டி.வி.ஆர்., பேசுகிறார்


டி.வி.ஆர்., பல கூட்டங்களுக்கு தலைமை வகித்து, தொடங்கி வைத்துப் பேசி இருக்கிறார். அவரது பேச்சு, படாடோபம் இல்லாமல் அமைதியாக இருக்கும். நீண்ட பிரசங்கங்களை அவர் நிகழ்த்தியது இல்லை. மக்களுக்குப் புரியும் வகையில் நறுக்குத் தெறித்தாற் போலத் தனது கருத்துக்களைக் கூறுவார். புதிய கருத்துக்கள் அதில் தென்படும். அவரது மேடைப் பேச்சு எப்படிப்பட்ட கருத்தோட்டத்தில் இருக்கும் என்பதைக் காட்டுவதற்காக இங்கே சில பேச்சுகள் மட்டும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.


பிரஜா உரிமை


கோட்டாரில் நடைபெற்ற பிரஜா உரிமைப் பயிற்சி முகாமில், ‘பிரஜா உரிமையும் நிர்வாகமும்’ என்ற தலைப்பில் பேசுகையில் குறிப்பிட்டதாவது . . . சிட்டிசன்ஷிப்றீ என்பது, பிரஜைகளின் கடமையும், உரிமையும்தான். காந்திஜி மக்களின் கடமைகளையே மிகவும் வற்புறுத்தி உள்ளார். ஆனால், நமது அரசியல் சட்டத்தில் கடமைகளை விட, உரிமைகளே அதிகம் வலியுறுத்தப்பட்டுள்ளது. காரணம், நாம் நீண்ட காலம் அடிமையாய் இருந்தது தான். முதலில் ஜாதி, மத சிந்தனைகள் தொலைந்தாக வேண்டும். அரசியலில் ஜாதியே முக்கியமாக இருக்கிறது. இதுமாறி, யார் அதிகாரத்திற்கு வந்தால் நன்மை கிடைக்கும் என்ற நோக்கம் வளர வேண்டும். பயமின்றி வாழ்வதற்கான நிலைமை அமைய வேண்டும். பேச்சுச் சுதந்திரம் இன்று கொஞ்சம் கூடி விட்டது. அமெரிக்காவில் பல்வேறு தேசத்தினர் குடியேறிய போதும், பள்ளிகளில் அமெரிக்கர் என்ற உணர்ச்சியை ஊட்டி வருகின்றனர். நமது தேசத்தில் சிறுவர்களுக்குத் தேசிய உணர்ச்சியை ஊட்ட வேண்டும். தமிழன், மலையாளி, தெலுங்கன், கன்னடன், மராட்டியன் என்ற பாகுபாடுகள் காணப்படுகின்றன. இந்தப் பாகுபாடுகள் குடும்பத்தில் தாய், தந்தை, மனைவி, சகோதரன், சகோதரி என்ற அளவோடுதான் நிற்க வேண்டும். (டிச., 12, ’54 ‘தினமலர்’)

இந்துமத மாநாடு

தெங்கம்புத்துபரில் நடைபெற்ற முதலாவது இந்து மாநாட்டிற்கு தலைமை வகித்துப் பேசுகையில்...  குறிப்பிட்ட காலத்தில் காரியங்கள் செய்யும் பழக்கத்தை நாம் மேல் நாட்டவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.அந்தப் பழக்கம் நகரங்களில் நடைமுறைக்கு வந்திருக்கிறது; கிராமங்களிலும் அது வர வேண்டும். படித்தவர்களைத் தவிர, படிக்காதவர்களும் அத்தக் காலத்தில் சமய அறிவு பெற்றிருந்தனர். மகாபாரதம் மற்றும் இதர புராணங்களைக் கிராமத்தில் மற்றவர்கள் படிக்கக் கேட்டுப் புரிந்துகொள்ளும் வழக்கம் இருந்தது. அப்பழக்கம் இப்போது நின்று போய் விட்டது. அதை மீண்டும் உருவாக்க வேண்டும்.


நமது தவறுகளாலும், ஜாதி வேற்றுமை காண்பிக்கும் மனோ பாவத்தாலும், இந்து மதம் அழியாது என்ற தப்பான காரணத்தாலும், நம்மவர்கள் கவலையில்லாமல் இருப்பதே இந்த மதம் தேய்பிறையா வதற்குக் காரணம். நமது மாநாடுகளுககுப் பிற மதத் தலைவர்களை அழைக்க வேண்டும். அது போலவே நாமும் பிற மதத்தினரின் கூட்டங்களுக்குச் செல்ல வேண்டும். ரஷ்யாவில் மதச் சார்பற்ற சர்க்கார் பரீட்சார்த்த முறையில் நடத்தப்படுகிறது. ஒரு தேசம் ஒரு சோதனையில் வெற்றி பெறப் பல்லாண்டுக் காலமாகும். ரஷ்ய தேசம் இந்தச் சோதனையில் வெற்றி பெற்றால் நாமும் அதைப் பின்பற்றலாம். இன்று மடாதிபதிகளின் போக்கும், நடவடிக்கைகளும் மதத்திற்கு அவமானமாக உள்ளன. நாஞ்சில் நாட்டில் இருந்து, திருவாவடுதுறைக்கு இரண்டாயிரம் கோட்டை நெல் வருமானமிருந்தும் அவர்கள் இங்கு செய்வது என்ன? இந்த நிலைகள் முற்றிலுமாக மாற வேண்டும். (மார்ச் 29, ’55, தினமலர்)


ஆறு அம்சத் திட்டம்


நாகர்கோவிலை அடுத்த சாந்தபுரத்தில் கிராம முன்னேற்ற சங்கத் திறப்பு விழாவிற்குத் தலைமை வகித்துப் பேசுகையில் . . . கிராமங்கள் முன்னேற நான் ஆறு அம்சத் திட்டம் தயாரித்துள் ளேன். கிராமங்கள் முன்னேற வேண்டுமானால், நல்ல சாலை வசதிகள் வேண்டும். இவை அனைத்தையும் அரசாங்கமே செய்து விடும் என எதிர்பார்ப்பதில் இலாபமில்லை. முடிந்தவரை கிராம மக்களே சாலைகள் அமைத்துக் கொள்ள முன்வர வேண்டும். மத்தியப் பிரதேச ராஜ்யத்தில் சிரமதானம், வேலை தானம் என்ற இயக்கம் ஆரம்பமாகி உள்ளது; இதை நாம் பின்பற்ற வேண்டும். நமது சட்டசபைப் பிரதிநிதிகளிடம் சரியான முறையில் வேலை வாங்க வேண்டும். இக்காலங்களில் நகரங்களில்தான் பள்ளிக்கூடங்கள் அமைக்கப்படுகின்றன. கிராமங்களிலும் பள்ளிக்கூடங்கள் அமைக்கப் பாடுபட வேண்டும். உயர்தரப் பள்ளிகளில் சென்று கல்வி கற்க மூன்று மைல், கல்லுபரியில் சென்று கற்கப் பதினைந்து மைல் இதற்கு மேல் போகக்கூடாது.


படித்துவிட்டு அரசாங்க உத்தியோகத்திற்காக அலையும் மனோ பாவத்தை இளைஞர்கள் விட்டுவிட வேண்டும். பலதரப்பட்ட தொழில்களையும் கற்று, நாம் நம் சொந்தக் காலில் நிற்கும் துணிவைக் கொண்டு வர வேண்டும். நல்ல மனிதனாக வாழும் ஆசையுடன் படிக்க வேண்டும்.  குடிதண்ணீர் வசதிக்கு அரசாங்கத்தை வற்புறுத்திப் பெற்றுக் கொள்ள வேண்டும். இத்துடன் முக்கடல் அணையை 10 அடி மேலும் உயர்த்தினால், தோவாளை, அகஸ்தீஸ்வரம் பகுதி மக்களுக்குக் குடிதண்ணீர் கிடைக்கும். அரசாங்கத்தை நல்ல காரியத்துக்குப் பயன்படுத்த வற்புறுத்தலாமே தவிர, எல்லாமே அரசாங்கம்தான் செய்ய வேண்டும் என்று இருந்து விடக்கூடாது.


