sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

மூன்று பலன் தரும் விரதம்

/

மூன்று பலன் தரும் விரதம்

மூன்று பலன் தரும் விரதம்

மூன்று பலன் தரும் விரதம்


PUBLISHED ON : அக் 09, 2011

Google News

PUBLISHED ON : அக் 09, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அக்., 15 - புரட்டாசி கடைசி சனி!

பணமில்லாமல் இவ்வுலகம் இல்லை. பணமிருந்தால் மட்டும் போதுமா? அதை அனுபவிக்க போதிய ஆயுளும், ஆரோக்கியமும் வேண்டும். செல்வம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய முப்பலனையும் தருகிறது சனிக்கிழமை விரதம்.

நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்பர். அவரது ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுள்காலம் அமையும். ஆனால், அந்த கிரகத்தைக் கட்டுப்படுத்துவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதி அவரே. எனவே, சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது ஆயிற்று. இந்த விரதத்தை அனுஷ்டிக்க பெரிய அளவுக்கு காசு, பணம் தேவையில்லை. உண்மையான பக்தியே இந்த விரதத்திற்குரிய தேவையான பொருள்.

இதை, ஒரு சம்பவம் மூலம் தெரிந்து கொள்ளலாம். தசாவதாரங்கள் எடுத்த பின்பும், குறிப்பாக, கண்ணனாக அவதரித்து, கீதையை <உபதேசித்து, வாழ்வின் உண்மை நிலையை எடுத்துரைத்த பிறகும், உலகில் பாவங்கள் குறையவில்லை. எனவே, பாவச்சுமை தாங்காத பூமாதேவிக்கு அனுக்கிரகம் செய்ய, சீனிவாசன் எனும் பெயரில் பெருமாள் அவதாரம் எடுத்து. திருப்பதி மலையில் தங்கினார்.

இவ்வூரின் அருகிலுள்ள கிராமத்தில், பீமன் என்ற மண்பாண்டத் தொழிலாளி வசித்தார். இவர், சீனிவாசனின் தீவிர பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக இவர் உறுதியேற்றுக் கொண்டார். ஆனால், இதற்கு பலனாக, 'மிக உயர்ந்த செல்வம்...' வேண்டும் என, அவர் பெருமாளிடம் வேண்டுதல் வைத்தார். அது என்ன தெரியுமா? பெருமாளின் திருவடியிலேயே நிரந்தரமாக வசிக்க வேண்டும் என்பது தான்.

இவர் தினமும் மண்பாண்டம் செய்வார் அல்லவா... பாண்டம் செய்து முடித்த பிறகு, கையில் ஒட்டிக் கொண்டிருக்கும் மண்ணை வீணாக்க மாட்டார். அந்த மண்ணைக் கொண்டு சிறு, சிறு பூக்கள் செய்வார். திருப்பதி பெருமாளை மனதில் எண்ணி, தன் முன் இருந்த மண் சிலைக்கு,'ஏடுகுண்டல வாடா, வெங்கட்ரமணா, கோவிந்தா, பத்மநாபா, சீனிவாசா...' என்றெல்லாம் பெருமாளின் திருநாமங்களைச் சொல்லி, திருப்பதி பெருமாளின் திருவடியிலேயே அந்த மண் பூக்களை தூவுவதாக பாவனை செய்து, தூவி பிரார்த்திப்பார்.

அப்போது, திருப்பதி திருமலையை ஆட்சி செய்து வந்தான் தொண்டைமான் எனும் மன்னன். அவன் ஒருநாள் ஏழுமலையான் சன்னிதிக்குச் சென்றான். பெருமாளுக்கு தூவுவதற்காக அவன் தங்கப் பூக்களை உபயமாக அளித்திருந்தான். அங்கு போய் பார்த்த போது, மண்பூக்களாகக் கிடந்தன. தங்கப் பூக்களை அர்ச்சகர்கள் அபகரித்துக் கொண்டனரோ என சந்தேகப்பட்டான். எனவே, காவலர்களை நியமித்து, அர்ச்சகர்களைக் கண்காணிக்க உத்தரவிட்டான்.

மறுநாள் அவன் சன்னிதிக்கு வந்தான். அப்போதும், மண்பூக்களே பெருமாளின் திருவடியில் கிடந்தன. குழம்பிப் போன அவனது கனவில், சீனிவாசன் தோன்றினார். 'மன்னா... பீமன் என்ற குயவன், என்னை மிகுந்த பக்தியுடன் மண் பூக்ககளால் அர்ச்சித்து வருகிறான்; அவற்றை நான் ஏற்றேன். அதனால், உன் தங்கப்பூக்களும், மண்பூக்களாக மாறிக் கிடக்கின்றன...' என்றார்.

மறுநாளே, பீமனைப் பார்க்க சென்றான் மன்னன் . அவர், பெருமாளின் மண்சிலைக்கு மண் பூக்களைத் தூவிக் கொண்டிருந்தார். 'எதற்காக மண் பூக்களால் அர்ச்சிக்கிறாய்; தோட்டத்துப் பூக்கள் கூட கிடைக்கவில்லையா?' என்றான்.

'அரசே... நான் பரம ஏழை. இந்த வேலையை விட்டு, விட்டு பூப்பறிக்க நேரத்தை செலவிட்டால், பாண்டம் செய்யும் நேரம் குறையும். குடும்பம் மேலும் வறுமையில் தவிக்கும். அதனால் தான், என்னிடம் என்ன இருக்கிறதோ, அதனால் பூ செய்து அர்ச்சிக்கிறேன். மேலும், கல்வியறிவற்ற எனக்கு பூஜை முறையும் தெரியாது. ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருந்து, அவரது திருவடியை அடைய வேண்டும் என்பதே என் நோக்கம்...' என்றார்.

இதைக் கேட்ட தொண்டைமான் மனம் நெகிழ்ந்து, அந்த ஏழைக் குயவனுக்கு வேண்டுமளவு பணம் கொடுத்தான். ஒரே நாளில் செல்வந்தனாகி விட்டார் அந்தக் குயவர். நிஜ பக்திக்கு <உரிய பலனை பெருமாள் கொடுத்து விட்டார். அவர் நீண்டகாலம் வாழ்ந்து, தொடர்ந்து பெருமாளுக்கு பூஜை செய்து, அவரது திருவடியை அடைந்தார். இதனால் தான், இப்போதும் திருப்பதியில், பணக்காரப் பெருமாளுக்கு, மண்சட்டியில் நிவேதனம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமை விரதம் எளிமையானது. பகலில் பழம், தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் பெருமாளுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம். இதுவரை விரதம் இருக்காதவர்கள், புரட்டாசி கடைசி சனியன்றாவது விரதம் அனுஷ்டித்தால், சகல செல்வமும் பெற்று வாழலாம்.

***

தி. செல்லப்பா






      Dinamalar
      Follow us