10ம் வகுப்பில் பிற மொழி பாடம்
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், சிறுபான்மை மொழிகளையும் கட்டாய பாடமாக சேர்க்கக் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழக முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ் மட்டுமல்லாமல், மொழி சிறுபான்மை மாணவர்கள், தங்கள் தாய்மொழி பாடத்தையும் சேர்க்க கோரிய வழக்கை, 2017ல் உயர் நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, அது அரசின் கொள்கை முடிவு என்பதால், அது தொடர்பாக, இரு மாதங்களில் ஆய்வு செய்து, அரசு உரிய முடிவை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆந்திரா, கர்நாடகா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில், தமிழ் முதல் பாடமாக சேர்க்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் சிறுபான்மை மொழி கட்டாயமாக்கப்படவில்லை. அந்த மொழி மெல்ல அழிந்து விடும் என்பதால், பத்தாம் வகுப்பு தேர்வில், தமிழ் மொழி பாடத்துடன், சிறுபான்மை மொழிகளையும் கட்டாயமாக்கும் வகையில் சேர்க்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டது.
இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பத்தாம் வகுப்பு தேர்வில், சிறுபான்மை மொழி பாடத்தேர்வு எழுத, 2022 மார்ச் வரை அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 2017ல், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். அடுத்தடுத்து வழக்குகள் தொடர முடியாது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்த தல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!