புதிய பதிப்புக்கள்


தலைநகர் சென்னையில் ஏப்., 29, ’79ல், ‘தினமலர்’ மலர்ந்தது. இதற்கான விழா இராஜாஜி மண்டபத்தில் நடைபெற்றது. முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர்., சார்பில் முதல் பிரதியை அமைச்சர் வீரப்பன் வெளியிட்டார். அவரிடமிருந்து இந்திரா காங்கிரஸ் தலைவர் கருப்பையா மூப்பனார் பெற்றுக்கொண்டார். பா.இராமச்சந்திரன், பக்தவத்சலம் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டு பேசினர்.

புதுமைகள் நிறைந்த "தினமலர்'

தமிழ்ப் பத்திரிகை உலகில், நவீன ஆப்செட் அச்சு முறையில் வெளிவந்த முதல் நாளிதழ், ‘தினமலர்’ தான். ‘தினமலர்’ தமிழ்ப் பத்திரிகை உலகில் பல புதுமைகளைப் புகுத்தி உள்ளது. 1977ம் ஆண்டிலேயே, தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை, ‘தினமலர்’ அமலாக் கியது. இச்சீர்திருத்தத்தை அரசு புகுத்துவதற்கு முன்பே நடை முறைப்படுத்தியது. புகைப்பட அச்சுக்கோர்க்கும் முறையை 1984ல் கொண்டு வந்ததும், ‘தினமலர்’தான். வாரம் மூன்று புத்தக இணைப்புகளை கொண்டு வந்த தமிழ் நாளிதழ், ‘தினமலர்’ ஒன்று தான். பிறகுதான் இதர நாளிதழ்கள் இம்முறையைப் பின்பற்றின.
 


மதுரையில் "தினமலர்'

சென்னையில், ‘தினமலர்’ தனது மூன்றாவது பதிப்பை வெளியிட்ட பின், டிச., 26, ’80ல் மதுரையில் தனது நான்காவது பதிப்பைத் தொடங்கியது. இதற்காக விழா ஏதும் எடுக்கப்படவில்லை.

ஈரோட்டில் "தினமலர்'

வரலாற்றுச் சிறப்பு மிக்க ஈரோட்டில், ‘தினமலர்’ தனது ஐந்தாவது பதிப்பை மார்ச் 16, ’84ல் வெளியிட்டது. வெளியீட்டு விழா வர வேற்புரையில், ‘தினமலர்’ ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டதாவது . . .


‘தினமலர்’ 1951ல், திருவனந்தபுரத்தில் எங்களது தந்தையாரால் (டி.வி.ஆர்.,) ஆரம்பிக்கப்பட்டது. அப்போது மொழி வழி மாநிலப் போராட்டம் நடந்துகொண்டிருந்தது. எங்கள் தந்தையார் மிகுந்த தமிழ்ப் பற்றுள்ளவர்கள். இளம் வயதில் கன்னியாகுமரி மாவட்டப் பெரும் புலவர் தசாவதானி ஆறுமுகம் பிள்ளையிடம் கல்வி கற்றவர். நாஞ்சில் கவிஞர் தேசிய விநாயகம் பிள்ளையிடம் மிகுந்த நட்பு கொண்டவர். ‘தினமலர்’ பத்திரிகையை தலைமை தாங்கி ஆரம்பித்து வைத்தவரே தமிழ்ப் பேரறிஞர் வையாபுரிப் பிள்ளைதான்! அன்றைக்கு இந்தப் பத்திரிகையைச் நசுக்க முதன்மந்திரி பட்டம் தாணுப்பிள்ளை எல்லாக் கடுமையான வழிகளையும் மேற்கொண்டார். அப்படிப்பட்ட நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்து மக்கள், ‘தினமலர்’ இதழுக்குப் பெரும் ஆதரவு தந்தனர். அம்மாவட்ட மக்களுக்கு எங்கள் வாழ்நாள் முழுவதும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். பின்னர் நாங்கள் திருநெல்வேலிக்கு வந்தோம். திருநெல்வேலி அன்று பின்தங்கிய நிலையில் இருந்தது. பத்திரிகை நடத்த அங்கு எந்த வசதியும் கிடையாது. திருநெல்வேலி மாவட்டத் திற்கு, ‘டெலி பிரின்டர்’ வசதியை முதலில் கொண்டுசென்ற பெருமை எங்களையே சாரும். இதற்காக நாங்கள் பலமுறை டில்லிக்குப் படை எடுத்துள்ளோம். 1966ல் திருச்சியிலும் 1979ம் ஆண்டு சென்னை யிலும், எங்கள் பதிப்புகளைத் தொடங்கினோம்.

தினமலர்’ சரித்திரத்தில், 1969ம் ஆண்டு முதல் 1976ம் ஆண்டு வரை மிக சிக்கலான காலம். அண்ணாதுரை இறந்த பின், புதிய அமைச்சரவை பதவி ஏற்றது. புதிய அமைச்சரவை எந்தவிதமான முன் அறிவிப்பும் கொடுக்காமல், அரசு விளம்பரங்களைத் ‘தினமலர்’ இதழுக்கு நிறுத்தியது. தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் போராடிய பத்திரிக்கையைப் பள்ளிகளிலும், பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களிலும் கூட வாங்கக் கூடாது என்று தடை விதித்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கூட மக்கள், ‘நாங்கள் தருகிறோம்’ என்று முன்வந்து அவர்கள் கொடுத்த சிறிய சிறிய விளம்பரங்களை வைத்து, அவர்கள் கொடுத்த பெருத்த ஆதரவில் பத்திரிகையை நடத்தினோம். அரசு விளம்பரங்கள் இல்லாமல் பத்திரிகையை நடத்த முடியும் என்று அவர்களுக்கு மக்கள் பாடம் கற்றுத் தந்தனர்; ஒன்பது ஆண்டுகள் இவ்வாறு நடத்தி உள்ளோம்.


கொங்கு நாடு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. தமிழகத்தின் சமுதாயச் சீரமைப்புக்கு வித்திட்ட தந்தை பெரியார் பிறந்த இந்த மண் சிறப்புடையது. இங்கு எங்கள் ஐந்தாவது பதிப்பை ஆரம்பிப்பதில் நாங்கள் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம் என்றார்.  விழாவிற்குச் சட்டப் பேரவைத் தலைவர் கே.ராஜாராம் தலைமை தாங்கினார். அமைச்சர் முத்துசாமி முதல் இதழை முதல்வரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
 

எம்.ஜி.ஆரின் ஆசை

ஈரோட்டுப் பதிப்பைத் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., தொடங்கி வைத்துத் தனது நெடுநாள் ஆசை ஒன்றை வெளியிட்டார் . . .


‘தினமலர்’ திருநெல்வேலி பதிப்பை நான் படித்தபோது, ஒரு முறை நான் அந்த நிருபரிடம் இந்தத் ‘தினமலர்’ பதிப்பை சென்னையில் கொண்டு வர வேண்டுமென்றேன். உரிய நண்பரிடம் கேட்டுத் தூண்டி விட்டேன். சென்னையிலிருந்து, ‘தினமலர்’ வெளிவரவேண்டும் என்று ஆசைப்பட்டவர்களில் நானும் ஒருவன். என்னால் செய்ய முடியாததைத் துண்டிவிட்டுச் செய்யச் சொன்னேன். ஏதேதோ துண்டி விடுகிறார்கள். நான் நல்லதைத்தான் தூண்டி விட்டேன். சென்னை விழாவில் நான் கலந்துகொள்ள முடியவில்லை. அது எனது துரதிருஷ்டம்.


சில நேரங்களில் மற்றவர்களிடம் இருந்து எனக்குக் கிடைக்காத தகவல்களை, நான் ‘தினமலர்’ மூலம் தெரிந்து கொண்டதுண்டு. மக்களுக்கும், அரசுக்கும் பாலமாக பத்திரிகை இருக்க வேண்டும். இந்தப் பாலம் உறுதிமிக்க பாலமாக இருக்க வேண்டும். ‘தினமலர்’ நல்ல தமிழில், சீரிய கருத்துக்களைச் சொல்லி மக்களுக்குப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறது. முன்பிருந்த அரசு 1969ல் இருந்து 1976 வரை விளம்பரம் தரவில்லை என்று கிருஷ்ணமூர்த்தி கூறினார். இப்படியும் ஒரு ராஜதந்திரம் இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. ‘விளம்பரத்தை தந்தால் தாருங்கள்; இல்லையென்றால் விட்டுவிடுங்கள். நாங்கள் மக்களுக்குச் சொல்வதைச் சொல்லிக்கொண்டுதான் இருப்போம்’ என்று, ‘தினமலர்’ செயல்படுகிறது.


இதற்கு மலர் என்று பெயர் வைத்தது மிகப் பொருத்தமானதாகும். மலரின் வாசனை வந்தால் துர்நாற்றமின்றி நறுமணம் கமழும். ‘தினமலர்’ இதழில் குழந்தைகள் படக்கதை ஒன்று வருகிறது. அந்தப் படக்கதையை என் வீட்டுக் குழந்தைகளுக்குக் காட்டிப் படிக்க வைக்கிறேன். தொடக்கக் காலத்தில் குழந்தைகளுக்கு வீரம், ஆண்மை, பண்பு, நேர்மை, அன்பு, இணைப்பு, பிணைப்பு, பாசம் ஆகியவற்றை உணர்த்த வேண்டும். ‘தினமலர்’ பத்திரிகை மீது பலருக்குக் கோபம் வருகிறது. நடுப் பக்கத்தில், 10 படங்கள் போட்டுத் ‘தினமலர்’ வருகிறது. ‘இவ்வளவு படங்களுடன் பத்திரிகை வெளியிடுகிறானே பாவி!’ என்று பொறாமைப்படுகிறார்கள். நம்மால் இதுபோலச் செய்ய முடிய வில்லையே என்று கவலைப்படுகிறார்கள்.


ஞாயிறுதோறும் தனி, ‘வாரமலர்’ இணைத்துத் ‘தினமலர்’ தருகிறது. இதனைக் கண்டு பலரும் தனி மலர் தர ஆரம்பித்துள்ளனர். ‘தினமலர்’ தனது பதிப்பை ஈரோட்டுடன் நிறுத்திவிடாமல், மற்ற மாவட்டங்களிலும் வெளியிட வேண்டும். ‘தினமலர்’ ஐந்தாயிரம் பேருக்கு வேலை வாய்ப்புத் தந்துள்ளதைக் கண்டு நான் வாயார, உளமார வாழ்த்துகிறேன்.


எனக்கு ஓர் ஆசை உண்டு. ‘தினமலர்’ நிறுவனர் டி.வி.ஆர்., உடல்நலம் பெற்று ஒரு விழாவில் கலந்துகொள்ள வேண்டும். அவருக்கு நான் மாலை அணிவித்து மகிழ வேண்டும். அமர்ந்தபடியே அவர், ‘வாழ்க’ என்று என்னை வாழ்த்த வேண்டும் என்று விழாவில் தனது ஆசையை வெளிட்டார். உடல்நிலை பாதிக்கப்பட்டதால், ஈரோட்டுப் பதிப்பு தொடக்க விழாவில் டி.வி.ஆர்., கலந்துகொள்ளவில்லை. ஈரோட்டுப் பதிப்பை அடுத்து, டி.வி.ஆர்., அமரரான பின், அவர் வழியில் கடுமையாக உழைத்து, மக்களின் ஆதரவைப் பெற்றுத் ‘தினமலர்’ மேலும் ஐந்து பதிப்புகளைத் தொடங்கியது. புதுச்சேரி - ஏப்., 15, ’91; கோயம்புத்தூர் - டிச., 23, ’92; வேலூர்- டிச., 13, ’93; நாகர்கோவில் - மார்ச் 29, ’96; சேலம் - ஆக., 29, 2000.
 


டி.வி.ஆருடன்
திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி வரை..!

ஒரு தினசரிப் பத்திரிகையைத் திருவனந்தபுரத்தில் தொடங்கி, அவர் இருந்த காலத்திற்குள் ஐந்து பதிப்புகளாக வளர்த்த பெருமை டி.வி.ஆருக்கு உண்டு. அவரிடம் உள்ள அசாதாரணமான நிர்வாகத் திறமை மட்டுமே இதற்குக் காரணமாக இருந்தது. தமிழ்த் தினசரிகளுக்கு வாசகர்களை தயாரிப்பது அவ்வளவு எளிதானதல்ல. கேரளாவைப் போல் தமிழ் நாட்டில் வாசகர்கள் கிடையாது. கேரளாவில், குமரி மாவட்டம் இணைந்திருந்த போது, அங்குள்ள பத்திரிகைகளின் வளர்ச்சிப் போக்குகளை ஆராய்ந்து டி.வி.ஆர்., ஒரு கணக்குச் சொல்லி உள்ளார். ‘மொத்தத்தில் இரண்டு கோடி ஜனத்தொகையுள்ள கேரளத்தில், நாள் இதழ்கள் மட்டும் ஒன்பது லட்சம் பிரதிகள் விற்கின்றன. நாலரைக்கோடி மக்கள் இருக்கும் தமிழ்நாட்டில் தமிழ் நாள் இதழ்கள் ஆறு லட்சம் பிரதிகளே விற்கின்றன . . .’ -இது, டிச., 31, ’75ம் ஆண்டு கணக்கு.


கேரளத்தைப் போல தமிழ்நாட்டிலும் வாசகர்கள் பெருக வேண்டும். எப்படி வாசகர்களைப் பெறுவது . . . வாசகர்கள் வாங்கும் பத்திரிகை, ‘தங்கள் நலனுக்காக இருக்கிறது’ என்ற உணர்வுக்கு வரவேண்டும். தமிழ்நாட்டு மக்கள் மிக மிக நிதானமானவர்கள். எந்த ஒரு மாற்றத்தை யும், புதுமையையும் உடனே அங்கீகரிப்பது கிடையாது. அரசியலையே எடுத்துக்கொண்டாலும் கூட, சராசரி பத்து ஆண்டுக்கு ஒருமுறைதான் ஒரு மாற்றத்தை ஏற்கிற போக்கு தமிழ் மக்களிடம் காணப்படுகிறது. அரசியல், பத்திரிகை இவற்றில் நமது அண்டை மாநிலமான கேரளாவுடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டுப் பேசுவது கடினமாக உள்ளது.


இந்த நிலையில், ‘தினமலர்’ பத்திரிகைக்கு வாசகர்களைக் கொண்டு வருவது என்பது சாதாரணமான பணியாக இருக்க முடியாது. ஏற்கனவே தமிழகத்தில் நீண்ட காலம் இருந்து வரும் தமிழ்ப் பத்திரிகைகளின் கடுமையான போட்டிகளையும் சமாளிக்க வேண்டும். அப்படியானால், ‘தினமலர்’ மற்ற இதழ்களில் இருந்து மாறுபட்டு இருக்க வேண்டும். அதைத் தமிழ் மக்கள் அங்கீகரிக்க வேண்டும். நிர்வாகம் மட்டுமே இதைச் சாதிக்க முடியாது. பத்திரிகையில் வரும் செய்திகளின் போக்கிலும் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். தனது பத்திரிகைக்கு எனத் தமிழ் வாசகர்களைத் தயார் செய்ய வேண்டும். அந்தப் பெரும் பொறுப்பைப் பத்திரிகை ஆசிரியராக இருந்து, மிக வெற்றிகரமாகச் செயலாக்கிக் காட்டி உள்ளார் டி.வி.ஆர்.,


பத்திரிகை தொடங்குவதில், டி.வி.ஆருக்கு உள்நோக்கம் இருக்கவே செய்தது! அது-


நாஞ்சில் நாட்டுத் தமிழ் மக்களுக்குத் தமது பத்திரிகை மூலம் அவர்களது உரிமையைப் பெற்றுத் தருவது; தமிழ் மக்களின் குரலாக ஒலித்து, அவர்களது முன்னேற்றத்திற்காக பாடுபடுவது.  தமிழ் மக்களிடம் கொண்டிருந்த அன்பும், அசைக்க முடியாத நம்பிக்கையும், அவரது இலட்சியத்திற்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளன. இந்த வகையில் அவர் ஆசிரியராக இருந்து பத்திரிகை உலகில் செய்த சாதனைகள் ஏராளம். ‘தினமலர்’ இதழுக்கு என்று ஒரு பாதை உண்டு. டி.வி.ஆர்., வழி வகுத்துக்கொண்ட சரியான பாதை அது. அதில் படாடோபம், பரபரப்பு இல்லை. பெரும் கவர்ச்சி இல்லை. ஆனால், இவை அனைத்தும் அதில் இருந்தது. அதுதான் குறிப்பாகக் கிராம மக்கள், பாதிக்கப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்களின் குரலாக ஒலிப்பது.  திருவனந்தபுரத்தில் உதவி ஆசிரியராக இருந்த குமரேசன் கூறுகிறார்: உண்மையான செய்திகள் வரவேண்டும். கை, கால் வைத்து உருவாக்கப் பட்ட செய்திகள் வரத் தேவையில்லை என்பார். தலைப்புகளில் சுவை இருக்க வேண்டும். விறுவிறுப்பு இருக்க வேண்டுமென்று வற்புறுத்துவார். சில தலைப்புக்கள் உப்புச் சப்பில்லாமல் இருந்தால், அதை மாற்றி அவருக்குத் திருப்தி ஏற்பட்டால் தான் அச்சிற்கு அனுப்புவார்.


டி.எஸ்.இராமசாமி

பத்திரிகைகளுக்கு ஒரு நியாயம் உண்டு. அதைப் பத்திரிகை தர்மம் என்பார்கள். பத்திரிகையின் முதலாளி, அதன் ஆசிரியர் இரண்டு வகையிலும் இராமசுப்பையருக்கு தனிக் கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், பத்திரிகை பொது மக்கள் நலனுக்காகவே இருக்க வேண்டும். சொந்தக் கருத்துக்குப் பத்திரிகையைப் பலியிடக் கூடாது என்பதில் டி.வி.ஆர்., உறுதியாக இருந்தார். எதிர்க் கருத்துக்களுக்கு மதிப்பு தந்து கவுரவிப்பது அவரது ஜனநாயகப் பண்பாகும். மீண்டும் சொல்கிறேன் . . . பத்திரிகை வேறு, சொந்த விருப்பு, வெறுப்பு வேறு என்பதில் கண்டிப்பாக இருந்தார் டி.வி.ஆர்., உப்பளப் போராட்டம் நடந்தது. நான் தலைமை வகித்தவன். டி.வி.ஆர்., ஓர் உப்பள அதிபர். போராட்டச் செய்திகள் வந்தபோது, உப்பள அதிபர்கள், ஏன் அவரது மாமனார் கூட, அவரை நெருக்கினர். அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. ‘ஏராளமான ஏழைத் தொழிலாளர்கள் நலம் அடைவார்கள். அவர்களது கோரிக்கையில் நியாயம் இருக்கிறது’ என்று அவரது மனத்திற்குப் பட்டால் அதை முழுமையாக தன் பத்திரிகை மூலம் ஆதரிக்கச் செய்ய அவர் தயங்கியதே இல்லை.


பெரிய தொழிற்சாலைகள் உருவாக ஆண்டுகள் பல ஆகலாம். அதுவரை மக்களை வாழ்வித்துக்கொண்டிருக்கும் குடிசைத் தொழில் கள் பலவற்றை டி.வி.ஆர்., தனது பத்திரிகை மூலம் பாதுகாத்தார் என்று உறுதியாகச் சொல்லலாம். நெல்லை மாவட்டத்தின் பீடி தொழில், நெல்லை - இராமநாதபுர மாவட்டங்களின் தீப்பெட்டித் தொழில் இவற்றின் பிரச்னைகளோ அதிகம். அப்படிப்பட்ட சிறு தொழில்களுக்கு ஒரே பத்திரிகையாகத் ‘தினமலர்’ மட்டுமே குரல் கொடுத்து வந்தது; வருகிறது. இதற்கு டி.வி.ஆர்., தான் காரணம்.
 


எம்.பக்தவத்சலம்

முன்னாள் முதலமைச்சர் எம்.பக்தவத்சலம் காலமாவதற்கு ஓராண்டுக்கு முன், டி.வி.ஆர்., ‘தினமலர்’ பற்றிக் கூறிய கருத்துக்கள் . . .

நான் திருவனந்தபுரம் தொடங்கி, இன்று வரை, ‘தினமலர்’ இதழின் ஒழுங்கான வாசகன். எனக்கு டி.வி.ஆர்., - ‘தினமலர்’ பற்றி தெளிவாக கருத்து உண்டு. டி.வி.ஆர்., மக்கள் பக்கம் தனது பத்திரிக்கையை நிறுத்திப் போராடினார். பொதுவாக மக்களின் தீராத பிரச்னைகளை அடிக்கடி கடுமையாக வற்புறுத்துவதை ஆளும் கட்சிக்காரர்கள் விரும்புவதில்லை. உடனே, அதை எதிர்க்கட்சிப் பத்திரிகை என்று ஒதுக்கி விடுகின்றனர். நான், டி.வி.ஆரிடம் மிக அன்பு கொண்டவன். இருந்தாலும், நான் முதல்வராக இருந்தபோது கூட, அவர் பல பிரச்னைகளைக் கடுமையாக எழுதி, என்னையே விமர்சித்தது உண்டு. அவை ஆக்கப்பூர்வமானவை; நான் வேதனைப்பட வில்லை. இன்னும் சொல்லப் போனால், அவற்றை நான் விரும்பி வாசிப்பேன்.


அவரிடம் ஒரு தெளிவு இருந்தது. கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைந்ததும், அப்பகுதியை திருநெல்வேலி மாவட்டத்துடன் இணைத்துவிடலாம் என்ற கருத்து ஆள்வோரிடம் இருந்தது. நான் டி.வி.ஆருடன் இதுபற்றி நேரில் பேசினேன். அவர், ‘கன்னியாகுமரி பகுதி நீண்ட காலமாகவே பல்வேறு தேவைகளில் சிக்கி உள்ளது. சட்ட திட்டங்கள் எல்லாம் இங்கு தனி. ஆகவே, இது தனி மாவட்ட மாக இருந்தால்தான் நன்மை கிடைக்கும்’ என்று கூறினார். அதுதான் சரி என்று எங்களுக்கும் பட்டது. இன்று கன்னியாகுமரி தனி மாவட்டமாக இருக்கிறது என்றால், அதற்கு டி.வி.ஆரின் இந்தக் கருத்துத்தான் முக்கியமான காரணம். மேலே கண்ட தகவல்களை அவர் சொல்லி இருக்க மாட்டார். சம்பந்தப்பட்டவனான நான் கூறலாம் இல்லையா?


அது மட்டுமல்ல. மாவட்டம் பிரிந்ததும், அது கேரளாவில் இருந்தது போல அத்தனை சவுகர்யமாக இருக்க வாய்ப்பில்லை என்று அங்குப் பலர் கவலைப்பட்டனர். ஏற்கனவே நீண்ட காலமாக மாவட்டத்தின் தேவைகள் பல தேங்கிக் கிடந்தன. இவற்றைப் பற்றியெல்லாம் டி.வி.ஆர்., முதலமைச்சர் காமராஜரிடம் விரிவாகப் பேசி, முதல்வரிடம் உறுதிமொழி பெற்று, அதை வெற்றி விழாக் கூட்டத்தில் அறிவித்தார். திட நோக்கோடு, மாவட்டத்தின் மீதும், அதன் வளர்ச்சி மீதும், அவருக்கிருந்த பற்றுதலையும், நல்ல நோக்கத்தை யும் நாங்கள் அப்போது உணர்ந்தோம்.


கன்னியாகுமரி மாவட்டம் அமையும்போது, அது சிறியதாக இருக்கும். மாவட்ட எல்லையில் உள்ள வள்ளியூர் போன்ற பகுதிகளை அத்துடன் இணைத்துவிட்டால் என்ன என்ற ஒரு யோசனை இருந்தது. நான் இதுபற்றி டி.வி.ஆரிடம் விவாதித்தேன். டி.வி.ஆர்., பொதுமக்கள் கருத்தைக் கேட்கலாமே என்று கூறி, தமது பத்திரிகை மூலம் கருத்துக்களைப் பெற்றுப் பிரசுரித்து எனக்கு அனுப்பினார். வள்ளியூர் பகுதிகள் இணைப்பைக் கைவிட அதுவே மிகவும் உதவியது. இது ஒரு முக்கியமான விஷயம் . . . திருவனந்தபுரம் - நாகர்கோவில் - திருநெல்வேலி இரயில் பாதைக்கு டி.வி.ஆர்., பெரும் முயற்சியில் ஈடுபட்டிருந்த நேரம் அது. ஒருநாள் என்னிடம் கேட்டார் . . . ‘இந்த ரயில் பாதை அமைவது தங்களைப் பாதிக்கும் என்று இங்குள்ள சில பஸ் முதலாளிகள் அரசைத் தமது செல்வாக்கால் தடுத்து கால தாமதப் படுத்துகிறார்கள் என்பது பரவலான பேச்சு. அது உண்மைதானா?’ என்று கேட்டார்.


நான் சிரித்துக்கொண்டே, ‘அதில் ஓரளவு உண்மை உண்டு’ என்றேன். உடனே அவர், ‘அப்படியானால் நீங்களே இதை ஒப்புக் கொண்டதாகப் பத்திரிகையில் போடலாமா?’ என்று கேட்டார். அதற்கு நான், ‘உங்களிடம் நான் சொன்ன தகவலைப் போடுவதில் என்ன தவறு?’ என்று கேட்டேன். அதற்கு, ‘தனிப்பட்ட சம்பாஷணை யில் பல தகவல்கள் கிடைத்தாலும், அதைப் பத்திரிகையில் வெளியிடுவது தர்மமில்லை. ஒன்று செய்கிறேன் . . . இதையே எங்கள் எம்.எல்.ஏ.,க்கள் யாரிடமாவது சொல்லிச் சட்டமன்றத்தில் கேள்வி கேட்கச் செய்கிறேன். இப்போது என்னிடம் கூறியதை, நீங்கள் கூற முடியுமா?’ என்று டி.வி.ஆர்., கேட்டார். ‘உண்மையை நான் எப்போதும் எங்கும் கூறத் தயங்குவதில்லை’ என்று உறுதி கூறினேன். பின் சட்டமன்றத்தில் கேள்வி வந்ததும், என்னிடமிருந்து மேலே கூறிய பதிலைப் பெற்றுத் ‘தினமலர்’ இதழில் பிரசுரித்தார்.


