/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
வெள்ளாடுகளுக்கான விற்பனை வாய்ப்புகள்
/
வெள்ளாடுகளுக்கான விற்பனை வாய்ப்புகள்
PUBLISHED ON : ஜூன் 27, 2012

விற்பனை என்றால் என்ன: விற்பனை என்பது பொதுவாக உற்பத்தியாளர்களின் மிக முக்கிய கடைசி நடவடிக்கையாகும். விற்பனை, உற்பத்தியாளர்களின் உழைப்புக்கும் மூலதனத்திற்கும் லாபம் அல்லது நட்டம் ஏற்படுவதை நிர்ணயம் செய்யும் செயலாகும். நுகர்வோர்களின் தேவைகளையும் விருப்பத்தையும் பூர்த்திசெய்யும் வகையில் செயல்படுத்தப்படும் மனித நடவடிக்கையாகும்.
இறைச்சிப் பொருட்களின் விற்பனை பல செயல்பாடுகளை உள்ளடக்கியதாகும். அவை முறையே உற்பத்தி செய்யுமிடத்திலிருந்து கொண்டுவந்து இறைச்சியாக மாற்றப்படும் இடத்தில் சேர்க்க வேண்டும். நுகர்வோர்களின் தேவைக்கேற்ப இறைச்சிப் பாகங்களாகவும் மதிப்பூட்டிய இறைச்சிப் பொருளாகவும் மாற்ற வேண்டும். நுகர்வோர்களுக்குத் தேவைப்படும் இடத்தில், தேவையான அளவில் மற்றும் தேவையான தரமுள்ள இறைச்சியை அளித்திட வேண்டும். இறைச்சிப் பொருட்களின் விற்பனை என்பது உற்பத்தியாளர் களிடமிருந்து கடைசியாக நுகர்வோர்களைச் சென்றடையும் இடமாகச் சில்லறை வியாபாரிகள் வரையிலான எல்லா வழித்தடங்களையும் உள்ளடக்கியதாகும். மாறிவரும் சூழ்நிலைகள், போக்குவரத்து வசதிகள், குளிர்பதன முறைகள் போன்றவை இறைச்சிப் பொருட்களின் விற்பனை முறையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. நவீன குளிர்பதன முறைகள் மற்றும் நவீன பாதுகாப்பு முறைகள் இறைச்சிப் பொருட்கள் ஆண்டு முழுவதும் கிடைக்குமாறு உதவுகின்றன.
விற்பனை இடையீட்டாளர்கள்: இறைச்சிப் பொருள் விற்பனையில் பல இடையீட்டாளர்கள் பங்கேற்கின்றனர். இவர்கள் உற்பத்தியாளர்கள் தயார் செய்யும் இறைச்சிப் பொருட்களை நுகர்வோரிடம் சுமூகமாகச் சென்றடைய வழிவகை செய்கின்றனர்.
மொத்த வியாபாரிகள், சிறு வியாபாரிகள் (சில்லறை வியாபாரிகள்), தரகர்கள் (தரகு வியாபாரிகள், வியாபாரத் தரகர்கள்), முகவர்கள், போக்குரவத்து நிறுவனங்கள், பண்டகசாலை (கிடங்குகள்), நிதி நிறுவனங்கள், சட்ட அமைப்புகள் (ஆலோசனைகள்) விளம்பர நிறுவனங்கள் முதலியன இறைச்சி விற்பனையில் இடையீட்டாளர்கள் ஆவர். இந்த இடையீட்டாளர்கள் வியாபாரிகளைத் தேடுதல், நுகர்வோர்களைக் கண்டறிதல், இறைச்சிப் பொருட்களை எடுத்துச்செல்ல போக்குவரத்து வசதிகள், சேமிப்புக் கிடங்குகள், தகவல் தொடர்புகள் ஏற்படுத்திக் கொடுத்தல், பேரம் பேசி ஒப்பந்தம் செய்தல், உரிமம் மாற்றம் செய்தல் முதலிய பணிகளை செவ்வனே செய்கின்றனர். ஆகவே, இறைச்சிப் பொருட்களின் விற்பனையிலும் இதர பொருட்கள் விற்பனை போல் இடையீட்டாளர்கள் சேவை அவசியமாகிறது. இவர்களது சேவையை அறவே அகற்ற முடியாது.
விற்பனை வழிமுறைகள்: இறைச்சிப் பொருட்கள் உற்பத்தியாளர்களிடமிருந்து கடைசியாக நுகர்வோர்
களைச் சென்றடையும் வழிதான் விற்பனை வழிமுறை எனப்படும். இதில் பலதரப்பட்ட இடையீட்டாளர்கள் பங்கேற்கின்றனர். கீழ்க்காணும் வழிமுறைகளில் இறைச்சிப் பொருட்கள் விற்பனையாகின்றன.
* இறைச்சி உற்பத்தியாளர்கள் - மொத்த வியாபாரி - இறைச்சிப் பொருட்கள் - தயாரிப்பாளர்கள் - சிறு/சில்லறை வியாபாரி - நுகர்வோர்
* இறைச்சி உற்பத்தியாளர்கள் - மொத்த வியாபாரி - உணவு விடுதி / விரைவு சிற்றுண்டி - நுகர்வோர்.
* இறைச்சி உற்பத்தியாளர்கள் - மொத்த வியாபாரி - இறைச்சிப் பொருட்கள் தயாரிப்பாளர்கள் - சங்கிலி/தொடர் கடைகள் - நுகர்வோர்.
* இறைச்சி உற்பத்தியாளர்கள் - ஒருங் கிணைப் பாளர்கள் - இறைச்சிப் பொருட்கள் - தயாரிப் பாளர்கள் - சிறு /சில்லறை வியாபாரி - நுகர்வோர்.
* இறைச்சி உற்பத்தியாளர் மற்றும் இறைச்சிப் பொருட்கள் தயாரிப்பாளர் - சிறு/சில்லறை வியாபாரி - நுகர்வோர்
* இறைச்சி உற்பத்தியாளர் - நுகர்வோர் .
(தகவல்: முனைவர் செல்வராஜ், 0421-224 8524).
-கே.சத்தியபிரபா, உடுமலை.

