/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அன்னபாக்யா அரிசியை விற்றால் நடவடிக்கை உணவு அமைச்சர் முனியப்பா எச்சரிக்கை
/
அன்னபாக்யா அரிசியை விற்றால் நடவடிக்கை உணவு அமைச்சர் முனியப்பா எச்சரிக்கை
அன்னபாக்யா அரிசியை விற்றால் நடவடிக்கை உணவு அமைச்சர் முனியப்பா எச்சரிக்கை
அன்னபாக்யா அரிசியை விற்றால் நடவடிக்கை உணவு அமைச்சர் முனியப்பா எச்சரிக்கை
ADDED : டிச 09, 2025 06:27 AM
பெங்களூரு: ''கர்நாடகாவில் அன்னபாக்யா அரிசியை, சட்டவிரோதமாக பதுக்கி வைத்தது, விற்றது தொடர்பாக மாநிலம் முழுதும் 570 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,'' என, உணவுத்துறை அமைச்சர் முனியப்பா, மேல் சபையில் தெரிவித்தார்.
மேல்சபை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் ரவியின் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் முனியப்பா கூறியதாவது:
அன்னபாக்யா அரிசியை சட்டவிரோதமாக பதுக்கி வைப்பதை, கள்ளச்சந்தையில் விற்பதை கட்டுப்படுத்த, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அன்னபாக்யா அரிசியை பதுக்கி வைத்தது, விற்றது தொடர்பாக, 314 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 29,603 கிலோ அரிசி மீட்கப்பட்டது.
யாத்கிர் மாவட்டத்தில், அன்னபாக்யா அரிசி கடத்தல் தொடர்பாக, உணவுத்துறையில் பணியாற்றிய இரண்டு அதிகாரிகள், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
சில இடங்களில், பயனாளிகளே அரிசியை வாங்குவதில்லை. வட மாவட்டங்களின் மக்கள், அரிசியை விட சோளம் அதிகமாக பயன்படுத்துகின்றனர். மேலும் சிலர் கேழ்வரகு பயன்படுத்துகின்றனர்.
வரும் ஜனவரி முதல், 5 கிலோ அரிசியுடன், எண்ணெய், பருப்பு, உட்பட ஊட்டச்சத்தான பொருட்கள் அடங்கிய, 'இந்திரா கிட்' வழங்கப்படும். இது குறித்து, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைவருக்கும் ஊட்டச்சத்தான உணவு வழங்குவது, எங்கள் அரசின் நோக்கமாகும்.
அன்னபாக்யா அரிசி பதுக்கப்படாமல், கள்ளச்சந்தை யில் விற்கப்படாமல் தடுக்க, அதிகாரிகள் அவ்வப்போது குடோன்களை சோதனையிட வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. அன்னபாக்யா அரிசியை முறைகேடாக விற்றால், பதுக்கினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும்.
ரேஷன்கார்டுதாரர்கள், அன்னபாக்யா அரிசியை தவறாக பயன்படுத்துவது தெரிந்தால், அவர்களின் ரேஷன் கார்டுகளை ரத்து செய்வதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நியாய விலைக் கடைகளில், தாலுகா, மாவட்ட அளவில் விழிப்புணர்வு கமிட்டிகள் அமைத்து, அரிசி வினியோகம் கண்காணிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

