/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரில் மோசமான போக்குவரத்து மேலாண்மை போலீசாருக்கு 'இண்டி' கூட்டணி எம்.பி., கண்டனம்
/
பெங்களூரில் மோசமான போக்குவரத்து மேலாண்மை போலீசாருக்கு 'இண்டி' கூட்டணி எம்.பி., கண்டனம்
பெங்களூரில் மோசமான போக்குவரத்து மேலாண்மை போலீசாருக்கு 'இண்டி' கூட்டணி எம்.பி., கண்டனம்
பெங்களூரில் மோசமான போக்குவரத்து மேலாண்மை போலீசாருக்கு 'இண்டி' கூட்டணி எம்.பி., கண்டனம்
ADDED : டிச 02, 2025 04:32 AM

பெங்களூரு: பெங்களூரு போக்குவரத்து நெரிசல், போலீசாரின் அலட்சியம் குறித்து 'இண்டி' கூட்டணியின் சமாஜ்வாதி கட்சி எம்.பி., ராஜிவ்ராய் விமர்சித்து உள்ளார்.
தகவல் தொழில்நுட்ப மையமாக பெங்களூரு எப்படி புகழ் பெற்றுள்ளதோ, அதே அளவில் இங்குள்ள போக்குவரத்து நெரிசலுக்கும் புகழ் பெற்றுள்ளது. தினமும் 10 கி.மீ., துாரம் செல்வதற்கே, குறைந்தபட்சம் 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை ஆகிறது.
சில மாதங்களுக்கு முன், பெங்களூரில் உள்ள தொழில் நிறுவன அதிபர்கள், அதிருப்தி தெரிவித்திருந்தனர். அவர்களுடன் துணை முதல்வர் சிவகுமார் பேசி, சமாதானப்படுத்தினார்.
இந்நிலையில் இண்டி கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி எம்.பி., ராஜிவ் ராய், தனது 'எக்ஸ்' தளத்தில் நேற்று முன்தினம் குறிப்பிட்டு உள்ளதாவது:
மன்னிக்கவும்... மாண்புமிகு கர்நாடக முதல்வர் அவர்களே. உங்களிடம் மிக மோசமான போக்குவரத்து மேலாண்மை உள்ளது. சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகளுக்கு பலமுறை தொடர்பு கொண்டும் யாரும் போனை எடுக்கவில்லை.
அவர்களுக்கு அழைப்பு விடுத்ததற்கான சான்றாக, அதன் 'ஸ்கிரீன் ஷாட்ஸ்'களையும் இணைத்து உள்ளேன்.
லோக்சபா கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்தபோது, நாங்கள் ராஜ்குமார் சமாதி சாலையில் ஒரு மணி நேரம் சிக்கிக் கொண்டோம். நல்லவேளையாக விமானத்தில் ஏறிவிட்டேன். ஒரு போலீஸ்காரரையும் காணவில்லை.
இந்த திறமையற்ற அதிகாரிகள், அழகான நகரின் பெயரை கெடுக்க போதுமானவர்கள். சந்தேகத்துக்கு இடமின்றி, பெங்களூரு போக்குவரத்து மிகவும் மோசமான போக்குவரத்து என்ற பெயரை பெற்றுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.
இதுமட்மின்றி, இந்த 'டுவிட்'டை முதல்வருக்கும், உள்துறை அமைச்சருக்கும் 'டேக்' செய்துள்ளார்.
இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து உள்ளனர்.
இதற்கு பதிலளித்து பெங்களூரில் துணை முதல்வர் சிவகுமார் கூறுகையில், ''புதுடில்லியில் அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால், டில்லியில் உள்ள போக்குவரத்து நெரிசலை அவருக்கு காட்டுவேன்,'' என்றார்.

