
இம்முறையும் பரிசு கிடைக்கவில்லை.
தோல்வியை தாங்க முடியாமல், சோகத்தில் ஆழ்ந்தான் மாணவன் அருண்.
முகவாட்டம் கண்டு, ''என்ன நிகழ்ந்தது...'' என்றார் தமிழாசிரியர் மாரியப்பன்.
''விடா முயற்சியுடன் பொது அறிவு போட்டியில் கலந்துகிட்டேன்; இறுதியில் வெல்ல முடியவில்லை; நான் ராசி அற்றவன்...''
கண்கலங்கி நின்றான் அருண்.
''உண்மை தான்... ராசியும், அதிர்ஷ்டமும் மிக முக்கியம்; நான் சொல்வது போல செய்; அதிர்ஷ்டம், உன் வசமாகும்...'' என்றார் தமிழாசிரியர்.
''என்ன செய்ய வேண்டும்...'' என்றான் அருண்.
விளையாட்டு அரங்கின் ஓரத்தில் கிடந்த குண்டுக்கல்லைக் காட்டி, ''இது அதிர்ஷ்டம் மிக்கது; ஒரு நாளுக்கு, ஐந்து அடி வீதம் உருட்டி, எதிர்ப்புற சுவருக்கு எடுத்து போய் சேர்த்தால் தொட்டதெல்லாம் துலங்கும்...'' என்றார் தமிழாசிரியர்.
''கட்டாயம் செய்து முடிப்பேன்...''
''இதை முடிக்க, ஒரு மாதம் ஆகக் கூடும்; இந்த குண்டுக்கல் அருகே நின்று இப்போது ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்...'' என்றார் தமிழாசிரியர்.
ஒரு மாதத்திற்குப் பின் -
தமிழாசிரியரை, மகிழ்ச்சியுடன் விளையாட்டு மைதானத்திற்கு அழைத்து சென்றான் அருண்.
''ஐயா... குண்டுக்கல் மிகவும் கனமாக இருந்தது; கஷ்டப்பட்டு உருட்டி வந்து, இலக்கை அடைஞ்சுட்டேன்...'' என்றான்.
புன்னகைத்து, அருணுடன் புகைப்படம் எடுத்தபடி, ''உனக்கு ஒரு ஆச்சரியம் காத்து இருக்கிறது...'' என்றார் தமிழாசிரியர்.
அலைபேசியில், ஒரு மாதத்திற்கு முன் எடுத்திருந்த புகைப்படத்தையும், தற்போது எடுத்ததிருந்ததையும் காட்டியபடி, ''இரண்டிலும், உன் தோற்றத்தை கவனி...'' என்றார்.
ஒப்பிட்டு பார்த்தான். கண்களை நம்ப முடியவில்லை.
''நோஞ்சானாக இருந்த நானா, இன்று கட்டுடலுடன் அழகாக இருக்கிறேன்...''
வியப்புடன் கேட்டான்.
''தினமும், கஷ்டபட்டு தள்ளினாய்; அது நல்ல உடற்பயிற்சி. உடலை பொலிவுற செய்துள்ளது; குண்டு கல்லை தள்ளி செல்ல, நீ போட்ட உழைப்பு, அதற்கான பலனை தந்து விட்டது... அதை போல, பொது அறிவுப் போட்டியில் பரிசு இல்லாவிடில் என்ன; அதில் சேகரிக்கும் அறிவு மேம்பட்ட பரிசை தர தவறுவதில்லையே...
''உழைப்பு, என்ற விதையை நம்பிக்கையுடன் ஊன்று; வென்றால், மரமாகும் வெல்லாவிட்டால் உரமாகும்...'' என்றார் தமிழாசிரியர்.
துள்ளிக் குதித்து உற்சாகமானான் அருண்.
குழந்தைகளே... பலன் கருதாது உழையுங்கள்; வாழ்க்கையில் கண்ட கனவுகள் ஒரு நாள் நிஜமாகும்!
ஜனமேஜயன்

