Load Image
dinamalar telegram
Advertisement

குழலி

தயாரிப்பு - முக்குழி பிலிம்ஸ்
இயக்கம் - சேரா கலையரசன்
இசை - உதயகுமார்
நடிப்பு - விக்னேஷ், ஆரா
வெளியான தேதி - 23 செப்டம்பர் 2022
நேரம் - 2 மணி நேரம் 15 நிமிடம்
ரேட்டிங் - 3/5

மண் மணம் மாறாத கிராமியப் படங்களை இந்தக் காலத்தில் பார்ப்பது மிகவும் அரிதாகிவிட்டது. ஒரு சிலர் மட்டுமே தாங்கள் வாழ்ந்த, தங்கள் மனதில் ஆழமாகப் பதிந்த அந்த வாழ்வியலை அப்படியே திரையில் வடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் இயக்குனர் சேரா கலையரன் அப்படி ஒரு கிராமிய வாழ்வியலை இந்த 'குழலி'யில் திரை முழுவதும் குழைத்துத் தந்திருக்கிறார். அவரது எண்ணங்களை திரையில் அப்படியே தங்களது நடிப்பால் இயல்பாய் பதிவு செய்திருக்கிறார்கள் நடித்திருப்பவர்கள்.

திண்டுக்கல் அருகாமையில் உள்ள கிராமத்தில் உயர் சாதியைச் சேர்ந்தவர் ஆரா. அவருக்கும் அவரை விட பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த விக்னேஷ் உடன் சிறு வயதில் பள்ளியில் படிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே நட்பு. 12வது வகுப்பு படிக்கும் போது அந்த நட்பு காதலாக வளர்ந்து நிற்கிறது. இவர்களது காதல் விவகாரம் சாதி வெறி பிடித்த ஆராவின் உறவினர்களுக்குத் தெரிய வருகிறது. ஆராவை பள்ளியை விட்டே நிறுத்துகிறார் அவரது அம்மா. படிக்க ஆசைப்படும் ஆரா, காதலன் விக்னேஷ் உடன் ஓடிச் சென்று எங்காவது படிக்க ஆசைப்படுகிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

சாதியை மையமாகக் கொண்ட படங்களைப் படமாக்க அதிக கவனம் தேவைப்படும் காலம் இது. எந்த சாதி என குறிப்பிடாமல் படம் பார்ப்பவர்களே புரிந்து கொள்ளும் மாதிரி கவனமாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குனர். பல ஊர்களில் இன்னமும் சாதிக் கொடுமைகள் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் இந்த மாதிரியான படங்களைப் பார்த்து அதில் ஒரு சிலராவது திருந்தினால் அது இந்தப் படத்தை எடுத்ததற்கான அர்த்தமாக இருக்கும்.

'காக்கா முட்டை' படத்தில் சிறுவனாக நடித்து தேசிய விருது பெற்ற விக்னேஷ், இந்தப் படத்தில் தனி கதாநாயகனாக களமிறங்கி இருக்கிறார். சுப்பு கதாபாத்திரத்தில் பள்ளி மாணவனாக அந்தக் கதாபாத்திரத்திற்கு அப்படியே உயிர் கொடுத்திருக்கிறார். படத்தின் அறிமுகக் கதாநாயகியான ஆரா, குழலி கதாபாத்திரத்தில் புதுமுகம் என்று சொல்ல முடியாதபடி பொருத்தமாக நடித்திருக்கிறார். விக்னேஷை விட இவருக்குத்தான் காதல் உணர்வுகளை அதிகம் வைத்திருக்கிறார் இயக்குனர். ஆண்களை விட பெண்களுக்குத்தான் காதல் அதிக தைரியம் கொடுக்குமோ என யோசிக்க வைக்கிறது ஆராவின் நடிப்பு.

ஆராவின் தோழியாக நடித்திருப்பவர், விக்னேஷின் பள்ளித் தோழர்கள், ஆராவின் அம்மா செந்தி என அனைவருமே பொருத்தமான தேர்வு. கிராமத்து மனிதர்களை நம் கண் முன் அப்படியே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

படத்தின் இசையமைப்பாளர் யார் எனக் கேட்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் உதயகுமார். இளையராஜாவின் தீவிர ரசிகர் போலிருக்கிறது. பின்னணி இசையிலும், பாடல்களிலும் தனது திறமை வெளிப்பட வேண்டும் என உழைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் சமீர், திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை அழகாகப் படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார்.

பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இடையிலான காதல் என்பதுதான் படத்தின் பெரும் நெருடல். அதனால், படத்தின் நாயகன், நாயகி இருவருமே நன்றாகப் படிப்பவர்கள் என குறிப்பிடுகிறார் இயக்குனர். பள்ளிக் காதலைப் படமாகப் பார்க்கும் அந்த வயதினருக்கு ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தலாம். அந்த ஒரு நெருடலை மட்டும் தவிர்த்துப் பார்த்தால் இந்த 'குழலி' ஒரு மண்வாசனைப் படம் என தாராளமாகப் பாராட்டலாம். காதல் படமென்றால் கிளைமாக்சை இப்படித்தான் முடிக்க வேண்டும் என எல்லா இயக்குனர்களும் நினைப்பது ஏனோ ?.

குழலி - குயிலி…வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement