PUBLISHED ON : ஜூலை 10, 2021

விருதுநகர் மாவட்டம், சாத்துார், நென்மேனி மேட்டுப்பட்டி, எஸ்.ஆர்.என்.அரசு உயர்நிலைப் பள்ளியில், 1976ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்தபோது, தலைமை ஆசிரியராக இருந்தார் பொ.அருணாசலம்; ஒழுக்கத்துடன் கூடிய, உயர்ந்த கல்வியை வழங்க முழுமையாக அர்ப்பணித்து செயல்பட்டார்.
தினமும் காலை, 8:15 மணி முதல், 8:45 வரை சிறப்பு வகுப்பு நடத்துவார்; பின், 9:00 மணிக்கு இறைவணக்கம் கூட்டம் நடக்கும். அதில், மாணவர்கள் ஒழுக்கத்தை வளர்க்கும் வகையில், எளிமையாக கதைகள் சொல்லி உரை ஆற்றுவார்.
வகுப்பில் நடத்தும் பாடங்களை, மனதில் காட்சியாக பதிய வைப்பார். தமிழறிஞர் ம.பொ.சி., எழுதிய, 'முதல் முழக்கம்' என்ற கட்டுரையை பாடமாக நடத்தியதன் வாயிலாக, வீரபாண்டிய கட்டபொம்மனை கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார்.
நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்தரநாத் தாகூர் எழுதிய, கீதாஞ்சலி கவிதையை, மனபயம் போக்கும் வகையில் அவர் கற்பித்த விதம் மிகவும் வித்தியாசமானது.
விடுமுறை தினங்களில், மதியம் வரை சிறப்பு வகுப்பு நடத்துவார். ஆங்கில இலக்கணத்தை, கறந்த பாலில் பனங்கற்கண்டு போட்டு, சுண்டக்காய்ச்சி கொடுப்பதை போல, தாயினும் சாலப்பரிந்து புகட்டினார்.
பிரதமராக இந்திரா பதவி வகித்தபோது நடந்த, இந்திய - பாகிஸ்தான் போர் பற்றி விளக்க, போரில் பங்கெடுத்த ராணுவ அதிகாரி ஒருவரை வரவழைத்து, அனுபவங்களை எங்களுடன் பகிர வைத்து, நாட்டுப் பற்றை வளர்த்தார்.
இப்போது என் வயது 61; நல்லொழுக்கத்துடன் வாழ்ந்து வருகிறேன்; அதற்கு காரணம், அந்த மாமனிதரிடம் கற்ற பாடங்கள் தான். அறிவை, அறத்துடன் வளர்க்க அயராது பாடுபட்ட, அவரது திருவடிகளை வணங்குகிறேன்!
- ராம.ராம்மோகன், ராமநாதபுரம்.
தொடர்புக்கு: 94863 68982