ஓர் உண்மையை வெளிக்கொண்டு வர, அவர் மேற்கொண்ட ஆர்வம், அதை வெளிக்கொண்டு வருவதில் காட்டப்பட்ட பத்திரிகை தர்மம், இவை என்னை மிகவும் கவர்ந்திருந்தது. அவர், பொதுமக்களின் கருத்துக்களுடன் ஒன்றி இருந்தார்; அவற்றையே தமது பத்திரிகையிலும் பிரதிபலித்தார். அவர், எந்த ஓர் அரசியல் கட்சிச் சார்புடனும் பத்திரிகை நடத்தவில்லை. ஆனால், அவருக்கென்று ஓர் அரசியல் இல்லை என்று கூறிவிட முடியாது.  அவர் தமது பத்திரிகையில் கீழ்த்தரமான அரசியலுக்கு இடம் கொடுத்ததே இல்லை. தரமான பத்திரிகையாகத் ‘தினமலர்’ இருக்க வேண்டும் என்பது அவரது திடமான கொள்கை. அதை அவர் தமிழ்நாட்டில் நிலை நிறுத்தி வெற்றியும் பெற்றுள்ளார். (இந்தப் பேட்டி, பக்தவத்சலம் காலமாவதற்கு சில மாதங்களுக்கு முன், அவரது இல்லத்தில் தந்தது.)


நிருபர்கள் மீது நம்பிக்கை

நமது நிருபர்களிடம் அவருக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. அவர்கள் தவறு செய்யமாட்டார்கள், தவறாகச் செய்திகள் தர மாட்டார்கள் என்பதில் உறுதியாக இருந்தார். திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் நீதிபதி சங்கரன் விசாரணையின் போது அவர் கேட்ட ஒரு கேள்விக்கான டி.வி.ஆரின் பதில் இதுதான் . . . ‘தினமலர்’ இதழுக்கு நாகர்கோவில், திருவனந்தபுரம் மற்றும் தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களிலெல்லாம் நிருபர்கள் உண்டு. அவர்கள் பெரிதும் நம்பத்தக்கவர்களே. தவறாக செய்திகள் தரமாட்டார்கள் என்று கூறி உள்ளார்.


விளம்பரங்கள் பற்றியும் அவருக்குத் தனிப் பார்வை உண்டு. பணம் வருகிறது என்பதற்காக எந்த விளம்பரத்தையும் பிரசுரிக்கக் கூடாது என்பதில் அவர் கண்டிப்பாக இருந்தார். சிறப்பு மலர்கள் வெளியிடும்போது, அதில் ஒரேயடியாக விளம்பரங்கள், சில படங்கள் மட்டும் இருந்தால் பேதாதாது. அம்மலரைப் படிப்போர் அதன் முழு விவரத்தையும் புரிந்துகொள்ளச் சிறப்பான கட்டுரைகளும் வெளிவர வேண்டும். படிப்போர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் கட்டுரை இருக்க வேண்டுமென்பார். சில சமயம் தனது உதவி ஆசிரியர்களை அனுப்பியே விளம்பர மலருக்கான கட்டுரைகளை எழுதச் செய்தும் வெளியிட்டுள்ளார்.


ஒரு சுவையான சம்பவம்: ஆங்கிலப் பத்திரிகையில் நினைவு அஞ்சலி விளம்பரமாகப் பலர் தந்து வந்த காலம். நம் பத்திரிகையும் இவற்றைப் பிரசுரித்தால் என்ன என்று செய்திப் பிரிவில் சிலர் யோசனை கூறினர். அதை டி.வி.ஆர்., ஏற்றுக்கொண்டு, வாசகர்களை அதற்குப் பழக்க, நினைவு அஞ்சலிகள் மூன்று நாளைக்கு முன், படத்துடன் 10 வரிகள் அனுப்பினார்களானால் இனாமாகப் பிரசுரிக்கப் படும் என அறிவித்தார். நிறைய வந்தன. பிரசுரமாகிக் கொண்டும் இருந்தன. ஒரு நாள் ஒரு பெரியவர் காலையில் ஆபீசுக்கு வந்தார். அவரை டி.வி.ஆர்., வரவேற்று தனக்கு முன்னால் உள்ள நாற்காலியில் அமரச் செய்து, ‘எங்கிருந்து வருகிறீர்கள்’ என்று சாதாரணமாக விசாரித்தார். பெரிய வரோ, ‘எமலோகத்தில் இருந்து வரேன்’ என்றாரே பார்க்கலாம். உடனே, டி.வி.ஆருக்கு ஏதோ தவறு நடந்து விட்டது எனப் புரிந்தது. ‘கோபப்படாமல் சொல்லுங்கள்’ என்று விசாரித்த போது, தெரிந்த தகவல் இது . . . அந்தப் பெரியவருக்கு வேண்டாதவர் யாரோ, அவர் படத்தை அனுப்பி, இரண்டாவது ஆண்டு நினைவு அஞ்சலி என்றும் விவரம் கொடுக்க, அது பிரசுரமாகிவிட்டது. பெரியவருக்குக் கோபம் வராமல் என்ன செய்யும் . . . டி.வி.ஆர்., மிகவும் வேதனைப் பட்டார். டி.வி.ஆர்., மிகவும் வேதனைப்பட்டதன் காரணமாக, அவருடன் சண்டை போட வேண்டுமென்று வந்த பெரியவர், டி.வி.ஆரைச் சமாதானப்படுத்த முனைந்தது தான் ஆச்சரியம்.


அந்த விளம்பரத்தைப் பெரியவரது சொந்தக்காரரான, எதிர் வீட்டுக்காரர் தான் அனுப்பி இருக்க வேண்டும் என்று பெரியவர் கூறினார். நல்லது செய்ய நினைத்து, எவ்வளவு சிக்கலில் மாட்டி விட்டார்கள் என்று டி.வி.ஆர்., வேதனைப்பட்டு, முதலில் இந்த இனாம் விளம்பரத்தை நிறுத்தி, இனி நினைவு அஞ்சலி என்று வருமானால், நமது நிருபர், தானே நேரில் சென்று தெரிந்து அனுப்ப வேண்டும், அப்படி அனுப்பினால் மட்டும் வெளியிட்டால் போதும் என்று உத்தரவிட்டார். அது மட்டுமல்ல, திருமண நன்றி அறிவிப்பு மணமகள், மணமகன் படத்துடன் வந்தால், நன்கு விசாரித்து உறுதிப்படுத்திக் கொண்டு வெளியிட்டால் போதும் என்றும் உத்தரவிட்டார். இப்படிச் சில சுவையான, வேதனையான நிகழ்ச்சிகள் நல்ல பாடத்தைக் கற்றுத் தந்ததும் உண்டு.


நிருபர்கள் நல்ல செய்திகளை எழுதி அனுப்பி இருந்தால், சம்பந்தப்பட்ட நிருபர் ஆபீசுக்கு வரும்போது டி.வி.ஆர்., அதை நினைவு வைத்து நிருபரை அழைத்து, ‘ரொம்ப நன்றாக அந்த செய்தியை எழுதி இருந்தாய். அப்படித்தான் செய்திகள் வரவேண்டும்’ என்று மனம் திறந்து பாராட்டத் தவறாததோடு, அந்த நிருபருக்கு அவரது மனத்துக்குத் தோன்றும் பரிசும் கொடுப்பார். கொஞ்சம் தவறான முறையில் நிருபர் வாசகங்கள் எழுதி இருந்தால், அதைக் குட்டிக்காட்டவும் செய்வார். கோபமாக அல்ல, கிண்டலாக. இதுவெல்லாம் டி.வி.ஆரிடம் நிருபர்களுக்கு ஒரு பெரிய குடும்ப பாசத்தை உருவாக்கி இருந்தது.


மாவட்டங்கள்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மாநில அமைப்புக்களோ, மாவட்ட அமைப்புக்களோ ஓர் ஒழுங்கு முறையில் அமைக்கப்படவில்லை. சுதந்திரம் பெற்ற பின்னர் அந்த அமைப்புக்களைத் திருத்தி அமைக்க வேண்டும் என்பது டி.வி.ஆரின் கொள்கை. ஒரு மாவட்டம் என்றால், மலைகள் அல்லது நதிகளை எல்லைகளாகக் கொண்டிருக்க வேண்டும். இயற்கை அமைப்புகளைக் கணக்கில் கொண்டு மாவட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறுவதோடு கன்னியாகுமரி புதிய மாவட்டத்தின் அமைப்புகளுக்கும் அவற்றை கொண்டே வாதாடினார்.


அதுபோல மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களும் பிரிக்கப்பட்டு அமைய வேண்டும் என்பது அவரது விருப்பம்.

திண்டுக்கல்

திண்டுக்கல உபதேர்தலின் (அ.தி.மு.க., முதலில் அரசியல் பிரவேச மான தேர்தல்) போது மதுரை மாவட்டத்தில் போடி, கம்பம், பெரியகுளம், கொடைக்கானல், பழநி, திண்டுக்கல் பகுதிகள் முழுவதும் மலையைச் சார்ந்த பகுதிகள். அங்குள்ள விவசாயம், வாழ்க்கைத்தரம் அனைத்துமே மலை சாராப் பகுதிகளின் நிர்வாகத்திலிருந்து மாறு பட்டது. இவற்றை ஒன்றாக இணைத்துத் திண்டுக்கல்லைத் தலை நகராகக் கொண்டு ஒரு தனி மாவட்டம் அமைக்க வேண்டுமென்ற கருத்தைத் தேர்தலில் கலந்து கொள்ள வந்த காமராஜர், சி.எஸ்., மோகன் குமாரமங்கலம், கல்யாணசுந்தரம், எம்.ஜி.ஆர்., அனைவரையும் கேட்டு எழுதச் சொன்னார். அனைவருமே திண்டுக்கல் தனி மாவட்டமாவதை ஏற்றுப் பேட்டி தந்தனர். இன்றைய திண்டுக்கல் மாவட்டம் உருவாக டி.வி.ஆர்., பெரிதும் ஆதரவு அளித்திருக்கிறார்.
 


புதிய திண்டுக்கல் மாவட்டம்

ததிண்டுக்கல் அண்ணா மாவட்டம் செப்., 15, ’85ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் புதிதாக உருவாக்கப்பட்டது.
திண்டுக்கல் அண்ணா மாவட்டம் என்பதை, ஜூலை 11, ’89ல் திண்டுக்கல் காயிதே மில்லத் மாவட்டம் என அப்போதைய முதல்வர் கருணாநிதி மாற்றினார். திண்டுக்கல் காயிதே மில்லத் மாவட்டம் என்பதை, மீண்டும் திண்டுக்கல் அண்ணா மாவட்டம் என தற்போதைய முதல்வர் ஜெயலலிதா ஜூலை 18, ’91ல் மாற்றினார்.


இராமநாதபுரம்


இராமநாதபுரம் மாவட்டம் மிகப் பெரியதாக இருப்பதால்தான் அது பின் தங்கி இருப்பதாக டி.வி.ஆர்., கருதினார்.    மேற்கு இராமநாதபுரம், கிழக்கு இராமநாதபுரம் என்று இரண்டு மாவட்டமாகவாவது அதைப் பிரித்து நிர்வாகம் செய்யாவிட்டால் அம்மாவட்டத்திற்கு விமோசனம் கிடையாது என்று பல காலம் எழுதினார். எதிர்பார்ப்புக்கு மேல் அது இன்று மூன்று மாவட்டங்களாகி விட்டது. காமராஜ், பசும்பொன், இராமநாதபுரம் மாவட்டங்கள் மார்ச் 15, ’85ல் உருவாக்கப்பட்டது.


நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி பாசனப் பகுதி தவிர, இதர பெரும் பகுதிகள் கடும் வறட்சியால் தவிக்கிறது. ஆகவே, இந்த வறட்சிப் பகுதிகளை இணைத்து ஒரு தனி மாவட்டம் உருவாக்கி செயல்பட்டால் கோவில்பட்டி விளாத்திகுளம், ஒட்டப் பிடாரம் போன்ற மிகவும் பின் தங்கிய பகுதிகளும், திருச்செந்துவர் போன்ற கடற்கரைப் பகுதிகளும் முன்னேற்றம் அடையும் என்று தொடர்ந்து எழுதினார். டி.வி.ஆர்., கருதியபடியே மேலே குறிப்பிட்ட பகுதிகளை இணைத்து தேசபக்தச் செம்மல் சிதம்பரனார் பெயரில், துபத்துக்குடியைத் தலைநகராகக் கொண்டு, அக்., 20, ’86ல் புதிய மாவட்டம் உருவாக்கப் பட்டது. ‘இதன் பலன்கள் உடனடியாகத் தெரிய வராது. 25 ஆண்டுகளுக்குப் பிறகே தெரியும்’ என்றும் அவர் அடிக்கடி கூறுவார்.
 


திருநெல்வேலியின் பெயர் காப்பாற்றப்பட்டது

தளவாய் ராமசாமி கூறுகிறார்:

நீண்ட நெடுங்காலமாகத் ‘தின மலர்’ குடும்பத்துடன் நெருக்கமாக இருந்துள்ளேன். டி.வி.ஆர்., தேசம், மொழி இவற்றிடம் மிகுந்த பற்றுடையவர். நியாயம் என்று தோன்றியதை யாருக்கும் அஞ்சாமல் மக்கள் முன் தனது பத்திரிகை மூலம் எடுத்துச் சொல்ல அவர் அஞ்சியதே இல்லை. இதுதான், ‘தினமலர்’ பத்திரிகையின் பல மாகும். இதற்கான உதாரணங்களை ஏராளமாக என்னால் சொல்ல முடியும். ஒன்றை மட்டும் மாதிரிக்காகச் சொல்கிறேன் . . .
 

மிகப் பழமையான, செல்வம் ஏராளமாகப் பெற்ற குடும்ப வழியில் வந்தவர் தளவாய் இராமசாமி. ரசிகமணி டி.கே.சியின் பேரர். தொடர்ந்து தனது பொறுப்பில் தமிழ் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வருபவர். நெல்லை சங்கீத சபா மற்றும் பல ஸ்தாபனங்களில் முக்கியப் பொறுப்பு வகிப்பவர்.

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பத்திரிக்கையாளர்களிடம் நட்புக் கொண்ட இவர் டி.வி.ஆர்., "தினமலர்' மீது மிகுந்த பற்று கொண்டவர்.


திருநெல்வேலி மாவட்டம் திரு நெல்வேலி, சிதம்பரனார் என இரண்டு பகுதிகளாக நிர்வாக வசதிக்காகப் பிரிக்கப்பட்டது. தூத்துக்குடியைத் தலைநகராகக் கொண்ட சிதம்பரனார் மாவட் டத் தொடக்க விழாவில், அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்., யாரும் எதிர்பார்க்காதபோது, திடீரென்று, ‘திருநெல்வேலி மாவட்டம் இனி கட்டபொம்மன் மாவட்டம் என அழைக்கப்படும்’ என, அறிவித்துவிட்டார்.


இது திருநெல்வேலியில் உள்ள மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அரசும், அதுவும் பொது மக்களிடம் பெரும் செல்வாக்குப் பெற்ற முதல்வர் எம்.ஜி.ஆர்., ஒரு முடிவை அறிவித்துவிட்ட பின் அது இனி மாறப் போதில்லை. திருநெல்வேலியின் தலைவிதி இதுதான் என பலரும் கவலையுடன் பேசத் தொடங்கினர். அரசியல் வாதிகளோ, பிரமுகர்களோ என்ன செய்வது எனத் திகைத்து நின்ற நேரம். இந்த சமயம், ‘தின மலர்’ மட்டும் மிகத் துணிச்சலா கத் திருநெல்வேலி என்ற பெயரை மாற்றக் கூடாது எனத் தொடர் கட்டுரைகள், ஆதாரங்கள் திரட்டி எழுதத் தொடங்கியது. பல்லா யிரக்கணக்கான ஆண்டுகளாக தேவார ஆசிரியர்கள், ஆழ்வார் கள் மற்றும் பெரும் காவிய கர்த் தாக்கள் இந்தப் பெயரை மிகவும் போற்றிப் புகழ்ந்து பாராட்டி உள்ள வரலாற்றுச் சிறப்பான பெயர் இது.


கிறிஸ்தவ மதப் பேரறிஞர் கால்டுவெல் எழுதிய, ‘திருநெல் வேலியின் சரித்திரம்’ என்ற நுபலில், ஆங்கிலம் பேசுகிறவர் களுக்கு திருநெல்வேலி என்று உச்சரிப்பது கஷ்டமாக இருக்கிறது என்ற காரணத்தால், இதை, ‘டின்னவேலி’ என்று கூறுகின்றனர்; இது தவறு. இதைத் திருநெல்வேலி என்று முழுமையாக எழுதுவதே சரியானது என்று தனது நுபலில் எழுதி இருந்ததையும், ‘திருநெல்வேலி உறை செல்வரே’ எனத் தேவாரம் புகழ்வதையும், அகத்தியர் தொடங்கி, இன்றைய புதுமைப்பித்தன் வரை இலக்கியவாதிகள், திருநெல்வேலி பற்றி புகழ்ந்து கூறியவற்றையும் குறிப்பிட்டு, வரலாறு, இலக்கியம், கலை அனைத்துத் துறைகளிலும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுக்கு நின்ற பெயரான திருநெல்வேலி பெயர் மாற்றம் நியாயமானது அல்ல என்று, ‘தினமலர்’ எழுதியது.


தொடர்ந்து, கட்டபொம்மன் பெயரை சூட்டுவதை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால், ஒரு மாவட்டத்தைப் பிரிக்கும்போது, புதிய மாவட்டத்திற்கு பெயர் சூட்டும் பொறுப்பு அரசைச் சாரும் என்றும், தாய் மாவட்டத்தின் பெயர் எக்காரணம் கொண்டும் மாற்றப்பட மாட்டாது என்றும், ஏற்கனவே முதல்வர் கொடுத்த உறுதிமொழி இப்போது கைவிடப்பட்டதையும் சுட்டிக்காட்டி ஏராள மான ஆதாரங்களுடன் தொடர் கட்டுரைகளை, ‘தினமலர்’ எழுதியது.
இந்தக் கட்டுரைகள் தொடராக வெளிவர, வர இதைப் படித்து எங்கோ சிறு தவறு நடந்துவிட்டது என உணர்ந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., திருநெல்வேலி மாவட்டத்தை, ‘திருநெல்வேலி கட்ட பொம்மன் மாவட்டம்’ எனத் திருத்தி உத்தரவிட்டார்.


இது, ‘தினமலர்’ சாதனைகளில் மிகப் பெரியதாகும். ஒரு வரலாற்றுப் புகழ்பெற்ற பெயர் நீக்கப்படுவதை எதிர்த்து, அதேசமயம், நியாயத் தன்மையை உணர்த்தும் வகையில் ஆதாரங்களைத் தெளிவாக எழுதி, அரசின் முடிவையே மாற்ற வைக்கும் சக்தி, ‘தினமலர்’ பத்திரிகைக்கு மட்டும் இருந்தது. சமீபத்தில் நிகழ்ந்த இந்த ஒரு சாதனை, ‘தினமலர்’ தமிழ் மக்களின் குரலாக, கவசமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்கவில்லையா . . . என்று கேட்டார்.
திருநெல்வேலி கட்டபொம்மன் மாவட்டம் என்று பெயர் மாற்றப் பட்ட அரசு ஆணை, நவ., 18, ’86ல் வெளியானது.
இதுபோல் வானம் பார்த்த பூமி என்றும், என்றைக்கும் வறட்சிக்கு இலக்காகி, முன்னேற்றம் காணாத மிகப் பெரிய தாலுகாவான கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம் இவற்றையும் இரண்டாக பிரிக்க வேண்டுமென்று அவர் பல சமயம் எழுதியதுண்டு.
 


நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை....
 

நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகில் இயற்கை சில குறிப்பிட்ட பகுதிகளில் கொடுமைகளை நிகழ்த்தி பெரும் அழிவை ஏற்படுத்தி விடுகிறது. இப்படிப்பட்ட இரண்டு கொடுமைகள் கடந்த 30 ஆண்டு களுக்குள் நடைபெற்றன. அதை முழுமையாகப் பதிவு செய்து சரித்திர ஆதாரமாக வைத்திருக்கச் செய்தார் டி.வி.ஆர்.,
 


இராமநாதபுர மாவட்டப் பஞ்சம்

இராமநாதபுரம் மாவட்டத்தை 1876ம் வருடம் ஒரு கொடுமையான பஞ்சம் வாட்டி வதைத்தது. அது தமிழ் ஆண்டு தாது வருஷம். அப்பஞ்சத்தை தாது வருடப் பஞ்சம் என்பர். அப்பஞ்சம் பற்றி நாட்டுப் பாடல்கள் பல விவரிக்கின்றன. அவையே அந்தந்தப் பஞ்ச காலத்தின் சாசனங்கள். அப்போது எழுந்த ஒரு நாட்டுப் பாடல், ‘ஆற்றிலேயும் தண்ணியில்லை; குளத்திலேயும் தண்ணியில்லை; தண்ணீர் தாகத்தால் வறண்டு தவறினது கோடி ஜனம்; கஞ்சிக் கில்லாமல் தவித்துக் காட்டிலே மாண்டது கோடி!’ என்பது பாடல்.


இதே நிலை 1974ல் மீண்டும் உருவானது. இதை அன்றைய அரசு ஏற்கத் தயாராக இல்லை; கிண்டல் செய்தது. மழை இன்மையால் சுத்தமாகக் குடிதண்ணீர் கூடக் கிடைக்காத நிலையில், கிராமம் கிராமமாக மக்கள் வெளியேறினர். வழக்கமாக அறுவடைக் காலங்களில் இந்த மக்கள் பிழைப்பை நாடி வெளியூர் செல்வதைச் சுட்டிக்காட்டி, அதுபோலத்தான் இதுவும் என்றனர் அமைச்சர்கள். உண்மையான நிலை என்ன, அரசு கூறும் வாடிக்கையான நிலையில் மக்கள் வெளியேறுகிறார்களா, கிராமங்களின் சரியான நிலைதான் என்ன என்பதைக் கிராமம் கிராமமாகப் போட்டோ கிராபருடன் சென்று தினசரி, ஒருபக்கம் செய்தி வெளியிட வேண்டும் என்று டி.வி.ஆர்., கூறினார்.


கற்பனைக்கு அடங்காத கொடுமைகளுக்குக் கிராமங்கள் இலக்காகி இருந்தது. வயல் வரப்புகளில் சிறு சிறு தானியங்களை எறும்புகள் சேகரித்து வைத்திருக்கும். பஞ்சக் கொடுமை காரணமாக வரப்புகள் வெட்டப்பட்டு, மக்கிய அந்த எறும்பரிசிகளை - எறும்புகள் சேகரித்து வைத்த உணவு தானியங்களை மக்கள் உண்டு வந்தனர். சாணக்குட்டிக் கிழங்கு என்பது ஒரு வகை விஷக்கிழங்கு. பூமிக்கடியில் இரண்டடி ஆழத்தில் இது இருக்கும். இதை உரித்தால் கைகளில் அரிப்பு எடுக்கும். இதைத் தோண்டி எடுத்து, வேகவைத்து மக்கள் சாப்பிட்டு வாழ நினைத்து, சாவை எதிர்த்துப் போராடினர். சேற்றுடன் தண்ணீரை குடங்களில் நிரப்பி, தேத்தாங்கொட்டையை அதில் போட்டு வைத்தனர். இரவு இவ்வாறு தேத்தாங்கொட்டையைப் போட்டால் காலையில் அந்த சேற்று நீரில் ஒன்று இரண்டு குவளைத் தண்ணீர் தெளியும். அதைக் குடித்துத் தொண்டையை நனைத்துக் கொண்டனர்.


இச்செய்திகளை கிராமம் கிராமமாக திரட்டி தினசரி ஒரு பக்கக் கட்டுரைகளாக தொடர்ந்து, ‘தினமலர்’ இதழில் வெளியிடச் செய்தார் டி.வி.ஆர்., இதன் எதிரொலி மத்திய அரசின் உணவு அமைச்சர் ஷிண்டே இப்பகுதியில் மூன்று நாட்கள் கிராமம் கிராமமாக சென்று பார்த்து கண் கலங்கினார். டில்லியை விட்டு ஷிண்டே இங்கு வரும்போதே, ‘தினமலர்’ முழுபக்கக் கட்டுரைகள், அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பு இவை கொண்ட ஒரு, ‘பைல்’ கொண்டு வந்திருந்தார். ‘ஒரு பத்திரிகை, ஒரு வரலாற்றை எவ்வளவு கவனமாகச் சேகரித்து மனிதாபிமானத்துடன் உண்மைக்குக் கொஞ்சமும் மாறுபடாமல் வெளியிட்டிருக்கிறது. இதை நான் எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்’ என்று கூறி, இராமநாதபுரம் மாவட்டத்தின் தோற்றமே மாறும் வகையில் ஒரு, ‘மாஸ்டர் பிளான்’ பற்றித் ‘தினமலர்’ இதழுக்கு என்றே ஒரு நீண்ட தனிப் பேட்டியைத் தந்தார். பாதிக்கப் பட்ட அப்பகுதிகள் இன்றைக்குப் பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டமாக உருவாகி உள்ளது. அந்த மாஸ்டர் பிளானில் சொல்லப் பட்ட பல பணிகள் பகுதி பகுதியாக இன்றைக்கு நிறைவேற்றப்படுகின்றன.


இதில் பெரிய ஆச்சர்யம் ஒன்றுண்டு . . . அப்போது தி.மு.க., ஆட்சி நடைபெற்றது. முதல்வர் கருணாநிதி பஞ்சம் எனக் கூறத் தயாராக இல்லை. ஆனால், தி.மு.க.,வைச் சேர்ந்த அப்பகுதி எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் அனைவரிடமுமே பேட்டி வாங்கச் சொன்னார் டி.வி.ஆர்., உண்மை நிலையை மறைக்காமல், ‘தினமலர்’ இதழுக்கு பேட்டிகளாக அவர்கள் தந்தது பெரிய வியப்பு.
 


இச்செய்திகள் சேகரிக்க ஏற்பட்ட செலவுகள் ஏராளம். இருந்தாலும் மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் 100 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற ஒரு வரலாற்றுக் கொடும் பாதிப்பைப் பதிவு செய்த பெருமை டி.வி.ஆருக்கு உண்டு.


ஆந்திராவில் கடல் சீற்றம்

இராமநாதபுரம், ‘தினமலர்’ விற்பனையாகும் பகுதி; ஆந்திரா ‘தினமலர்’ விற்பனைக்கு தொடர்பே இல்லாத மாநிலம்.
கடல் கொந்தளிப்பும், சேதமும் ஆந்திராவுக்குப் புதிதல்ல. 1764ம் ஆண்டு ஆந்திராவில் கடல் கொந்தளித்துப் பல்லாயிரக்கணக்கான மக்களை விழுங்கியதுண்டு. பின்னர், 1864ம் ஆண்டு, சரியாக 100 ஆண்டுகள் கழித்து, அதே  நாளில் பந்தர்பட்டிணத்தைக் கடல் சூழ்ந்து அழித்தது. அன்றைய சாவு 30 ஆயிரம் என கல்வெட்டில் உள்ளது. அதற்கு 100 ஆண்டுகளுக்குப் பின், நவ., 19, ’77ல் கடல் சீறி, திவி என்ற தாலுகாவையே விழுங்கியது.


ஆந்திராவுக்குச் சென்று, அங்கு ஏற்பட்ட சேதத்தைப் படத்துடன் செய்தி கட்டுரைகளாக வெளியிட வேண்டுமென்றார் டி.வி.ஆர்., இது மிகக் கடினமான வேலை. உயிருக்கு ஆபத்தான முயற்சி. இதனால் பத்திரிகை விற்பனை கூடப் போவதில்லை; பெரும் செலவு என்றெல்லாம் டி.வி.ஆரிடம் கூறியபோது அவர் கூறினார்: ஆந்திரா அன்னிய தேசமல்ல. நமது சகோதர மாநிலம். நேற்று வரை தமிழகத்துடன் இணைந்திருந்த ஓர் அங்கம். பல துறைகளில் தமிழகம் செழுமைப் படுவதற்குத் தெலுங்கு பேசுவோரின் பங்கு ஏராளம். நம்முடன் இங்கு ஏராளமான தெலுங்கு பேசும் சகோதரர்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்போது இயற்கை சீறி ஆந்திராவில் பெரும் அழிவை ஏற்படுத்தி உள்ளது. ஒரு வீடு இடிந்து 10 பேர் மாண்டு போனாலோ, ஒரு பஸ் விபத்தில் சிலர் மாண்டு போனாலோ படங்களுடன் செய்திகளாக வெளியிடுவது பத்திரிகைகளில் பழக்கம். 100 ஆண்டுகளுக்குப் பின் ஆந்திராவில் ஒரு யுகப் பிரளயம் வந்து, 35 ஆயிரம் பேர் ஒரே இரவில் மாண்டு போனால், அது செய்தி இல்லையா . . . வரலாற்றில் இது மிகப் பெரிய கொடுமை. இவை நமது வாசகர்களுக்குத் தெரிய வேண்டும். செலவு பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று பிடிவாதமாகக் கூறினார்.
மனிதாபிமானம், தேசியக் கண்ணோட்டம், பாதிக்கப்பட்டவர்கள் எங்கிருந்தாலும் அதற்காகக் கண்ணீர் சிந்தும் உள்ளம், இவையே இந்தச் செய்திகளைச் சேகரித்து வரச் செய்ய டி.வி.ஆரைத் தூண்டியது.


நூற்றாண்டுக் கொடுமைகள் இரண்டை வரலாற்று ரீதியில், இனி வருங்காலத் தலைமுறையினர் தெரிந்து ஆராய வேண்டுமானால், ‘தினமலர்’ இதழைத்தான் நாட வேண்டும். மிகச் சிறந்த உலகப் பத்திரிகைகள் மட்டுமே சாதிக்க முடியும் என்ற இந்த வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டு வர டி.வி.ஆர்., காட்டிய ஆர்வம் அவரைச் சிறந்த, மிகச் சிறந்த பத்திரிகை ஆசிரியராக நமக்கு உணர்த்துகிறது.

உமை தாணு

முதல் கால் நுபற்றாண்டுக் காலத்திற்கு மேல், றிதினமலர்றீ செய்தித் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற உமைதாணு, தமது அனுபவங்களைக் கூறுகிறார்:


நான் 1941 - 42ல் சென்னையில் ஒரு நாளிதழில் பணியாற்றினேன். பின், சென்னையில் பெரியார் நடத்தி வந்த, ‘விடுதலை’யை அரசு குத்தகைக்கு எடுத்து, யுத்தப் பிரச்சாரப் பத்திரிகையாக நடத்தியது. அதிலும் சில மாதங்கள் வேலை பார்த்தேன். அப்பத்திரிகைக்கு அன்று இலங்கையைச் சேர்ந்த விஜயதுங்கே ஆசிரியர். பின், ‘தினமலர்’ இதழில் சேர்ந்தேன்.  செய்தி எழுதும்போது, அந்தக் காலத்தில், நாங்கள், ‘வைத்து’ என்ற வார்த்தையை தாராளமாக பயன்படுத்துவோம், உதாரணமாக, ‘நாகர்கோவில் முனிசிபல் திடலில் ‘வைத்து’ நேசமணி பேசினார்றீ என்று எழுதுவோம். சாமி, (டி.வி.ஆர்.,) ‘இது என்ன ‘வைத்து’ . . . முதலில் அதை எடுங்கள்றீ என்று கூறுவார். சட்டசபைக் கேள்வி பதிலில் அடிக்கடி, ‘உண்டுமா’ என்ற சொல் வரும். ‘உண்டுமாவாவது, உப்புமாவாவது . . . நீங்கள் இனி ‘உண்டா?’ என்ற சொல்லையே பயன்படுத்த வேண்டும்  என்பார். இப்படியே நிறையக் கூறலாம். நீண்ட வாக்கியங்கள் அவருக்குப் பிடிக்காது. அதை உடைத்து அனைவருக்கும் புரியும் வண்ணம் சிறு சிறு வாக்கியங்களாக எழுத வேண்டும் என்பார்.


ஒரு பொதுக்கூட்ட செய்தி என்றால், ‘பிரமுகர்கள் பெயரோடு அது நின்றுவிடக்கூடாது. அதில் நன்றி கூறியவர் வரை அனைவரது பெயரும் இடம்பெற வேண்டும். பிரமுகர்கள் பெயர்தான் மற்ற பத்திரிகைகள் வெளியிடுமே . . . கலந்து கொண்டவர்கள் என்ன பாவம் செய்தார்கள். அவர்களும் நமது வாசகர்கள் அல்லவா . . . வெட்டாதே’ என்பார்.
ஒரு கூட்டம், விழா என்றால் அதன் சூழ்நிலைகள் நமது நிருபரால் நன்கு விமர்சிக்கப்பட வேண்டும். அதாவது ‘சைடுலைட்!’ அதை நாம் சரியாகச் சொல்லி உள்ளோமா என அன்றைய கூட்டத்திற்கு வந்தவர்கள் கவனிப்பர். அதைச் சுவையாக, நீளமாக இல்லாமல், சொல்ல வேண்டுமென்பார். நமது செய்தி உண்மையாக இருக்க வேண்டும். அதனால் யாருடைய மனதும் புண்படக்கூடாது. இதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். கிரிமினல் செய்திகளுக்கு அதிகமாக இடம் தர வேண்டாம். ரொம்பப் பெரிய பரபரப்பான கொலை இருந்தால் நாமும் வெளியிட்டோம் என்று மட்டும் இருந்தால் போதும். கொலைச் செய்திக்கு ஒதுக்கும் இடத்தில், மக்களுக்குத் தேவையான பலவிதமான எவ்வளவோ செய்திகள் பிரசுரிக்கலாம் என்பார். ஒரு கிராமத்திற்கு தடுப்பூசி போட நாளை வைத்தியர் வர இருக்கிறார் என்றால், அச்செய்தியைக் கண்டிப்பாக வெளியிட வேண்டும். இப்படி, கிராம மக்கள் நலன் கருதி நாங்கள் செய்திகள் வெளியிட வெளியிட, அதிகாரிகளும், ‘தினமலர்’ இதழுக்கு இதுபோன்ற செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்தனர்.


ஒரு பிரமுகர் பெரிய பதவியில் இருக்கிறார். அப்போது அவரது செய்திகள் பெரிது பெரிதாக வரும். பதவி காலியானதும், அவருக்கு எதிர்ப்புச் செய்திகளை அவருக்கு எதிரானவர் தருவர். அதற்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டியதில்லை என்று கூறி, அதற்கு ஒரு உதாரணமும் கூறுவார் . . . ‘நல்ல தலைமுடி இருக்கும்போது ஹேர் ஆயில் போட்டுக் கொள்வோம். திருப்பதிக்குப் போய் மொட்டை போட்டுக்கொண்டால், அந்த முடியை எடுத்து ஹேர் ஆயில் பூசு கிறோமா, அது போலத்தான் இதுவும்’ என்று கூறுவார். சின்ன சின்ன மார்க்கெட் செய்திகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பார். ஒரு கிராமத்து விவசாயி தனது உற்பத்திப் பொருளுக்கு இன்றைக்கு என்ன விலை கிடைக்கும் என்பதைப் பேப்பரைப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும். கல்யாண நாட்களில் காய்கறி விலை என்னென்ன என்று கூட வெளி வர வேண்டுமென்பார்.


மற்றப் பத்திரிகைகளை மிகக் கவனமாகப் படித்து சில குறிப்புகளும் எடுத்து தனது ஜாபிதாவில் குறித்து வைத்திருப்பார். ஒரு பிரபலமான மலையாள தினசரி, ஒரு நாள் தனது தலையங்கத்தில், எங்கோ நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து எழுதியிருந்தது. தலையங்கம் எழுதும் ஆசிரியர் துப்பாக்கிச் சூடு பற்றி எங்கோ கேள்விப்பட்டதை தலையங்கம் எழுதி வெளியிடவும் செய்து விட்டார். ஆனால் ஆச்சர்யம் . . . அந்த துப்பாக்கிச் சூடு பற்றி ஒரு சிறு செய்திகூட அப்பத்திரிகையில் பிரசுரமாகவில்லை. இதை எடுத்துக் காட்டி, இப்படிப்பட்ட குறைகள் வராமல் இருக்கச் செய்தித்துறையில் இருப்பவர் ஒவ்வொருவரும் நெருக்கமாக இருந்து செயல்பட்டால்தான் முடியும் என்பார்.


தான் எழுதிக்கொண்டு வந்துள்ள குறிப்புச் சீட்டில் 1, 2, 3 என்று குறிப்பு எழுதி வைத்திருப்பார். ஒவ்வொரு பிரச்னையாகப் பேசி முடித்ததும், அதை ‘டிக்’ அடித்துக் கொள்வார். ‘பணம் தருகிறேன் என்றால் எதையும் விளம்பரமாக வெளியிட்டு விடக்கூடாது. உதாரணமாக, ‘பத்து ரூபாய்க்கு ஐந்து வால்வ் ரேடியோ’ என்று ஒரு விளம்பரம் வட மாநிலக்காரன் கொடுக்கிறான். (ஏராளமான மலையாள பேப்பர்களில் இதுபோல விளம்பரங்கள் வந்துகொண்டிருந்த காலம் அது.) செய்தியில் மட்டுமல்ல, விளம்பரங் களிலும் உண்மை இருக்க வேண்டும். நமது பேப்பர் படிக்கும் வாசகர்கள், நாம் தரும் செய்தியாலோ, விளம்பரத்தாலோ மனம் வருந்தக்கூடாது’ என்பார்.


தென் திருவிதாங்கூர் தமிழர் பேராட்டம் வலுத்துக்கொண்டு வந்தது. அந்த சமயம் எங்களுக்கு நெருக்கடிகளும் அதிகமானது. நித்திய கண்டம்தான். ஒருநாள் ஆபீஸ் தொடங்கியதும், மடமடவென துப்பாக்கியுடன் ஏராளமான போலீசார் நுழைந்து எங்கள் ஒவ்வொருவரையும் சுற்றி இரண்டு இரண்டு பேராக நின்று, ஆபீசை முழுதும் கலைத்து எதையோ தேடினார்கள். யாரையும் நகர விடவில்லை. சாப்பாடும் கிடையாது. பிற்பகல் மூன்று மணிக்குத்தான் போனார்கள். பின்னர் விசாரித்ததில், ‘சிறையில் இருந்த குஞ்சன் நாடாருக்கு வந்த ஏதோ ஒரு முக்கியமான தந்தி இங்கிருக்கிறதா?’ என்று அவர்கள் தேடியதாகத் தெரிந்தது. அது அங்கே இல்லை. எதில் ஆபத்து வரும் என்பதை டி.வி.ஆர்., தெளிவாகத் தெரிந்து இருப்பார்; அது மாதிரி தடயங்கள் எதுவும் இங்கு இருக்க விடமாட்டார்.


இந்தப் போலீசாருக்கும் தெரியாத அப்போராட்டம் சம்பந்தமான பல காரியங்கள் ஆபீசில் நடந்தன. பட்டம் தாணுப்பிள்ளை மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாளை வருகிறது. சாம்ராஜ் என்ற எம்.எல்.ஏ., எதிர்த்து ஓர் ஓட்டுப் போட்டால், பட்டத்தின் மந்திரிசபை கவிழ்ந்துவிடும். இது தெரிந்த பட்டம், தனது சி.ஐ.டி., போலீஸ் இலாகாக்களை முழுதும் ஏவி, சாம்ராஜை மூலை மூடுக்குகளில் எல்லாம் தேடி, சரிக்கட்டவோ, கடத்தவோ முயன்றார். முதல் நாள் இரவு, சாம்ராஜைத் தலைப்பாகையுடன், ‘தினமலர்’ ஆபீசில் ஊழியர்களோடு ஊழியராக மறைத்து வைத்துவிட்டார் டி.வி.ஆர்., மறுநாள் திடீரென்று சட்டமன்றம் போய், தனது ஓட்டைப் பட்டத்திற்கு எதிராகப் போட்டார்; மந்திரிசபை கவிழ்ந்தது. ‘போராட்டக்காரர்களின் காரியாலயமே ‘தினமலர்’ ஆபீஸ்’ என, நீதிபதி சங்கரன் கூறியதில் தவறு இல்லை; உண்மை அதுதான்.


இப்படி ஏராளமான சம்பவங்களைச் சொல்ல முடியும். திருவனந்த புரத்தில் ஞாயிற்றுக்கிழமை பத்திரிகை ஆபீஸ் விடுமுறை. அதாவது திங்கட்கிழமை பேப்பர் வராது. இந்த ஒருநாள் பேப்பர் இல்லாமல் இருப்பது சரி இல்லை என்பது நிறுவனரின் கருத்து. தினசரி பத்திரிகை ஒருநாள் இல்லாவிட்டால், வாசகர்களுக்குச் செய்தித் தொடர்பு இல்லாமல் போகும்; இது கூடாது. இதை மாற்ற வேண்டும் என்பது அவரது அவா. மலையாள ஏஜெண்டுகள் இதற்கு ஒத்துவர மறுத்தனர். ஆனால் இதில் டி.வி.ஆர்., உறுதியாக இருந்து, படிப்படியாக தனது ஏஜென்டுகளுக்குப் புரிய வைத்து, ஒருநாள் விடுமுறையை ரத்து செய்தார். இன்றைக்கு மலையாளப் பத்திரிகைகள் வாரம் முழுதும் இடைவெளி இல்லாமல் வருவதற்குத் ‘தினமலர்’ இதழே காரணம்.


ஒருமுறை, தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அன்றைய செல்வாக்கான மந்திரி நடராஜபிள்ளை ஆகியோர், டி.வி.ஆரிடம், ‘நீங்கள் அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டாம். விஷமமாகவாது செய்திகள் போடாமல் இருக்கலாம் இல்லையா . . .’ என்று கேட்டனர். ‘விஷமமான செய்தியா . . . அப்படி என்ன போட்டிருக்கிறோம் . . .’ என்று ஒன்றும் தெரியாதது போல டி.வி.ஆர்., கேட்க, நடராஜபிள்ளை, ‘மீர்ஜாபர்கள் ஜாக்கிரதை என்று தலைப்புப் போட்டால் என்ன அர்த்தம் . . .’ என்று கேட்டார். (நாஞ்சில் தமிழர் போராட்ட உச்சக் கட்ட நேரம் அது. ரோமாபுரி நெருப்பு பிடித்து எரிகிறது. நீரோ மன்னன் பிடில் வாசிப்பதைப் போல நடராஜ பிள்ளை படத்தைப் போட்டு ஒரு கார்ட்டூன் அன்று வெளியாகி இருந்தது.) அதுதவிர, ‘மீர்ஜாபர்கள் ஜாக்கிரதை’ வேறு.


டி.வி.ஆர்., காமர்ஸ், கமர்ஷியல் பத்திரிகைகளை மிக ஊன்றிப் படிப்பார். எங்களையும் படிக்கச் சொல்வார். நாங்களும் படிப்போம். ஒன்றுமே புரியாது. ஆனால், இவற்றை அவர் ரசித்துப் படிப்பார். இதன் விளைவு என்ன தெரியுமா? ‘பாலாய் சென்ட்ரல் வங்கி’ என்று ஒரு பெரிய வங்கி திருவனந்தபுரம், சென்னை, டில்லி எல்லா இடங்களிலும் கிளையுடன், மிகப் பிரபலமாக இருந்தது. ‘அந்த வங்கி ரொம்பக் குழப்பத்தில் இருக்கிறது. இன்னும் இரண்டு மாதம் தாக்குப் பிடிக்குமா என்பது கூடப் புரியவில்லை’ என்றார் ஒருநாள். சரியாக இரண்டே மாதத்தில் அந்த பாங்க் திவாலானது. எத்தனைத் துல்லியமாக, அவர் கணித்து விட்டார் என்பதைப் பார்த்து நாங்களும் தீவிரமாக காமர்ஸ், கமர்ஷியல் புத்தகங்களைப் படித்தோம். இன்றுவரை எங்களுக்கு அது புரியத்தான் மாட்டேன் என்கிறது.


திருநெல்வேலிக்குச் சென்ற புதிது. அங்கு ஒரு ஜமீன்தார். அவரது கட்டடத்தைப் பஞ்சாயத்து போர்டுக்கு வாடகைக்கு விட்டிருந்தார். திடீரென்று ஒருநாள் அக்கட்டடத்தை காலி பண்ணச் சொன்னார் ஜமீன்தார். அது அவர்களால் இயலாத நிலை. ‘மேலே எழுதிக் கேட்டுத்தான் முடிவு செய்ய முடியும்’ என்று அதிகாரி கூறவே, ஜமீன்தார் அந்த அதிகாரியை அடித்து நொறுக்கிவிட்டார்; அது கேசாகிவிட்டது. ஜமீன்தார் கோர்ட்டுக்கு வராமல் தனக்குப் பிராக்ஸி தர மனுச் செய்தார். அதிகாரிக்காகப் பிரபலமான வக்கீல் என்.டி.வான மாமலை ஆஜராகி, ‘நீதிமன்றத்திற்கு அரசனும், ஆண்டியும் ஒன்றுதான்’ என்று வாதிட்டார். அவரது வாதத் திறமையினால் ஜமீன்தார் கோர்ட்டுக்கு வந்துதான் ஆகவேண்டுமென்று நீதிபதி கூறிவிட்டார். இதை நாங்கள், ‘நீதிமன்றத்திற்கு அரசனும், ஆண்டியும் ஒன்றுதான்’ என்ற தலைப்பில் விரிவாகப் பிரசுரித்து விட்டோம்.


மறுநாள் தச்சநல்லூர் ஆபீசுக்கு இரண்டு ஜீப் நிறைய அடியாட்க ளுடன் ஜமீன்தார் வந்து குதித்தார். டி.வி.ஆர்., நிதானமாக, ‘செய்தியில் தப்பு உண்டா . . . கோர்ட் உங்களுக்குப் பாதகமாகத் தீர்ப்பு வழங்கினால் எங்களைக் கோபித்து என்ன செய்ய . . .’ என்று கேட்க, ஜமீன்தார், ‘மற்ற பத்திரிகைகள் வெளியிடவா செய்தது . . .’ என்று உஷ்ணமாகக் கேட்க, ‘மற்ற பத்திரிகைகள் வெளியிடாததை வெளியிடுவதுதான் எங்கள் பத்திரிகையின் நோக்கம். இல்லை என்றால் எதற்கு எங்கள் பேப்பரை வாங்கப் போகிறார்கள் . . . ஜமீன்தார் கோர்ட்டில் ஜெயித் தால், அதையும் வெளியிடுவோம்’ என்று எடுத்துச் சொல்லி அனுப்பி விட்டார். அன்றைக்கு ஆபீசில் இரண்டு மூன்று வெட்டாவது விழும் என்று எதிர்பார்ததவர்கள் வாயடைத்து நின்றனர். ‘மறுப்பு, திருத்தம் வரவே கூடாது. அது பத்திரிகையின் பெரிய பலவீனம். உண்மையைத் தைரியமாக வெளியிடலாம். வருவதை அனுபவிக்கலாம். பத்திரிகையும் ஒரு நீதிமன்றம்தான். இங்கு அரசனும், ஆண்டியும் ஒன்றுதான்’ என்று அந்த சம்பவம் குறித்து, சாமி (டி.வி.ஆர்.,) சொன்னது, இன்றைக்கும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.


மற்றொரு சம்பவம் . . . இடையிட்டுச் சொல்ல வேண்டியது உள்ளது. ‘எமர்ஜென்சி’ சமயம். இராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு பாங்கு வரவு செலவுக் கணக்கை ஆதாரமாகக் கொண்டு ஒரு பக்கம் கட்டுரை எழுதப்பட்டது. வெளியான மறுநாள் பாங்கில் போட்ட பணத்தை எல்லாரும் கேட்கத் தொடங்கிவிட்டனர். பாங்க் அதிகாரிகள் கலெக்டரிடம் முறையிட்டனர். ‘எமர்ஜென்சி சமயமாதலால் பத்திரிகை லைசென்சைக் கூட ரத்து செய்யலாம்’ என்று நெல்லைக் கலெக்டர் டி.வி.ஆருக்கு தகவல் அனுப்பினார். ‘அந்த வரசு செலவு விளம்பரமாகப் பத்திரிகையில் வந்துள்ளது. நாங்கள் அதில் உள்ளவற்றைத் தான் எழுதியுள்ளோம். தவறு ஏதும் இதில் இல்லை. ஸ்தாபனத்தின் உண்மை நிலையை பொதுமக்களுக்குச் சொல்லக்கூடாது, என்று பத்திரிகைகளுக்குத் தடை ஏதும் இல்லை. இதற்காக லைசென்சை ரத்து செய்வதானால் கவலைப்படவில்லை’ என்று டிவி.ஆர்., பதில் சொல்லி, அதிகாரியை அனுப்பிவிட்டார்.
வக்கீல்களிடம் இப்பிரச்னைப்பற்றி கலெக்டர் கேட்டார். ‘பாலன்ஸ்ஷீட்தான் அவர்களுக்கு உதவி உள்ளது. அது பகிரங்கமாக விளம்பரமாக வெளி வந்துள்ளது. ஆகவே, நடவடிக்கை சாத்தியமில்லை’ என்று வக்கீல்கள் கூறிவிட்டனர். திருத்தம், மறுப்புப் போட இயலாது என்பது டி.வி.ஆர்., கண்டிப்பு. ‘பாங்க் பதில் எழுதித் தந்தால் அவர்கள் கூறுவதையும் வெளியிடுகிறோம். அதுவும் கலெக்டருக்காக . . .’ என்று உறுதியாக நின்று விடவே, ஒரு பதில் வந்து அதை, ‘பாங்க் கூறுகிறது’ என்று வெளியிடச் செய்தார்.


இதில் பெரிய ஆச்சரியம் ஒன்றுண்டு. அக்கட்டுரையில் பாங்கின் 13 தவறுகள் ஆராயப்பட்டு இருந்தன. பிரச்னை பெரியதாகவே, ஏகப்பட்ட ஆடிட்டர்கள் பாங்க் கணக்குகளை ஆராய்ந்து, ‘தினமலர்’ வெளியிட்ட 13 குற்றச்சாட்டுகளுடன், மேலும் ஐந்து குற்றச்சாட்டுகளை யும் கண்டுபிடித்து, 18 குற்றச்சாட்டுகளுடன், அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையையும் தலைப்புச் செய்தியாக, ‘தினமலர்’ வெளி யிட்டது.


வழக்குகள் வராமலா இருக்கும்?

எவ்வளவுதான் கவனமாகப் பத்திரிகை நடத்தினாலும், பத்திரிகை களை நீதிமன்றத்திற்கு இழுக்காமல் விடமாட்டார்கள். ஒவ்வொரு செய்தியின் மீதும் சட்டக் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து தெளிந்த பின்னர்தான் வெளியிடுவது என்று வந்தால், தினசரிப் பத்திரிகைகள் நடத்த முடியாது. நேர்மையும், உண்மையும், யார் மீதும் தனிப்பட்ட பகை உணர்வு கொஞ்சம் கூட இல்லாமையும் உள்ள பத்திரிகை யாளர்கள், யாரையும் வம்புக்கிழுக்கும் வகையில் செய்திகள் எதையும் வெளியிடுவது இல்லை.


ஆனால், பலருக்கு இம்மாதிரியான பத்திரிகைகளைக் கூட நீதிமன்றத்திற்கு இழுத்துப் பார்க்கலாமே என்ற எண்ணம் சில சமயம் உதயமாகிவிடுகிறது. நம் நாட்டில் வழக்குகள் தீர்ப்புக்கு வருவதற்குப் பல வருடங்கள் ஆகி விடுவதால், இதில் சிக்கிக் கொள்வானேன் என்று பத்திரிகைகள் திருத்தம், மறுப்பு என்று போட்டு விலகிக்கொள்ளவே நினைக்கின்றன.


‘தினமலர்’ யாருடைய மனத்தையும் நோகச் செய்யும் நோக்கம் கொண்டதில்லை. உண்மையை மட்டுமே அது வெளியிடும் என்ற உறுதியான கொள்கையை, டி.வி.ஆர்., கடைப்பிடித்ததால், வழக்குகள் வந்தால், சிறிதும் சோர்வடையாமல் அதன் இறுதிவரை சென்று, ‘நாம் நேர்மையாகவே நடந்துகொண்டோம் என்பதை நீதிமன்றமும் ஏற்கும் வகையில் துணிவுடன் செயல்பட வேண்டும்’ என்று செய்தித் துறையினரிடம் அடிக்கடி கூறும் டி.வி.ஆர்., அதை நிரூபித்தும் காட்டி உள்ளார்.


உதாரணத்திற்குச் சில கூறுங்களேன் என்று நீண்ட காலம் செய்தித்துறையில் பணியாற்றிய என்.ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது, அவர் கூறினார் . . .


ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் அழகியமணவாளன் என்ற ஊர். அதில் வசிப்பவர் அகமது மொய்தீன். இவர் 5,000 ரூபாய்க்கு மானநஷ்ட வழக்கு ஒன்றைத் ‘தினமலர்’ மீது திருநெல்வேலி சப் - கோர்ட்டில் தொடர்ந்தார். ‘ஊதுபத்தியில் அபினைத் தடவி இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கடத்தினார். இலங்கையில் அது பிடிபட்டது’ என்று வெளியான செய்திக்காக மொய்தீன் வழக்குத் தொடர்ந்திருந்தார். 10 ஆயிரம் ரூபாய் மான நஷ்டமும், 5,000 ரூபாய் செலவுத் தொகையும் இராமசுப்பையர், அகமது மொய் தீனுக்கு கொடுக்க வேண்டு மென்று சப் - கோர்ட் உத்தர விட்டது.
வாதி அமகது மொய்தீன், தான் ஒரு பெரும் பணக்காரர் என்றும், தனது கவுரவம் இச் செய்தியால் பாதிக்கப்பட்டு விட்டது என்றும் வழக்கில் கூறி யிருந்தார். சப் - கோர்ட் தீர்ப்பின் மீது ஜில்லா கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. ஜில்லா கோர்ட் அப்பீலைத் தள்ளுபடி செய்தது. ‘தினமலர்’ விடாமல் இரண்டா வது அப்பீலுக்கு ஹைகோர்ட்டில் தாக்கல் செய்தது.


