/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பித்தப்பை கல் நோயால் 31 கலைமான்கள் மரணம்: மேல்சபையில் வனத்துறை அமைச்சர் தகவல்
/
பித்தப்பை கல் நோயால் 31 கலைமான்கள் மரணம்: மேல்சபையில் வனத்துறை அமைச்சர் தகவல்
பித்தப்பை கல் நோயால் 31 கலைமான்கள் மரணம்: மேல்சபையில் வனத்துறை அமைச்சர் தகவல்
பித்தப்பை கல் நோயால் 31 கலைமான்கள் மரணம்: மேல்சபையில் வனத்துறை அமைச்சர் தகவல்
ADDED : டிச 09, 2025 06:31 AM

பெலகாவி: ''பெலகாவியில் உள்ள ராணி சென்னம்மா உயிரியல் பூங்காவில் பித்தப்பை கல் நோய் காரணமாக, 31 கலைமான்கள் இறந்துள்ளன. பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கு தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது,'' என வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தெரிவித்தார்.
பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் நேற்று நடந்த கேள்வி நேரத்தில் பா.ஜ., உறுப்பினர் தல்வார் சாபண்ணா கேள்விக்கு, பதிலளித்து வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே கூறியதாவது:
31 கலைமான்கள் இறப்பு நவ., 13 முதல் 17ம் தேதி வரை ராணி சென்னம்மா உயிரியல் பூங்காவில் பித்தப்பை கல் நோய் காரணமாக, 31 கலைமான்கள் இறந்தன.
உயிரியல் பூங்கா கால்நடை மருத்துவர்கள், விலங்குகளின் உறுப்பு மாதிரிகளை, கால்நடை உயிரியல் நிறுவனத்துக்கு அனுப்பினர். அறிக்கையில், இறந்த அனைத்து கலைமான்களும் பித்தப்பை நோயால் இறந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கலைமான்கள் இறந்த செய்தி கிடைத்தவுடன், பெங்களூரில் இருந்து சிறப்பு மருத்துவரை அனுப்பி வைத்தோம். இதனால் பாக்கி இருந்த ஏழு மான்கள் உயிர் பிழைத்தன. மிருகக்காட்சி சாலையில் உள்ள வேறு விலங்குகளுக்கு தொற்று பரவாமல் இருக்க, இந்த ஏழு மான்களும் தனிமைபடுத்தப்பட்டு உள்ளன.
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன. இது தற்செயலான மரணமே தவிர, அலட்சியம் இல்லை.
இந்நோய் தாக்கப்பட்டதற்கான வெளிப்புற அறிகுறிகள் எதுவும் இல்லை. ஆனால், தொற்று ஏற்பட்ட 6 முதல் 24 மணி நேரத்துக்குள் மரணம் ஏற்படுகிறது. பெரும்பாலான கலைமான்கள், தொற்று ஏற்பட்ட சில மணி நேரத்திற்குள் மரணமடைந்து உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
முன்னெச்சரிக்கை 31 கலை மான்கள் இறந்ததை அடுத்து, கர்நாடக உயிரியல் பூங்கா ஆணையத்தின் கீழ் உள்ள அனைத்து உயிரியல் பூங்காக்களின் நிர்வாக இயக்குநர்களுக்கும் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளன.
கர்நாடகாவில் உள்ள உயிரியல் பூங்காவில் உள்ள வன விலங்குகளை பாதுகாக்க, தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட உள்ளது. அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநிலத்தில் உள்ள ஒன்பது உயிரியல் பூங்காக்களில் மொத்தம் 322 கலைமான்கள் உள்ளன. மேலும் நோய்களால் பாதிக்கப்படுவதை தடுக்க, முன்னெச்சரிக்கை எடுக்கப்படுகின்றன.
சவாலானது அதேவேளையில் கலைமான்களுக்கு தடுப்பூசி போடுவது சவாலான காரியம். இந்த மான்கள் மிகவும் உணர்வு திறன் கொண்டவை. இவைகளை பிடித்து, தடுப்பூசி செலுத்தினால், தங்களை பிடித்து சென்று விடுவார்களோ அஞ்சி, மாரடைப்பால் இறந்து விடுமாம். புலிகள், சிறுத்தைகளின் சத்தத்தை கேட்டாலும் கூட இவைகள் இறந்துவிடுமாம். சமீபத்தில் கேரளாவில் இந்த மான்கள் இருந்த கூண்டுக்குள் நாய் ஒன்று புகுந்ததால், ஒரு கலைமான் இறந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ., உறுப்பினர் தல்வார் சாபண்ணா: 31 கலைமான்கள் இறந்ததற்கு, மாநில அரசின் மீது தான் பழி விழும்.
அமைச்சர்: அப்படியென்றால், கொரோனாவின் போது, சாம்ராஜ் நகரில் போதிய ஆக்சிஜன் வினியோகம் கிடைக்காமல் 36 பேர் உயிரிழந்தனர். இது உங்கள் அரசின் அலட்சியம் என்று கூறலாமா. அனைத்து விஷயங்களையும் அரசியலாக்காதீர்கள்.

