
அன்புள்ள பிளாரன்ஸ்...
நடுத்தர வருமானமுள்ள குடும்பத்தை சேர்ந்த, 38 வயது பெண் நான். மகனுக்கு வயது, 14; 9ம் வகுப்பு படிக்கிறான்; புத்தகப் புழுவாக இருக்கிறான்.
ஒரு புத்தகத்தில் தினமும், 50 பக்கங்களாவது வாசித்து விடுகிறான்.
யாரிடமும் அதிகம் பேச மாட்டான்; உண்மை, நேர்மை, நியாயம் என எப்போதும் செயல்படுவான்.
மூன்று ஆண்டுகளாக ஒரு வினோதமான பழக்கம் உள்ளது; தினமும், இரவு, 10:00 மணிக்கு துாங்க செல்லும் முன் நாட்குறிப்பு எழுதுகிறான்.
அன்றைய முழு நிகழ்வும், சந்தித்த மனிதர்களின், நல்ல, கெட்ட குணங்களும் அதில் இடம் பெற்றுள்ளன. தன் கெட்ட குணங்களையும், நடத்தைகளையும் மறைக்காமல் விவரித்திருப்பான்.
அவனிடம் கண்டிப்புடன் -
'ஒப்புதல் வாக்குமூலம் ஏன்டா எழுதுற...'
'பிறரை விமர்சனம் செய்து எதுக்கு எழுதணும்...
'யாரும் உன் நாட்குறிப்பை படிச்சா... என்ன நினைப்பாங்க...' என, பலமுறை கூறியுள்ளேன்.
இப்பழக்கத்தை விட்டொழிக்க கெஞ்சி கேட்டுள்ளேன்.
கேட்க மறுக்கிறான்.
நீயாவது, நல்ல அறிவுரை கூறி திருத்த வேண்டுகிறேன்!
அன்புள்ள அம்மாவுக்கு...
நாட்குறிப்பு என்பது, வரலாற்றில் மிக முக்கியமான ஆவணம்; தனி மனிதனுடைய, தனிப்பட்ட அனுபவங்கள், எண்ணங்கள் மற்றும் உணர்வுகள். தினமும் எழுதப்படுவது நாட்குறிப்பு பதிவு ஆகும்.
நாட்குறிப்பு எழுதுபவர்களை, 'டைரிஸ்ட்' என்பர்; நாட்குறிப்பில், மனித நாகரிகங்கள், அட்டவணை, அரசு தகவல், வியாபார பதிவு, ராணுவ நடவடிக்கை என பலவும் உள்ளடங்கும்.
தினமும்...
* செய்ய வேண்டிய பணிகளை அட்டவணைப்படுத்துதல்
* என்னென்ன சாப்பிட்டு, எத்தனை கலோரி எடுத்துக் கொண்டோம் என்ற பதிவுகள்-
* தோட்ட வேலைகளை பற்றிய குறிப்புகள்-
* எத்தனை மணிக்கு துாங்குகிறோம்; என்ன கனவு கண்டோம் என்ற தகவல்கள்-
* பயண குறிப்புகள்-, போர் பற்றிய தகவல்களை நாட்குறிப்பாய் தயாரிக்கலாம்.
'டைரி' என்ற வார்த்தை, 'டைரியம்' என்கிற லத்தீன் மொழி சொல்லில் இருந்து தோன்றியது. நாட்குறிப்பு எழுதும் பழக்கம், ஆதி காலத்திலே புழக்கத்தில் இருக்கிறது.
கி.பி., 2ம் நுாற்றாண்டில், ரோம பேரரசர் மார்கஸ் அரிலியஸ், கிரேக்க மொழியில், நாட்குறிப்பு எழுதியிருக்கிறார்.
மேற்காசியா பகுதியில் வசித்த அராபியர்கள், கி.பி., 10ம் நுாற்றாண்டில் எழுதிய நாட்குறிப்புகள் பல கிடைத்துள்ளன.
கி.பி., 11ம் நுாற்றாண்டில், இப்னு பன்னா எழுதிய நாட்குறிப்பு பிரசித்தமானது. பல நாட்குறிப்புகள் புத்தகங்களாக பிரசுரிக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பிய நாடான இங்கிலாந்து, லண்டனில் பிளேக் நோய் ஏற்படுத்திய தாக்கம், லண்டனில் பெருந்தீயின் கோரத்தாண்டவத்தை எல்லாம், நாட்குறிப்பு பதிவுகளால் முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியை சேர்ந்த ஆனி பிராங்க் என்ற பெண், 1940ல் டச்சு மொழியில் எழுதிய, 'ஒரு இளம்பெண்ணின் நாட் குறிப்பு' மிகவும் பிரபலமானது. இரண்டாம் உலகப் போருக்கு முன் ஜெர்மனி ஆக்கிரமிப்பின் போது, ஆம்ஸ்டர்டாமில் சிக்கி தவித்த அனுபவங்களை அந்த பெண் எழுதியுள்ளார். அது புத்தகமாக பதிப்பிக்கப்பட்டுள்ளது.
எனக்கு தெரிந்த நாடகக் கலைஞர், எம்.எஸ்.ராஜா, 50 ஆண்டுகளாக, நாட்குறிப்பு எழுதுகிறார்.
இணையதளத்திலும் நாட்குறிப்புகள் எழுதப்படுகின்றன. ஜஸ்டின் ஹால் என்பவர், 11 ஆண்டுகளாக, நாட்குறிப்பு எழுதுகிறார்.
புதுச்சேரியில் மொழி பெயர்ப்பு வல்லுனராக பணியாற்றிய ஆனந்தரங்கம் பிள்ளை எழுதிய நாட்குறிப்பு மிக முக்கிய வரலாற்று ஆவணமாக போற்றப்படுகிறது.
அதை மையமமாகக் கொண்டு பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன், 'ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு' என்ற நாவல் எழுதினார்.
அம்மா... உன் மகன் தினமும் நாட்குறிப்பு எழுதுவது மிகவும் ஆரோக்கியமான விஷயம். தமிழ் மொழியில், இலக்கண சுத்தமாக, சரளமாய் எழுத, பேச கற்றுக் கொள்வான்.
'கெட்ட விஷயங்களை, ஆபாசமான விஷயங்களை, எழுதாதே...' என நாசுக்காக வலியுறுத்தவும்.
மாதத்தில், ஒருமுறை மகனின் நாட்குறிப்பை வாசித்து, சரியான வழியில் போகிறானா என்பதை உறுதி செய்யவும்! நாட்குறிப்பு எழுதும் திறமையை, படிப்புக்கும், வேலைக்கும் உதவும் வண்ணம் மடைமாற்றவும்.
யார் கண்டது... பின்னாளில், அவன் நாடு போற்றும் எழுத்தாளனாக உருவாகலாம்!
- அன்பு வாழ்த்துகளுடன், பிளாரன்ஸ்.