கிராமங்களில் நல்ல சுகாதார வசதி வேண்டும். நகர டாக்டர்களை நாம் அன்புடன் கிராமங்களுக்கு அடிக்கடி அழைத்து வந்து பயன்படுத்த வேண்டும். கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் வித்தியாசமே இல்லை என்ற நிலை வரவேண்டும் . கிராமங்களில் இஷ்டம் போல வீடுகள் கட்டக்கூடாது. போலீசார் தயவு இல்லாமலே ஒவ்வொரு கிராமமும் முன்னேறுமானால், அதுதான் கிராம வாழ்க்கையின் நிம்மதி, முன்னேற்றம் எனலாம். (ஜூலை 13, ’55, தினமலர்)


தமிழுக்குப் பாரதி


திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தில் பாரதி விழாப் பொதுக்கூட்டத் தில் தலைமை வகித்து டி.வி.ஆர்., பேசுகையில் . . .
திருவனந்தபுரத்தில் பாரதி விழா கொண்டாடுவது மிகப் பொருத்த மானது. ‘எந்த நாடு தன் பெரியோர்களைப் போற்றுவதில்லையோ, அந்த நாட்டில் மேலும் பெரியோர்கள் தோன்றுவது அரிது’ என்று, பாரதியார் கூறி உள்ளார். தமிழ் மொழியில் இப்போது பாரதி சகாப்தம் நடைபெறுகிறது. பாரதி தமிழ்மொழியைத் தட்டி எழுப்பி னார். பாரதிக்கு முன் எவ்வளவோ பேர் தமிழுக்குப் பெரும் தொண்டாற்றியிருந்தாலும் கூட, வசன உரைநடையில் கங்கைப் பிரவாகமான ஒரு நிலையை உண்டாக்கியவர் பாரதிதான். அவர் ஒரு தேசியக் கவி மட்டுமல்ல . . . ஒரு மறுமலர்ச்சிக் கவியுமாவார்.


எல்லாக் கலைகளையும் தமிழ் நாட்டுக்குக் கொண்டுவர வேண்டு மென்று அவர் ஏங்கினார். தமிழ் மொழிக்கு ஒரு வழிகாட்டி பாரதி. நமது கவிமணி, பாரதியைப் பின்பற்றியவர்தான். கவிதையிலும், வசனத்திலும் ஒரு மேதையாகத் தோன்றினார் பாரதி. தமிழில் ஒரு குறை உண்டு. நகைச்சுவை இங்கு குறைவு. அந்தக் குறையைப் போக்கியவரே பாரதிதான். ஆங்கிலம் போலத் தமிழ் மொழி உயர்வடையப் பல துறைகளிலும் கடுமையாக உழைத்தவர். ‘வான மளந்த தனைத்து மளந்திடு வண்மொழிவாழியவே!’ என்று பாரதியார் எல்லை காட்டி உள்ளார். என்னைப் பற்றியும், என் பத்திரிகையைப் பற்றியும் நானே கூறிக் கொள்ளலாமோ . . . நாங்களும் அந்த வழிதான். (ஆக., 13, 55, ‘தினமலர்’)


நான் இந்தியன்


நாகர்கோவிலில் நடைபெற்ற சாரண இயக்க விழாவில் தலைமை வகித்துப் பேசும்போது கூறியதாவது . . .
இந்தியன் என்ற உணர்ச்சி ஒவ்வொரு இந்தியனிடமும் ஏற்படுவதே உண்மையான தேசபக்தியாகும். அத்தகைய கட்டுப்பாட்டின் கீழ் இந்த நாடு வர முடியவில்லையானால், 36 கோடி மக்கள் மட்டுமல்ல, 360 கோடி மக்கள் இந்த நாட்டில் வாழ்ந்தாலும் பிரயோஜனம் எதுவும் இல்லை. எனவே, இன்று இந்தியன் என்ற உணர்ச்சி ஒவ்வொரு பிரஜையின் உள்ளத்திலும் எழுச்சியடைவதன் மூலமே நமது நாடு ஒன்றுபட்டு வாழ முடியும். இந்தப் பெரும் பொறுப்பை நமது பள்ளிகள், தமது கல்வி மூலம் குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும். இவ்வாறான கட்டுப்பாடான தேசபக்தி எண்ணம் உருவாகச் சாரணர் இயக்கம் பயன்படவேண்டும்.


‘இந்தியர்’ என்ற உணர்ச்சி வளர்ச்சி அடைய இது உதவும். சொந்த நாடு, தேசியக் கொடி என்பனவற்றை மறந்து, அராஜகத்தைத் துபண்டிவிடும் மனப்பான்மை அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். கடுமையாக உழைத்து, இன்னும் 15 ஆண்டுகளில் வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கு ஈடாக இந்தியாவை உயர்த்துவது ஒவ்வொரு பிரஜையின் கடமையாகும். (செப்., 4, ’55, தினமலர்)


ஒரே சமுதாயம்


ராமவர்மபுரம் மாணவர் மாநாட்டைத் தொடங்கி வைத்து டி.வி.ஆர்., பேசுகையில் . . .


எந்த நாட்டிலும் யுத்தம் கூடாது. அது எங்கு உருவானாலும் நாமும் பாதிக்கப்படத்தான் செய்வோம். வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருகிறவர்கள், இவ்வளவு அறிவுள்ள மக்கள் 200 ஆண்டுகள் அன்னியர்களுக்கு எப்படி அடிமையாக இருந்தார்கள் என் ஆச்சர்யப்படுகிறார்கள். அறிவுக்கு நம்மிடம் பஞ்சமில்லை. ஜெர்மனியில் ஹிட்லர் வந்ததும், உலகம் அந்த தேசத்தைக் கண்டு நடுங்கியது. காரணம் ஹிட்லர் காலத்தில் அங்கு 16 மணி நேரம் வேலை செய்தார்கள். ஆனால், பிரான்ஸ் எப்படி இருந்தது . . . ஒரே கூத்து, நாடகம் என்றெல்லாம் போய், ஹிட்லரிடம் சிக்கித் தவித்தது. நாம் இப்பொழுது ஜெர்மனியைப் போல் முன்னேற வேண்டும்.


மாணவர்களைப் பற்றித் தலைவர்கள் கவலைப்படுவதே இல்லை. அவர்களுக்கு எப்படியாவது எம்.எல்.ஏ., ஆனால் போதும் என்ற நினைப்பு வந்துவிட்டது. வெள்ளையன் ஏற்படுத்திய இந்தக் கல்வி முறையை மாற்றித் தொழில் கல்வி, என்.சி.சி., பயிற்சி என்று ஆக்க வேண்டும். இனிமேலாவது நாம் எல்லாரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்ச்சியில் வேகமாக உலகில் முன்னேற வேண்டும். எல்லாச் சீரழிவிற்கும் ஒரே காரணம் ஜாதிகள்தான். ஜாதிகள் இல்லாத ஒரே சமுதாயத்தை உருவாக்க மாணவர்கள் இரவு, பகலாக உழைக்க வேண்டும். அது ஒன்றுதான் நமது நாட்டை வாழ்விக்கும். (ஏப்., 12, ’56, ‘தினமலர்’)


பொதுமொழி


குலசேகரன்புதுபர் பயிற்சிப் பள்ளியின் நவம்பர் தினக் கொண் டாட்டத்தில் தலைமை வகித்துப் பேசும் போது . . .
பத்துப் பதினைந்து ஆண்டுகள் கஷ்டப்பட்டு ஆங்கிலம் படித்த எத்தனை பேருக்குச் சரியாகப் பேசவும், எழுதவும் முடிகிறது . . . ராஜாஜி போன்ற அறிஞர்கள் கூட, ஆங்கிலம்தான் வேண்டுமென வற்புறுத்துவது சரியா . . . நாம் தொடர்ந்து ஆங்கிலத்தைக் கற்பதால், நாம் அடிமையாக இருந்ததற்கு வேறு ஞாபகச் சின்னம் தேவை யில்லாமல் ஆகிறது. ஆங்கில ஆட்சி ஏற்படுவதற்கு முன், நம் நாட்டில் வானநூல், ஜோதிடம், வைத்தியம் இவை எல்லாம் இல்லாமலா இருந்தன . . . நமக்கெனப் பொதுவான தேசிய மொழி மிகவும் அவசியம். (நவ., 11, ’57 ‘தினமலர்’)


அரிஜனங்கள்


பக்திபுரத்தில் நடைபெற்ற அரிஜனத் தினவிழாவிற்குத் தலைமைத் தாங்கி டி.வி.ஆர்., பேசுகையில் . . .
காந்தியடிகளுக்கு முன்னால் தீண்டாமையை ஒழிக்கவும், தாழ்த்தப் பட்ட மக்களை முன்னேற்றவும் முயற்சிகள் நடைபெற்ற போதிலும், காந்திஜியின் காலத்தில்தான் பிரச்னைக்குப் பரிகாரம் காண முடிந்தது. இன்றைய ஆட்சியில் உள்ள காந்திஜியின் வாரிசுகள், அரிஜன முன்னேற்றத்திற்கு பல உதவிகள் புரிந்து வருகிறார்கள். இந்த வாய்ப்பை அரிஜனங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உதவி நிரந்தரமாகக் கிடைக்கும் என்று அரிஜனங்கள் ஏமாந்து விடக்கூடாது. (நவ., 4, ’58,தினமலர்)


நூலகங்கள்


கன்னியாகுமரி மாவட்ட நுபலகப் பிரதிநிதிகளின் மாநாடு நாகர்கோவிலில் கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டை ஆரபித்து வைத்து டி.வி.ஆர்., பேசுகையில். . .


