/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
ஒருங்கிணைந்த முறையில் கோரை கட்டுப்பாடு
/
ஒருங்கிணைந்த முறையில் கோரை கட்டுப்பாடு
PUBLISHED ON : செப் 04, 2013

கோடை உழவு: கோடை காலத்திலும், தென்மேற்கு பருவ மழைக்காலத்திலும் பொழியும் மழைநீரை நிலத்தில் சேமித்திட கோடை உழவு மிகவும் அவசியமாகிறது. மானாவாரியில் பயிர் விதைப்பு செய்யப்படும் பொழுது உழவு செய்த நிலத்தில் விதைப்பது சுலபமாக இருக்கும். இதனால் கால தாமதம் தவிர்க்கப்படுகிறது.
கோடை உழவின் மூலம் கோரைக் கிழங்குகளை மண்ணிற்கு மேற்பகுதியில் கொண்டு வருவதால், கிழங்குகள் சூரிய வெப்பத்தாலும் மண்ணின் வெப்பத்தாலும் உலர்ந்து விடுகின்றன. பின் 15 நாட்கள் இடைவெளியில் மீண்டும் ஒரு முறை கோடை உழவு செய்து மண்ணை 14 நாட்கள் காயவைப்பதால் கோரைக்கிழங்குகள் முழுவதும் உலர்ந்து அற்று இறந்துவிடும் தன்மையை அடைகின்றன. மேலும் கிழங்குகளின் உலர்திறன் அதிகரிக்க 2.4-டீ சோடியம் உப்பை (0.8 - 1.6 கிலோ) கடைசி உழவின்போது இட வேண்டும்.
நிலபோர்வை: கோரையானது ஒரு சி4 வகையைச் சார்ந்த பல்லாண்டு களையாகும். இதன் வளர்ச்சிக்கு சூரிய ஒளி மிகவும் அவசியம். எனவே சூரிய ஒளியைத் தடுப்பதன் மூலம் கோரைகளைக் கட்டுப்படுத்தலாம். இதற்கு வயல்வெளிகளில் கிடைக்கும் பயிர் கழிவுகளைக் கொண்டு நிலப் போர்வை அமைக்க வேண்டும். மேலும் கோடை காலத்தில் ஆயிரம் காஜ் தடிமன் கொண்ட கருப்புநிற பாலிதீன் தாள்களை மண்ணின் மேற்பரப்பில் விரித்தும் கோரைகளை கட்டுப்படுத்தலாம்.
போட்டிப்பயிர் சாகுபடி: பொதுவாகவே கோரைகளின் வளர்ச்சி சூரிய ஒளியினை பொருத்தே உள்ளது. மேலும் நிழற்பாங்கான பகுதிகளில் இவற்றின் வளர்ச்சி குறைவாகவே இருக்கும். எனவே கோரைகள் அதிகம் உள்ள பகுதிகளில் விரைவாக வளரும் பயிர்களை பயிரிடுவதால் பயிர்கள் கோரைகளின் மேற்பகுதி வரை வளர்ந்து களைகளை முழுமையாக மறைத்து வளர்கின்றன. இதன்மூலம் களைகளின் வளர்ச்சி வெகுவாக பாதிக்கின்ளன. போட்டிப் பயிர்களான சோளம், சணப்பை, தக்கைப்பூண்டு மற்றும் கொளிஞ்சி போன்ற பயிர்களை பெருக்கமாக பயிரிடுவதன் (ஏக்கருக்கு 25 கிலோ விதைகள்) மூலம் சூரிய ஒளியானது கோரைகளுக்கு கிடைப்பது தடுக்கப்பட்டு கோரைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. வயலில் அவரை, சர்க்கரைவள்ளி கிழங்கு போன்ற பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் கோரைகளைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி புதிய கோரைக்கிழங்குகள் உருவாவதையும் தடுக்கலாம்.
ரசாயன முறை: மேற்கூறிய முறைகள் கோரைகளை ஓரளவு கட்டுப்படுத்தும் என்றாலும் முழுமையாக கோரைகளை அழிக்க, களைக்கொல்லிகளைப் பயன்படுத்துவது மிகவும் இன்றியமையாதாகும். களைக்கொல்லிகளை 2, 4-டீ சேடியம் உப்பு, திரவ அட்ரசின் பென்டசான் மள்ளும் பாராகுவாட் போன்றவற்றை கோரைகள் 1-2 வார வயது இருக்கும்பொழுது தெறித்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை கிளைபோசேட் களைக்கொல்லியை 10 மிலி வீதம் சிறிதளவு அமோனியா சல்பேட் உரம் மள்ளும் காதி சோப்புத்தூளைச் சேர்த்து கோரைகள் 2-3 இலைகள் விடும் தருணத்தில் தெளித்தால் கோரைகளைச் சிறப்பாக கட்டுப்படுத்தி விடலாம். மேலும் பென்டசான் மருந்தை ஏக்கருக்கு 0.2-0.4 கிலோ வீதம் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து 10 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளித்தும் கட்டுப்படுத்தலாம். மேற்கூறிய முறைகளை செவ்வனே கையாண்டால் கோரைகளை சிறப்பாக கட்டுப்படுத்திவிட முடியும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
- டாக்டர் பி.கதிர்வேலன் மற்றும் சி.சுவாமிநாதன், செட்டிநாடு.

