
நிலக்கடலை சாகுபடி நுட்பங்கள்: ஆடிப் பட்டத்திற்கேற்ற ரகங்கள்: முன் ஆடி (ஜூன் - ஜூலை), பின் ஆடி (ஜூலை - ஆகஸ்ட்) பட்டங்களில் மானாவாரியில் சாகுபடி செய்வதற்கு குறைந்த வயது கொத்து ரகங்களை தேர்வு செய்யலாம். டி.எம்.வி.7, டி.எம்.வி.13, வி.ஆர்.ஐ.2, வி.ஆர்.ஐ.6, கோ.4 ஆகியவை 100-105 நாட்கள் வயதுடையவை. இவை யாவும் கொத்து வகைகள். கோ.6, வி.ஆர்.ஐ.7 ஆகிய 125 முதல் 130 நாட்கள் வயதுடைய கொடிகொத்து ரகங்களையும் மானாவாரியில் சாகுபடி செய்யலாம். முன் ஆடியில் இறவையில் பயிரிட்டால் எக்டருக்கு சுமார் 3000 முதல் 3500 கிலோ வரை விளைச்சல் பெறலாம்.
ஒரு எக்டருக்கு 125 கிலோ முதல் 160 கிலோ வரை விதைப்பருப்பு தேவைப்படும். டிரைகோடெர்மா விரிடி, டிரைகோடெர்மா ஹார்சியா னம் இவைகளில் ஒன்றை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் வீதம் விதைநேர்த்தி செய்வதன் மூலம் மண் வழியாகப்
பரவும் நோய்களைத் தடுக்கலாம்.
ஒரு எக்டருக்கு தேவையான விதைகளுடன் ரைசோபியம் 600 கிராம், பாஸ்போ பாக்டீரியா 600 கிராம் ஆகியவற்றை அரிசிக்கஞ்சி சேர்த்து கலந்து விதைநேர்த்தி செய்து, நிழலில் உலர்த்தி பின்னர் விதைக்க வேண்டும். விதைநேர்த்தியை விதைப்பதற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே செய்ய வேண்டும்.
எருது அல்லது டிராக்டரினால் இயக்கப்படும் தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தால் உருவாக்கப் பட்ட கோவை விதை விதைக்கும் கருவியைப் பயன்படுத்தி விதைகளை சுமார் 5செ.மீ. ஆழத்தில் விதைக்க வேண்டும். மானாவாரிப் பட்டத்தில் விதைக்கும் தருணத்தில் மண்ணில் போதுமான ஈரம் இருப்பது அவசியம்.
கொத்து நிலக்கடலை ரகங்களை 30 து 10 செ.மீ. இடைவெளியிலும் அடர் கொத்து ரகங்களை 30 து 15 செ.மீ. இடைவெளியிலும் குழிக்கு ஒரு விதை வீதம் விதைக்க வேண்டும். கொத்து ரகங்களில் ஒரு சதுரமீட்டருக்கு 33 செடிகளும் அடர் கொத்து ரகங்களில் 22 செடிகளும் இருக்குமாறு பராமரிக்க வேண்டும். விதைப்பதற்கு 25-30 நாட்கள் முன்னதாக எக்டருக்கு 10-12 டன் தொழு உரம் இடவேண்டும். பசுந்தாள் உர பயிர்களை வளர்த்து மடக்கி உழுவதன் மூலம் மண்ணின் வளத்தை அதிகரிக்கலாம். மண் ஆய்வு செய்ய இயலாத நிலையில் பொது சிபாரிசாக தழை, மணி, சாம்பல் சத்துக்களை எக்டருக்கு 10:10:45 கிலோ என்ற அளவில் அடியுரமாக இடவேண்டும்.
இறவைப்பயிர் சாகுபடி செய்ய எக்டருக்கு 17:34:54 கிலோ என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சத்துக்களை அடியுரமாக இடவேண்டும். 200கிலோ ஜிப்சத்தை அடியுரமாகவும் விதைத்த 45வது நாளில் 200 கிலோ ஜிப்சத்தை மேலுரமாகவும் இட்டு பின் மண் அணைப்பதன்மூலம் காய்பிடிக்கும் திறனை அதிகரிக்கச் செய்து நல்ல திரட்சியான பருப்பினை பெறலாம்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டு சமீபத்தில் வெளியிடப்பட்ட 'நிலக்கடலை ரிச்' என்ற நுண்ணூட்டச் சத்துக்களை வளர்ச்சி ஊக்கிகள் அடங்கிய கலவையை ஒரு சதவீதம் என்ற அளவில் விதைத்த 30வது, 60வது நாட்களில் தெளிக்க வேண்டும். 5 கிலோ நுண்ணூட்டக் கலவையை 500 லிட்டர் நீரில் கரைத்து கைத்தெளிப் பான் கொண்டு தெளிக்க வேண்டும்.
களை நிர்வாகம்: நிலக்கடலை விதைப்பு செய்தவுடன் நிலத்தில் நல்ல ஈரம் இருக்கும் நிலையில் பென்டிமீத்தலின் களைக்கொல்லி அல்லது புளூகுளோரலின் களைக் கொல்லி இவற்றில் ஏதாவது ஒன்றை எக்டருக்கு 2 லிட்டர் என்ற அளவில் 500 லிட்டர் நீரில் கரைத்து கைத் தெளிப்பான் மூலமாகவோ அல்லது தேவையான மணலுடன் கலந்து நிலத்தின்மீது சீராகத் தூவுவதன் மூலமாகவோ பயிரின் இளம் பருவத்தில் தோன்றும் களைகளைக் கட்டுப்படுத்தலாம். தொடர்ந்து களைகள் முளைப்பதைப் பொறுத்து ஒன்று அல்லது இரண்டு முறை களை பறிக்கலாம். விதைத்த 45வது நாளில் ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும். மண்ணில் விழுதுகள் இறங்கியபின் செடிகளை புரட்டாமல் இருப்பது நல்லது. பூச்சி நோய்களைக் கட்டுப்படுத்த சிபாரிசுப்படி பூச்சி, பூஞ்சானக் கொல்லிகளைப் பயன்படுத்தி, புரோடீனியா புழு, பச்சைப்புழு, சிவப்பு கம்பளிப்புழு, துரு மற்றும் இலைப்புள்ளி நோய்களை சேதம் விளைவிக்காமல் பராமரிக்கலாம்.
அறுவடை: நிலக்கடலையில் காய்களின் உள் ஓடானது 75-80 சதம் கருமை அடைந்திருந்தால் அறுவடை செய்யலாம். செடிகளை நிலத்தைவிட்டு பிடுங்கிய உடன் காய்கள் மேல்பக்கம் இருக்குமாறு போட்டு 2-3 நாட்கள் கழித்து காய்களைப்பறித்து 3-4 நாட்கள் நன்றாக உலர்த்த வேண்டும். ஈரப்பதம் சுமார் 9 சதத்திற்கு குறைவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். (தகவல்: முனைவர் பா.மீனாகுமாரி, கு.கணேசமூர்த்தி, எண்ணெய்வித்து துறை, த.வே. பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003. போன்: 0422-245 0812)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

