Load Image
dinamalar telegram
Advertisement

நானே வருவேன்

தயாரிப்பு - வி கிரியேஷன்ஸ்
இயக்கம் - செல்வராகவன்
இசை - யுவன்ஷங்கர் ராஜா
நடிப்பு - தனுஷ், இந்துஜா, எல்லி அவ்ராம்
வெளியான தேதி - 29 செப்டம்பர் 2022
நேரம் - 2 மணி நேரம்
ரேட்டிங் - 3.25/5

இயக்குனர் செல்வராகவன், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, தனுஷ் கூட்டணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்ததால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே இருந்தது. அந்த எதிர்பார்ப்பை அவர்களது மாறுபட்ட பாணியிலேயே மீண்டும் பூர்த்தி செய்திருக்கிறார்கள்.

இரு வேடங்களில் கதாநாயகன் நடிப்பது, அதிலும் அவர்கள் இரட்டையர்களாக இருப்பது தமிழ் சினிமாவில் இதற்கு முன் பல படங்களில் பார்த்த ஒன்று. அதை புதிய பாணியில் கொடுத்திருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். அவருக்குத் துணையாக டபுள் ஆக்ஷனில் தனுஷ், இசையில் யுவன் என இருக்கிறார்கள்.

சிறு வயது இரட்டையர்கள் கதிர், பிரபு. இவர்களில் கதிர் சைக்கோத்தனமான குணம் கொண்டவர். அவரது குணத்தைத் தாங்க முடியாமல் அப்பா கடுமையாக கண்டிக்கிறார். அதனால், அப்பாவையே கொலை செய்கிறான் கதிர். ஒரு நாள் கதிரை தனியாக விட்டு, இன்னொரு மகன் பிரபுவை மட்டும் தன்னுடன் அழைத்துச் சென்றுவிடுகிறார் அவர்களது அம்மா. இருபது வருடங்களுக்குப் பிறகு பிரபு தன் மனைவி ஒரு மகள் என குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறார். இந்நிலையில் பிரபுவின் மகள் சத்யா உடம்பில் ஒரு பேய் புகுந்து கொள்கிறது. சத்யா உடம்பை விட்டு வெளியேற வேண்டுமென்றால் ஒரு கொலையைச் செய்யச் சொல்கிறது. யாரை கொல்லச் சொல்கிறது, எதற்காகக் கொல்லச் சொல்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கதிர், பிரபு என இரண்டு வேடங்களில் தனுஷ். கதிர் சிறு வயதிலிருந்தே சைக்கோத்தனமான குணம் கொண்டவர். படத்தில் அந்தக் கதாபாத்திரம் இடைவேளைக்குப் பிறகுதான் வருகிறது. இடைவேளையில் அந்தக் கதாபாத்திரத்தின் 'என்ட்ரி'க்கு ரசிகர்களிடம் அப்படி ஒரு வரவேற்பு. இரண்டாம் பாதி முழுவதும் அந்தக் கதிரின் கலக்கல்தான் இடம் பெற்றுள்ளது. நெகட்டிவ் கதாபாத்திரத்தில் தனுஷின் நடிப்பு ஸ்டைலிஷாக உள்ளது. அன்பான அப்பா, கணவனாக பிரபு கதாபாத்திரம். தன் மகள் எப்படியாவது குணமடைய வேண்டும் என பொறுப்பாக நடந்து கொள்கிறார். இரண்டு கதாபாத்திரங்களுக்கும் நிறையவே வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார் தனுஷ்.

படம் முழுவதும் இரண்டு தனுஷ்கள் மட்டுமே நிறைதிருப்பதால் மற்ற கதாபாத்திரங்களுக்குக் கொஞ்சம் குறைவான நேரம்தான். இருந்தாலும் அந்த குறைவான நேரத்திலும் தங்கள் நிறைவான நடிப்பைத் தந்துள்ளார்கள். பிரபு கதாபாத்திர தனுஷ் ஜோடியாக இந்துஜா, கதிர் கதாபாத்திர தனுஷ் ஜோடியாக எல்லி அவ்ராம். மனநல மருத்துவராக பிரபு, தனுஷின் நண்பனாக யோகி பாபு நடித்திருக்கிறார்கள்.

தனுஷின் மகள் சத்யாவாக நடித்திருக்கும் ஹியா தவே, மகன்களாக நடித்திருக்கும் பிரபவ், பிரணவ் ஆகியோரது நடிப்பு இந்த வயதில் அவ்வளவு இயல்பாக உள்ளது.

படத்தின் பெரும் பிளஸ் பாயின்ட், யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை. பல காட்சிகளில் அவரது பின்னணி இசை படத்தை இன்னும் தூக்கி நிறுத்துகிறது. 'வீர சூர தீரா' பாடல் படத்தின் டெம்போவை அதிகப்படுத்துகிறது. 'ரெண்டு ராஜா, பிஞ்சு பிஞ்சு மழை' பாடல்களும் ரசிக்க வைக்கின்றன. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு, புவன் சீனிவாசன் படத் தொகுப்பு கதைக்குத் தேவையான விதத்தில் சரியாக அமைந்திருக்கின்றன. இரண்டு மணி நேரப் படம் என்பது முக்கியம். தேவையற்ற காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை.

செல்வராகவன் கதாபாத்திரம் டக்கென வந்து போகிறது. கதிர் கதாபாத்திர தனுஷின் கொலை வெறிக்கு அவரும் ஒரு காரணம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்க வேண்டும். இடைவேளைக்குப் பின் இரண்டு தனுஷ்களும் நிறைய மோதிக் கொள்வார்கள் என எதிர்பார்த்தால் அதில் ஏமாற்றம்.

செல்வராகவனிடமிருந்து ஒரு பேய்ப் படமா என்ற கேள்வி எழும். ஆனால், ஆரம்பத்திலேயே டைட்டில் முன்பாக அது பற்றி ஒரு 'கார்டு' போட்டுவிடுகிறார்கள். சென்டிமென்ட், பேய், சைக்கோ என வேறு ஒரு 'வகை' படத்தை முயற்சித்திருக்கிறார்.

நானே வருவேன் - வரலாம்வாசகர் கருத்து (2)

 • அப்புசாமி -

  தனுஷின் கெட்டப் சிம்புவின் வெ.த.கா கெட்டபை காப்பி அடிச்சமாதிரி இருக்கு.

 • Chandrakumar Kumar -

  ,,,,,

 • Chandrakumar Kumar -

  ,,,,,

 • Chandrakumar Kumar -

  ,,,,,

 • Chandrakumar Kumar -

  ,,,,,

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement