மரக்கன்று பராமரித்து பசுமையை நேசிக்கும் அரசு பள்ளி மாணவர்கள்
தேனியில் வாகன போக்குவரத்து அதிகரித்து அவை வெளியிடும் கரும்புகையால் காற்று மாசடைந்துள்ளது. மக்காத பாலீதின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் சுற்றுச்சூழலும் மாசுபட்டு வருகிறது. இதனால் மழைப்பொழிவு குறைந்து ,தேனி தன் பசுமையை இழந்து வருகிறது.
இந்நிலையில் தேனி அருகே ஊஞ்சாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு, மக்களிடையே மரங்களையும், நீர்நிலைகளையும் பாதுகாப்பதன் அவசியத்தை அறிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்கள் ஆர்வத்துடன் மரம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இயற்கையை நேசிக்கவும் மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்து வருகின்றனர்.
ஈடுபாடு
மீனாட்சி, தலைமை ஆசிரியை: பள்ளி வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் நட்டு பூங்கா போல பராமரித்து வருகிறோம். மாணவர்கள் மரக்கன்று நடும்போது அவர்களுக்கு நேரடியான அனுபவம் கிடைக்கும். தண்ணீர் விடுவது, குழிகள் தோண்டுவது போன்ற பணிகளை செய்வர். வேம்பு, மருதம், புளி, இச்சி, தேக்கு, மூங்கில் உள்ளிட்ட மரங்களும், அழகிய பூச்செடிகளையும் வளர்த்து வருகிறோம் சுற்றியுள்ள களைச் செடிகளை அகற்றி துாய்மையாகவும், முறையாகவும் பராமரித்து வருகின்றனர். இயற்கையை நேசிக்க அவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறோம். முழு ஈடுபாட்டுடன் படிப்பிலும், மரங்களை பராமரிப்பதிலும் தங்களின் நேரத்தை செலவிடுகின்றனர்.
ஆர்வம்
எஸ்.சபானா, 8ம் வகுப்பு மாணவி: பள்ளிக்கு முன்னதாகவே வந்துவிடுவோம். ஆர்வமுள்ள மாணவிகள் ஒன்றிணைந்து மரக்கன்றுகளுக்கு தண்ணீர் விடுவோம். விடுமுறை நாட்களிலும் இதனை செய்வோம். மதிய உணவு இடைவெளி நேரம், மாலையில் களை செடிகளை அகற்றுவோம். மரக்கன்றுகளுக்கு குழிகள் பறித்து தண்ணீர் விடுவோம். இவற்றால் ஏற்படும் நன்மைகளை மற்றவர்களுக்கு விளக்குவோம். மரக்கன்று நட்டால், மழை கிடைக்கும். பறவைகளுக்கு வீடுகளாகவும் இருக்கும் என்பதை நாங்கள் நேரடியாக பயின்று வருகிறோம்.