சென்னையில் அதிநவீன தரவு மையம் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
சென்னையில் அதிநவீன தரவு மையம் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
ADDED : பிப் 25, 2025 10:42 PM

சென்னை:'கன்ட்ரோல் எஸ்., டேட்டா சென்டர்ஸ்' நிறுவனம், சென்னை அம்பத்துாரில், ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன டேட்டா சென்டர் எனப்படும் தரவு மையத்தை அமைத்துள்ளது. இரு கட்டடங்களுடன் கூடிய இந்த டேட்டா சென்டர், 72 மெகாவாட் ஐ.டி., லோடு திறன் உடையது.
மேலும், 7.50 ரிக்டர் வரை நிலநடுக்கத்தை தாங்கும் திறனிலும், வெள்ள பாதிப்பை எதிர்கொள்ளக்கூடிய வகையிலும் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த தயாரிப்பு மையத்தை, சென்னை கிண்டியில் நடந்த நிகழ்ச்சியில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் ராஜா, செயலர் அருண்ராய், கன்ட்ரோல் எஸ்., டேட்டா சென்டர்சின் தலைவர் ஸ்ரீதர் பின்னபுரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில், ஸ்ரீதர் பின்னபுரெட்டி பேசியதாவது:
சர்வதேச தரவுகளை பூர்த்தி செய்யும் முதன்மையான டிஜிட்டல் சூழல் அமைப்பை உருவாக்கும் எங்கள் நோக்கத்தில், சென்னையில் தரவு மைய பூங்காவை திறப்பது முக்கிய திட்டம். எங்கள் நிறுவனத்துக்கு, இந்த மையத்தால், 4,000 கோடி நேரடி முதலீடுகள், 50,000 கோடி ரூபாய் மறைமுக முதலீடுகளும் கிடைக்கும்.
இதன் வாயிலாக, 500 நேரடி மற்றும், 9,000 மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும். 'கிளவுட்' அடிப்படையிலான சேவைகள் மற்றும் தரவு சார்ந்த புதுமைகளை மேம்படுத்துவதோடு, டிஜிட்டல் சொத்துக்களை இம்மையம் பாதுகாக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

