
விரைவு எதிர்வினைக் குறி!
சதுரங்கம் என்ற, 'செஸ்' விளையாட்டில் ஆர்வமுள்ளவர் ஹாரமஸ் ஹிரோ. கிழக்காசிய நாடான ஜப்பான், டென்சோ நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். கண்டுபிடிப்புகளில் ஆர்வம் உள்ளவர்.
சதுரங்க விளையாட்டில் உள்ளது போல், கறுப்பு, வெள்ளை கட்டங்களில், செயலி ஒன்றை உருவாக்கினார். அது தான்,
'கியூ.ஆர்.கோடு' என அழைக்கப்படுகிறது. பண பரிவர்த்தனையில் முக்கிய தொழில் நுட்பமாக கோலோச்சுகிறது. இதை முதல் முதலில், 1994ல் பயன்படுத்தியது டென்சோ நிறுவனம். உலக அளவில், 2002க்கு பின் பிரபலமானது.
கறுப்பும், வெள்ளையும் கலந்த மாய வடிவம் தான் கியூ.ஆர்.கோடு. சிறிய அஞ்சல் தலை போல் தோன்றும். விவரங்களை உள்ளடக்கி அமைதி காக்கும்.
இதை, குறியீட்டு மொழி எனலாம். அதன் உள் அமையும் கருப்பு வடிவம், '1' என்ற எண்ணையும், வெள்ளை, '0' என்பதையும் குறிக்கும். இந்த குறியீடுகளுக்கு, 'பைனரி' என்று பெயர். பைனரிகளை உள்ளடக்கிய,
கியூ.ஆர்.கோடு படத்தை, 'ஸ்கேன்' செய்தவுடன், கணினி வாசிக்கும்.
துவக்க காலத்தில், வாகன உற்பத்தியில் தான் இது பயன்படுத்தப்பட்டது. தற்போது, அன்றாடம் முக்கிய தேவைகளை பூர்த்தி செய்கிறது. மனித குலத்துக்கு இன்றியமையாத தொழில் நுட்பமாகிவிட்டது.
இப்போது, உடனடி பண பரிவர்த்தனையில் இந்த தொழில்நுட்பம் அதிகம் பயன்படுகிறது. சாதாரண பெட்டி கடைகளில் கூட, கியூ.ஆர்.கோடு படத்துடன் அலைபேசி செயலிகள், ஸ்டிக்கராக ஒட்டப்பட்டிருக்கும்.
அந்த கடையின் வங்கிக் கணக்கு, குறிப்பிட்ட பணம் வழங்கும் நிறுவனத்துடன் இணைந்திருக்கும். பொருள் வாங்கியதும், கடையின் கியூ.ஆர்.கோடு படத்தை, அலைபேசியில் ஸ்கேன் செய்தால், எளிதாக பணம் அனுப்பி விடலாம். ரொக்கமற்ற பண பரிவர்த்தனையில், மிகவும் பிரபலமாகி உள்ளது.
இவ்வாறு, புரட்சிகரமாக செயல்படுகிறது, இந்த தொழில்நுட்பம்.
கியூ.ஆர்.கோடு படம் உருவாக்க, ஏராளமான இணையதளங்கள் உள்ளன. அவற்றில், தகவல்களை உள்ளிட்டு, கியூ.ஆர்.கோடு படங்களைப் பெறலாம். முற்றிலும் இலவசமாக இந்த சேவை கிடைக்கிறது.
மொழியும் நுட்பமும்!
ஆங்கில சொற்களான, 'குயிக் ரெஸ்பான்ஸ்' என்பதன் சுருக்கமே, 'கியூ.ஆர்.,' என்பதாகும்.
புகழ்பெற்ற பதிப்பகங்கள் வெளியிடும் புத்தக பின் அட்டையில், 'பார்கோடு' என்ற வடிவம் அச்சிடப்பட்டிருக்கும். அதை, கணினி அல்லது பில் போடும் இயந்திரத்தின் முன் காட்டியதும், புத்தகத்தின் விலை மற்றும் விவரங்களைக் கட்டும். அந்த தொழில் நுட்பத்தின் வளர்ச்சியாக இது அமைந்துள்ளது.
கியூ.ஆர்.கோடுக்கு, 'விரைவு எதிர்வினைக்குறி' என, தமிழாக்கியுள்ளது, தகவல் பொது தளமான, விக்கிபீடியா. தமிழின் திறந்த அகரமுதலியான, விக்சனரி தளம், தகவல் பொதிந்த படம் என பெயர்த்து, 'தகவம்' அல்லது, 'தற்குறி' என்ற சொல்லைப் பரிந்துரைத்துள்ளது.
கல்லறையிலும்...
கல்லறையிலும், கியூ.ஆர்.கோடு படம் பதிப்பது ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் வழக்கமாகி விட்டது. இறந்தவர் பற்றிய விவரங்கள் அதில் உள்ளிடப்பட்டிருக்கும். கல்லறை முகப்பில் அலைபேசி கேமராவால், 'ஸ்கேன்' செய்தால், அவர் பற்றிய விவரங்கள் கிடைக்கும்.
கியூ.ஆர்., பயன்கள்
* புகைப்படம், காணொலி, வெப்சைட் லிங் என்ற இணையதளச்சுட்டி, குறுஞ்செய்தி, மின்னஞ்சல் முகவரி மற்றும் தகவல்களை, கியூ.ஆர் கோடாக, 'என்கோட்' செய்தால், அஞ்சல் தலை போல் படம் கிடைக்கும். இதை, கணினி, அலைபேசியில் சேமித்து தேவையான போது பயன் படுத்தலாம். மற்றவருக்கும் பகிரலாம்
* என்கோட் செய்யும் தகவல் எந்த மொழியிலும் இருக்கலாம். வலைத்தள முகவரி, போட்டோ, காணொளி பதிவுகளையும் கியூ.ஆர்.கோடு படமாக மாற்றலாம்
* பல்கலைக்கழகங்கள், படிப்பு சான்றிதழ்களை, கணினியில் பதிவு செய்த பின்னரே வழங்குகின்றன. சான்றிதழ் விவரம், கியூ.ஆர்.கோடு படமாக சேமித்து வைக்கப்படும். சான்றிதழிலும் அச்சிடப் பட்டிருக்கும். இதை, ஸ்கேன் செய்தால் குறிப்பிட்ட சான்றிதழ் அசலா என, அந்த நொடியே அறியலாம்
* ஒருவரின் விபரத்தை, கியூ.ஆர்.கோடு படமாக்கி, விசிட்டிங் கார்டு என்ற வணிக விளம்பர அட்டையில் அச்சிட்டு பயன்படுத்தலாம்.
- என்றும் அன்புடன், அங்குராசு.