பலகங்களுடன் நீண்டகாலமாகத் தொடர்பு கொண்டவன் நான். இப்போது கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்து விட்டது. சட்டங்களையும், நடைமுறைகளையும் ஒருமைப்படுத்துவதன் பெயரால் நமது மாவட்ட நுபல் நிலையங்களின் மான்யத் தொகைக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது. என்னைக் கேட்டால் இங்குள்ள நூல் நிலையங்கள் பெற்று வரும் மான்யத் தொகையே சென்னை ராஜ்ய நுபல் நிலையங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். நூலகக் கட்டடங்கள் முப்பது ஆயிரம், ஐம்பது ஆயிரம் செலவில் கட்டுவதை விட, இந்த ரூபாயில் நுவல்களைச் சேகரித்து வைப்பதுதான் நல்லது. செய்திகளைத்தான் பத்திரிகைகள் தரும்; நுபல்களோ உயரிய கருத்துக் களை வழங்கும்.சென்னைப் பத்திரிகைகளின் தலையங்கங்கள், உலக விவகாரங் களில் காட்டும் அக்கறையை, ஊர்ச் செய்திகளில் காட்டுவதில்லை. இந்த முறையில் இனி மாற்றம் வர வேண்டும்.


நான் இங்குள்ள நுபல் நிலையங்களுடன் 17 வருடத் தொடர்பு உடையவன். ஆகவே, நுபலகத்தின் அவசியம் குறித்து நான் அதிக அக்கறை காட்டுவதில் ஆச்சர்யப்படுவற்கு ஏதுமில்லை. (ஜூலை 28, ’58 ‘தினமலர்’)


தபால் தலையில் திருவள்ளுவர்


சிவகாசி திருவள்ளுவர் விழாவிற்குத் தலைமை தாங்கிப் பேசுகையில் . . .


பாரத அரசாங்கம் வெளியிடும் தபால் முத்திரைகளில் திருவள்ளு வர் படமும் பதித்து வெளியிட வேண்டும். தமிழர்களாகிய நாம் இதை வற்புறுத்த வேண்டும். உலகம் புகழும் ஒரு பெரும் கவிஞர் படம் தபால் தலைகளில் இடம் பெறாதது ஒரு குறைதான். திருவள்ளு வரின் குறள் வேதத்திற்குச் சமமானது. வள்ளுவர் பிறந்தது கி.மு.,வா -கி.பி.,யா என்ற சர்ச்சையை ஆராய்ச்சியாளர்களிடம் விட்டு விட்டு, குறள் மூலம் பயன்பெற முயற்சிப்பதே மேல். தமிழ் எழுத்து வடிவில், முதல் எழுத்து, ‘அ’ கடைசி எழுத்து, ‘ன்’ வள்ளுவரின் - முதல் குறள், ‘அ’ என்ற எழுத்தில் தொடங்கி, 1330வது குறள், ‘ன்’ என்ற எழுத்தில் முடிகிறது. குறளில் கூறியபடி நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். (டிச., 5, ’58, ‘தினமலர்’)


நமது சமயம்


இரணியல் ஏழூர் செட்டு சமுதாய ஆலயத் திருவிழாவின்போது நடைபெற்ற இந்து மத மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசுகையில் . . .


நமது மதம் எவ்வளவு உயர்ந்தது என்றாலும், அதை நாம் காப்பாற்றவில்லையானால், அது நம்முடைய தவறாகவே முடியும். இந்துக்கள் என்றால் நாம் எல்லாரும் ஒன்று. தீண்டாமை நம்மை விட்டுப் போய்விட்டது. அதேபோல, நம் மத்தியில் குழப்பத்தை சிருஷ்டித்து வரும் ஜாதி வித்தியாசமும் விரைவில் அழிந்து போக வேண்டும். நமது நாடு அடிமைப்பட்டிருந்த காலத்தில், நமது மதத்தின் உயர்ந்த கோட்பாடுகளை வெள்ளையர்கள் உதாசீனப்படுத்தி வந்தார்கள். விடுதலை பெற்ற பின் நமது மதத்தின் உயர்வைக் கருதி, இந்த லட்சியங்களினால் கவரப்பட்டுப் போட்டி போட்டுக்கொண்டு இங்கே வருகிறார்கள். அனைத்துத் துறைகளிலும் இன்றைய தேவை, முன்னேற்றம்தான். நமது மதத்துறையிலும் முன்னேற்றம் காண முழுழூச்சுடன் பாடுபட வேண்டிய காலம் இது.(மே 2, ’59, ‘தினமலர்’)


இந்தி

கன்னியாகுமரியில் நடைபெற்ற தட்சிணபாரத இந்தி சபாவின் செமினாரைத் தொடங்கி வைத்து டி.வி.ஆர்.,  பேசுகையில் . . .


தமிழ்நாட்டில் இந்தியைப் பற்றிப் பேசினால் சிலர் உண்மையாகவே எதிர்க்கின்றனர்; சிலர் போலிக் காரணங்களுக்காக எதிர்க்கின்றனர். உண்மையான ஐயப்பாடு மற்றும் பயமுடையோர்களின் மனோ நிலையை மாற்ற முயல வேண்டும். இந்தியை எதிர்க்கிற ராஜாஜி கூட, ஆங்கிலம் என்றுமே பாரதத்தின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று கூறவில்லை. குழந்தை வளர வளரத் தாய் தந்தையர் பொறுப்பை ஒப்படைப்பது போல, இந்தி வளர வளர ஆங்கிலமும் தானாக மறையும், தமிழையும், வங்க மொழியையும், அம்மொழி பேசும் மக்கள் விரும்பி படிக்கப் பாரதியாரும், இரவீந்தர நாத் தாகூரும் தூண்டினர். அதுபோல இந்தியையும் மக்கள் விரும்பிப் படிக்கும்படி செய்யக் கவிகள் தோன்ற வேண்டும். அன்றுதான் மக்கள் தாமாக இந்தியைப் படிப்பார்கள்.


மராமத்து இலாகா


கன்னியாகுமரி மாவட்ட நீர்ப்பாசனம் பற்றி இறச்சகுளத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் டி.வி.ஆர்., தலைமை  வகித்தார். அப்போது அவர் வெளியிட்ட சில கருத்துக்கள்...


கன்னியாகுமரி ஜில்லாவில் ஏராளமாக மழை பெய்கிறது. ஆனாலும், ஐந்து வருடத்திற்கு ஒரு தடவை தண்ணீர்த் தட்டுப்பாடு காரணமாக நிலம் கருகிவிடுவது வழக்கமாகிவிட்டது. அது ஏன் என்பதை நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். ஆண்டொன்றுக்கு சாரசரி 60 முதல் 70 அங்குலம் மழை பெய்தும்கூட இந்நிலை ஏன்? இங்குள்ள ஏராளமான குளங்கள் பராமரிப்பு இல்லாமல் போகிறது. முழுதும் அரசையே நம்பி இருக்காமல், குளங்களைப் பராமரிக்க விவசாயிகள் முன் வருவது அவசியம். இங்கு நம்மிடையே மந்திரி பக்தவச்சலமும் வந்துள்ளார். அவரிடம் ஒரு வேண்டுகோள்: பொது மராமத்தும் விவசாயமும் இணைந்து போவதன் மூலமே விவசாயம் சீர்படும். ஆகவே, இந்த இரண்டு இலாகாக்களும் ஒரே அமைச்சர் வசம் இருப்பதுதான் விவசாயம் சீர்பட வாய்ப்பளிக்கும். அமைச்சரவை இவற்றை இனி, கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். (மார்ச் 9, 59, ‘தினமலர்’)


கதர்


திருநெல்வேலியில் காந்திய கலாச்சாரக் கழகம் நடத்திய கதர் விழாவிற்குத் தலைமை வகித்து டி.வி.ஆர்.,  பேசுகையில் . . .


