
குதிரைவாலி-அறுவடைக்குப்பின்சார் தொழில்நுட்பங்கள்: சிறு தானியங்களில் குதிரைவாலியில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. மேலும் இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகிய தாதுப்பொருட்கள, பி வைட்டமின், நயாசின், போலிக் அமிலம் ஆகியவை மனிதனுக்குத் தேவையான அளவில் உள்ளன.
குதிரைவாலி மானாவாரி நிலங்களுக்கு ஏற்ற பயிர். கோ-2 குதிரைவாலி ஒரு உயர்விளைச்சல் ரகம். குறுகிய வயது (95 நாட்கள்). வறட்சியைத் தாங்கும் இயல்பு. மதிப்பூட்டப்பட்ட பதார்த்தங்கள் செய்ய மிகவும் ஏற்றது. இது ஆடி, புரட்டாசி பட்டங்களில் பயிரிட உகந்தது. மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் பயிரிட ஏற்றது.
குதிரைவாலி அரிசியாக, பொரியாக, மாவாக பயன்படுத்தி பலவகையான உணவுப்பொருட்கள் செய்வதற்கு உகந்தது. உழவர்கள் குதிரைவாலியை அறுவடை செய்தபின்னர் உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பத்தில் உள்ள பயன்பாடுகளைப் பயன்படுத்தி அதன் மதிப்பைக் கூட்டலாம்.
* அறுவடை செய்த குதிரைவாலியை நன்கு உலரவைத்து (12 முதல் 14 சதம் ஈரப்பதம்), சுத்தம் செய்து, உமி நீக்கி, மூடைகளில் கட்டி வைத்து பாதுகாக்கலாம். பூச்சி வராமல் தடுக்க வசம்பு போடலாம்.
* குதிரைவாலியை அரிசியாக மாற்ற, ஆவியில் 30 நிமிடம் அவிக்க வேண்டும். பின்னர் அதனை 10 மணி நேரம் ஊறவைத்து, உலர்த்தி, தோல் நீக்கும் இயந்திரத்தில் தோலை நீக்கி, அரவையில் அரிசியாக பிரித்தெடுக்கவும. இதில் 66 சதம் அரிசியும் 34 சதம் உமியும் கிடைக்கும். தொலியை நீக்கும் அரவையில் அரிசியைப் பிரித்தெடுக்கலாம்.
* குதிரைவாலி அரிசி மிகக் குறைந்த நேரத்தில் வெந்துவிடும் (10 நிமிடத்தில்). இதற்கு தேவையான தண்ணீரின் அளவும் குறைவே. அதாவது 1 மடங்கு குதிரைவாலிக்கு ஒன்னேகால் மடங்கு தண்ணீர் தேவைப்படும். இந்த புரதச்சத்து மிகுந்த குதிரைவாலியை நம் அன்றாட உணவு வகைகளான இட்லி, தோசை, ஊத்தப்பம், பனியாரம், அப்பம், வடை, புட்டு, வடகம், பிஸ்கட் போன்றவற்றை தயாரிக்கலாம்.
* குதிரைவாலி பொரி செய்ய, உலர்ந்த குதிரைவாலியில் 3-5 சதம் தண்ணீர் தெளித்து 24 மணி நேரம் குவித்து வைக்க வேண்டும். பின்னர் 230 டிகிரி செல்சியசில் சூடான ஆற்று மணலைக் கொண்டு வறுக்கும்போது, மேல் தோல் பிரிந்து அரிசியாக பொரிந்துவரும். பின்னர் மணலைச் சலித்து பொரியை பிரித்தெடுக்க வேண்டும். பொரியை காற்றுப்புகாத பெட்டிகளில் அடைத்து வைக்கலாம்.
* குதிரைவாலியில் உமியின் அளவு அதிகமாக உள்ளதால் முழு தானியத்தை மாவாகத் திரிக்கும்போது நார்ச்சத்து மிகுந்து சுவைப்பதற்கு ருசியின்றி காணப்படும். எனவே குதிரைவாலி அரிசியை மாவாகத் திரித்து பயன்படுத்தலாம். அல்லது இவ்விரு மாவையும் கலந்து பயன்படுத்தலாம்.
சாகுபடி செய்யும்போது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தலாம். அதாவது கோ.2 ரகத்தை பயிரிடுதல், உயிர் உர (அசோஸ்பைரில்லம் + பாஸ்போ பாக்டீரியா) விதைநேர்த்தி ஆகியவற்றை உழவர் மத்தியில் பிரபலப்படுத்த முன்னிலை செயல்விளக்க திடல்கள் மதுரை மாவட்டம், கள்ளிக்குடி வட்டத்தைச் சார்ந்த சிவரக்கோட்டை கிராமத்தில் 10 உழவர்களின் விவசாய வயல்களில் அமைக்கப்பட்ட 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மூன்றாம் வாரம் விதைக்கப்பட்ட குதிரைவாலி, அதற்குப்பின் நிலவிய தொடர் வறட்சியைத் தாங்கி, நல்ல வளர்ச்சி, விளைச்சல் காரணிகளை அதிக அளவில் கொடுத்தது. அசோஸ்பைரில்லம + பாஸ்போபாக்டீரியா விதைநேர்த்தி செய்யப்பட்ட பயிர் வளர்ச்சி, விளைச்சல் காரணிகள், விளைச்சல் அதிகமாக இருந்தது புதிய நுட்பங்களைக் கடைபிடித்த முன்னிலை செயல் விளக்கத் திடலில் குதிரைவாலி விளைச்சல் எக்டருக்கு 2000 கிலோ என்ற அளவிலும், நிகர வருமானம் எக்டருக்கு ரூ.12,000 மற்றும் வரவு செலவு விகிதம் 2.82 என்ற அளவிலும் இருந்தது. நடைமுறை சாகுபடியைவிட 29 சதவீதம் அதிக விளைச்சல் மற்றும் 5500 ரூ. அதிக நிகர வருமானம் கிடைத்தது. (தகவல்: முனைவர் செல்வி ரமேஷ், முனைவர் சோ.கமலசுந்தரி, முனைவர் நா.சோ.வெங்கட்ராமன்,, வேளாண்மை அறிவியல் நிலையம், மதுரை-625 104, போன்: 0452-242 2955)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

