
அக்பர் அமைச்சரவையில் செல்வாக்கு பெற்றிருந்தார் பீர்பால். இதைப் பார்த்து, சிலர் பொறாமைப் பட்டனர். எப்படியாவது அரசவையிலிருந்து ஒழிக்க கங்கணம் கட்டினர். அதனால், பீர்பல் மீது இல்லாததும், பொல்லாததும் கூறி பழி சுமத்தினர்.
முதலில், அவற்றை எல்லாம் நம்பவில்லை அக்பர்.
பின், 'அப்படியும் இருக்குமோ' என்ற சந்தேகம் கொண்டார்.
ஆனால் உடனடியாக எந்த முடிவுக்கும் வரவில்லை.
அன்று -
அரசவையில், 'பொய்...மெய்' பற்றிய விவாதம் நடந்தது.
அமைச்சர்களும், பண்டிதர்களும் பொய்யின் தீமைகளையும், உண்மையின் சிறப்புகளையும் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.
விவாதத்தில் குறுக்கிடாமல் கேட்டுக் கொண்டிருந்தார் அக்பர்
விவாத முடிவில், 'உண்மைக்கும், பொய்க்கும் எவ்வளவு துாரம் வித்தியாசம்...' என்றார்.
ஒருவருக்கும் புரியவில்லை; பேசாமல் இருந்தனர்.
'பீர்பல்... உமக்கு தெரியுமா...' என்றார் அக்பர்.
'அரசே... உண்மைக்கும், பொய்க்கும், நான்கு விரற்கடை துாரமே உள்ளது... காதுகளினால் எவற்றை கேட்கிறோமோ, அவை பொய்; கண்களினால் எவற்றைப் பார்க்கிறோமோ, அவை மெய். இப்போது பாருங்கள்... கண்களிலிருந்து, காது எவ்வளவு துாரத்தில் உள்ளது... நான்கு விரற்கடை துாரம் தான் அல்லவா...' என்றார், பீர்பல்.
அக்பர் மகிழ்ந்தார்.
பொறாமைக்காரர்கள் கூறியதை, மறந்தார்.
குழந்தைகளே... எதையும் தீர விசாரித்து அறிந்த பின்பே முடிவுக்கு வர வேண்டும்.