நம்முடைய நாட்டில் பெரும்பான்மையோர் விவசாயிகள். இவர் களுக்கு வருடத்தில் ஆறு அல்லது ஏழு மாதங்களுக்கு மேல் விவ சாயம் செய்ய வாய்ப்பு இல்லை. இந்தக் குறையை இப்போதைக்குத் தீர்ப்பது கதர்த் தொழில் ஒன்று மட்டுமே. கதர் ஒரு உப தொழில். நாம் நாகரிகப் பாதையில் முன்னேற வேண்டிய சூழ்நிலையில், பழைய கால முறையில் செல்வதா என்ற விவாதம் உள்ளது. நாற்பது கோடி மக்களுக்கு வேறு தொழில் வாய்ப்புகளை உருவாக்காத வரையில், நாம் கதர் இயக்கத்தை விட்டு விடுவது சரியல்ல. (அக்., 10, 59, ‘தினமலர்’)


நாடகம்


தச்சநல்லுபர் முல்லை நாடக மன்ற ஒன்பதாவது ஆண்டு விழா விற்குத் தலைமை தாங்கி டி.வி.ஆர்., பேசுகையில் . . .
நாடகம் என்பது முற்காலத்தில் தெருக்கூத்தாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது அது கலையாக மதிக்கப்படுகிறது. முன்பெல்லாம் நாடகங்களில் ஜமீன்தார், பணக்காரர், பண்ணையார், ராஜாக்கள் கதாபாத்திரங்களாவே வருவார்கள். இன்று, விவசாயி, தொழிலாளர், நெசவாளர்கள் கதாபாத்திரங்களாகி விட்டனர். காலத்தில் வளர்ச்சியை ஒட்டிச் சிந்தனை போக்குகளும், கலையும் மாறுகிறது. நல்ல நடிகர்களை உருவாக்கி திரை உலகிற்கு நாடகம் வழங்க வேண்டும். இல்லை என்றால் நடிப்புக்கலை ஒரேயடியாக அஸ்தமித்து விடும். திரை உலகின் தாய் வீடு நாடகம்தான். (நவ., 17, றீ59, ‘தினமலர்’)


கேரளாவைப் பின்பற்றுக


சிவாஜி கணேசன் படிப்பகத் திறப்பு விழாவில் டி.வி.ஆர்., பேசுகையில் . . .


கேரளாவில் நூற்றுக்கு தொண்ணுபறு பேர் படித்துள்ளார்கள். அதனால், கேரளாக்காரர்கள் கையில் டில்லி அரசாங்கம் உள்ளது. இந்தக் குறையைப் போக்கப் படிப்பகங்கள் முன்வர வேண்டும். அறிவு வளரப் புத்தகங்களை வீடு வீடாகக் கொண்டுபோய்க் கொடுத்துப் பெண்களைப் படிக்க வைக்க வேண்டும். கேரளாவில் இம்மாதிரிப் படிப்பகங்களுக்கு அரசு நிதி உதவுகிறது. சென்னை அரசாங்கம் இதில் பின் தங்கி இருக்கிறது. இந்தக் குறையை அரசு போக்கி, கேரளாவைப் பின்பற்றி, படிப்பகங்கள் ஏராளமாகப் பெருக வாய்ப்பளிக்க வேண்டும். (டிச., 21, 59, ‘தினமலர்’)


இந்தியும், தமிழும்


திருநெல்வேலி இந்திப் பிரசார சபாவின் 14வது மாநாட்டைத் தொடங்கிவைத்து டி.வி.ஆர்., பேசுகையில் . . .
ஒரு மொழியைச் சரியாகக் கற்றுக்கொண்டவர்களுக்கு மற்றொரு மொழி கற்பது கஷ்டமல்ல. ஒரு மொழியை கற்பது மற்றொரு மொழிக்கு உதவி செய்யும். தமிழநாட்டில் இந்தி பரவ இந்த இரு மொழிகளுக்கும் ஒரு பொதுத் தொடர்பு இருக்க வேண்டும். தமிழில் உள்ள இலக்கணம் சிறந்தது. இந்தி இலக்கணம் சமஸ்கிருதத்தைத் தழுவியது. ஜனநாயக ஆட்சியில் ஒரு மொழியைத் திணிப்பது சரியல்ல. ஆனால், அபிமானம் மூலம் இதை வளர்த்துக் கொள்ளலாம். கல்லுபரி மாணவர்கள் இந்தியா முழுவதும் சுற்றிப் பார்க்க அரசு வகை செய்வது அவசியம். இதனால் ஏற்படும் செலவை அரசாங்கம் பெரிதாகக் கருதக்கூடாது. இதன் மூலம், தேசத்தைப் பற்றிய விசாலமான அறிவும் மற்ற இந்திய மக்களுடன் தொடர்பும் ஏற்படும்.


பெரிய அதிகாரிகள் சொந்த மாநிலத்திலேயே வேலை பார்க்க அனுமதிக்கக் கூடாது. அதிகாரிகள் பரிவர்த்தனை, மொழி பிரச்னையை யும் பிராந்தியப் பிரச்னைகளையும் குறைக்கும். இவையே தேசிய ஒருமைப்பாட்டிற்கு வழிவகுக்கும் என்ற நான் கருதுகிறேன். (டிச., 23, ’59 ‘தினமலர்’)


தியாகையர்


நெல்லை சங்கீத சபாவில் தியாகராஜ உற்சவத்தில் கலந்துகொண்டு பேசுகையில் குறிப்பிட்டதாவது . . .
சங்கீதம், மொழிகளைக் கடந்து மக்களை வசீகரிக்கும் சக்தி படைத்தது. மக்கள் ரசிக்கும் வண்ணம் பாடல்கள் அமைந்துவிட்டால் அங்கு மொழிப் பிரச்னை தலை தூக்குவதில்லை. தியாக பிரம்மத்தின் பாடல்கள் மக்களைக் கவர்ந்துவிட்டதால் எல்லா மொழியினரும் அதைப் பாடுகிறார்கள். அவரைப் போன்றவர்கள் அடிக்கடி தோன்றுவதில்லை. இப்படிப் பட்ட மகான்களைப் போற்றுவது மூலமே மேலும் மகான்கள் இங்குத் தோன்ற முடியும் என்று பாரதி கூறி உள்ளார். (ஜன., 20, ’60, ‘தினமலர்’)


நமது பீஷ்மர்


ஆழ்வார்திருநகரி திருவள்ளுவர் கழகத்தில் தலைமை வகித்துப் பேசும் போது கூறியதாவது. . .


