
முத்தான கீரை வகைகளில் வெந்தயக்கீரையும் ஒன்று. வெந்தயமும் வெந்தயக்கீரையும் அபூர்வ மருத்துவகுணம் கொண்ட சஞ்சீவிக்கீரை எனலாம். வெந்தயம் மிக எளிதாக எல்லா இடங்களிலும், எல்லா காலங்களிலும் கிடைக்கக் கூடியது. வெந்தயக்கீரையை நாமே வீட்டில் வளர்க்கலாம். சுமார் ஆறு அங்குலம் வளர்ந்தஉடன் நாம் இதனை பயன்படுத்தலாம். வெந்தயக்கீரையை சமைக்காமல் பச்சையாக பயன்படுத்தினால் மட்டுமே அதன் பூரண மருத்துவ தன்மை நமக்கு கிடைக்கும். வெந்தயம் உடல் உஷ்ணத்தைக் குறைத்து குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது. ஒரு கைப்பிடி அளவு வெந்தயக்கீரையுடன் சிறிது கொத்தமல்லி தழை, ஒரு டீ ஸ்பூன் சீரகம், சிறிதளவு பூண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு அரைத்து வடிகட்டி பருகிவந்தால் தேகம் பொலிவுபெறும். உடல் உஷ்ணம் நீங்கும். குடல்புண் ஆற மிகவும் அற்புதமானது. இதில் பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்தது. வெந்தயக்கீரை கிடைக்காதவர்கள் வெந்தயத்தை 8 மணி நேரம் நீரில் ஊறவைத்து, பருத்தி துணியில் கட்டி வைத்தால் 12 மணி நேரத்தில் அழகாய் முளைத்துவிடும். அதை 6 நாட்கள் நிழலில் உலரவைத்து மிக்சியில் அரைத்து பொடிசெய்து வைத்துக்கொண்டு பனை வெல்லம் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து சாப்பிடலாம். முளைகட்டிய வெந்தயம் பல பிணிகளை தீர்க்கவல்லது. சொரி, சிரங்கு, கரப்பான் மற்றும் தோல் வியாதிகளுக்கு முளைகட்டிய வெந்தயப் பொடியை சோப்பிற்கு பதிலாக பூசி குளிக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், நீரிழிவு மற்றும் அதிக கொழுப்பை குறைக்க வல்லது. மூலநோய், வாய்ப்புண், பசியின்மை, குடல்புண் ஆகிய வற்றுக்கு மிக சிறந்த நிவாரணம் தரும். இதனை தொடர்ந்து சாப்பிட தேவையற்ற கொழுப்புச்சத்தும், ஊளைச்சதையும் குறையும். வெந்தயத்தில் கறிவேப்பிலையை போன்றே வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் அதிகம் உள்ளது.
வெந்தயக்கீரை பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கை நீக்கும் தன்மை கொண்டது. வெந்தயக்கீரை உட்கொள்ள வாயுக் கோளாறால் ஏற்படும்/ஏற்பட்ட குடல் புண் ஆற மிகச்சிறந்த சர்வரோக நிவாரணி ஆகும். பெண்கள் பருவமெய்தாமை, ஒழுங்கற்ற மாதவிடாய், வெள்ளைபடுதல் போன்றவைகளுக்கு முளைகட்டிய வெந்தயப்பொடி ஒரு வரப்பிரசாதமாகும். குடல் சுத்தமாகும். காசநோய்க்கு கண்கண்ட மருந்தாகவும் சஞ்சீவியாகவும் பயன்படுகிறது. சிறிதளவு வெந்தயத்தை தயிரில் இரவில் ஊறவைத்து மறுநாள் காலை மென்று சாப்பிட்டுவர வயிற்றுப் புண்கள் ஆறும். வெந்தயம் நரம்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது. வெந்தயக்கீரை என்பது ஒரு மகாமந்திரக்கீரை என்னும் அளவு அற்புத ஆற்றலைக் கொடுக்கவல்லது. இதனை நாம் உண்டு நோயற்ற வாழ்வு வாழலாம். மேலும் தொடர்புக்கு: பி.வி.கனகராஜன், உடுமலைப்பேட்டை, 9659456279.
-கே.சத்தியபிரபா, உடுமலை.

