
மன்னர் திவேனந்தனிடம் இரண்டு சகோதர்கள் அடிமைப்பட்டிருந்தனர். அவர்களிடம், 'உழைத்து, ஆயிரம் பணம் கொடுத்தால் உங்களை விட்டு விடுவேன்...' என்று கூறினார் மன்னர்.
மூத்தவன் தேவராஜ், பலமும், சுறுசுறுப்பும் உடையவன்; மன்னர் இடும் வேலையை மிக சீக்கிரம் முடித்து, மற்றோரிடத்திலும் கூலிக்கு வேலை செய்து வந்தான்.
இரவு, பகலாக உழைத்து ஆயிரம் பணம் சேர்த்தான்; அதை, மன்னர் முன் வைத்து, 'என் தம்பியை விடுவிக்க வேண்டும்...' என்றான்.
பணத்தைப் பார்த்தார் மன்னர்; வெகு ஆச்சரியத்துடன், 'அட பைத்தியக்காரா... கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில், உன்னை விடுவித்துக் கொள்ளாமல், உன் தம்பியை விடுவிக்க முயல்கிறாயே...' என்றார்.
'மன்னா... நான் நன்றாக வேலை செய்வேன்; என் தம்பி உடல்நலம் முடியாதவன்; அவன் உழைத்து, பொருள் சேர்த்து, தன்னை விடுவித்து கொள்ள முடியாது. என் தம்பி துன்பப்பட, நான் மட்டும் சுகமாக வாழ முடியுமா... அதனால்தான் அவனை விடுவிக்க கேட்கிறேன்...' என்றான்.
இதைக்கேட்ட மன்னர் அந்த பாசப்பிணைப்பை மெச்சினார். பணம் வாங்காமல் இருவரையும் விடுவித்தார். ஆயிரம் பணத்தைக் கொண்டு, ஒற்றுமையாக தொழில் செய்து இருவரும் சிறப்பாக வாழ்ந்தனர்.
குழந்தைகளே... நல்ல பண்புகளை கடைபிடித்தால், நன்மை தேடிவரும்.

