
பத்மநாபசுவாமி கோவில் வரலாறு படமாகிறது!
ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலாக தங்க நகை இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள பத்மநாபசுவாமி கோவில் வரலாற்றை மையமாக வைத்து, ஒரு திரைப்படம் தயாராகிறது. இப்படத்தை ஸ்ரீகுமார் என்பவர் இயக்க, ஒரு ஹாலிவுட் பட நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இதற்கு முன், இதே கோவில் வரலாற்றை மையமாக வைத்து, மார்த்தாண்ட வர்மா என்ற பெயரில் ஒரு படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
— சினிமா பொன்னையா.
விஜய் - முருகதாஸ் புதிய கூட்டணி!
வேலாயுதம், நண்பன் படங்களைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக ஏஞ்சலா ஜான்சன் நடிக்கிறார். சமீபத்தில், விஜய் - ஏஞ்சலா ஜோடியை இணைத்து, போட்டோ செஷன் நடத்தியுள்ளார் முருகதாஸ்.
— சி.பொ.,
அமலா பாலுக்கு கை மேல் பலன்!
முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில், அதர்வா ஹீரோ என்ற போதும், டபுள் ரோலில் நடிக்கும் அமலா பாலை சுற்றியே கதை செல்கிறதாம். இதனால், உற்சாகத்தில் இருக்கும் அவர், 'தெய்வத் திருமகள் படத்தில் என் ரோல் டம்மி ஆக்கப்பட்டதாக, 'பீல்' பண்ணிக் கொண்டிருந்த எனக்கு, இந்தப் படத்தின் மூலம் கை மேல் பலன் கிடைத்து விட்டது...' என்கிறார். ஆகும் காலம் வந்தால், தேங்காய்க்கு இளநீர் போல் சேரும்.
— எலீசா.
விஷால் நடிக்கும் சமரன்!
தீராத விளையாட்டுப் பிள்ளை டைரக்டர் திருவின் அடுத்த படம், சமரன். இந்த தலைப்புக்கு போராளி என்றொரு அர்த்தமும் உள்ளது என்று சொல்லும் திரு, 'முந்தைய படத்தில் விஷாலை ரொமாண்டிக் ஹீரோவாக காட்டிய நான், இந்தப் படத்தில் சமூகத்துக்காக போராடும் அதிரடி நாயகனாக காண்பிக்கிறேன். அதற்காக, விஷால் ஜிம்னாஸ்டிக் பயிற்சியும் எடுத்து வருகிறார்...' என்கிறார்.
— சி.பொ.,
நட்புக்காக நடித்த அஞ்சலி!
'மார்க்கெட் பிசியாக இருக்கும் போதே, 'கெஸ்ட் ரோலில்' நடிக்க காரணம் என்ன?' என்று அஞ்சலியைக் கேட்டால், 'என் மார்க்கெட்டை பிசியாக்கியவரே, அங்காடித் தெரு வசந்த பாலன் தான். அதனால், அவர் இயக்கி வரும் அரவாண் படத்தில், 'கெஸ்ட் ரோலில்' நடிப்பது எனக்கு மகிழ்ச்சியான விஷயம். இப்படத்தில், நான்கு காட்சிகளில் வந்தாலும், 'நச்'சென்று நடிப்பை வெளிப்படுத்தும் வேடத்தில் நடித்துள்ளேன்...' என்கிறார். கீழே விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்ற கதை!
— எலீசா.
ஸ்ரேயாவுக்கு வைர மோதிரம் பரிசு!
இந்தியில் அக்ஷய்குமார் நடிக்கும் படத்தில், இரண்டு ஹீரோயினிகளில் ஒருவராக நடிக்கிறார் ஸ்ரேயா. இதன் படப்பிடிப்பில் இருந்த போது, ஒரு நாள் தன் பிறந்த நாளை, 'கேக்' வெட்டி கொண்டாடிய ஸ்ரேயாவுக்கு, வைர மோதிரம் பரிசளித்துள்ளார் அக்ஷய் குமார். இதை, தன் தென்னிந்திய சினிமா நண்பர்களிடம் பெருமையாக கூறி வருகிறார். வருந்தி, வருந்தி பார்த்தாலும், வருகிற போதுதான் வரும்!
— எலீசா.
பிசியானார் ஸ்ருதிஹாசன்!
இதுவரை நடித்த படங்களின் தோல்வியால் சரியான பட வாய்ப்பு இல்லாமலிருந்த ஸ்ருதிஹாசன், ஏழாம் அறிவு படத்துக்கு பிறகு பிசியாகி விட்டார். தமிழில் ஐஸ்வர்யா இயக்கும், 3 என்ற படத்தில் நடிப்பவர், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரின், தம்மு, சித்தார்த்துடன், ஓ மை பிரண்ட் என, பல படங்களை கைப்பற்றி, படு பிசியான நடிகையாகி விட்டார். அதிர்ஷ்டம் வந்தால் தவிட்டு பானையிலும் தனம் இருக்கும்.
— எலீசா.
வெங்கட்டை டீலில் விட்ட அஜீத்!
தற்போது, பில்லா-2வில் நடித்து வரும் அஜீத், மீண்டும், இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிக்க உறுதியளித்திருந்தார். ஆனால், சமீபத்தில், பாலியல் சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை சோனாவின் கம்பெனிக்கு, அந்த படத்தை வெங்கட் இயக்குகிறார் என்றதும், அந்த கால்ஷீட்டை, ஏ.எம்.ரத்னம் நிறுவனம் தயாரிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கும் படத்திற்கு கொடுத்து, வெங்கட் பிரபுவை டீலில் விட்டுள்ளார்.
— சினிமா பொன்னையா.
அவ்ளோதான்!

