dinamalar telegram
Advertisement

ஜோகோவிச் கனவு தகர்ந்தது: ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார்

Share

மெல்போர்ன்: விசா தொடர்பான வழக்கில் தோல்வியடைந்த ஜோகோவிச், ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கும் நட்சத்திரங்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இத்தொடரில் 9 முறை கோப்பை வென்ற, உலகின் 'நம்பர்-1' வீரர், செர்பியாவின் ஜோகோவிச், தடுப்பூசி செலுத்தவில்லை. மெல்போர்ன் சென்ற இவரது விசா ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கில் வெற்றி கிடைக்க, போட்டிக்கு தயாராகி வந்தார். இந்நிலையில் ஜோகோவிச் விசாவை, குடியேற்றத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாகே, மீண்டும் ரத்து செய்தார். இதை எதிர்த்து மீண்டும் வழக்கு தொடர்ந்தார் ஜோகோவிச். இது தொடர்பான வழக்கு நேற்று மூன்று நீதிபதிகள் அடங்கிய 'பெஞ்ச்' முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது,'விசா ரத்து செய்யப்பட்டது தவறானது, நியாயமற்றது,' என ஜோகோவிச் தரப்பில் வாதிடப்பட்டன. முடிவில் தலைமை நீதிபதி ஜேம்ஸ் ஆல்சோப் அளித்த தீர்ப்பில்,'அமைச்சரின் முடிவு சட்ட விதிகளுக்கு உட்பட்டு, சட்டப்பூர்வமாக எடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத விளையாட்டு நட்சத்திரங்களின் விசாவை ரத்து செய்யும் அரசின் முடிவு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஜோகோவிச் வழக்கு ரத்து செய்யப்படுகிறது. தீர்ப்பின் முழு விபரம் வரும் நாட்களில் தெரிவிக்கப்படும்,' என்றார்.

இதையடுத்து ஜோகோவிச்சில் 10 நாள் ஆஸ்திரேலிய பயணம் முடிவுக்கு வந்தது. இம்முறை ஆஸ்திரேலிய ஓபன் வெல்ல வேண்டும் என்ற கனவு தகர்ந்தது. இவர் ஆஸ்திரேலிய போலீஸ் பாதுகாப்புடன் மெல்போர்ன் விமான நிலையம் அழைத்து வரப்பட்டார். அங்கிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் புறப்பட்டார்.

தடை எப்படி

பொதுவாக இரண்டாவது முறையாக விசா ரத்து செய்யப்பட்டால் அடுத்த மூன்று ஆண்டுக்கு ஆஸ்திரேலியாவில் நுழைய முடியாது. இருப்பினும் இதில் விதிவிலக்கு உண்டு. இதன் படி ஜோகோவிச் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்கலாம்.

பிரதமர் வரவேற்பு

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில்,''நமது எல்லைப்பகுதியை வலுவாக வைத்திருக்கவும், ஆஸ்திரேலிய மக்கள் தொடர்ந்து பாதுகாப்பாக இருக்கவும் கோர்ட் தீர்ப்பு உதவும்,'' என்றார்.



ஏமாற்றம்

ஜோகோவிச் கூறுகையில்,''ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க முடியாமல் போனது மிகவும் ஏமாற்றமாக உள்ளது. இருப்பினும் கோர்ட் தீர்ப்பை மதிக்கிறேன். ரசிகர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் என நீங்கள் தான் என்னை பலப்படுத்த உதவுபவர்கள். எனக்கு ஆதரவாக இருந்த உங்கள் அனைவருக்கும் நன்றி,'' என்றார்.

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement