/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
திருமண கேக்கின் விலை ஒன்பது லட்சம் ரூபாய்!
/
திருமண கேக்கின் விலை ஒன்பது லட்சம் ரூபாய்!
PUBLISHED ON : அக் 02, 2011

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகை, கிம் கார்டஷியான். மாடலிங், தொழில் அதிபர், சமூக ஆர்வலர் என, இவருக்கு பல முகங்கள் உண்டு. இவருக்கும், பிரபல கூடைப் பந்து விளையாட்டு வீரர் ஹம்பயர்சுக்கும், சமீபத்தில் திருமணம் நடந்தது.
இதையொட்டி, அமெரிக்காவில் உள்ள நட்சத்திர ஓட்டலில், பிரபலங்களுக்கு எல்லாம், தடபுடலாக விருந்து வைத்து அசத்தினார், கிம். இந்த நிகழ்ச்சிக்காக, பிரமாண்டமான கேக் ஒன்றும், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு இருந்தது. இந்த கேக்கின் விலை என்ன தெரியுமா? ஒன்பது லட்சம் ரூபாய். பிரிட்டன் இளவரசர் வில்லியம்சின் திருமணத்துக்கு கூட, இவ்வளவு அதிகமான விலையில் கேக் தயாரிக்கப்படவில்லை.
பத்து அடுக்குகளுடன் கூடிய, வெள்ளை நிறத்தாலான இந்த கேக், சாக்லேட் சுவையுடன் தயாரிக்கப்பட்டு இருந்தது. விருந்தில் கலந்து கொண்ட பிரபலங்கள் அனைவருமே, இந்த கேக்கையும், அதன் சுவையையும், பார்த்து, ருசித்து, பாராட்டினர். கிம் கொடுத்த கேக் பற்றித் தான், ஹாலிவுட்டில் இப்போது அதிகம் பேசப்படுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த விருந்தில் பங்கேற்றவர்களுக்காக, 720 பாட்டில் ஒயின் பரிமாறப்பட்டது என்பதும், நடிகை கிம், ஏற்கனவே ஒருமுறை திருமணமாகி, விவாகரத்து பெற்றவர் என்பதும், போனஸ் தகவல்.
— ஜோல்னா பையன்

