஷயத்தின் தீவிரத்தைச் சொன்னேன். அப்போது அவர் சொன்னது, என்னை இன்றைக்கும் அதிரச் செய்தது. அவர் பதில் இதுதான் . . .‘கவலைப் படாதீர்கள் சண்முகம் . . . நாம் உண்மையைத்தான் சொன்னோம். கலவரங்கள் நடப்பது நமக்கு என்ன மகிழ்ச்சியா? உண்மையைச் சொன்னதற்காகத் தண்டிக்கப்படுவோமானால் ஏற்க வேண்டியதுதான். நடப்பது நடக்கட்டும். இப்போது அதற்காகக் கவலைப்பட வேண்டாம். பார்த்துக்கொள்கிறேன்’ என்றார். பின்னர் நான் கேள்விப்பட்டது, அலுவலக ஊழியர்கள் அனைவரையுமே உடனே வெளியேற்றிவிட்டு, தான் மட்டும் ஆபீசினுள் தங்கி யிருந்தார் என்பது!


இதற்குள் தகவல் ஆர்.டி.ஓ.,விற்குச் சென்றது. பழைய தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவர் ஆர்.கிருஷ்ணசாமி நாயுடுவின் மகன்தான் ஆர்.டி.ஓ., பெயர் இப்போது எனக்கு நினைவில்லை. அவர் உடனே ஜீப்பை எடுத்து, முருகன்குறிச்சியில் ஆயுதப் போலீசாரைத் தடுத்து, நல்ல வார்த்தைகள் சொல்லி, எப்படியோ திருப்பி அனுப்பி விட்டார். அன்றைக்குத் ‘தினமலர்’ காட்டிய துணிவுகளைப் பற்றி பின்னர் ஒரு தடவை டி.வி.ஆரிடம், ‘இது எப்படி உங்களால் முடிந்தது?’ என்று கேட்டேன். டி.வி.ஆர்.,சிரித்துக்கொண்டே, ‘நாங்கள் திருவனந்த புரத்தில் பட்டம் தாணுப்பிள்ளையிடம் தினசரி இவற்றை அனுபவித்துப் பழகிவிட்டோம். உண்மை எப்போதும் நிலைக்கும்; நம்மைக் காப்பாற்றும் என்பது என் நம்பிக்கை’ என்றார்.


வரலாற்றில் எழுதப்பட வேண்டிய இந்த திருநெல்வேலி கலவரம் பற்றி ஆராயயாராவது முன் வந்தால் 1972,  ‘தினமலர்’ இதழ்களைத் தேடியே ஆக வேண்டும். ஆயுதப் போலீசார் அணிவகுத்து எதிர்த்து நின்ற போதும், துணிந்து தான் ஒருவராக அதை எதிர்கொள்ள நின்ற அந்த மனிதரின் உடல் இரும்பாலா செய்யப்பட்டிருந்தது . . . இது எனக்கு இன்றைக்கும் விடுபடாத புதிராக உள்ளது என்றார் சண்முகம்.Advertisement
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X