
வரலாற்றுப் புகழ்பெற்றது ஹவா மாளிகை; ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் அரண்மனை வளாகத்தில் கம்பீரமாக அமைந்துள்ளது. ஜெய்ப்பூர் நகரின் எழிலை பறை சாற்றுகிறது என்றால் மிகையாகாது.
ஏழு வாயில்களைக் கொண்டது. கோட்டை, கொத்தளம், வாள், அம்பு, சேனை, அகழிகள் என அமர்களமாக உள்ளது. அன்றைய நாளில் மகாராணியர் தங்கியிருந்த இடமே ஹவா மகால்.
ஐந்து அடுக்குகளை உடையது; எங்கு நோக்கினாலும், வித்தியாசமான ஜன்னல்கள் காணப்படுகின்றன. வெளியே இருந்து பார்த்தால், உள்ளே நிற்பவரை காணமுடியாது. ஆனால், உள்ளே இருப்பவர்கள், வெளியே நடப்பதை முழுமையாக காண இயலும்.
இந்த மகாலைக் கட்டியது, மன்னர் பிரதாப்சிங். கி.பி.1875ல், ஐரோப்பிய நாடான இங்கிலாந்து ராணி விக்டோரியா இந்நகருக்கு வருகை தந்தார். இதை ஒட்டி, நகரில் அனைத்து கட்டடங்களுக்கும், சிவப்பு வண்ணம் பூசப்பட்டது. இதனால், ஹாவா மகால் செந்நிற வண்ணத்தில் ஜொலிக்கிறது.
ஹவா மாளிகையில் எப்போதும் சிலுசிலுவென இளங்காற்று வீசிக் கொண்டிருக்கும். இதை, காற்று மாளிகை என அழைப்பதும் உண்டு. ஜெய்ப்பூர் நகருக்கு பெருமை சேர்க்கிறது.
- ஜி.ராஜா