இரண்டாவது அப்பீலில், ‘தினமலர்’ எழுப்பிய கேள்விகளை நீதிபதி இஸ்மாயில் ஒப்புக் கொண்டு, கீழ்க் கோர்ட் தீர்ப்பை ரத்து செய்தார். இது ஒரு மாதிரியான வழக்காகும். இந்தியா மட்டுமல்ல, இலங் கைக்கும் சென்று விவரங்கள் தேட வேண்டியது வந்தது. கீழ்க்கோர்ட்டு கள் இரண்டிலும், ‘தினமலர்’ இதழுக்குப் பாதகமான தீர்ப்பு. இத் தனையும் இருந்தும், ஐகோர்ட்டில் இரண்டாவது அப்பீலுக்குத் ‘தினமலர்’ சென்றது. இது ஒரு முக்கியமான வழக்கு என்பதற்கு காரணம், வழக்கில் ஒரு முக்கிய சட்டப் பிரச்னையைப் பல ஆண்டுகள், ‘தினமலர்’ இதழின் வழக்குகளில் ஆஜராகி வாதிட்ட என்.டி.வானமாமலை எழுப்பி இருந்தார்.


அவர் வாதம் இதுதான்:


‘மான நஷ்ட வழக்கு இங்கிலாந்தில் உள்ளது போலவே, இந்தியா வில் நடத்தப்படுவதால் இது இந்திய முறைக்கு ஏற்றதல்ல. இதை மாற்ற வேண்டும் என்று வெகு காலத்திற்கு முன்பே ஹைகோர்ட் டில் ஒரு தீர்ப்பு கூறப்பட்டிருத்தது. இதை இப்போதும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று வாதாடினார்.
இந்த வாதத்தை நீதிபதி இஸ்மாயில் ஏற்றுக்கொண்டார். வழக்கை இரத்து செய்ததோடு, கீழ்க் கோர்ட்டில் வசூலிக்கப்பட்ட செலவுத் தொகை, மானநஷ்ட ஈட்டுத் தொகை இவற்றை வாதி இராமசுப்பையருக்குத் திருப்பித் தர வேண்டுமென்றும் தீர்ப்பில் கூறினார்.


இப்போது வாதி, தன்னால் இந்தத் தொகையை மொத்தமாகக் கட்ட வழியில்லாத நிலையில் இருப்பதாகவும், மாதம் 100 ரூபாய் தருவதாகவும் நீதிமன்றத்தில் முறையிட்டார். இது பற்றி, இராம சுப்பையரை வழக்கறிஞர் என்.டி.வி., கேட்டபோது, ‘அவர் 100 ரூபாய் தவணை முறையில் தருவதானாலும் பரவாயில்லை; ஏற்றுக் கொள்வோம்’ என்று பெருந்தன்மையோடு கூறினார். இந்த இரண்டா வது அப்பீல் தீர்ப்பு லா ரிப்போர்ட்டில் வெளியாகி உள்ளது. சட்டக்கல்லூரியில் இத்தீர்ப்பை உதாரணத்திற்கு கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆறு, ஏழு ஆண்டுகள் நடைபெற்ற மிக முக்கியமான வழக்கு இது. இந்த வழக்கு, பத்திரிகையாளர்கள் அனைவரது கவனத்தையும் கவர்ந்த வழக்காகும்.


அகமத் மொய்தீன் தொடர்ந்த வழக்கு ஒரு தனிப்பட்டவர் வழக்கு. அரசும் பத்திரிகைகள் மீது வழக்குத் தொடர்வது உண்டு. இது மிகக் கடுமையானதாகும். உதாரணமாக தி.மு.க., அரசு, ‘தினமலர்’ மீது ஒரு வழக்குத் தொடர்ந்தது.
‘தேவகோட்டையில் கல்லுபரி மாணவர் ஒருவர் காணாமல் போனார்’ என்று பத்திரிகையாளர் கூட்டத்தில் தி.மு.க.,விலிருந்து விலகிய எம்.ஜி.ஆர்., கூறினார். அதுபோல ஒரு கர்ப்பிணிப் பெண்ணைப் போலீசார் உதைத்து இழுத்துச் சென்ற கொடுமையையும் அவர் கூற, அது செய்தியாக வெளியானது. இச்செய்தி சம்பந்தமாக திருநெல்வேலி, திருச்சி, ‘தினமலர்’ பதிப்புகளின் மீது புதுடில்லியில் உள்ள பத்திரிகை கவுன்சிலில் தமிழ்நாட்டு அரசு புகார் செய்தது.
ஆனால், இதை விசாரித்த கவுன்சில், தமிழ்நாட்டு அரசின் புகாரைத் தள்ளுபடி செய்ததுடன், ஒரு விதியை இப்போது பலமாக வலியுறுத்தியது. அது: ஒரு குறிப்பிட்ட செய்தியைப் பற்றி தகுந்தவர் மறுப்பு தெரிவித்தால், அதைப் பத்திரிகைகள் வெளியிட வேண்டும் என்பதே பத்திரிகை கவுன்சிலின் தீர்ப்பு. இதில் ஓர் அதிசயமும் உள்ளது. கல்லுபரி மாணவன் காணாமல் போன விவரம் குறித்து இராமநாதபுரம் கலெக்டர் கொடுத்திருந்த மறுப்பைத் ‘தினமலர்’ வெளியிட்ட பின்னரும், அரசு வழக்குத் தொடர்ந்தது.


செல்வாக்குள்ள தனி நபர்களானாலும், அரசே ஆனாலும், பத்திரிகைகளை அடிபணிய வைக்க முயல்வதை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் சில நேரங்களின் ஏற்பட்டு விடுகிறது. ஆனால், எந்தத் தனி நபர் மீதோ, அரசின் மீதோ, ‘தினமலர்’ தனிப்பட்ட விரோதம் காட்டுவதில்லை. ‘யாருடைய மனமும் புண்படக்கூடாது’ என்பதுதான் உறுதியான அடிப்படைக் கொள்கை. அடுத்து ஒரு வழக்கு டி.வி.ஆர்., காலத்திற்குப் பின் (ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி) நடைபெற்றது. முந்திய அகமத் மொய்தீன் வழக்கில் டி.வி.ஆர்., காட்டிய அதே பெருந்தன்மையை மீண்டும் இதில், ‘தினமலர்’ காட்டியதால் இந்த வழக்கைக் குறிப்பிடுவது அவசியமாகிறது.


கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டுப் பகவதி அம்மன் ஆலய நிர்வாக அதிகாரி தொடர்ந்த மானநஷ்ட வழக்கு இது. இதில், ‘தினமலர்’ எந்தத் தவறும் செய்யவில்லை. பாரதிய ஜனதா கட்சி பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி செய்தியாகக் கொடுத்திருந் தது. அதில் ஒரு தீர்மானம் ஆலய நிர்வாக அதிகாரியைக் குறை கூறி இருந்தது. அனைத்துத் தீர்மானங்களுடனும் செய்தி வெளியானது. நிர்வாக அதிகாரி இச்செய்தியால் தனது கவுரவம் பாதிக்கப்பட்டதாக வழக்கு தொடர்ந்தார். அகில இந்தியக் கட்சியான பாரதிய ஜனதாவின் தமிழக கிளையின் தீர்மானங்களைத்தான், ‘தினமலர்’ வெளியிட்டது. இதில், ‘தினமலர்’ தனிப்பட்ட முறையில் நிர்வாக அதிகாரியைக் குறை கூறவில்லை என்று அவரிடம் எடுத்துக் கூறியும் அவர் அதை ஏற்கவில்லை.


தக்கலை கோர்ட்டில் வழக்கு நடந்தது. வழக்கு என்று வந்ததால், ஆதாரங்களைத் தேட வேண்டிய கட்டாயம் வந்தது. இதில் நிர்வாக அதிகாரி மீது பல பிரச்னைகள் கிட்டிய போதும், அவற்றைக் கைவசம் வைத்துக்கொண்டு, ‘பாரதிய ஜனதா ஒரு அங்கீகரிக்கப்பட்ட அகில இந்திய அரசியல் கட்சி. ‘தினமலர்’ இதழுக்கு ஒரு தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது’ இவ்வாறு நீதிமன்றத்தில் நடுநிலையுடன் இரா.கிருஷ்ணமூர்த்தி வாதாடினார். நியாயத்தை உணர்ந்த நீதிபதி, வழக்கைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். ‘நிர்வாக அதிகாரி மாதச் சம்பளம் வாங்கும் அரசு அதிகாரி. ‘தினமலர்’ பெருந்தன்மை யுடன் செலவுத் தொகையை அவரிடம் வசூலிக்காமல் விட்டும் விடலாம். அது அவர்கள் தீர்மானிக்க வேண்டியது’ என தீர்ப்புக் கூறினார். தீர்ப்பு வந்ததும், வாதியிடம் செலவுத் தொகை வசூலிக்காமல், றிதினமலர்றீ விட்டுவிட்டது. மனிதாபிமானமும், பெருந்தன்மையும் டி.வி.ஆர்., காட்டிய பாதை. நம்மிடம் நியாயம் உள்ளது என்பதைக் காட்டவே நீதிமன்றம் சென்றோம். பழி வாங்க வேண்டும் என்று இருந்து விடக்கூடாது என்பதே டி.வி.ஆரின் கொள்கை.
 


எம்.ஜி.ஆரே திகைத்தார்

‘தினமலர்’ இதழுடன் எம்.ஜி.ஆர்., நெருக்கம் பற்றிப் பலர் பல விதமாக விமர்சித்தது உண்டு. எம்.ஜி.ஆர்., தனது கட்சியை நிலை நிறுத்த தமிழகமெங்கும் பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டிப் பேசிய எல்லாச் சுற்றுப் பயணங்களுக்கும், ‘தினமலர்’ தன் சொந்தச் செலவில்தான் சென்றுள்ளது. முதல்வராக இருந்தபோதும், எம்.ஜி. ஆரிடம் ஒரு சிறு சலுகையையும், ‘தினமலர்’ கேட்டதே இல்லை.


எம்.ஜி.ஆரையே ஒரு சமயம் டி.வி.ஆர்., திகைக்க வைத்தார். அதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.திண்டுக்கல் தேர்தலை ஒட்டி எம்.ஜி.ஆர். வெளிக்கொண்டு வந்த திரைப்படம், உலகம் சுற்றும் வாலிபன். தேர்தல் செலவிற்காகப் படத்தை விற்று, அந்தப் பணத்தையே திண்டுக்கல்லில் செலவு செய்தார். திண்டுக்கல்லில் தேர்தல் தீப்பிழம்பு பெரும் சுவாலையுடன் உனக்கா, எனக்கா என்ற மானப்பிரச்னையில் முழு மூச்சுடன் எரிந்து கொண்டிருந்தபோது கூடத் ‘தினமலர்’ விசேட நிருபர்களிடம், ‘உலகம் சுற்றும் வாலிபன் படம் பார்த்தீர்களா?’ என்று எம்.ஜி.ஆர்., அடிக்கடி கேட்பார்.


தேர்தல் முடிந்து, பெரும் வெற்றியும் பெற்று, அ.தி.மு.க., என்ற அரசியல் கட்சி தமிழ்நாட்டு மக்களின் அங்கீகாரமும் பெற்றது. திண்டுக்கல் தேர்தலில் இரண்டு மாதங்கள் தன்னோடு பெரும் சிரமங்களைத் தாங்கி பணிபுரிந்த, ‘தினமலர்’ நிருபர்களை ஒரு நாள் எம்.ஜி.ஆர்., அழைத்து கீழ்க்கண்ட தனது ஆசையை வெளியிட்டார்:  உலகம் சுற்றும் வாலிபன் படம் பெரும் வெற்றியுடன் ஓடுகிறது. இப்படத்தைப் பற்றி சரியான விமர்சனங்கள் வெளிவர வேண்டும் என்பது என் ஆசை. சும்மாவாவது புகழக் கூடாது. குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டும். அதுதான் வளர்ச்சிக்கு உதவும். ‘தினமலர்’ சுமார் ஐம்பது பக்கங்களில் இதற்காக ஒரு மலர் வெளியிட வேண்டும். அதில் தமிழகப் படத்துறையின் அதிபர்கள், திரைப்படத் தொழில் நுட்ப வல்லுநர்கள் மனம் திறந்து இருபத்து ஐந்து பக்கம் கட்டுரைகள் எழுத வேண்டும்.

