புதுடில்லி: இந்திய ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்சயா சென் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி கோப்பை வென்றது.
டில்லியில், இந்திய ஓபன் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் லக்சயா சென் 20, 'நடப்பு உலக சாம்பியன்' சிங்கப்பூரின் லோ கீன் யூ மோதினர். முதல் செட்டை 24-22 என போராடி கைப்பற்றிய லக்சயா, இரண்டாவது செட்டை 21-17 என தன்வசப்படுத்தினார். மொத்தம் 54 நிமிடம் நீடித்த போட்டியில் லக்சயா சென் 24-22, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
கடந்த ஆண்டு உலக பாட்மின்டனில் வெண்கலம் வென்ற லக்சயா, 'சூப்பர் 500' தொடரில் முதன்முறையாக தங்கம் வென்றார். ஏற்கனவே இரு முறை (2019) 'சூப்பர் 100' தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். தவிர இவர், 6 முறை சர்வதேச சேலஞ்ச் தொடரில் கோப்பை வென்றுள்ளார்.
இரட்டையரில் அபாரம்: ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, இந்தோனேஷியாவின் முகமது அஹ்சன், ஹென்டிரா செடியவான் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 21-16 எனக் கைப்பற்றிய இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 26-24 என போராடி தன்வசப்படுத்தியது. மொத்தம் 43 நிமிடம் நீடித்த போட்டியில் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21-16, 26-24 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இத்தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
லக்சயா சென் 'சாம்பியன்': இந்திய ஓபன் பாட்மின்டனில்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!