PUBLISHED ON : ஜூலை 03, 2021

முன்கதை: மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த மாணவி ஸ்ருதி, மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுவந்தார்; சிறு மாற்றம் ஏற்பட்டதும், கல்லுாரியில் சேர்ந்த நாட்களின் நினைவில் மூழ்கினாள். இனி -
மறுநாள் -
கல்லுாரியில் மாலை வகுப்பு முடிந்த போது, சீனியர் மாணவர்கள், வகுப்பறையின் முன் பகுதிக்கு வந்தனர்; அனைவரையும் அமரும்படி சைகை செய்தனர்.
'வரும் ஞாயிற்றுக்கிழமை ஜூனியர் மாணவர்களுக்கு, 'பிரஷர்ஸ் பார்ட்டி' என்ற அறிமுக விருந்து நடைபெற உள்ளது. இதில், அனைத்து மாணவ, மாணவியரும் கலந்து கொள்ள சீனியர் மாணவர்கள் சார்பாக அழைப்பு விடுக்கிறோம்...'
'என்ன பூர்ணா... போகணுமா...' என்றாள் ஸ்ருதி.
'அதனால் என்ன... போவோம்... பிரஷர்ஸ் பார்ட்டி தானே... ஜாலியா இருக்கும்...' என்றாள் பூர்ணா.
இரவில் அத்தையிடம் அதுபற்றி கூறினாள் ஸ்ருதி.
'போ... போயி நல்லா என்ஜாய் பண்ணிட்டு வா...' என்றார் ப்ரியா.
அந்த பார்ட்டி பெரும்பாலான மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப ஓட்டல் ஹாலில் நடைபெற்றது.
சீனியர்களும், ஜூனியர்களுமாக, 50 பேர் விதவிதமான உடையில் குழுமி இருந்தனர்.
ஸ்ருதியும், பூர்ணாவும் சேர்ந்து வந்த போது, சீனியர்கள் வரவேற்று, மற்ற ஜூனியர்களுக்கு கொடுத்ததைப் போல, ஆளுக்கு ஒரு ஒற்றை ரோஜாப்பூ கொடுத்தான்.
பார்க்க வினோதமாக தான் இருந்தது.
உள்ளே வந்த உடனே, 'புடவையில் ரொம்ப அழகாய் இருக்கிறாய் ஸ்ருதி...' என்றான் விக்ரம்.
கையில் வைத்திருந்த ரோஜாப்பூவை விக்ரமிடம் நீட்டினாள். அவன் வாங்கியதை பார்த்த பூர்ணாவும், ரோஜாவை விக்ரமிடம் கொடுத்தாள்; அதையும் வாங்கினான்.
அறிமுகம், கை குலுக்கல்கள், செல்பி என, நேரம் ஜாலியாக நகர்ந்தது.
கலகலப்பாய் சென்ற அந்த விருந்து முடிய, இரவு 10:00 மணி ஆனது.
மறுநாள் -
மாலை வகுப்புகள் முடித்து, ஸ்ருதி, பூர்ணா எதிரே வந்த விக்ரம், 'சனிக்கிழமை மாலை, நான் உங்களை ஒரு இடத்திற்கு கூட்டிட்டு போறேன்; அங்கே விதவிதமாக ருசியாக சாப்பிடலாம்...' என்றான்.
'யார் ஸ்பான்சர்...'
'அவங்களுக்கு அவங்க அவங்களே ஸ்பான்சர்; அதிகமாக ஒன்னும் செலவு வராது...' என்றான் விக்ரம்.
'எங்கே...'
'இன்னும் இரண்டு நாள் தானே, காத்திரு...' என்று சிரித்தான்.
அந்த சனிக்கிழமையும் வந்தது.
அவன் அவர்களை அழைத்துச் சென்ற இடம், லால் பாக் பொட்டானிக்கல் கார்டன் அருகில் உள்ள, உணவு தெரு.
தெருவின் இரண்டு பக்கமும், சின்ன சின்னதாய் நிறைய உணவு கடைகள்; அந்த ஏரியா முழுக்க உணவு வாசனை.
பார்த்ததுமே, 'இவ்வளவு பெரிய உணவுக்கான பஜாரா... பானி பூரி சாப்பிடலாமா...' என்றாள் ஸ்ருதி.
'சாப்பிடத்தானே வந்திருக்கிறோம்... உனக்கு பிடிச்ச உணவு எது வேணுனாலும் சாப்பிடலாம்...' என்றான் விக்ரம்.
'சரி... ஆளுக்கொண்ணு சுவை பாருங்க... முதலில் நீ பாரு...' என்று விக்ரம் சொல்ல, அப்படியே துாக்கி வாய்க்குள் போட்டாள் ஸ்ருதி; அவள் முக சுளிப்பு வித்தியாசமாய் இருந்தது.
'ரசத்தில் புளிப்பே இல்ல... செம காரம்... பச்ச மிளகா வாடை அடிக்குது...' என்றாள் ஸ்ருதி.
'இது இங்கே ஸ்பெஷல்... பச்சை மிளகாயை அரைத்த தண்ணி தான் இங்கே ரசம்; சாப்பிடு...' என்றான் சிரித்தபடி விக்ரம்.
'பிடிக்கல... நீங்க ஆளுக்கு ரெண்டு எடுத்து காலி செய்துடுங்க...' என்றாள் ஸ்ருதி.
'ரொம்ப தாராள மனசு...' என்ற விக்ரம், 'எனக்கு பிடிக்கும்...' என்று கூறி, இரண்டு பானிபூரி சாப்பிட்டான். மீதம் இருந்த பானிபூரிகளை தின்றாள் பூர்ணா.
இரண்டடி சென்ற ஸ்ருதி, 'கொஞ்சம் பொறுங்கள்... இவ்வளவு தூரம் கடந்து வந்து, பானிபூரி சாப்பிட்டிருக்கோம், ஒரு செல்பி எடுக்கலாம்...' என்றாள்.
பூர்ணாவை இழுத்து தன்னோடு அணைத்தப்படி, மொபைலை உயர்த்தி பிடித்து செல்பி எடுத்தாள்.
மொபைலை பார்த்ததும் ஸ்ருதிக்கு அம்மா நினைவு வந்தது; அம்மா போன் செய்து விடுவாளோ என்று தோன்றியது. இப்போது இப்படி இரவு நேரத்தில் வெளியில் வந்து இருப்பது தெரிந்தால் என்ன சொல்வாளோ என பதட்டம் வந்தது.
'மொபைலை அணைத்து வைப்பதே உத்தமம்' என, செல்பி எடுத்த பின் மொபைலை அணைத்து வைத்து விட்டாள் ஸ்ருதி.
'பூர்ணா... நீ தப்பா நினைக்கலைன்னா ஒன்னு சொல்லவா...' என்றாள் ஸ்ருதி.
'என்ன...'
'ஒருவேளை என் அம்மா போன் செய்தால், எடுக்காதே...' என்றாள் ஸ்ருதி.
அவளை ஆச்சரியமாக பார்த்தாள் பூர்ணா.
- தொடரும்...
ரவி