திருவள்ளுவருக்காக ஆங்காங்கே கழகங்கள் தோன்றி இருப்பது வரவேற்கத்தக்கது. ‘வடமொழியில் பீஷ்மர் எவ்விதமோ, அவ்விதம் திருவள்ளுவர் நமது பீஷ்மர் என்று கூறி உள்ளார், வ.வெ.சு.ஐயர். திருக்குறளுக்கு ஏராளமான உரைகள் வந்துள்ளன. உரை எழுதினாலே பலர் பாராட்டப்படும் அளவிற்கு குறள் பெருமைப்பட்டதாகும். குறளில் ஒரு சொல்லை எடுத்துவிட்டால் அங்கு வேறு ஒரு சொல்லைப் பயன்படுத்த முடியாது. (மே 25, ’60, ‘தினமலர்’)


நெசவாளர்


புளியங்குடி யூனியன் நெசவுத் தொழிற்சாலையின் முதலாவது சங்கக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் . . .
மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்பவர்கள் நெசவாளர்கள். மில் தொழிலாளர்களுக்குச் சம்பளம், போனஸ் முதலானவற்றைச் சட்டப்பூர்வமாக அரசாங்கம் கொண்டு வந்திருப்பது போல, நெசவுத் தொழிலாளர்களுக்கும் கொண்டுவரவேண்டும். அதே சமயம், நெசவாளர்களும் காலப் போக்கில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைத்து, வேறு தொழில்களுக்கு அனுப்பிவிட வேண்டும். ஏனெனில், விசைத்தறிகள் இனி அதிகம் வந்து விடும். தவிர, நவீன மயமாக்கப்பட்ட மில் துணிகள் இனி ஏராளமாக வந்து குவியும். அப்போது நெசவுத் தொழிலுக்குப் பெரும் நெருக்கடி வரலாம் என்று அஞ்சுகிறேன். காலத்திற்குத் தக்கவாறு நவீனமான முறையில் நெசவுத் தொழிலை மாற்றியமைக்க நெசவாளர்கள் இப்போது தயாராக வேண்டும். (நவ., 13, ’61, ‘தினமலர்’)


தமிழிலேயே பாடங்கள்


பரிவில்லாக்கோட்டை அரசினர் ஆதாரப் பயிற்சிப் பள்ளி முத்தமிழ் விழாவிற்குத் தலைமை வகித்துப் பேசுகையில் . . .
முத்தமிழ் என்பது இயல், இசை, நாடகம் என்ற பிரிவுகள் கொண்டது. தமிழில் இயல் நுபல்தான் தற்போது உள்ளது. இசை நுபல் அவ்வளவாக இல்லை. சிலப்பதிகாரம் மட்டுமே நாடக நுபல். இயலில் நாம் நன்கு வளர்ந்துள்ளோம். முன்பு தமிழில் வசன நுபலே கிடையாது. கவிதையாகவேதான் எல்லாம் இருந்தன. கவிதையை எளிய நடையில் இராமலிங்க அடிகளும், பாரதியும் எழுதித் தமிழை வளர்த்தார்கள். இசை என்பது இன்னும் உயரிய ரகத்தில் வரவில்லை. இவை எல்லாம் நமக்குக் கைகூடத் தமிழிலேயே கல்லுபரிப் பாடங்கள் உட்பட எல்லாம் போதிக்கப்பட வேண்டும். மாதா, பிதா, குரு, தெய்வத்திற்குச் செய்யவேண்டிய கடமையைப் போல, தாய் மொழிக்கு நாம் செய்ய வேண்டிய கடமை மிக அதிகம். (டிச., 18, ’62, ‘தினமலர்’)


கன்னியாகுமரி மாவட்டத்திற்குத் தொழிற் கல்லுபரி


வடசேரி அரசினர் உயர்நிலைப் பள்ளியின் புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்துப் பேசுகையில் டி.வி.ஆர்., குறிப்பிட்டதாவது . . .


சுமார் இருபதுஆண்டுகளுக்கு முன் கட்டாயக் கல்வித் திட்டம் அகஸ்தீஸ்வரம், தோவாளைத் தாலுகாக்களில் புகுத்தப்பட்டபோது, அந்தக் கல்விக் குழுவில் நானும் ஒருவனாக இருந்தேன். நான் இப்பள்ளியில் படித்தவன். இப்பள்ளியின் சேவை கடந்த 100 வருடங் களாக இப்பகுதியில் இருந்து வருகிறது. கட்டாயக்கல்வி இப்பகுதியில் புகுத்தப்பட்டு, இந்த இருபது வருடங்களில் அதன் பெரும் வளர்ச்சியை நான் பார்க்கிறேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் எங்கு திரும்பினா லும் பள்ளிகள் தோன்றி உள்ளன. கல்வி அறிவுள்ள மக்கள் இங்கு அதிகமாக உள்ளனர். கேரளாவிலேயே நாம் இருந்திருந்தோமானால், இவ்வளவு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்காது. வெறும் கல்வி மட்டுமல்லாது, இங்குத் தொழிற்கல்விக்கும் முக்கியத் துவம் தரவேண்டும். தொழிற் கல்லுபரிகளை இங்கு உருவாக்க அரசு முன்வரவேண்டும். இதுவே எனது வேண்டுகோள். (ஜன., 29, ’63, றிதினமலர்’)


தங்கம்


நாகர்கோவில் நகைத் தொழிலாளர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி நடைபெற்ற அர்த்தாலுக்குப் பின் மாலையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் டி.வி.ஆர்., பேசுகையில் . . .


பொருளாதார நிபுணர்கள் இந்த நாட்டில் 4,000 கோடி ரூபாய்க்குத் தங்கம் இருக்கிறது என்கிறார்கள். இதை வெளிக்கொண்டு வருவது எளிதான காரியம் அல்ல. இவை தங்கப் பாளங்களாக கோடீஸ்வரர் களின் வீடுகளில் புதைந்துவிட்டன. பதுக்கப்பட்ட தங்கத்தை அரசு வெளிக்கொண்டுவர வேண்டும்; இனி நகை செய்யத் தங்கம் கிடையாது என்று அரசு சொல்லிவிட்டது. நுணுக்கமான வேலை செய்யும் நகைத் தொழிலாளர்கள் இப்போது வாழ்வா சாவா என்ற நிலையில் தவிக்கிறார்கள். இப்போது தொழில் அற்றுப் போன லட்சக்கணக்கான தொழிலாளர் களுக்கு மாற்று வேலையை எப்படி அரசு தரப் போகிறது என்பது புரியவில்லை. கருஞ்சந்தையில் ஏராளமான தங்கத்தைப் பதுக்குபவர்களை அரசு கடுமையாகத் தண்டிக்கவேண்டும். சிறு தொழில் செய்யும் இந்தத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பும், வேலை உத்திரவாதமும் அரசு தர முழுக் கடமைப்பட்டுள்ளது. (பிப்., 28, ’63, தினமலர்)


கிராமங்களில் மில்


ஏர்வாடி பொதுநல மன்றத்தில் டி.வி.ஆர்., பேசுகையில் . . .


உங்கள் பகுதியில் தொழில் வாய்ப்புப் பெருக ஒரு மில் வேண்டு மென்று கோரி உள்ளீர்கள். பெரிய பெரிய தொழில்களை எல்லாம் நகரங்களில்தான் உருவாக்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறார்களோ தெரியவில்லை. எல்லாவசதியும் கொண்ட இதுபோன்ற கிராமங்களில் பெரிய பெரிய தொழில்கள் தொடங்கவேண்டும். விவசாயம் ஒன்றையே தொழிலாகக் கருதி வந்த மக்களிடம் இதனால் தொழில் அறிவு ஏற்படும். கிராம மக்களுக்கு அதிகமான வேலை வாய்ப்பும் கிட்டும். கிராமாந்திரப் பொருளாதாரமும் உயரும். இவற்றைக் கருத்தில் கொண்டு, வாய்ப்பும், வசதியும் உள்ள கிராமங்களில் பெரிய தொழிற் சாலைகள் அமைக்கும் கருத்துக்கு அரசு முன்வரவேண்டும். (ஜூன் 3, ’63, ‘தினமலர்’)


வேலை வாய்ப்பிற்காகக் கல்வியா?


ஏர்வாடி போர்டு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி இலக்கிய விழாவிற் குத் தலைமை தாங்கி டி.வி.ஆர்., பேசுகையில் . . .
நான்குநேரி தாலுகாவில் இருபது வருடங்களுக்கு முன் ஓர் உயர்நிலைப்பள்ளி கூடக் கிடையாது. இப்போது இருபத்து இரண்டு உயர் நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த எண்ணிக்கை கல்வியின் வளர்ச்சியைக் காட்டுகிறது. மாணவர்கள், எங்கோ யாருக்கோ வேலை பார்த்து முதல் தேதி சம்பளம் கிடைக்கும் என்பதற்காக படிக்கக்கூடாது. எல்லாருக்கும் அரசாங்கத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இப்படி நினைப்பதே தவறு. படித்த எல்லாருக்கும் வேலை கொடுப்பது அரசாங்கத்தால் சாத்திய மில்லை. ஆகவே, மாணவர்கள் தங்கள் சொந்தக்காலில் நிற்பதற்காகவே நமது கல்வி அமையவேண்டும்.


