Load Image
dinamalar telegram
Advertisement

சிங்கப்பூரில் ஸ்ரீ ராஜ மாதங்கி மஹா யாகம்

கலைமகள் – மலைமகள் – அலைமகள் என மூவரின் அம்சமாகத் திகழ்பவள் ஸ்ரீ ராஜ மாதங்கி. ராஜ போகத்தினை வாரி வழங்கும் இந்த தேவியின் அங்க தேவதைகளாக ஹசந்தி ஷ்யாமளா – சுக ஷ்யாமளா – வேணு ஷ்யாமளா – சாரிகா ஷ்யாமளா – வீணா ஷ்யாமளா – லகு ஷ்யாமளா என ஆறு தேவியர் தோன்றி கலைகளின் அதிபதியாகினர். லலிதா சகஸ்ரநாமம் ஸ்ரீசாக்த ப்ரமோதத்தம் – மீனாட்சி பஞ்சரத்னம் – ஸ்ரீவித்யார்வணம் – சாரதா திலகம் – நவரத்ன மாலா போன்ற நூல்களில் அன்னை ராஜ மாதங்கியின் புகழும் வரலாறும் போற்றிப் பாடப்பட்டிருக்கிறது. நவாவர்ண வழிபாடும் குங்கும அபிஷேகமும் இந்த அன்னைக்கு மிகவும் பிடித்தமானது.

இத்தகு சிறப்புமிகு அன்னை ஸ்ரீ ராஜ மாதங்கியைப் போற்றி வழிபட சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணர் ஆலயத்தில் ஸ்ரீ ராஜ மாதங்கி மஹா யாகம் ஆகஸ்டு ஐந்தாம் தேதி தொடங்கி 14 ஆம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆகஸ்டு 4 ஆம் தேதி காலை ஆறு மணிக்கு கணபதி ஹோமம் சிறப்பு ஹோமம் – கலசாபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனையும் மாலையில் வாஸ்து பூஜை – மிருத் ஸங்கரஹணம் – அங்குரார்ப்பணம் – ரக்ஷாபந்தனத்துடன் யாகம் தொடங்கியது.

ஆறாம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை யாகசாலை பூஜைகளும் ஸ்ரீ துர்க்காம்பிகைக்கு சிறப்பு அபிஷேகமும் – ராஜ மாதங்கி மூல மந்திர ஜபம் – லலிதா சகஸ்ரநாம பாராயணம் – மூல மந்திர ஹோமம் பூர்ணாஹீதி – மகா தீபாராதனை என தெய்வீக மணம் கமழ நிகழ்வுகள் நடைபெற்றன. நிறைவு நாளான 14 ஆம் தேதி பக்தர்கள் கலந்து கொண்ட பன்னீர்க் குட அபிஷேகம் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.

புனித ஹோமத்தில் வைத்துப் பூஜிக்கப்பட்ட கலசம் மங்கல வாத்யமும் பக்தர்களின் “ ஓம் சக்தி “ முழக்கமும் சூழ ஆலயம் வலம் வரப் பெற்று ஸ்ரீ அம்பிகைக்கு கலசாபிஷேகம் நடைபெற்றது. தலைமை அர்ச்சகர் நாகராஜ சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்ற நவாவர்ண பூஜை மெய்சிலிர்க்க வைத்தது. நிறைவாக சர்வ அலங்கார நாயகியாக ஸ்ரீஅம்பாள் எழுந்தருளி ஊஞ்சல் சேவை ஆற்றியது பக்தர்களைப் பரவசப்படுத்தியது. 108 திருவிளக்கு பூஜை முத்தாயப்பாக அமைந்தது. பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தலைமை அர்ச்சகர் நாகராஜ சிவாச்சாரியார் யாகத்தின் சிறப்பியல்புகளை எடுத்துரைத்தார் . பக்தர்கள் கூட்டம் ஆலயம் நிரம்பி வழிந்த போதும் ஆலய மேலாண்மைக் குழுத் தலைவர் சுரேஷ் குமார் தலைமையிலான நிர்வாகத்தினரும் தொண்டூழியர்களும் பக்தர்களுக்கு எவ்விதச் சிரமமுமின்றி அனைத்து ஏற்பாடுகளையும் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement