
வேலை முடிந்து திரும்பியது சூரியன். வாடி இருந்தது அதன் முகம்.
வரவேற்றபடி, ''என்னாச்சு மகனே... எப்போதும் பிரகாசிக்கும் உன் முகம், சோகத்தில் வாடியுள்ளதே...'' என, பதற்றத்துடன் கேட்டார் அம்மா.
''இனி, வேலைக்கே போக மாட்டேன்; எவ்வளவு கஷ்டப்பட்டு அதிகாலையில் உதித்து மாலை வரை பயணம் செய்றேன். என் ஒளியால் தானே பிரகாசிக்கிறது பூமி. தாவரங்கள் செழித்து வளர்கின்றன... இவற்றை எண்ணாத மனிதக் கூட்டம் என்னை சபித்து திட்டுகிறது...
''இன்று கூட ஒரு சம்பவம் நடந்தது. தெருவில் நடந்து சென்றவன் உடலில் வியர்வை பெருகி விட்டதாம்; அதற்காக, என்னை சபிக்கிறான். துணி உலர்த்தும் பெண்மணி, நிறங்களை திருடிவிட்டதாக சபிக்கிறாள்...''
''கோபம் கொள்ளாதே... ஒளிதருவது உன் கடமை அல்லவா... உன்னை தவிர, யாரால் செய்ய இயலும். எல்லாவற்றையும் மறந்து விருப்பத்துடன் பணியை செய்ய வேண்டும்...'' கனிவுடன் சமாதானப் படுத்தினார் அம்மா.
''நீண்ட காலமாகவே இந்த வசையைக் கேட்டு வருகிறேன். இனியும் தாங்க இயலாது அம்மா...''
முடிவாய் வெறுப்புடன் கூறியது சூரியன்.
பெருமூச்சு விட்டார் அம்மா; சமாதானப் படுத்தும் வழிமுறைகளை யோசித்தார்.
சிறிது நேரத்திற்குப் பின், ''சரி... செல்ல வேண்டாம்; உன் சகோதரன் நிலா, இரவில் வேலைக்குச் செல்லட்டும்; நீ ஓய்வெடுத்துக் கொள்...'' என்றார்.
மறுநாள் காலை -
பணிக்குத் திரும்பவில்லை சூரியன். இருளாகவே கிடந்தது பூமி.
அதிகாலையே வரும் சூரியனுக்காக காத்திருந்தனர் மக்கள். இருளே தொடர்ந்ததால் தவிப்புக்குள்ளானது பூமி. கண்ணீர் வடித்தன உயிரினங்கள்.
''கொஞ்சம் வெளியில் வாறீயா...''
சூரியனை அழைத்த அம்மா, மறைவில் இருந்தபடி, பூமியைச் சுட்டிக் காட்டினார்.
பூமியில் -
'ஐயோ இருள் மண்டிக் கிடக்கிறதே... வேலை எதுவும் நடக்காதே...'
'எங்கே தொலைந்தது சூரியன்... இன்னும் காணோம்...'
புலம்பியபடி, காத்திருந்தது பெருங்கூட்டம். சபித்தபடி உறங்கியது சோம்பேறிக் கூட்டம். அந்தக் கூட்டத்தைக் காட்டி, ''பார்த்தீர்களா அம்மா... நான் உதிக்காததால் எவ்வளவு மகிழ்ச்சியாக உறங்குகின்றனர் இந்த சோம்பேறிகள்...
''விழித்தவுடன் பிளாஸ்டிக், ரசாயனப் பொருட்களை எரித்து கதிர்வீச்சை ஏற்படுத்துகின்றனர். இதனால், பூமியைக் காக்கும் ஓசோன் படலம், ஓட்டையாக வாய்ப்புள்ளது... ஓட்டையானால், என் வெப்பக் கதிர் பூமியை அதிகமாகத் தாக்கும்... அந்த சோம்பேறிகளின் தவறான செயலுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்...'' என கடுமை கொண்டது சூரியன்.
''அமைதியாக என் பின்னால் வா மகனே...''
சற்று துாரம் அழைத்துச் சென்ற அம்மா, பூமியில் ஒரு காட்சியை சுட்டிக்காட்டினார்.
வயல் வெளிகளில் கண்ணீருடன் காத்திருந்தனர் விவசாயிகள். அவர்கள் புலம்பியது கேட்டது.
'அப்பனே... சூரிய பகவானே... சரியான பருவத்தில் பயிர்கள் வளர்ந்து வருகின்றன. உன் ஒளி இல்லை என்றால் வளர்ச்சி பாதிக்கும். உணவு உற்பத்தி செய்ய முடியாது. உயிரினங்கள் பல்கி பெருகாது. நோய்கள் பெருகிவிடும்... எல்லாரும் சாக வேண்டியது தான்; தயை கூர்ந்து கருணை காட்டு...'
கை கூப்பி, கண்ணீர் மல்க வேண்டினர் விவசாயிகள்.
அமைதியுடன் பார்த்துக் கொண்டிருந்தது சூரியன்.
''பார்த்தாயா... உனக்கு இருக்கும் வரவேற்பை... எந்த செயலும் விமர்சனத்துக்கு உள்ளாகும். அவை, நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் இருக்கும். சில மகிழ்விக்கும்; சில வருத்தமளிக்கும். எப்போதும், நல்லவற்றை எடுத்து, அல்லாதவற்றை விடவேண்டும்...''
கனிவுடன் கருத்துரைத்தார் அம்மா.
''எல்லாம் புரிந்தது... எதிர்ப்பு இல்லாமல் எச்செயலும் இல்லை என உணர்ந்தேன்... பிறர் பசி பிணி போக்க உழைப்பவர் வேண்டுதலே முக்கியம். இதோ... இப்போதே என் பணிக்கு புறப்பட்டுவிட்டேன்...''
உற்சாகமாக கிரணங்களை விரித்து பூமியை தீண்டியது சூரியன். அதன் அன்பில் நனைந்தன உயிரினங்கள்; காலை மலர்ந்தது.
செல்லங்களே... நல்லவற்றை மட்டும் சிந்தித்து செயல் ஆற்றுங்கள்.
ரா.புனிதா

