/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
அதிக வருவாய் ஈட்டித்தரும் மலைவேம்பு
/
அதிக வருவாய் ஈட்டித்தரும் மலைவேம்பு
PUBLISHED ON : ஆக 21, 2013

விவசாய நிலங்களின் மதிப்பு கூடி வந்தாலும் அந்த நிலங்களில் இருந்து விவசாயம் செய்வது மூலமாக வரும் வருவாய் குறைந்து வருவது விவசாயிகளின் இன்றைய முக்கிய பிரச்னையாகும். இதனால் பல விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் ஆக மாறிவருகிறது.
குறைந்த முதலீடு மற்றும் மேலாண்மையில் அதிக லாபம் ஈட்டித்தரும் மலைவேம்பு போன்ற தொழிற்சாலைப் பயன்பாடு மரங்களை பண்ணைக்காடுகளாக வளர்ப்பதின் மூலம் இந்த பிரச்னையை எதிர்கொள்ளலாம். மலைவேம்பு குறைந்த காலத்தில் வேகமாக வளர்ந்து அதிக வருவாய் ஈட்டி ஒரு பணமரமாகும். இது தீக்குச்சி, பிளைவுட் தொழிற்சாலை மற்றும் பேப்பர் தயாரிக்கும் தொழிற்சாலைக்கும் அதிகமாக தேவைப்படுகிறது. மரங்களின் தேவைக்கும் விளைச்சலுக்கும் அதிக இடைவெளி இருப்பதால் மலைவேம்பு நடுவதின்மூலம் ஒரு ஏக்கரில் இருந்து வருடத்திற்கு ஒரு லட்சம் வரை வருமானம் ஈட்ட முடியும். மலை வேம்பு பல வகையான மண்ணில் வளர்வது என்றாலும் நல்ல வடிகால் வசதியுள்ள மணற்பாங்கான வண்டல்மண் மற்றும் வளமான மண்களில் நன்கு வளரக்கூடியது. இரண்டு வருடங்களில் 40 அடி உயரம் வளரக்கூடியது. கால்நடைகள் இதை உண்ணுவது கிடையாது என்பதால் இதை பராமரிப்பது சுலபம்.
மலைவேம்பு 1000 மி.மீ. வரை மழை பொழியும் இடங்களில் வளரக்கூடியது என்றாலும் குறைந்த அளவு நீர் பாசனத்தில் எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. மலைவேம்பு நடுவதற்கு 60 செ.மீ. நீள, அகல மற்றும் ஆழ குழிகளை பருவ மழைக்கு முன் எடுக்க வேண்டும். தொகுதி தோட்டமாக நடுவதற்கு 3 x 3 மீட்டர் இடைவெளியில் குழி எடுக்க வேண்டும். சரளை கற்களை அகற்றிவிட்டு மேல்மண்ணை இட்டு மூடவேண்டும். நல்ல ஆரம்ப வளர்ச்சிக்கு குழிக்கு 10 கிலோ தொழு உரம், 100 கிராம் வேப்பம்புண்ணாக்கு மற்றும் 50 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா மற்றும் வேம் இடவேண்டும். பருவமழை ஆரம்பித்த உடன் ஏக்கருக்கு 444 மரங்களை நடலாம். அவ்வப்போது பக்கவாட்டில் வரும் கிளைகளை கழித்துவர வேண்டும். நடவு செலவு ஏக்கருக்கு ரூ.12,000 வரை ஆகும். ஐந்து வருடத்தில் 90 செ.மீ. மரத்தின் சுற்றளவு வந்தவுடன் அறுவடை செய்யலாம். ஐந்து வருடத்தில் ஒரு மரம் 5-7 கன அடிவரை பலகையை தரக்கூடியது. இன்றைய மதிப்பு ஒரு கன அடி ரூ.400 ஆக இருக்கிறது. ஒரு ஏக்கருக்கு ஐந்து வருடத்தில் 12 லட்சம் வரை வருமானம் பெறலாம்.
முனைவர் கூ.கண்ணன், முனைவர் டி.வி.சிங், வி.சி.செல்வி,
முனைவர் ஒ.பி.எஸ்.கோலா,
உதகமண்டலம்.

