
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல், சொக்கலால் மேல்நிலைப் பள்ளியில், 1993ல், 11ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அன்று, அறிவியல் ஆசிரியர் சம்பத், வீட்டுப் பாடம் செய்யாத மாணவனிடம் விளக்கம் கேட்டார். தட்டிக் கழிக்கும் விதமாக, 'நாளை செய்கிறேன் ஐயா...' என்றான்.
உடனே, மற்றொருவனை அழைத்து, 'கரும்பலகையின் மேல் விளிம்பு பகுதியில் எட்டாத உயரத்தில், 'நாளை' என எழுது...' என்றார்.
மறுநாள் கரும்பலகையில் எழுதியிருந்ததை சுட்டிக்காட்டி, 'நேற்று குறிப்பிட்ட, 'நாளை' என்பது வந்து விட்டதா... மேலே எழுதியிருப்பதைப் படியுங்கள்...' என்றார்.
நாங்கள், 'வரவில்லை ஐயா...' என்றோம். அன்றைய பாடங்களை அன்றே செய்ய வேண்டும் என உணர்ந்தோம். அன்று முதல் தவறாமல் வீட்டுப்பாடம் செய்து வந்தோம்.
மற்றொரு நாள், 'இமயமலையின் உயரம் என்ன...' என கேட்டார் அந்த ஆசிரியர். யாருக்கும் தெரியாமல் விழித்தபோது, 'எட்டு எட்டாக, நாலு எட்டு வைத்தால், இமயமலை உச்சிக்கு போயிடலாம்...' என்று விளக்கினார்.
புரியவில்லை; பின், கரும்பலகையில், 8,848 என எழுதினார். இமயமலை, எவரெஸ்ட் சிகரம் உயரத்தை மீட்டர் அளவில் சுலபமாக புரியும் வகையில் விளக்கியிருந்ததை புரிந்துகொண்டோம்.
தற்போது எனக்கு, 43 வயதாகிறது; என் குழந்தைகள் படிப்பில், இது போல் சுலபமாக நினைவில் பதிக்கும் வழிமுறைகளை புகுத்தி வருகிறேன்; ஆர்வமுடன் கற்கின்றனர். இதற்கு வித்திட்ட அந்த ஆசிரியரை நன்றியுடன் நினைவில் கொண்டுள்ளேன்!
- சு.ஹ.ராம்குமார், திருநெல்வேலி.

