
புதுச்சேரி, வில்லியனுார், விவேகானந்தா உயர்நிலைப் பள்ளியில், 1975ல், 10ம் வகுப்பு படித்த போது, மிகவும் பின்தங்கிய மாணவனாக இருந்தேன். ஆசிரியர்களிடம் உதையும், திட்டும் வாங்கினேன்.
ஆங்கிலப்பாட ஆசிரியர் பார்த்தசாரதி, 'மூதேவி, முட்டுக்கட்டை நீ பள்ளிக்கு வருவதே தண்டம்...' என்றார். அந்த வார்த்தைகள் தான், என்னை சிந்திக்க வைத்தன; ஊக்கப்படுத்தி, முன்னேறத் துாண்டின.
பின் தான், கடுமையாக முயன்று படிக்க ஆரம்பித்தேன்; நான்கு பல்கலைக் கழகங்களில், எம்.ஏ., எம்.எட்., எம்.பில்., என முதுநிலை பட்டங்கள் வாங்கி, ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். மாணவர்களுக்கு சிறப்பாக பாடம் நடத்தி, டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் வழங்கப்படும், நல்லாசிரியர் விருதும் பெற்றேன்.
கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2004ல் அந்த ஆசிரியர் துணைமுதல்வராகப் பணியாற்றி வந்தார். அவர் தலைமையில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. மாணவப்பருவத்து மகிழ்ச்சியை தெரிவித்தேன்; நெகிழ்ந்து போனார்.
தற்போது என் வயது, 62; பணி ஓய்வு பெற்று கவிஞர், எழுத்தாளராக உள்ளேன்; ஐந்து புத்தகங்கள் எழுதி உள்ளேன். இன்றும் அந்த ஆசிரியரை நினைவில் கொண்டுள்ளேன்!
- ரா.லோகநாதன், புதுச்சேரி.
தொடர்புக்கு: 94423 57639

