காட்டன்பேட்டில் ஒரு பக்கமாக சாய்ந்த இரண்டு மாடி கட்டடம் இடித்து அகற்றம்
காட்டன்பேட்டில் ஒரு பக்கமாக சாய்ந்த இரண்டு மாடி கட்டடம் இடித்து அகற்றம்
ADDED : ஜூலை 03, 2026 04:37 AM

காட்டன்பேட்: பெங்களூரு காட்டன்பேட்டில் ஒரு பக்கமாக சாய்ந்த இரண்டு மாடி கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. கட்டடத்தில் சிக்கிய பெண் உட்பட இருவர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
பெங்களூரு காட்டன்பேட் பிரதான சாலையில், 50 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில், முதல் மாடியில் ஒரு படுக்கை அறை கொண்ட வீடும், இரண்டாவது மாடியில் சிறிய அறையும் இருந்தது.
தரைதள பகுதியில் நடேஷ் என்ற பெயரில் கிளினிக் இயங்கி வந்தது. இந்நிலையில் நேற்று மதியம், கட்டடம் திடீரென ஒரு பக்கமாக சரிந்தது.
கட்டடத்தின் முதல் மாடி தரையில் தட்டியது. அங்கு நின்ற ஆட்டோ அதற்குள் சிக்கியது. ஆட்டோ முழுதும் சேதம் அடைந்தது.
கிளினிக்கிற்கு சிகிச்சைக்கு வந்த, ஐந்து பேர் உடனடியாக வெளியேறினர். ஆனால், பெண் உட்பட இருவர் உள்ளே சிக்கினர்.
தகவல் அறிந்ததும் காட்டன்பேட் போலீசார், தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர்.
முதல் மாடியில் இருந்த வீட்டில் வசித்தோரை பத்திரமாக வெளியேற்றியதுடன், கிளினிக்கிற்குள் சிக்கிய இருவரையும் பாதுகாப்பாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
கட்டடம் முழுமையாக சரிந்து விழும் அபாயம் இருந்ததால், இரண்டு ஜே.சி.பி., இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, கட்டடம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டடம் சாய்ந்த பகுதிக்கு யாரையும் போலீசார் விடவில்லை. கட்டடம் சாய்ந்ததால், காட்டன்பேட் பிரதான சாலை பகுதியில், ஒரு மணி நேரத்திற்கு மேல் பரபரப்பு ஏற்பட்டது.
