மதுரையில், பழனிசாமி அளித்த பேட்டி: அதிமுக நடத்திய சட்டப்போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. கட்சி பணிகள் இனி தொய்வின்றி நடக்கும். உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறிவிட்டதால், தலைமை குறித்து இனி எந்த கேள்வியும் இல்லை. இடைத்தேர்தல் வெற்றிக்கு இந்த தீர்ப்பு கைக்கொடுக்கும் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் வந்தால், அதிமுக.,வில் ஏற்றுக்கொள்வோம் என்றார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி கூறுகையில், ‛‛அற்புதமான தீர்ப்பு. ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் விருப்பத்தை உச்சநீதிமன்ற தீர்ப்பு பிரதிபலித்துள்ளது. திமுக.,வின் ‛பி' டீமாக இருந்து செயல்பட்ட சில எட்டப்பர்களின் முகத்திரை இன்று கிழிக்கப்பட்டுள்ளது. அதிமுக 4 ஆக போய்விட்டது என்ற கருத்துகளுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு முடிவு கட்டியுள்ளது. இனி அதிமுக 3, 4 இல்லை; ஒன்றாக உள்ளது'' என்றார்.
ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி கூறுகையில், ‛உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக ஏற்கிறோம்; தலை வணங்குகிறோம். தீர்ப்பின் முழு விபரம் அறிந்த பிறகு தான் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து சொல்லமுடியும்' என்றார்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு தெய்வவாக்கு. மக்கள் தீர்ப்பால் பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவார். ஈரோடு கிழக்கு தொகுதியில், அதிமுக., வெற்றி உறுதியாகி உள்ளது. என்றார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், சூழ்ச்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு , 1.5 கோடி தொண்டர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் அமைந்துள்ளது. அரசியலில் பன்னீர்செல்வத்தின் தீர்ப்பு பூஜ்ஜியம் ஆக இருக்கும். அவரை ஏற்றுக்கொள்ள முடியாது. பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் தவிர மற்றவர்களை வரவேற்போம் என்றார்.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து மதுரையில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பழனிசாமிக்கு அதிமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் கூறுகையில், உண்மையான தொண்டர்கள் பழனிசாமியிடம் இல்லை. தீர்ப்பு மூலம் கிடைத்திருப்பது தற்காலிகமான வெற்றி தான் என்றார்.
இந்த வழக்கின் தீர்ப்பு மூலம் அதிமுக பழனிசாமி வசமானது. மேலும் இரட்டை தலைமை முறை முடிவுக்கு வந்ததுடன், வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன.
பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறுகையில், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என உச்சநீதிமன்றம் சொல்லவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு முழுமையாக கிடைத்த வெற்றி இல்லை. தீர்ப்பு எங்களுக்கு பாதகமானதும் கிடையாது. சிவில் நீதிமன்றத்தில் ‛ஸ்டே' வாங்குவோம். சிவில் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்வோம். தீர்மானங்களை எதிர்த்து முறையிடுவோம். எனக்கூறியுள்ளார்.
தமாகா தலைவர் வாசன் கூறுகையில், அ.தி.மு.க., தொண்டர்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது
தர்மத்தின் பக்கம் தீர்ப்பு வந்துள்ளது என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பால், அதிமுக பீடு நடை போடும் என அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கே.பி.முனுசாமி அளித்த பேட்டியில், பழனிசாமி நடத்திய தர்மயுத்தம் வெற்றி பெற்றுள்ளது எனக்கூறியுள்ளார்.
பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததை தொடர்ந்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., அலுவலகத்தில் குவிந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
புதுடில்லி: அதிமுக தொடர்பான அதிகார போட்டி வழக்கில் சுப்ரீம் கோர்ட் பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து பழனிசாமி இடைக்கால பொதுசெயலர் தேர்வும் செல்லும்படியாக இருப்பதால் அவரது கை ஓங்கி உள்ளது. அதிமுக பழனிசாமியின் முழுவசமாகிறது.
கடந்த ஆண்டு ஜூலை 11ல் நடந்த அ.தி.மு.க., பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனை எதிர்த்து, பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, பொதுக்குழு முடிவு செல்லாது என தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து பழனிசாமி தரப்பில் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, பொதுக்குழு முடிவு செல்லும் என தீர்ப்பளிக்க, இந்த வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது.
இரு நீதிபதிகள் தீர்ப்புக்கு எதிராக பன்னீர் செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு நடத்தப்பட்ட வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டது. உரிய சட்ட விதிகள் கடைபிடிக்கப்பட்டனவா? என்பது குறித்தும் ஆராயப்பட்டன. அதன் அடிப்படையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்யப்படுகிறது. கடந்தாண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு செல்லும். மேலும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக எந்த கோரிக்கையும் எங்கள் முன்பு வைக்கப்படவில்லை. எனவே, தீர்மானங்கள் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க போவதில்லை. எதிர்காலத்தில், இது தொடர்பாக வழக்கோ அல்லது தேர்தல் ஆணையத்தில், யாரேனும் முறையீடு தாக்கல் செய்தால், அப்போது அதன் மீதான நடவடிக்கைகள் சட்டப்படி தொடரும்.
அதேபோல், பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வழக்கு மீதான விசாரணை நடைபெறுவதில் எந்த பிரச்னையும் இல்லை எனக்கூறிய நீதிபதிகள், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் இடையீட்டு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.