மாணவர்கள் உலகம் எவ்வளவு வேகமாக முன்னேறி வருகிறது என்பதைப் பார்க்கவேண்டும். லண்டன் போக முன்பு முப்பத்தோரு நாட்கள் தேவை. இப்போது எட்டு மணி நேரத்தில் போய் விடலாம். இந்த முன்னேற்றங்களுக்குத் தக்கவாறு நாமும் உலகத்துடன் போட்டி யிட்டு விஞ்ஞானம், தொழில்நுட்பம் இவற்றில் வளரவேண்டும். இந்த நோக்கில் நமது கல்வி அமையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. (ஏப்., 11, ’64, ‘தினமலர்’)


பிரிவினை வாதம்


திருநெல்வேலியில் நடைபெற்ற தோத்திர சாத்திர மாநாட்டில் பேசுகையில் . . .


இந்தியாவில், வடநாடு, தென்னாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. இமயம் முதல், கன்னியாகுமரி வரை உள்ள மக்களில் எந்த வித்தியாச மும் கிடையாது. காசியில் அமைக்கப்பட்ட கோயில் அமைப்பில் நெல்லையில் ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது. இது இந்தியா ஒன்றே என்பதை எடுத்துக் காட்டுகிறது. (ஆக., 22, றீ64, ‘தினமலர்’)


அனுமன்


அனுமன், சொல்லின் செல்வன் என்பது மட்டுமல்ல, சிறந்த ராஜதந்திரி என்று சுந்தரகாண்ட பிரவசன ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு பேசுகையில் டி.வி.ஆர்., கூறினார். அவர் மேலும் கூறுகையில் . . .


இராமாயணத்தில் சுந்தர காண்டம் முக்கியமானது என்று கூறுவர். இந்தக் காண்டத்தின் முக்கியத்துவமனைத்தும் அனுமனையே சேரு கிறது. அனுமன் சிறந்த அறிவாளி, ராஜதந்திரி, சமயோஜிதமாகப் பேசி, காரியத்தைச் சாதிக்கும் வல்லமை பெற்றவர். இராமாயணம், வைணவ மதத்தைச் சார்ந்ததாகப் பலர் கூறினாலும், சைவர்களும் விரும்பி சுந்தரகாண்டம் படிப்பதை இங்குச் சுட்டிக்காட்ட விரும்பு கிறேன். இலங்கையில் தான் பார்த்து வந்தவற்றைத் தொகுத்துக் கூறுகையில் மிகச் சிறந்த ராஜ தந்திரியாக அனுமன் உயர்கிறார் என்று கூறினார். (ஜூலை 31, ’66, ‘தினமலர்’)


சித்த வைத்தியம்


பாளையங்கோட்டை அரசினர் இந்திய முறை மருத்துவக் கல்லுபரி, ‘விடுதி தின விழா’ விற்குத் தலைமை தாங்கிப் பேசுகையில் . . .


இந்திய வைத்திய முறை உலகில் மிகச் சிறந்ததாகும். அலோபதி வைத்தியமுறை கடந்த ஐம்பது ஆண்டுகளாகத்தான் நம் நாட்டில் வளர்ச்சியடைந்துள்ளது. அதற்கு முன் சித்த, ஆயுர்வேத முறைகளி லேயே வைத்தியம் நடைபெற்றது. இந்த முறை நன்கு ஆராயப்பட்டுப் பரம்பரை பரம்பரையாக மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்ததது. அலோபதி வந்த புதிதில் மக்கள் அதைக் கண்டு பயந்தது கூட உண்டு. அலோபதியின் வீச்சில் சித்த, ஆயுர்வேத முறைகள் மதிப்பிழந்து காணப்படுகின்றன. அலோபதியில் கிடைக்கும் வருமானம் சித்த வைத்தியத்திலும் கிடைக்கும். ஒரு காலத்தில் இதில் இலட்சக்கணக்கில் சம்பாதித்தவர்கள் உண்டு. முதலில் அலோபதி டாக்டர்களைப் போல சித்த வைத்திய டாக்டர்கள் நாகரிகமான உடையணியப் பழக வேண்டும். கேரளாவில் இன்றைக்குக்கூட பெரிய பெரிய வணிகர்கள், சித்த வைத்திய டாக்டர்கள் வீட்டுக்குப் போய் வைத்தியம் பார்த்து வருவதைப் பார்க்கலாம்.


இந்திய அரசாங்கம் நல்ல நீர்வளம் செழுமையான நிலம் ஆயிரம் ஏக்கர் எடுத்து, அதில் சித்த, ஆயுர்வேதத்திற்குத் தேவையான மூலிகைகளை சாஸ்திர முறைப்படி வளர்க்க வேண்டும். நாட்டில் உள்ள சித்த வைத்தியர்களை அழைத்து அவர்கள் வசமுள்ள வைத்திய முறைகளைக் கேட்டுத் தொகுத்து, அவற்றை ஒழுங்காக அச்சிட வேண்டும். பழைய ஏடுகள் பிரதி எடுக்கப்பட்டு ஆராயப்பட வேண்டும். இதை அரசாங்கம்தான் செய்யலாம். அப்படிச் செய்தால் குறைந்த செலவில் மக்களுக்கு நல்ல வைத்திய உதவி கிடைக்கும்.(ஏப்., 1, றீ68, ‘தினமலர்’)


கல்வி


திருநெல்வேலி டவுன் மந்திரமூர்த்தி உயர்நிலைப்பள்ளி பொன் விழாவில் டி.வி.ஆர்., தலைமை வகித்துப் பேசியதாவது . . .


இன்றைக்குப் பள்ளிக்கூடங்கள் அதிகமாகி வருவதைப் பார்க் கிறோம். இலவசக் கல்வியின் அவசியத்தை மேதையும் சிறந்த அறிஞருமான கோபாலகிருஷ்ண கோகலே அடிக்கடி வலியுறுத்துவார். இப்போது இலவசக் கல்வி பெருகி வருகிறது. கல்வியின் எல்லா அம்சங்களையும் ஆராய வேண்டிய காலம் இது. ஆங்கிலம் அவசியம் தான். ஆனால், எல்லாருக்கும் அவசியம் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. டாக்டர், இன்ஜினியர் போன்ற தொழிற் கல்வி கற்பவர்களுக்கு அம்மொழி தேவை. அவர்களுக்குக் கூடுதலாக ஒரு வருடம் ஆங்கிலக் கல்வி அளிக்கலாம். மற்றவர்களுக்குத் தாய்மொழிப் போதனை தான் சிறந்தது. (ஆக., 2, ’68, ‘தினமலர்’)


உலக அரங்கில் தமிழ்


திருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகம் நடத்திய தமிழர் திருநாளில் தலைமை வகித்து டி.வி.ஆர்., பேசியபோது . . .


யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று பாடிய பாரதி, பிற நாட்டு நல்லறிஞர்கள் சாத்திரங்களைத் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்றும் கூறி உள்ளார். தமிழ் மொழியை உளமார்ந்து கற்பதைப் போலப் பிற மொழிகளையும் நாம் ஆர்வத்தோடு கற்க முன்வர வேண்டும்.  ஆங்கிலம் உலக மொழியாக வளர்ந்திருப்பதைப் போன்று, இன்னும் இருபது ஆண்டுகளில் தமிழ் உலக அந்தஸ்தைப் பெற வேண்டும். எந்த மொழியினையும் இகழாமல் நமது தமிழ் மொழியை உலக அரங்கில் உயர்த்துவது பற்றித் தமிழ் அறிஞர்கள் திட்டமிட வேண்டும். இதையே தமிழர் திருநாள் சபதமாக நாம் ஏற்க வேண்டும். (ஏப்., 15, றீ68, ‘தினமலர்’)
 

ராஜபாளைத்தில் ராஜ வரவேற்பு
 

சுதந்திரம் பெற்ற பின் தொழில், கல்வி, விவசாயம் போன்ற சகல துறைகளிலும் தனது கடுமையான உழைப்பால் உயர்ந்த நகரம் ராஜபாளையம். இந்நகரில் டி.வி.ஆருக்கு ஒரு சிறப்பு வரவேற்புக் கொடுத்தனர். காலை முதல் இரவு வரை அடுத்தடுத்து நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த வரவேற்பை தனது வாழ்நாளில் மறக்க முடியாது என்று டி.வி.ஆர்., கூறுவார்.  நகர எல்லையிலேயே மேளதாளத்துடன் வரவேற்று அழைத்துச் சென்றதும், பின் கோயில் தரிசனமும், பட்டுப் பரிவட்டம் கட்டி ஆசீர்வதித்தலும், அதை அடுத்த ராஜபாளையம் நகரசபை வரவேற்பும் இடம் பெற்றது.

