தாசில்தாரை நிர்வாணமாக வீடியோ எடுத்து ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது
தாசில்தாரை நிர்வாணமாக வீடியோ எடுத்து ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது
ADDED : ஜூலை 08, 2026 11:13 PM

ராம்நகர்: தாசில்தாரை நிர்வாணமாக வீடியோ எடுத்து, 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய, ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கூட்டாளிகள் இருவரை போலீஸ் தேடுகிறது.
பெங்களூரு தெற்கு மாவட்டம் சென்னப்பட்டணா தாசில்தாராக பணியாற்றுபவர் கிரிஷ், 48, கே.ஏ.எஸ்., அதிகாரி. தாவணகெரே, மைசூரு, ஷிவமொக்காவில் பணியாற்றிய போது, மக்களுக்காக சிறப்பாக சேவை செய்தவர் என்று பாராட்டு பெற்றவர்.
இவர், மைசூரில் பணியாற்றிய போது அனுஷ், 33, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ராஷ்ட்ரீய சிவசக்தி சேனா என்ற அமைப்பின் தலைவராக இருப்பதாக அனுஷ் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார். இருவரும் அடிக்கடி மொபைல் போனில் பேசுவதும் வழக்கம்.
மோதிரம் திருட்டு இந்நிலையில், கடந்த மாதம் 27ம் தேதி இரவு கிரிஷிடம், அனுஷ் மொபைல் போனில் பேசினார். 'மைசூரில் இருந்து பெங்களூரு செல்கிறேன்.
'உங்களை சந்திக்க அரசு குடியிருப்புக்கு வருகிறேன்' என கூறினார். அதன்படி, கிரிஷ் வசிக்கும் குடியிருப்புக்கு, அனுஷ், அவரது நண்பர்கள் ஷோபராஜ், நவீன் ஆகியோர் சென்றனர்.
அரசு குடியிருப்பில் மூன்று பேரும் மது அருந்தினர். கிரிஷுக்கு ஆரஞ்சு பழ ஜுஸ் கொடுத்தனர். அதை குடித்த சிறிது நேரத்தில் கிரிஷ் மயங்கினார். மறுநாள் காலை கண் விழித்து பார்த்த போது, நிர்வாண நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கையில் அணிந்திருந்த 8 கிராம் தங்க மோதிரம், 14 கிராம் தங்க செயின் காணாமல் போனதை, கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தற்கொலை கடிதம் அனுஷ், ஷோபராஜ், நவீனிடம் கேட்ட போது, நாங்கள் தான் எடுத்தோம் என்று கூறியதுடன், கிரிஷிடம் அவரது நிர்வாண வீடியோவையும் காட்டினர். '10 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வீடியோவை வெளியிடுவோம்' என்று மிரட்டினர்.
இதுகுறித்து, கடந்த 1ம் தேதி சென்னப்பட்டணா போலீஸ் நிலையத்தில் கிரிஷ் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், மூன்று பேரையும் தேடிவந்த நிலையில், அனு ஷ் நேற்று கைது செய்யப்பட்டார். மற்ற இருவரையும் போலீசார் தேடுகின்றனர்.
கைதான அனுஷ் ரவுடி ஆவார். அவர் மீது, மைசூரு மாவட்டத்தில் உள்ள பல போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, மிரட்டி பணம் பறிப்பு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கூறுகையில், ''சென்னப்பட்டணா தாசில்தாரை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து, பணம் கேட்டு மிரட்டிய வழக்கு என் கவனத்திற்கு வந்துள்ளது. முழுமையான தகவல் கேட்டுள்ளேன். விசாரணைக்கு பின், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
