சிறப்பான வருமானம் தரும் சிவப்புக்கீரை: கன்னியாகுமரி மாவட்டம் துவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த சேவியர் ஒரு ஏக்கரில் மீன் வளர்ப்பு, ஒரு ஏக்கரில் மரவள்ளி சாகுபடி, 25 சென்டில் வாழை இவைகளோடு 4 சென்டில் சிவப்புக் கீரையையும் சாகுபடி செய்து வருகிறார். 4 சென்டில் மாதம் ரூ.4000 வரை வருமானம் கிடைப்பதாகக் கூறும் இவர் கடைபிடிக்கும் சாகுபடி நுட்பங்கள்: சிவப்புக்கீரைக்கு வண்டல்மண் ஏற்றது. கீரைகளுக்கு பட்டம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. சாகுபடி செய்வார்கள். ஆனால் இவர் நாற்று பாவி சரியான இடைவெளியில் நடவுசெய்து நல்ல விளைச்சல் பெற்றுள்ளார்.
20 சதுரடி பரப்பில் மண்ணை நன்றாகக் கிளறி சாம்பல் மற்றும் தொழு உரம் ஆகியவற்றில் தலா 20 கிலோ அளவுக்கு பரப்ப வேண்டும். அதில் விதைகளைத் தூவி விதைத்து பூவாளியால் நீர் தெளித்து வரவேண்டும். விதைத்த 25ம் நாளுக்கு மேல் நாற்றுகளை எடுத்து நடவு செய்யலாம்.
4 சென்ட் நிலத்தை நன்றாக கிளறி, 50 கிலோ சாம்பல், 100 கிலோ தொழு உரம், 1 கிலோ பொடித்த கடலைப் பிண்ணாக்கு, 2 கிலோ பொடித்த வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைப் பரப்பி கிளறிவிட வேண்டும். பிறகு 12 அடி நீளம், இரண்டரை அடி அகலத்திற்கு பாத்திகளை அமைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாத்திக்கும் இடையில் முக்கால் அடி இடைவெளி வாய்க்கால் இருக்க வேண்டும். வரிசைக்கு வரிசை, செடிக்குச் செடி 7 அங்குலம் இடைவெளி விட்டு நாற்றுக்களை பாத்தியில் நடவு செய்ய வேண்டும். தண்ணீர் அவசியம் என்பதால் செழும்பாக தண்ணீர் கட்டவேண்டும். நடவு செய்த 7ம் நாள் 250 மில்லி மீன் அமிலக்கரைசலை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். மீன் கழுவிய தண்ணீரை ஒருநாள் அப்படியே வைத்திருந்து மறுநாள் சரிபங்கு தண்ணீரில் கலந்து செடிகள் மீது வாரம் ஒரு முறை தெளிக்க வேண்டும். நடவு செய்த 15ம் நாள் மூலிகை பூச்சிவிரட்டி தெளித்தால் பூச்சிகள் அண்டாது. மகசூல் 10,000 கட்டு கீரை கிடைக்கும். கட்டு 6 ரூபாய்க்கு விற்பனையானாலும் செலவு போக ரூ.40,000 வருமானம் கிடைக்கும். (தகவல்: பசுமை விகடன், 10.3.11, தொடர்புக்கு: சேவியர், 97896 37500)
விதை இருப்பு நிலவரம்: ஏ.டி.டி(ஆர்)47 எப்1 விதை: 6.64 டன், விலை ரூ.24/கிலோ. கிடைக்குமிடம்: உழவியல் துறை, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை-625 106. 0452-242 2956, 242 3046.
தென்னை நாற்றுக்கள்: நெட்டை - 2898 எண்ணிக்கை இருப்பு உள்ளது. விலை ரூ.30/கன்று. கிடைக்குமிடம்: வாசனை மற்றும் தோட்டப்பயிர்கள் துறை, தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோயம்புத்தூர்-641 003. 0422-661 1284.
மண் புழு உரம்: இருப்பு 750 கிலோ, விலை ரூ.6/கிலோ. கிடைக்குமிடம்: மலரியல் மற்றும் நில எழிலூட்டும் துறை, தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோயம்புத்தூர்-641 003. 0422-661 1230.
நெல் ஆடுதுறை 43 (ஆதார விதை1) - இருப்பு 1822 கிலோ. விலை ரூ.24/கிலோ. கிடைக்குமிடம்: பருத்தி ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீவில்லிபுத்தூர்-626 125. 04563-260 736.
டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