என்னுடைய ரசிகர்கள் எல்லாருக்கும் அது கிடைக்க, அதன் விலை வாங்கும் சக்தியில் இருக்க வேண்டும். ஐம்பது பக்கம் சுமார் ஒன்றரை லட்சம் பிரதிகள் அச்சடிக்க என்ன செலவாகும் . . . ஐம்பது பைசா விலை வைத்தால் நஷ்டம் எவ்வளவு எனக் கேட்டுக் கணக்கு சொன்னால் அதை மீதமுள்ள இருபத்து ஐந்து பக்க விளம்பரம் மூலம் தங்களுக்குத் தந்து விடுகிறேன். இதனால் என் படத்தைப் பற்றி பெரிய அளவில் சரியான விமர்சனங்கள் கிடைக்கும். கட்டுரைகள், பேட்டிகள், இவற்றிற்கு நானே நேரடியாக ஏற்பாடு செய்கிறேன். விளம்பரங்களுக்கு ராமதாசிடம் கூறி முழுத் தொகையை யும் வாங்கி கொடுக்கச் சொல்கிறேன். உங்கள் அதிபரிடம் கலந்து சொல்லுங்கள். நான் பதினைந்து நாளில் வெளிநாடு செல்ல இருப்ப தால், அதற்குள் தகவல் தந்தால் எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு வெளிநாடு செல்ல முடியும் என்று கேட்டுக்கொண்டார்.


திண்டுக்கல் தேர்தல் செய்தி சேகரிக்கச் சென்ற, ‘தினமலர்’ நிருபர்களுக்கு, இதை கேட்டதும், மிகுந்த மகிழ்ச்சி. ஒரு திரைப்படத் திற்குத் தினசரிப் பத்திரிகை அளவில் ஐம்பது பக்கம் மலர். அதில் இருபத்து ஐந்து பக்கம் கட்டுரைகள், பேட்டிகள், படங்கள். இது ஒரு சாதனை அல்லவா என்று பெருமகிழ்ச்சியுடன் திருநெல் வேலிக்கு உடனே வந்து, டி.வி.ஆரிடம் கூறினார்கள்.


டி.வி.ஆர்., அனைத்தையும் கேட்ட பின், கூறினார் . . .


இது ஒரு புதிய முயற்சிதான். நீங்கள் எதிர்பார்ப்பது போல சாதனையும்கூட. ‘தினமலர்’ இதழுக்கு நல்ல விளம்பரம். திரைப்படத் துறையில் சகல பகுதியினரும், ‘தினமலர்’ இதழைப் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்புத்தான். நஷ்டம் ஏதும் இல்லை. இத்தனையும் இருந்தாலும் இம்மாதிரி ஒரு மலரை, ‘தினமலர்’ வெளியிடப் போவதில்லை. . . என்று கூறியதைக் கேட்டதும், அது ஒரு அதிர்ச்சியான முடிவாக இருந்தது. மேலும் டி.வி.ஆர்., தனது இந்த முடிவுக்கான காரணம் பற்றி விளக்குகையில் . . .


தனது ஒரு படம் பற்றி முழுமையான உண்மையான ஒரு விமர்சனம் வெளிவர வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் ஆசை; அது சரிதான். வேறு வகையில் இதைப் பரிசீலிக்க வேண்டும். ‘தினமலர்’ திண்டுக்கல்லில் நமக்கு வெற்றி தேடித்தர எவ்வளவோ கஷ்டங்களை, நஷ்டங்களைத் தாங்கியது. எந்தச் சிறு உதவியையும் பெற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அவர்களது நஷ்டத்தை நாம் இந்த வகையிலாவது குறைக்கலாம் என்ற அபிமானமும் ஒரு காரணமாக இருக்கலாம். உண்மையிலேயே அவர் எடுத்துக் கொண்ட இலட்சியத்திற்காகவே நாம் அவரை ஆதரிக்கிறோம். ஆதரவு என்பது இரு தரப்பிலும் ஓர் இலட்சிய அடிப்படையில் இருக்க வேண்டும். அதற்கு ரூபாய், அணா, பைசா மதிப்பளிக்கத் தொடங்கிவிட்டால் இலட்சியம் செத்துவிடும்.


மற்ற பத்திரிகைகளுக்கும் இதுபோல மலர் தந்திருப்பாரானால் அது சரிதான். ‘தினமலர்’ இதழுக்கு மட்டும் மலர், அதுவும் ஐம்பது பக்கம் போட்டால், ‘தினமலர்’ இந்த மாதிரியான ஒரு எதிர்பார்ப்பில் தான் எம்.ஜி.ஆரைத் தலையில் வைத்து ஆடியது என்று ஒரு தேவையில்லாத முத்திரை குத்த வாய்ப்பு ஏற்பட்டுவிடும். ‘தினமலர்’ இதழுக்குத் ‘தினமலர்’ என்ற ஒரு முத்திரைதான் இருக்க வேண்டும். நம்மிடம் எம்.ஜி.ஆர்., காட்டிய அன்பிற்கு நன்றி கூறி, இதுமாதிரி ஒரு காரியம் செய்வது இலாபகரமாக இருந்தாலும், இது எம்.ஜி.ஆர்., மற்றும், ‘தினமலர்’ பற்றி வேண்டாத விமர்சனத்தை உருவாக்கிவிடும் என்பதால் எங்களால் இதைச் செய்ய இயலாமல் இருக்கிறது என்று உடனே சென்னைக்குப் போய்எம்.ஜி.ஆரிடம் கூறிவிடுங்கள்’ என்று அனுப்பி வைத்தார்.


இந்த முடிவைக் கேட்ட எம்.ஜி.ஆர்., திகைத்து சில நிமிடங்கள் தீவிரமான யோசனையில் இருந்துவிட்டு, பின்னர் கூறினார் . . . டி.வி.இராமசுப்பையர் இப்போது எனக்கு மிக மிக உயர்ந்த மனிதராகத் தெரிகிறார். பத்திரிகையாளர்கள் யாராலும் இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தைக் கைவிட முடியாது. அவருக்குப் பணம் முக்கியமல்ல; இலட்சியமே முக்கியம். இப்படிப்பட்ட இலட்சியவாதியான பெரியவரிடம் இன்று போல் கடைசி வரை மதிக்கப்பட வேண்டுமென்ற கவலை இந்த இராமச்சந்திரனுக்கு இப்போது வந்து விட்டது. நான் அப்படியே நடப்பேன் என்பதை மட்டும் அவரிடம் கூறுங்கள் என்று மனம் நெகிழ்ந்து கூறினார்.

புதுவை விடுதலைப் ரோட்டத்தை நடத்தி வெற்றி கண்டவர். பிப்., 7, '11ல் புதுவையில் பிறந்தார். மாணவராக இருக்கும் போதே அவர்களது நலனுக்காகப் போராட்டங்களை நடத்தியவர். உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் தீவிரம் காட்டியவர். இளைஞராக இருந்தபோது அரிஜன முன்னேற்றப் பணிகளில் ஈடுபாடு காட்டியவர். காந்தியடிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

"சுதந்திரம்' என்ற இலக்கிய அரசியல் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தவர். தமிழகத்தில் முதன்முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை (1934ல்) ஆரம்பித்த தலைவர்களில் இவரும் ஒருவர். 1937ல் பிரான்ஸ் நாட்டுக்குச் சென்று பிரெஞ்சு இந்தியாவிற்கான புதிய தொழில் சட்டம் கொண்டு வந்தார். பிரெஞ்சு இந்தியப் போராட்ட காலத்தில் 1938ல் சென்னையில் 6 மாதம் தலைமறைவாக இருந்தார். சென்னை, புதுவை, வேலூர் சிறைகளில் வாசம் செய்தவர். 1944ல் பிரெஞ்சு அரசு இவரை நாடு கடத்தியது. அதையே பிரிட்டிஷ் அரசும் கடைபிடித்தது. 1950ல் பிரெஞ்சு அரசால் இவரது வீடு தீக்கிரையாக்கப்பட்டது. இரண்டாவது உலக யுத்தம் முடிந்ததும், இவர் மீது தடைகள் நீக்கப்பட்டன. நவ., 1, '54ல் புதுவை விடுதலை பெற்றது. '68 - '74ல் புதுவையில் அமைச்சராக இருந்தவர். ஏராளமான நூல்கள் எழுதிய இவர், புதுவையின் அனைத்து மக்களாலும் பெரிதும் போற்றப்படுபவர்.


புதுவை விடுதலைப் போராட்டம்

இந்தியா 1947ல் சுதந்திரம் பெற்றது. அதன் பின்னர் எட்டு ஆண்டுகள் கழித்தே பாண்டிச்சேரி இந்திய அரசுடன் இணைந்து சுதந்திர பூமியானது. இந்த வரலாறுகள், இதற்கான வீரமிக்க போராட்டங்கள், மக்கள் செய்த பெரும் தியாகங்கள் பற்றி இன்று கூட தமிழ் மக்களுக்கு அதிகம் தெரியாமல் இருப்பது வேதனைக்குரி யது. இந்த வீரமிக்க போராட்ட நிகழ்ச்சியை முன்னின்று நடத்தியவர் களே, பிரெஞ்சு இந்தியாவில் வாழ்ந்த தமிழ்ப் பெருங்குடி மக்கள்தான். அப்போராட்ட முன்னணித் தளபதி வ.சுப்பையா கூறுகிறார் . . .


தேசத்தின் கடைக்கோடிக் கடற்கரைப் பகுதி கன்னியாகுமரி. அதற்கு வெகுதுபரத்தில் பிரெஞ்சு ஆதிக்கத்தில் அடிமைப்பட்டுக் கிடந்த கடற்கரைப் பகுதி பாண்டிச்சேரி. பாண்டிச்சேரியில் என்ன நடக்கிறது என்று அருகில் உள்ள சென்னை வாழ் தமிழர்கள் கவலைப்படாதபோது, கன்னியாகுமரியில் வாழ்ந்த ஒரு தமிழர் கவலைப்பட்டார். தன்னால் முடிந்த உதவிகளை அந்தக் காலத்தில் புதுவைத் தலைவர்களுக்குச் செய்தும் இருக்கிறார். இப்போராட்டத்தில் முதுபெரும் தலைவர் வ.சுப்பையாவே, 1986ல் இதைக் கூறினார். அந்தத் தமிழர் டி.வி.ஆர்., தான் என்று தெரிந்தபோது மிகவும் வியப்பாக இருந்தது.


வ.சுப்பையா கூறுகிறார்.

அமரர் டி.வி.ஆருடன் எனது நட்பு 1933ல் இருந்து, தொடர்ந்து இருந்து வந்தது. எனது சுதந்திரப் போராட்ட நண்பர்களான ஏ.என். சிவராமன் (தினமணி), டி.எஸ்.சொக்கலிங்கம் (தினசரி) போன்ற நண்பர்களுடன், நானும் டி.வி.ஆரும் தூத்துக்குடியில் சந்தித்து நண்பர்களானோம். அப்போது, ‘காந்தி’ இதழின் அலு வலகம் சென்னை பிராட்வே பகுதியில் இருந்தது. அங்கும் நாங் கள் அடிக்கடி சந்தித்துப் பேசிய துண்டு. இந்திய விடுதலைக்கு மட்டு மன்றி, பிரெஞ்சு அரசிடமிருந்து புதுவையை மீட்கும் போராட்டத் திலும் எனக்கு மிகவும் உதவியவர் டி.வி.ஆர்., என்பதை நான் பெரு மையுடன் கூறிக்கொள்வேன். அப் பொழுது அவர் திருவனந்தபுரத் தில், ‘தினமலர்’ இதழைத் தொடங்கி, அங்கு நாஞ்சில் தமி ழர்கள் நலனுக்காகப் போராடி னார். தென் திருவிதாங்கூர் பகு தித் தமிழ் மக்களை ஒன்று திரட் டிப் பெரும் போராட்டம் நடத்தி அப்பகுதியைத் தமிழகத்துடன் இணைத்தார்.


அவருக்கு அரிஜன மக்களின் உரிமைகள், பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்வு ஆகியவற்றில் தணியாத ஆர்வம் இருந்ததை நான் நன்கறிவேன். இந்திய அரசும், பிரெஞ்சு அரசும் எனக்குக் கைது வாரன்ட் பிறப்பித்த நேரம். நான் சென்னையில் தலைமறைவாக இருந்தேன். பின் பிரதமர் பண்டித நேரு, புதுவைச் சுதந்திர இயக்கத் தில் பெரும் ஆர்வம் காட்டி, என்னுடன் பேச, வி.வி.கிரியைச் சென்னைக்கு அனுப்பினார். அதன் பலனாக இந்திய அரசு எனக்கு விதித்திருந்த கைது வாரன்டை விலக்கிக்கொண்டது.


இந்தச் சமயத்தில் புதுவை இயக்கத்திற்கு, இந்திய, குறிப்பாகத் தமிழகத்தின் ஆதரவு தேவை என்பதால், நான் தமிழகமெங்கிலும் சுற்றி ஆதரவு திரட்டினேன். அப்போது, எனக்கு மிகுந்த உதவிகளை டி.வி.ஆர்., செய்துள்ளார். டி.வி.ஆர்., மிகுந்த சொல் ஆற்றலும், செயல் திறனும் மிக்கவர். ஒருவருக்குச் செய்யும் உதவியை அடுத்தவர்க்குத் தெரியாமல் செய் யக்கூடியது போன்ற உயர்ந்த பண்புகளைக் கொண்டவர். பேட்டியின் போது, மே 30, ’88ல், அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுக் காணப்பட்டார். அவரது கண்களில் அடிக்கடி கண்ணீர் கசிந்தது. தன்னால் முழுமையாகக் கூற முடியவில்லை என்ற கவலை அவரை வாட்டியதா அல்லது டி.வி.ஆரின் உயர்ந்த பண்பும், ஆதரவும் தனது பழைய நினைவுகளைத் துபண்டி அவரை கண்ணீர் சிந்தச் செய்ததா என்பதை, நம்மால் யூகிக்க முடியாமல் அந்த முதுபெரும் தலைவரிடமிருந்து விடை பெற்றோம்.Advertisement
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X