
அன்புள்ள ஆன்டி...
என் வயது, 21; இன்ஜினியரிங் 3ம் ஆண்டு, 'ட்ராப்' அவுட் மாணவி நான். எவ்வளவோ தவறுகள் செய்துள்ளேன். அதற்காக, பல வகையில் அவமானங்களை, தண்டனையாக பெற்றேன்; பெற்றோரும், உறவினர்களும் என்னுடன் பேசுவதில்லை.
என் தவறுகள் இதோ...
* பெற்றோர் திட்டியதால், 7ம் வகுப்பு படித்தபோது, தற்கொலைக்கு முயன்றேன்
* உறவினர் வீடுகளில், நகை, பணம் திருடி மாட்டியிருக்கிறேன்
* இன்ஜினியரிங் முதல் ஆண்டின் போது, பெண் ஆசிரியை பற்றி, அவதுாறாக முக நுாலில் எழுதி, கையும் களவுமாய் சிக்கி, ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானேன்
* இன்ஜினியரிங் 3ம் ஆண்டு, 10 பாடங்கள் அரியர்ஸ் வைத்துள்ளேன்
* உடன் படித்த மாணவர்கள், பாட ஆசிரியர்கள் மீது அவதுாறாக மின்னஞ்சல் அனுப்பி மாட்டிக் கொண்டேன்; சைபர் க்ரைம் போலீஸ் விசாரித்தது; எதிர்கால நன்மை கருதி, என் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.
எனக்கு தமிழின் மீது ஆர்வம் அதிகம்; மீண்டும் கல்லுாரியில் சேர்ந்து, பி.ஏ., தமிழ் படித்து, பின், ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுத விரும்புகிறேன். என் பெற்றோர் இதற்கு சம்மதம் தெரிவிப்பரா என்று தெரியவில்லை; திருமணமே செய்து கொள்ளாமல், வாழ்க்கையை சமூக சேவைக்கு அர்ப்பணிக்க முடிவெடுத்துள்ளேன்; தகுந்த ஆலோசனைகள் கூறுங்கள் ஆன்டி!
அன்பு மகளே...
செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு, 60 வயதான முதியவர் கூட மன்னிப்பு கேட்பதில்லை. அபூர்வமாக, 21 வயதான பெண் நீ, செய்த குற்றங்களை பட்டியலிட்டு வருந்தி, திருந்தி வாழ ஆலோசனை கேட்டிருக்கிறாய்.
ஐந்து பக்கங்களில் அழகான கையெழுத்தில், இலக்கண பிழைகள் இல்லாத ஒப்புதல் வாக்குமூலத்தை எழுதியுள்ளாய்.
நெகிழ்ந்து போனேன்.
ஆயிரம் குற்றங்களை அடுக்கடுக்காய் செய்து விட்டு, உத்தமர் போல் நடிக்கும் கோடிக்கணக்கானவர்களில் நீ வித்தியாச விதிவிலக்கு.
திருடனாய் இருந்த வால்மீகி திருந்திய பின், ராமாயணம் எழுதவில்லையா...
தவறு செய்யாத மனிதரே உலகில் இல்லை...
செய்த குற்றங்களில் சாம்பலாகி போன நீ, பீனிக்ஸ் பறவையாக உயிர்த்திருக்கிறாய்.
இனிமேல் செய்ய வேண்டியதை கூறுகிறேன்...
மனம் திறந்து கேள்.
* உறுதியுடன், 'முகநுாலில் தவறான பதிவுகள் போட மாட்டேன்; யாரை பற்றியும் அவதுாறு மின்னஞ்சல் அனுப்ப மாட்டேன்' என சபதம் எடுத்துக் கொள்
* நகை மற்றும் பணத்தின் மீதும் உள்ள அதீத ஈடுபாட்டை களைந்து விடு; அதே நேரம், 'உழைத்து பணம் சம்பாதிப்பேன்; உழைத்த பணத்தில் அளவான நகை வாங்கி அணிவேன்' என சபதம் எடு
* மிதமிஞ்சிய கோபத்தையும், பிறரை பழி வாங்கும் உணர்ச்சியையும் கை விடு; பிறர் மீதான எதிர்பார்ப்பை குறை; அவசர அவசரமாய் மற்றவரை கணிக்க முயலாதே; வெறி கொண்டு மனிதரை பாகுபடுத்தி பார்க்காதே
* இதுவரை கல்வி உனக்கு கசந்துள்ளது; திடீரென்று ஒரே நாளில் நீ மிக புத்திசாலியாகி விட முடியாது. தமிழை படிக்க விரும்புவது கூட, அது தாய்மொழி எளிமையாக புரியும் என எண்ணுவதால் தான்.
வாழ்க்கை என்பது, அண்ணாமலை போன்ற தமிழ் படமல்ல; பால்காரன் ஒரே பாட்டில் பணக்காரனாக முடியாது! கடுமையாக உழைக்க வேண்டும்; அடுத்து வரும் ஆறு ஆண்டுகள் இதை மேற்கொள்; முயற்சி மெய்வருத்த கூலி நிச்சயம் தரும் மகளே...
பெற்றோரிடம் மன்னிப்பு கேள். அவர்களின் சிரமங்களை புரிந்து கொள்ள முயற்சி செய். அவர்களின் பாதங்களில் விழுந்து, 'திருந்தி விட்டேன்; என்னை இளங்கலை தமிழ் பட்ட படிப்பில் சேருங்கள். இடை நிற்காமல் படிப்பை முடிக்கிறேன். அதன்பின், ஐ.ஏ.எஸ்., தேர்வும் எழுதுகிறேன்...' என கண்ணீரால் கழுவு.
தற்கொலை என்ற வார்த்தை உன் அகராதியில் இருக்க கூடாது; இறைவன் அனுமதித்த நாள் வரை உயிரோடு இருந்து இவ்வுலகில் தங்க முத்திரையை பதி!
மறதி, காலம் தரும் அருமருந்து; நீ திருந்தி நேர்மையாக, இருந்து பாரேன்; உன் பழைய தவறுகளை உற்றார் உறவினர் மறந்து விடுவர்; ஐ.ஏ.எஸ்., தேர்ச்சியடைந்தால், தலையில் வைத்து கொண்டாடுவர்.
திருமணம் செய்து கொண்டும் சமூக சேவையை வெற்றிகரமாக தொடரலாம்; ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றால் வரன்கள் வரிசையில் வந்து நிற்கும்; பொருத்தமானவனை தேர்ந்தெடு!
முதல், 20 வயதில் தோல்வி; அடுத்த, 20 வயதில் வெற்றிக்கான தொடர் ஓட்டம். 40 வயதில் உலக சாதனை என, மனதளவில் தயார் படுத்திக் கொள்.
பேச்சோடு நிற்காமல் காரியத்தில் இறங்கு; நிறைய தன்னம்பிக்கை நுால்கள் வாசி; கல்வி சார்ந்த தோழிகளை துணை கொள்; யோகா, தியான பயிற்சிகளை மேற்கொள்; வெற்றி உனதே தங்க மகளே!
- அன்புடன், பிளாரன்ஸ்.