நகரசபை வரவற்புக் குறித்து டி.வி.ஆர்., கூறுகையில் . . .


என் அனுபவத்தில் தமிழ்நாட்டில் உள்ள நகரசபைகளில் இந்த ராஜபாளையம் மட்டுமே ஒரு பத்திரிகையாளனை அழைத்து வரவேற்புக் கொடுத்துள்ளது. இதை எனக்குத் கொடுத்த வரவேற்பாக நான் கருதவில்லை; தமிழ்நாட்டின் பத்திரிகையாகளர்கள் அனை வருக்கும் கொடுக்கப்பட்ட வரவேற்பாகக் கருதி ஏற்றுக் கொள்கிறேன். பின்னர், ‘தினமலர்’ வாசகர்கள் தங்கள் கருத்துக்களை ஆசிரியரிடம் நேரிடையாகத் தெரிவிக்கும் கருத்தரங்கம் ஒன்று, காந்தி கலா மன்றத்தில் நடைபெற்றது. வாசகர்களின் கருத்துக்களைக் கேட்ட பின்னர் டி.வி.ஆர்., பேசுகையில் . . .


ஒரு பத்திரிகையின் வாசகர்கள் ஒருங்கு கூடி அப்பத்திரிகை பற்றிக் கருத்துக்களை விமர்சிப்பதை இங்குதான் கண்டேன். உண்மை யில் வாசர்களாகிய நீங்கள்தான் எங்கள் எஜமானர்கள் என்று கருதுபவன் நான். உங்களுடைய தீவிரமான கருத்துக்கள் அனைத்தையும் குறித்து வைத்துள்ளேன். அவற்றை நடைமுறைப் படுத்தப் பாடுபடுவேன் என்று கூறினார்.


நகரசபையில் வ.உ.சி., யின் படத்தைத் திறந்து வைத்துப் பேசுகையில்:

மகாத்மா காந்திக்கு முன்பே தமிழ் நாட்டில் தேச பக்தியை வ.உ.சி., வளர்த்தார். திலகர் வழியைப் பின்பற்றியவர் அவர். அகிம்சை யில் மூலமே தேசத்திற்கு விடுதலை கிடைத்துவிடும் என்பதை அவர் நம்பவில்லை. நான் ஒரு நாள் அவருடன் ரயிலில் பிரயாணம் செய்துள்ளேன். அப்போது நீண்ட நேரம் அவருடன் பேசிப் பழகும் வாய்ப்பு எனக்கேற்பட்டது. வெள்ளையனை இந்த நாட்டை விட்டு விரட்டுவதற்கு இரண்டு வழிகள் உள்ளதாக அவர் கருதினார். ஒன்று நேரடியானது; மற்றொன்று பொருளாதாரத் துறை. இதற்காகவே அவர் கப்பல் வாங்கினார் . வடநாட்டில் வங்காளத்திலும், தென்னாட்டில் திருநெல்வேலியிலும் தான் தேசபக்தி அனல் வீசியது. இதற்கு வ.உ.சி.,யே காரணம். மிகப்பெரும் தேசபக்தரின் படத்தை இந்த நகர்மன்றத்தில் திறக்கும் பாக்கியம் எனக்குக் கிட்டியது வாழ்நாளில் மறக்க முடியாதது.

ராஜபாளையம் வர்த்தகக் கழகத்தில் பேசுகையில்:

இங்குள்ள வர்த்தகர்கள் தாங்கள் பெறும் இலாபத்தில் ஒரு பகுதியை மக்களுக்காகவே செலவு செய்துவிடுவதைப் பார்க்கும்போது எனக்குப் பெருமையாக இருக்கிறது. வர்த்தகர்களின் வளர்ச்சியே இன்றைக்கு அவர்கள் அரசியல்வாதிகளின் தயவில்தான் என்று சொல்ல முடிகிறது. மிகப் பெரிய சமுதாயமான வர்த்தகர்கள், தங்கள் கோரிக்கையைச் சட்டமன்றத்தில் கூற, அவர்களுக்கும் ஓர் இடம் ஓதுக்குவது அவசியம்.


ரோட்டரி சங்க வரவேற்பில் கலந்து கொண்டு பேசுகையில்:

இப்போது நமது நாட்டு அரசியலில் படித்தவர்கள், அறிவாளிகள் கலந்துகொள்ளாமல் ஒதுங்கிவிட்டார்கள். இது சரியல்ல என்பது என் கருத்து. நாட்டின் நலன் கருதி உழைக்க வேண்டியவர்கள் அரசியல்வாதிகள் மட்டுமே என விட்டுவிட்டு ஒதுங்கிக்கொள்வது, பின்னர் நமது நாட்டிற்குப் பெரும் கேடாக வந்து சேரும் என்று கவலைப்படுகிறேன்.
இந்த வரவேற்பு அனைத்தும் ’70ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ம் தேதி ஒரே நாளில் ஆசிரியர் டி.வி.ஆருக்கு வழங்கப்பட்டவையாகும்.

அலைகளுக்கு ஓய்வேது

தனி ஒருவனால் எல்லாப் பணிகளையும் செய்து முடிக்க இயலாது என்று சிறு வயதிலேயே உணர்ந்து, ஜனநாயகப் பண்புடன் கூட்டு முயற்சிகளுக்கு வித்திட்டிருக்கிறார் டி.வி.ஆர்.,


பள்ளிப் படிப்பு முடிந்ததும் சிறந்த நிர்வாகியாகி, தான் செய்யும் தொழிலில் தனக்கெனத் தனி முத்திரை, திருத்தம், நேர்மை, உயர்வு இவற்றை வகுத்து, தனக்கெனத் தனித்தன்மையை வருவித்துக்கொள் கிறார். தொழில் செய்வது பொருள் சேர்ப்பதற்கு என்று மட்டுமே இல்லாமல், அதில் கணிசமான பணத்தை, விரிந்த சமுதாயப் பணிகளில் செலவிட முன் வருகிறார். பழமை என்பதற்காகக் கட்டுப் பெட்டித்தனமாக அதிலேயே ஆழ்ந்து விடாமல், உலகத்தின் மாற்றங்களுக்கு ஏற்பப் புதுமைகளை ஏற்றுச் செயலாக்க முன்வருகிறார். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் பால் தணியாத பாசமும், பரிவும் கொண்டு, அவர்களைக் கை தூக்கிவிடத் துடிக்கும் துணிவு, அதற்கான இடைவிடாத பணிகள், இவற்றை அன்றைக்குக் கடமை களாகக் கொண்டிருந்த அவரது போக்கு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.


அனைத்து மக்களுக்கும் எளிதில் கல்வி போய்ச் சேர வேண்டு மென்ற பேராவல், கல்வியுடன் தாய்மொழிப் பற்று, உலக மாற்றங் களுக்கு ஈடாக மொழிப் புதுமைகளை வரவேற்று ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற கருத்து, தமிழ் மொழி அறிஞர்களைப் போற்றிப் பாராட்டும் தனிக்குணம், சமூக மாறுதல்கள், தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரே கருவி பத்திரிகைதான் என்று தேர்ந்தெடுத்தல், பத்திரிகையைத் தமிழ் மக்களின் நலனுக்காக, உரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் போராடும் ஆயுதமாக ஏற்று, எதிரியின் களத்தி லேயே இறங்கும் வீரம், சிறு சிறு கிராமங்களின் பிரச்னைகளில் தனித்த கூர்மையான பார்வை, கிராமங்களை முன்னேற்ற பத்திரிகையை முழுமையாகப் பயன்படுத்தல், எதிர்ப்புகளை மகிழ்ச்சி யுடன் சந்தித்து வெற்றி காணும் மனோதிடம், தனது சமுதாயப் பணிகளுக்காக விளம்பரமே தேடாத ஒரு தவ வாழ்க்கை.


