கான்கிரீட் தயாரிப்பதில் சிமென்ட், மணல், ஜல்லி ஆகியவையே அடிப்படை பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றன. பயன்பாடு அதிகரித்துள்ளதால் அவ்வப்போது இவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படுவது இயல்பானதாக உள்ளது.
இதனால், இந்த அடிப்படை பொருட்களுக்கு மாற்று பொருட்களை தேடும் ஆய்வுகளும் முடுக்கிவிடப்படுகின்றன. இவ்வகையில், சிமென்ட், மணல், ஜல்லி ஆகியவற்றுக்கு புதிய மாற்று பொருட்கள் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.இதில் மாற்றாக பரிந்துரைக்கப்படும் பொருட்கள் மக்களால் எளிதாக, குறைந்த விலையில் வாங்கி பயன்படுத்த கூடியதாக இருக்க வேண்டும். அத்துடன், சுற்றுச்சூழல் ரீதியாக எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத பொருளாக இருக்க வேண்டும்.
இவ்வகையில் மணலுக்கு மாற்றாக பல்வேறு வகை பொருட்கள் வந்துவிட்டன. கருங்கல் துகள்கள் சுத்தப்படுத்தப்பட்டு எம். சாண்ட் என்று பயன்படுத்தப்படுகிறது. அதே போன்று, செராமிக் பதிகற்களின் துகள்களையும் மணலுக்கு மாற்றாக பயன்படுத்தலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது, அனைத்து வகை கட்டடங்களிலும் செராமிக் பதிகற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பழைய கட்டடங்களை இடிக்கும் போது அதில் செராமிக் பதிகற்கள் கட்டட கழிவுகளாக மாற்றப்படுகின்றன. இதை தவிர்த்து செராமிக் பதிகற்களை சேகரித்து துகள்களாக்கி, மணலுக்கு மாற்றாக பயன்படுத்தலாம்.கான்கிரீட் கலவை தயாரிப்பில் ஆற்று மணலுக்கான அளவில், 80 சதவீதம் வரை செராமிக் துகள்களை பயன்படுத்தலாம். இவ்வாறு உருவாக்கப்படும் கான்கிரீட் கட்டுமானத்தின் உறுதித் தன்மை சிறப்பாக உள்ளதாக ஆய்வுகள் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், செராமிக் பதிகற்கள் தயாரிப்பு நிலையில் ஏற்படும் கழிவுகளையும், பழைய கட்டடங்களை இடிப்பதால் ஏற்படும் செராமிக் கழிவுகைளயும் கான்கிரீட் தயாரிப்பதில் பயன்படுத்தலாம். தற்போதைய நிலவரப்படி, ஆராய்ச்சி நிலையில் இருந்து செயல்பாட்டு நிலைக்கு இது முன்னேறி உள்ளது.
அடுத்த சில ஆண்டுகளில் எம்.சாண்ட் விற்பனைக்கு செராமிக் துகள்கள் போட்டியாக வந்து நிற்கும் என்கின்றனர் கட்டுமானத்துறை வல்லுனர்கள்.

வாசகர் கருத்து