Press "Enter" to skip to content

முதல் பக்கம் » ஆலோசனை

எலக்ட்ரிக்கல் வேலையில் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள்


வீடுகளில் மின்சார இணைப்புகளை அமைப்பதில் உரிமம் பெற்ற மின்சார பொறியாளர்களை பயன்படுத்துவது நல்லது. வெறும் அனுபவம் மட்டும் இருக்கும் நபர்கள் சில சமயங்களில் மிக சிறப்பாக பணி புரிவார்கள்.

ஆனால், பிரச்னை என்று வந்தால், முறையான உரிமம் இல்லாத நபர்களை பயன்படுத்தியது பெரிய வில்லங்கத்தை ஏற்படுத்தும். தெரிந்தவர், பல ஆண்டுகளாக தொழிலில் இருக்கிறார் என்றாலும், அவர் உரிமத்துடன் இருப்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.அனைத்து பணியாளர்களும் உரிமம் பெற்றவர்களாக இருக்க மாட்டார்கள் என்று சொல்ல தோன்றும். குறைந்தபட்சம் உரிமம் பெற்ற மின்சார பொறியாளர் மேற்பார்வையில் செயல்படும் நபராவது அவர் இருக்க வேண்டும்.

கட்டுமான நிலையைவிட, பயன்பாட்டு நிலையில் தான் வீடுகளுக்கு எலக்ட்ரிஷியன் தேவை அதிகமாக இருக்கும். இதில், வீட்டில் ஏதாவது ஒரு குறைபாடு ஏற்பட்டால் உடனே வந்து செல்லும் நிலையில் சில நபர்களை வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டுக்கு அவசர தொலைபேசி எண்கள் பட்டியலில், எலக்ட்ரிஷியன், பிளம்பர் போன்றவர்களின் தொடர்பு எண்கள் இருப்பது அவசியம். வீட்டின் மின் இணைப்பு குறைபாடு வந்தால் எலக்ட்ரிஷியன் அதை ஆய்வு செய்ய வேண்டும்.
அதில் ஏதாவது பொருளை புதிதாக மாற்ற வேண்டும் என்று அவர் கூறினால், அதை ஏற்பதே பெரும்பாலும் சிறந்ததாக உள்ளது. இதில் குறைபாடு உள்ள பொருளை ஒட்டு போடுவது உள்ளிட்ட சிறிய சீரமைப்பு வாயிலாக மீண்டும் பயன்படுத்த நினைக்காதீர்கள். இது போன்ற விஷயங்களில் சிக்கனம் பார்ப்பதாக நினைத்து சிலர், பழைய பிளக் பாயின்ட்கள், சுவிட்ச்கள், ஒயர்களை ஒட்டு போட்டு பயன்படுத்துகின்றனர். இவ்வாறு ஒட்டு போட்ட பொருட்களை பயன்படுத்துவது ஆபத்தை நீங்களே நேரடியாக அழைப்பதாக அமைந்துவிடும்.

குறிப்பாக, அதிக மின் நுகர்வு உள்ள இடங்களில் உடைந்த பொருட்களால் ஏற்படும் ஆபத்து மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே எலக்ட்ரிக்கல் பணிகளை அலட்சியப்படுத்தாமல் உரிய முக்கியத்துவம் அளிப்பது அவசியம் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

மேலும் ஆலோசனை