கும்பமேளா செல்வோருக்கு காப்பீடு ரூ.59 பிரீமியத்தில் முதல்முறை ஏற்பாடு
கும்பமேளா செல்வோருக்கு காப்பீடு ரூ.59 பிரீமியத்தில் முதல்முறை ஏற்பாடு
ADDED : ஜன 11, 2025 01:04 AM

புதுடில்லி,:மகா கும்பமேளாவில் பங்கேற்கச் செல்வோருக்கு, இதுவரை இல்லாத முதல் முயற்சியாக, காப்பீட்டை ஐ.சி.ஐ.சி.ஐ., லாம்பார்டு மற்றும் போன் பே நிறுவனங்கள் இணைந்து அறிமுகம் செய்துள்ளன.
இதுகுறித்து போன் பே நிறுவன அறிக்கையில் கூறியதாவது:
மகா கும்பமேளாவில் பங்கேற்க இருப்பவர்களுக்கு இரண்டு விதமான காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். பேருந்து மற்றும் ரயிலில் செல்வோருக்கு 59 ரூபாய் பிரீமியம் கொண்ட முதலாவது திட்டமும், விமானத்தில் செல்வோருக்கு 99 ரூபாய் பிரீமியம் கொண்ட இரண்டாவது காப்பீடு திட்டமும் உள்ளன.
இந்த காப்பீடு திட்டத்தில் இணைபவர்களுக்கு, உடல்நலக் குறைவு ஏற்பட்டால் மருத்துவமனை உள்நோயாளி சிகிச்சை, மருத்துவர் ஆலோசனை, வெளிநோயாளி சிகிச்சை ஆகிய வசதிகள் கிடைக்கும்.
தனிப்பட்ட விபத்து இழப்பீடு, உடைமைகள் தொலைந்தால் இழப்பீடு, முன்பதிவு செய்த பயணத்தை போக்குவரத்து நிறுவனம் ரத்து செய்தால் இழப்பீடு, தவறவிட்ட இணைப்பு விமானத்துக்கு கட்டண இழப்பீடு ஆகியவற்றையும் இந்த காப்பீட்டில் பெறலாம்.
போன் பே செயலியில், காப்பீடு பகுதியை தேர்வு செய்து மகா கும்பமேளா காப்பீடு என்பதை தேர்வு செய்து, அவரவர் தேவைக்கேற்ப பிரீமியம் செலுத்தி காப்பீடு செய்யலாம்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