ஒரு தொழிலைத் தேர்ந்தெடுக்கும்போது அதிலிருந்து எவ்வளவு இலாபம் வரும் என்று மட்டுமே கணக்கிடாமல், எத்தனை ஆண்டு களில் எவ்வளவு நஷ்டம் வரும் என்று முதலிலேயே கணக்கிட்டு நஷ்டம் வந்தபோது அதைக் கண்டு கவலவரமடையாத தனிப்போக்கு தனது வழியும், தான் எடுத்த முடிவுகளும் சரி என்று தோன்றிவிட்டால் எவ்வளவு பெரிய செல்வாக்குள்ளவர்கள் அதை மாற்றத் தலை யிட்டாலும், அதைத் துச்சமென மதித்து ஒதுக்கும் துணிவு, பிரச்னைகளைச் சமாளிப்பதில் காட்டும் விவேகம், எந்த ஒரு பணியையும் திட்ட நோக்கோடு, விஞ்ஞானப் பூர்வமாக அணுகும் ஆற்றல், வெளி உலக, தொழில் பிரச்னைகளை வீட்டுக்குள்ளும், வீட்டுப் பிரச்னைகளைத் தொழில் ஸ்தாபனத்திலும் எதிரொலிக்காமல் தனித்தனியாக வேறுபடுத்தி வைத்திருக்கும் தனிக்குணம்.


தான் பிறந்து வளர்ந்த பகுதி, மாவட்டம், மாநிலம், தேசம் இவற்றில் அசைக்க முடியாத பற்று, அதற்கு நேர்மாறாகத் தனக்கு எவ்வளவுதான் வேண்டியவர் சொன்னாலும், துணிந்து பகிரங்கமாகக் கண்டிக்கும் உறுதி, பலரும் ‘நடக்குமா?’ என்று அஞ்சும் பணியை எடுத்து வெற்றிகரமாகச் செய்து காட்டும் தனித்துவம், கோப உணர்ச்சிக்கு மனத்தை அலைக்கழிக்காத உறுதியான வாழ்க்கை, உண்மை ஒன்றே நிலைத்து நிற்கும் என்ற திடமான கொள்கைப் பிடிப்பு, போதிப்பதை விடக் கேள்வி ஞானம் அதிகம் பயன்தரும் என்ற நடைமுறை வாழ்க்கை, சென்னையில் இருந்து தெற்கு நோக்கிப் பத்திரிகைகள் வருவதுதான் இயற்கையா . . . ஏன் இங்கிருந்து சென்னைக்குச் செல்ல முடியாதா செய்து காட்டுவோமே என்ற சாதனை போன்ற குணநலன்கள் கொண்டவர் டி.வி.ஆர்.,


தோல்வி கண்டு அவர் கலங்கியதில்லை. ஏனெனில், அவர் கண்டதெல்லாம் வெற்றிகளே என, ஒரு மூதறிஞர் கூறியதற்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டிய பெருமை . . . இப்படியாக டி.வி.ஆரின் 70க்கு மேற்பட்ட ஆண்டுகளின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் முக்கடலில் அலைகள் மோதுவது போல நமது எண்ணத்தில் மோதிக்கொண்டே இருக்கின்றன.தன் மனதில் பட்ட கருத்தைத் துணிந்து, எளிமையான முறையில் மக்கள் முன் கூறுவதை மட்டுமே அவர் சொற்பொழிவுப் பாணியாகக் கொண்டிருந்தார். அவர் வெளியிட்ட பல கருத்துக்கள் இன்றைக்கும் தீர்க்கதரிசனமிக்கதாக இருக்கிறது. பிரச்னைகளை அணுகுவதில் தனக்கு என்று தனிக்கோணம் ஒன்றை அவர் வைத்திருந்தார் என்பதை மேலே கூறப்பட்ட சொற்பொழிவுகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.


அமரர் டி.வி.ஆர்.,

தனி மனிதர்கள் தமது சொந்த வாழ்க்கைப் பிரச்னைகளிலேயே மூழ்கிப் பொது வாழ்க்கை பற்றிச் சிந்திக்கக்கூட நேரமில்லாமல் மறைந்துவிடுகின்றனர். சில தனி மனிதர்கள் சொந்த வாழ்க்கையுடன், பொது வாழ்க்கையையும் இணைத்து மறைகின்றனர். இவர்களே இந்த தேசத்தின் வளர்ச்சிக்குக் காரணமாய்த் திகழ்ந்திருக்கின்றனர். இரண்டாவது வரிசையில் உள்ள செயல் வீரர்களில் ஒருவர் தான் டி.வி.ஆர்.,


டி.வி.ஆர் பற்றிப் பல கோணங்களில் பல தகவல்களை நாம் இதுவரைப் பார்த்துள்ளோம். பள்ளிப் பருவத்திலேயே அனைத்துப் பாடங்களிலும் முதன்மையான மாணவராகவும், சிறந்த விளையாட்டு வீரராகவும் நமக்கு அறிமுகமாகிறார் டி.வி.ஆர்., பழமைப் போக்கு களிலேயே நின்றுவிடாமல் ஜாதி, மத, இன உணர்வுகளைத் தாண்டிப் பள்ளி வாழ்கையில் வித்தியாசமான மாணவராகத் திகழ்கிறார்.


தமது இறுதிக் காலத்தைத் தாமிரபரணி தீரத்தில் கழிக்கவே விரும்பினார் டி.வி.ஆர்., வாழ்நாளில் அவர் நினைத்தது எதுவும் நடக்காமல் போனதில்லை. இதில் மட்டும் மாறுதலாகவா நடந்துவிடப் போகிறது? மதுரையில் இருந்து நெல்லை வந்து, தனது இல்லத்தில் பழைய நினைவுகளில் முழுச் சிந்தனைகளையும் செலுத்தி நிம்மதியாகப் படுத்திருந்தார் சில நாட்கள். அவர் இயங்காமல் இருந்ததில் இருந்தே அவர் என்ன முடிவை எதிர் நோக்கி உள்ளார் என்பது தெளிவாகப் புரியவே செய்தது. அப்போதுகூட அவர் தனது மக்களை, மனைவியை அழைத்து எதிர்காலத்தில் எப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று எந்தப் போதனையும் செய்யவில்லை. அதை அவர் என்றுமே செய்ததும் இல்லை. அவர் முழுக்க முழுக்க வித்தியாசமான மனிதர்.


அலுவலகத்திலும், வீட்டிலும் ஏதோ எதிர்பாராத ஒன்று நடக்கப் போகிறது என்று கவலையுடன் எதிர்பார்த்திருக்கும் அதே நேரம் . . .


யாராலும் தடுத்து நிறுத்த முடியாத அந்தச் சோகம் நிறைந்த நாளும் வந்தது. ஒயாமல் தமிழ் மக்களுக்காக இயங்கிக் கொண்டிருந்த அந்தத் துணிவு மிக்க இதயம் தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்டது. பெருவாழ்வு வாழ்ந்தவர் டி.வி.ஆர்., அவரது அந்திம யாத்திரை எவ்வளவோ கோலாகாலமாக நடை பெற்றிருக்க முடியும். வாண வேடிக்கைகள், பூப்பல்லக்கு, சிறந்த கிராமியக் கலைகள் எல்லாம் ஏற்பாடு செய்வது அன்றைக்குக் கஷ்டமானதல்ல. வாழ்க்கையில் எந்தவித ஆடம்பரத்தையும் விரும்பாத அவரது இறுதி யாத்திரையிலும் சிறு ஆடம்பரம் கூட இல்லை.


பெரிய குடும்பம்

ஒருவருடைய குடும்பம் என்பது ரத்த சம்பந்தம் உள்ள சிலர் சேர்ந்ததுதான். அவர்களுடைய நலன்கள், கவலைகள், குடும்பத் தலைவருக்கு இருந்து வரும். ஆனால், ஒரு சிலர் இந்தச் சிறிய வட்டத்தில் இருந்து தங்களை விடுவித்துக்கொண்டு, மனித நேயத்தோடு, ஜாதி, மதம், இனம், பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு இவற்றை எல்லாம் கவனிக்காமல், அனைவரையும் அரவணைத்து, அவர்களது சுக, துக்கங்களுக்குப் பொறுப்பேற்கின்றனர். இப்படிப்பட்ட மனிதர்கள் சிலரே பிறக்கின்றனர். அவர்கள் வாழ்ந்து காட்டிய முறைகளைப் பினபற்றி நடப்பதே, அந்த மனிதர்களுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.Advertisement
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X