/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
உண்மையை மறைக்க இளம்பெண் பலாத்கார குற்றச்சாட்டு
/
உண்மையை மறைக்க இளம்பெண் பலாத்கார குற்றச்சாட்டு
ADDED : டிச 09, 2025 06:32 AM
மடிவாளா: வாடகைக்கார் ஓட்டுநரும், அவரது நண்பர்களும் கூட்டு பலாத்காரம் செய்ததாக இளம்பெண் அளித்த புகாரில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன், பெங்களூரின் மடிவாளா போலீஸ் நிலையத்துக்கு வந்த இளம்பெண், 'தன்னை வாடகை வாகன ஓட்டுநர் சுரேஷும், அவரது நண்பர்களும் கூட்டு பலாத்காரம் செய்தனர்' என புகார் அளித்தார். போலீசாரும் உடனடியாக வழக்கு பதிவு செய்து கொண்டனர். சம்பவம் பானஸ்வாடி போலீஸ் நிலைய எல்லையில் நடந்திருப்பதால், வழக்கு அங்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து பானஸ்வாடி போலீசார், கார் ஓட்டுநர் சுரேஷை, வரவழைத்து விசாரித்தனர். அப்போது பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. சுரேஷ், 'நானும், என் மீது புகார் அளித்த இளம்பெண்ணும், ஏற்கனவே அறிமுகம் உள்ளவர்கள். நான் கேரளாவை சேர்ந்தவன். இளம்பெண்ணும் கேரளாவில் இருந்து வந்தவர்.
'கார் புக்கிங் செய்யும் போது, இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. நெருங்கி பழகினோம். எங்களுக்குள் உடல் ரீதியான தொடர்பும் இருந்தது. நான் மட்டுமே பெண்ணுடன் உறவு கொண்டேன். என்னோடு யாரும் இருக்கவில்லை' என விவரித்தார்.
அதன்பின் இளம் பெண்ணை வரவழைத்து விசாரித்த போது, முன்னுக்கு பின், முரணாக பதில் அளித்தார். தீவிரமாக விசாரித்த போது, உண்மையை ஒப்புக்கொண்டார். ஓட்டுநரும், பெண்ணும் சமீபத்தில் மதுபான பார்ட்டி நடத்தினர்; உல்லாசமாக இருந்தனர்.
அப்போது பெண்ணின் கழுத்து பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது. அவர் கேரளாவுக்கு சென்ற போது, அவரது ஆண் நண்பர், எப்படி காயம் ஏற்பட்டது என, விசாரித்தார். அப்போது பெண், உண்மையை கூற தயங்கி, வாடகைக்கார் ஓட்டுநரும், அவரது நண்பர்களும் தன்னை கூட்டு பலாத்காரம் செய்ததாக பொய் சொன்னதாக கூறப்படுகிறது.
இதை உண்மை என, நம்பிய நண்பர், இளம் பெண்ணை பெங்களூரின் மடிவாளா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து, புகார் அளிக்க வைத்தார். விசாரணையில் இவரது நாடகம் அம்பலமானதாக, தகவல் வெளியாகியுள்ளது.

