/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
ஆடிப்பட்டத்தில் லாபம் கொழிக்கும் பயறு சாகுபடி
/
ஆடிப்பட்டத்தில் லாபம் கொழிக்கும் பயறு சாகுபடி
PUBLISHED ON : ஜூலை 18, 2018

நமது பகுதியில் உளுந்து, பச்சை பயறு, துவரை போன்றவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு கோடை மழை சரியாக பெய்து, பருவமழை சிறப்பாக தொடங்கி உள்ளது. எனவே, உளுந்து, பச்சை பயறு சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம்.
உளுந்து, பச்சை பயிரின் வளர்ச்சி காலம் 50 - 60 நாட்கள். இதை ஆடிப்பட்டம் (ஜூன், ஜூலை) மற்றும் புரட்டாசி பட்டம் (செப்டம்பர், அக்டோபர்) ஆகியவற்றில் பயிரிடலாம்.
தற்போது உளுந்து பயிரில் குறுகிய காலமாக 65 நாள் ரகங்கள் வம்பன் 6, 8 போன்றவை பயிரிடலாம். இந்த ரகங்களை ஒரே நேரத்தில் அறுவடை செய்யலாம்.
வம்பன், 8 ரகங்கள் மஞ்சள் தேம்பல் நோய் எதிர்ப்பு தன்மையுடையது. பச்சை பயரில் கோ 7, கோ 8 ரகங்களை பயன்படுத்தவும்.
விதையளவு மற்றும் நேர்த்தி
தேர்ந்தெடுத்த ரகங்களை ஏக்கருக்கு 8 கிலோ விகிதத்தில் பயிரிடவும். 30க்கு 10 செ.மீ. இடைவெளியில், அதாவது ச.மீ.,க்குள் 33 செடிகள் இருக்க வேண்டும். ஒரு கிலோ உளுந்து விதைக்கு 2 கிராம் கார்பென்டாசிம், 4 கிராம் டிரைகோடெர்மாவிரிடி, 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் என்ற அளவில் 24 மணிநேரத்திற்கு முன் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
பூஞ்சான் கொல்லி விதை நேர்த்தி செய்தவுடன் உயிர் உரங்களான 200 கிராம் ரைசோபியம் உடன் 200 கிராம் பாஸ்போ பாக்டீரியாவை ஆறவைத்த அரிசி கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்யவும். அதை 3 - 4 மணி நேரம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். மண் பரிசோதனைக்கு ஏற்ப உரங்களை பயன்படுத்த வேண்டும். முதல் உழவு செய்யும் போது ஏக்கருக்கு 5டன் தொழு உரம் இடவேண்டும். இதனுடன் அடியுரமாக 60 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடுவதன் மூலம் வேர் அழுகலை தடுக்கலாம்.
ஒரு ஏக்கருக்கு 5 கிலோ யூரியா, 45 கிலோ டி.ஏ.பி. மற்றும் பொட்டாஷ் 18 கிலோ என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். ஒரு ஏக்கருக்கு 2.5 கிலோ யூரியா, 22 கிலோ டி.ஏ.பி., 10 கிலோ பொட்டாஷ் என்ற அளவில் பயன்படுத்தி விவசாயிகள் செலவை குறைக்கவும். இத்துடன் பயிர் நுண்ணுாட்ட சத்து ஏக்கருக்கு 2 கிலோ வீதம் அளிக்கவும். மேலும் ஜிங்க் சல்பேட் என்ற நுண்ணுாட்டத்தை ஏக்கருக்கு 10 கிலோ வீதம் இடவேண்டும்.
இலைவழித் தெளிப்பு
டி.என்.ஏ.யூ., பயிறு வகை ஒன்றரை ஏக்கருக்கு 2 கிலோ வீதம் 200 லிட்டரில் நீரில் கரைத்து பூப்பூக்கும் தருணத்தில் தெளிக்கவும். பயிறு ஒண்டர் கிடைக்காத போது டி.ஏ.பி.2 சதவீதம் தெளிக்கலாம். அதாவது (4 கிலோ டி.ஏ.பி.யை 10 லிட்டர் நீரில் கரைத்து கரைசலை பிரித்து 190 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவும். இதை பயிறு வகை பயிரில் விதைத்து 25 மற்றும் 40வது நாளில் தெளிக்கவும். யூரியா 1 சதவீத கரைசலை 30 மற்றும் 45ம் நாட்களில் தெளிக்க வேண்டும். (2 கிலோ யூரியாவை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவும்).
களை நிர்வாகம்
பென்டிமெத்திலின் ஒரு லிட்டர் ஒரு ஏக்கருக்கு என்ற அளவில் விதைத்து மூன்றாம் நாள் தெளிக்கவும். (அதாவது 5 மி.லி., மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து) அதன்பின்பு 25 ம் நாள் ஒருமுறை களை எடுக்க வேண்டும்.
பயிர் வளர்ச்சி பருவத்தில் ஊசி இலை களைகள் அதிகம் இருப்பின் இமாஸ்திபயர் என்ற களைக்கொல்லியை 400 மி.லி., என்ற அளவிலும் அகன்ற இலை களைகள் இருப்பின் குயிசல்பாய் ஈதைல் என்ற மருந்தை 400 மி.லி. என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு தெளிவிக்கவும். (2 மி.லி., மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு)
பூச்சி மேலாண்மை
அசுவினி, வெள்ளை ஈ, காய் புழுவை அழிக்க வேப்ப எண்ணெய் 400 மி.லி., ஏக்கருக்கு 2 மி.லி., தண்ணீர் தெளிக்க வேண்டும்.
நோய் மேலாண்மை
மஞ்சள் தேமல் நோய் எதிர்ப்பு ரகங்கள் பயிரிடவும், (வம்பன் 6, 8)
இலைச்சுருள் நோய்
தயாமீத்தாக்சம் - 70 கிராம், ஏக்கர், டைமிதோயேட் - 500 மி.லி. ஏக்கர்.
வேர் அழுகல்
சூடாமோனாஸ் புளுரோசன்ஸ். டிரைகோடெர்மா விரிடியை 1 கிலோ எடுத்து அதை 20 கிலோ மணல் அல்லது மக்கிய தொழு உரம் சேர்ந்து விதைத்து 30 நாட்களில் மண்ணிலிட வேண்டும்.
-ம.சரவணன்
தொழில் நுட்ப வல்லுனர்
காந்தி கிராம பல்கலை, திண்டுக்கல்
தொடர்புக்கு: 97152 86401.

