/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சுற்றுலா தோட்டம் பார்வையிட ஆர்வம் காட்டாத மக்கள்
/
சுற்றுலா தோட்டம் பார்வையிட ஆர்வம் காட்டாத மக்கள்
சுற்றுலா தோட்டம் பார்வையிட ஆர்வம் காட்டாத மக்கள்
சுற்றுலா தோட்டம் பார்வையிட ஆர்வம் காட்டாத மக்கள்
ADDED : டிச 08, 2025 05:49 AM

பெங்களூரு: நகர மக்கள், மாணவர்கள், ஐ.டி., துறையில் உள்ளவர்களுக்கு, தோட்டக்கலை மற்றும் தாவர வளங்களை அறிமுகம் செய்யும் நோக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட 'தோட்டக்கலை சுற்றுலா'வுக்கு மக்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை.
பெங்களூரு தெற்கு மாவட்டம், மாகடி தாலுகாவின் திப்பகொண்டனஹள்ளியில் 35 ஏக்கரில் தோட்டக்கலைத்துறையின், அழகான தோட்டம் உள்ளது.
நகர மக்கள், மாணவர்கள், ஐ.டி., துறையில் உள்ளவர்களுக்கு, தோட்டக்கலை மற்றும் தாவர வளங்களை அறிமுகம் செய்யும் நோக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தோட்டத்துக்கு, மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
தோட்டக்கலைத்துறை 40 லட்சம் ரூபாய் செலவில், இயற்கை சூழ்ந்த இடத்தில் தோட்டத்தை அமைத்துள்ளது. இங்கு சப்போட்டா உட்பட 200க்கும் மேற்பட்ட பழ மரங்கள், மருத்துவ குணம் கொண்ட செடிகள் உள்ளன. மரங்களுக்கு நடுவே சைக்கிளிங் டிராக், நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
பூங்கா, சாகச விளையாட்டுகள், சிறார்களுக்காக உள் விளையாட்டு அரங்கம் உள்ளது. மாடி தோட்டம் அமைக்க தேவையான செடிகளும் விற்பனை செய்யப்படுகின்றன.
அற்புதமான சுற்றுலா தலமாக இருந்தும், மக்கள் வரவில்லை. பள்ளி சிறார்கள் மட்டுமே வருகின்றனர். சுற்றுலா தோட்டம் குறித்து, மக்களிடம் சரியாக விளம்பரம் செய்யாததே, இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
இது குறித்து தோட்டக்கலைத்துறை கூடுதல் இயக்குனர் பரமசிவமூர்த்தி கூறியதாவது:
நகர்ப்பகுதிகளில் வசிப்போர், ஐ.டி., நிறுவனங்களில் பணியாற்றுவோர் மற்றும் சிறார்களுக்கு புதிய அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக திப்பகொண்டனஹள்ளியில் 'சுற்றுலா தோட்டம்' அமைத்தோம்.
இந்த சுற்றுலாவில் பூந்தொட்டிகளை தயாரிப்பது, செடிகளை வளர்ப்பது, உரம் தயாரிப்பு, விவசாய பணிகளில், பொது மக்களும் பங்கேற்க அனுமதி உள்ளது. வார இறுதியில், ஒரு நாள் சுற்றுலாவுக்காக ஏதாவது ஒரு சொகுசு விடுதிக்கு செல்வதற்கு பதில் குழந்தைகளுடன் இந்த சுற்றுலா தோட்டத்துக்கு வர வேண்டும்.
இது அனைவருக்கும் புது அனுபவத்தை அளிக்கும். இங்கு வரும் சிறார்கள், மாணவர்களுக்கு பாரம்பரிய விவசாயம், நவீன தோட்டக்கலை தொடர்பாக, விழிப்புணர்வு ஏற்படுத்துவது, எங்களின் குறிக்கோள். எனவே பெற்றோர் தங்களின் பிள்ளைகளுடன் வர வேண்டும்.
தற்போது பள்ளி சிறார்களுக்கு, தோட்டத்தை பார்ப்பதற்கு இலவச அனுமதி. கட்டணம் நிர்ணயித்து, பொது மக்கள் பார்வையிட வைப்பது குறித்து ஆலோசிக்கிறோம். சுற்றுலா தோட்டம் குறித்து பிரசாரம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

