PUBLISHED ON : அக் 23, 2019

கரும்புத்தோகை, கரும்புச்சக்கை, மரவள்ளி இலை, புளியங்கொட்டை, மாங்கொட்டை, கருவேல நெற்றுகள், சோளப்பூட்டை, வாழை இலை, வேப்ப இலை, புளிய இலை, வாகை இலை போன்ற பொருட்கள் வழக்கத்தில் இல்லாத தீவனங்கள் பட்டியலில் இடம் பெறுகின்றன.
கால்நடை வளர்ப்பில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட செலவுகள் தீவனத்துக்கே ஆகின்றன. அச்செலவுகளை குறைக்கும் நோக்கத்தில் இங்கு குறிப்பிட்டுள்ள மரபுசாரா தீவன வகைகளை விவசாயிகள் பயன்படுத்தலாம்.
வறட்சி காலத்திலும், இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் காலங்களிலும் விவசாயிகள் இதனை பயன்படுத்தும் எண்ணத்தில் இருப்பார்கள். குறைந்த செலவில் இவை கிடைத்தாலும் பழக்கத்தில் இல்லா தீவனங்களை பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன.
கால்நடைகள் வழக்கமாக தாங்கள் பெறும் தீவனங்களுக்கே தங்களை பழக்கப்படுத்தி கொள்பவை. தீவன வகைகளில் விவசாயிகள் திடீர் மாற்றங்கள் செய்யும் பட்சத்தில் அவைகளுக்கு ஒவ்வாமை, வயிறு உப்புசம் போன்ற சுகக்கேடுகள் நிகழலாம். மேலும் மரபு சாரா தீவனப் பொருட்களில் பெரும்பாலானவை நச்சுத்தன்மை கொண்டவை. இருப்பினும் இந்த நச்சுத்தன்மையை போக்க ஓரளவு வழிகள் இருக்கின்றன.
சூரிய ஒளியில் காய வைப்பதன் மூலம் நச்சினை ஓரளவு குறைக்கலாம். சில வகைப் பொருட்களை நீரில் ஊற வைப்பதன் மூலமும் நஞ்சை குறைக்கலாம். இது தவிர சில வகை பழக்கமில்லா தீவனங்கள் கசப்பாக இருப்பதுண்டு. இதனால் கால்நடைகள் இதனை தீவனமாக ஏற்று கொள்வதில்லை. இவ்வாறான சிக்கல்கள் இருந்த போதிலும் வறட்சி போன்ற நேரங்களில் கட்டாய தீவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகும் போது விவசாயிகள் இத்தீவனங்களை தங்கள் கால்நடைகளுக்கு கொடுப்பதற்கு முன் அருகில் உள்ள கால்நடை டாக்டரின் ஆலோசனையை கேட்டுப்பெறுவது நல்லது.
- டாக்டர் வி.ராஜேந்திரன்
முன்னாள் இணை இயக்குனர்
கால்நடை பராமரிப்புத்துறை, 94864 69044.

