/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நடனமாடியபடி மலையேறிய பரத நாட்டிய கலைஞர் ஹர்ஷிதா
/
நடனமாடியபடி மலையேறிய பரத நாட்டிய கலைஞர் ஹர்ஷிதா
ADDED : டிச 07, 2025 05:32 AM

- நமது நிருபர் -
கடவுள் மீது உண்மையான பக்தி இருந்தால் எதையும் செய்யலாம் என்பதை பரத நாட்டிய கலைஞர் நிரூபித்துள்ளார். நடனமாடியபடி 575 படிகளை ஏறி சென்று பிரார்த்தனையை நிறைவேற்றினார்.
கொப்பால் மாவட்டம் கங்காவதி தாலுகாவின் சிக்கராம்புரா அருகில் அஞ்சனாத்ரி மலை உள்ளது. இது வரலாற்று பிரசித்தி பெற்றது. இது ஆஞ்சநேயர் சுவாமி பிறந்த இடம் என நம்பப்படுகிறது. இந்த மலைக்கு கர்நாடகா மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பக்தர்கள் வருகின்றனர். வேண்டுதல் வைத்து கொண்டு மலை ஏறுவதும் உண்டு.
சில நாட்களுக்கு முன், பாகல்கோட் மாவட்டம் ஹுன்குந்த் தாலுகாவின், பிசிரதின்னி கிராமத்தை சேர்ந்த நவீன் பரமகவுடா, 19, என்பவர் 101 கிலோ எடை உள்ள சோள மூடையை, தோளில் சுமந்து மலை ஏறி சென்று, பிரார்த்தனையை நிறைவேற்றினார். அதே போன்று பரத நாட்டிய கலைஞர் ஹர்ஷிதா, நடனமாடியபடியே மலையில் ஏறி, பக்தியை காண்பித்தார்.
விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட் தாலுகாவின் எம்.ஜே.நகரில் வசிப்பவர் ஹர்ஷிதா, 20. பரத நாட்டிய கலைஞரான இவர், 'ருத்ர தாண்டவம்' என்ற பெயரில், நடனப்பள்ளி நடத்துகிறார். இவர் ஏழு வயதில் இருந்தே, பரத நாட்டியம் கற்றவர். ஆஞ்சநேயர் சுவாமி பக்தையான இவருக்கு, அஞ்சனாத்ரி மலையில் பரதமாடி, பிரார்த்தனை செலுத்த வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.
அப்போது அவரது தாயார், பரதமாடியபடியே படியேறும்படி ஆலோசனை கூறினார்.
அதன்படி ஹர்ஷிதா, ஹனுமன் ஜெயந்தியன்று நாட்டிய அலங்காரத்துடன், அஞ்சனாத்ரி மலைக்கு வந்தார். மலையடிவாரத்தில் சிறப்பு பூஜை செய்த பின், ஆஞ்சநேயருக்கு பிடித்தமான ராம நாமத்தை உச்சரித்து கொண்டே, நடனமாடிய படி மலையேறினார். தரையில் இருந்து 575 படிகளின் உயரத்தில் உள்ள அஞ்சனாத்ரி மலை உச்சியை அடைய, குறைந்தபட்சம் 15 நிமிடம் தேவைப்படும். நடு நடுவே ஓய்வு எடுத்தபடி நடந்தால், 20 நிமிடம் ஆகும்.
ஆனால் ஹர்ஷிதா, நடனமாடியபடியே வெறும் 8 நிமிடம் 54 விநாடிகளில் மலையை அடைந்து சாதனை செய்துள்ளார்.
செங்குத்தான நிலையில் உள்ள படிகளில், நடனமாடியபடி ஏறி செல்வது, அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதை ஹர்ஷிதா செய்து காட்டியுள்ளார். கோவிலில் பூஜை செய்து பிரார்த்தனையை நிறைவேற்றினார்.

